மலர் மேல் ப்ரேமம்

மலர் மேல் ப்ரேமம்
Published on

மாஸ் என்கிற மாசிலாமணி என்கிற, மாசு என்கிற மாசி என்கிற, ஒரு திரைப்படம் சென்ற மாதத்தில் வெளியானதில்லையா? அப்படத்திற்கு என்ன பெயரை கடைசியாக வைத்தனர்? பெயரா முக்கியம்? படம் ஜாலி கோலி டூமாங்கோலியாகவே இருந்தது. இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருந்தால் இன்னொரு சென்னை 28 ஆக (பேய் வெர்ஷன்) வந்திருக்கும்.

இயல்பிலேயே கேசுவலாக படமெடுக்கும் வெங்கட்பிரபுவுக்கும் எந்நேரமும் நடிப்பே கண்ணாக பொறுப்பும் நெருப்புமாக இருக்கிற சூர்யாவுக்கும் எவ்விதம் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் என்பதுதான் இப்புதிரின் விடை. அவருக்காக இவர் கொஞ்சம் இறங்கிவந்து நடிக்க, இவருக்காக அவர் கொஞ்சம் தன் போக்கை மாற்றிக் கதை பண்ணி முடிக்க, கடைசியில் படம் ஜாலியாக இருந்தாலும் ஏதோ குறைவதாக இருந்து தொலைத்து கசகசா கசமுசா வானதுதான் மிச்சம்! இடைவேளைக்கு பிறகான கதையும் ஃப்ளாஷ்பேக்கும் அவசர இட்லி உப்புமா என்று சொன்னால் அது மிகையாகாது! படத்தில் நயன்தாராவும் நடித்திருந்த நினைவு. அவர்தானா அது?

ஜூராசிக் பார்க் படத்தை சிறுவனாக பார்த்த நினைவு. டைனோசர்களின் ஆர்ப்பரிப்பும் அலறலும் இன்னமும் காதில் கேட்கிறது. அத்தனையும் நினைவுகள்தான். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது வெளியாகியிருக்கும் ஜூராசிக் வோர்ல்ட் படத்திலும் இதே அலறலும் ஆர்ப்பரிப்பும் எக்கச்சக்கமாக நிறைந்திருந்தது. படத்திலேயே “இப்பல்லாம் யாருங்க சாதா டைனோசர பார்த்து பயப்படறாங்க, அதனாலதான் எல்லாரும் பயப்படற மாதிரி ஒண்ணை உருவாக்கிருக்கோம்” என்கிறார்கள் (ஆங்கிலத்தில்). ஆனால் கதையிலும் அதன் போக்கிலும் எந்த பரபரப்பும் இல்லை, பதட்டமும் இல்லை. இருந்தாலும் இப்படம் கிளப்பிவிடும் நம்முடைய பால்ய நினைவுகளும், 3டியில் காட்டப்படும் அந்த காட்சிகளும் படத்தை காப்பாற்றுகின்றன.

பக்கத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு தோப்பனார் தன் குட்டி பையனிடம் “கண்ணை பொத்திக்கோ, காதை பொத்திக்கோ, இப்ப வரும்பாரு ஒண்ணு பெரிசா பயமாருக்கும்” என்று பதறிக்கொண்டிருந்தார்! ஆனால் அவர்தான் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு கண்களில் நீர் கோர்க்க படம்பார்த்துக்கொண்டிருந்தார். பையனோ ஹாயாக ஜஸ்ட் லைக் தட் பாப்கார்ன் கொறித்தபடி படம் பார்த்தபடியிருந்தான்!

சந்தானம் தன்னுடைய நாயக பயணத்தின் இரண்டாவது ஸ்டாப்பிங் வந்திருக்கிறார். போன படத்தில் எதெல்லாம் சொதப்பிக்கிச்சோ அதையெல்லாம் இனிமே இப்படித்தானில் சரிசெய்ய முனைந்திருக்கிறார். நின்று ஆடுகிற பேட்ஸ்மேன்கள் ஒருமேட்ச்சில் அடித்து ஆட முயற்சி செய்து பல்பாகி மீண்டும் தங்களுக்கு எதுவருமோ அதற்கே திரும்புவது போல, சந்தானம் தன்னுடைய பழைய பாணியான பஞ்ச் காமெடிக்கே திரும்பியிருக்கிறார்! படம் முழுக்க ஆயிரம் ப்ளஸ் ஒருவரி பஞ்ச்கள். படத்தில் பளிச் என்று பவுடர் போட்டு பளபளவென்று இருக்கிறார். உடம்பை குறைத்திருக்கிறார். நன்றாக காமெடி செய்கிறார். ஆனால் அவரை நாயகனாக ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது. ஆனாலும் படம் பரவாயில்லை ரகத்திற்கு சற்று மேலே சென்று பாஸாகிவிடுகிறது. அடுத்த படத்தில் இன்னும் மெருகேறி வருவார் என நம்பலாம்! ஆனால் எஸ்விசேகர் பாணி காமெடி படங்களை விட்டு நீர்க்குமிழி மாதிரி ஒருபடம் பண்ணாமல் அவரை தமிழ்ச்சமூகம் நாயகனாக ஏற்காது.  

சந்தானத்தைப்போலவே எலியில் வடிவேலுவும் தன்னுடைய பழையபாணிக்கு திரும்பியிருக்கிறார். இதுவரை தன்னுடைய காமெடிகளில் எதுவெல்லாம் சக்ஸஸ் ஆனதோ (தப்புதப்பாக இங்கிலிஸ் பேசுவது, தேவையில்லாமல் பல்பு வாங்குது, எடக்கு மடக்காக எதாவது செய்து மாட்டிக்கொண்டு குண்டு ஆசா மிகளிடம் உதைவாங்குவது.. etc) அதையெல்லாம் திரட்டி எலியைக் கொடுத்திருக்கிறார்! காட்சிக்கு காட்சி வசனத்துக்கு வசனம் தியேட்டர் அதிர வேண்டும் என்கிற ஆர்வத்துடன் படமெடுத்திருக்கிறார்கள். ஆனால் பாவப்பட்ட தமிழக மக்கள்தான் தியேட்டரில் உர்ர்ர்ரென்று உட்கார்ந்திருக்கிறார்கள். காரணம் ஆதித்யாடிவியில் இதைவிட சிறப்பான காமெடிகள் வருகிறது. அதுவும் வடிவேலே நடித்து வருகிறது.

ப்ரேமம் என்கிற படத்தை ‘’நேரம்” படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மலையாளத்தில் எடுத்திருக்கிறார். தமிழில் ஒரு ஹிட் படம் கொடுத்தும் ஏன் இந்த இயக்குநர் மலையாளத்திற்கு போய் படமெடுத்தார் என்பதை படம் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. அட்டக்கத்தியில் ஐம்பது சதவீதமும் ஆட்டோகிராபில் நாற்பது சதவீதமும் போட்டு மீதி பத்துசதவீதம் கேரள மண்வாசனையை கலந்து கொடுத்திருக்கிறார்! படம் தொடங்குவதே பா.ரஞ்சித்துக்கு நன்றிபோட்டுத்தான்! ஆனால் ‘விஷுவலி ஸ்டன்னிங்’ என்று இங்கிலீஸ் பட விமர்சனத்தில் எழுதுவார்களே அதுதான் இப்படம்! சீனுக்கு சீன் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் இளமையும் குறும்பும் துள்ளலும் எள்ளலும் கொட்டிக்கொட்டி கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு மனிதனின் வெவ்வேறு காலகட்டத்து காதல்களையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது! விதவிதமாக பார்க்கலாம். இப்படத்தில் வருகிற அந்த மூன்று நாயகிகளும் அவ்வளவு அழகு! மேக்கப் சாதனங்களையெல்லாம் பிடுங்கிவிட்டு படமாக்கியிருப்பார் போல. நாமும் நாயகனோடு காதலில் விழுகிறோம்! மலையாள தேசமே இப்பெண் குட்டிகளைக் கண்டு கொண்டாடி கொந்தளித்து கொதித்து காதல் மயக்கத்தில் ப்ரேமித்து வீழ்ந்து கிடக்கிறது. படம் பார்த்துவிட்டு வந்து பத்து நாளாகியும் நமக்குமே கூட மிச்சமிருக்கிறது கிரக்கம்! மலரே...

ஜூலை, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com