இப்போதெல்லாம் ஹீரோக்கள் ரவுடியாக நடிக்கும் படங்கள்தான் தொடர்ந்து ஜெயிப்பதால் சமீபத்தில் வெற்றியை கொடுக்க முடியாத நடிகர்களெல்லாம் ரவுடி கேரக்டரை ஏற்கத் துவங்கிவிட்டார்கள். அதில் ஜீவா நடித்த ‘திருநாள்’ இதே மாதத்தின் துவக்க வெள்ளியன்று வெளியானது.
பழைய கதைதான்.. ரவுடியை காதலிக்கும் ஹீரோயின்.. மனம் திருந்தி வாழ நினைக்கும் ஹீரோ.. விடாத வில்லன்கள்.. என்ன ஆகிறார் ஹீரோ.. அரதப் பழசான கதை என்றாலும், நயன்தாரா என்னும் மாய வில்லியின் ஓரப் பார்வையில் மயங்கியிருக்கும் திரை ரசிகர்களின் ஏகோபித்த பார்வையில் வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டது இந்தப் படம்.
வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்றாலும் ‘அஞ்சல் பெட்டி எண் 520’ படத்தின் மூலக் கதையை நாசூக்காக சுட்டு ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்கிற இந்தப் படத்தை எடுத்திருக்கும் கதையை இயக்குநர் வெளியில் சொல்லவே இல்லை. உடல் உறுப்புகள் திருட்டு என்கிற பார்முலாவில் நிறைய படங்கள் ஏற்கெனவே வெளிவந்துவிட்டதால் நடிகர் ஜெய் நடித்த மற்றும் ஒரு படம் என்கிற பெருமையைத் தவிர, வேறு எதுவும் இந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை.
கிராமத்து சப்ஜெக்ட்டில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்தால் அதிர்ஷ்டம் இருந்தால் லைம் லைட்டிற்கு வரலாம் என்கிற நினைப்பில் எடுக்கப்பட்ட படம் ‘சண்டிக்குதிரை’. இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கு திறமையைக் காட்டி எடுத்திருந்தார். பாடல்கள் ஒன்றே இந்தப் படத்தின் சிறப்பு!
உண்மையாகவே ‘என்னமா கத வுடுறானுங்க’ என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது இந்தப் படம். ஆவியைக் கண்டுபிடிக்க மெஷின் இருப்பதாகச் சொல்லி ஆவியை அதன் மூலமாக பேச வைத்து ஒரு கதையை தயார் செய்திருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக நடிக்கக் கூடிய நடிகர்களையும், இயக்கத் தெரிந்த இயக்குநரும் இல்லாமல் போனதால் இதுவும் வெளியில் தெரியாமலேயே போய்விட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி திரைக்கு வந்திருக்கிறது ‘நமது’. மோகன்லாலின் தெள்ளு தமிழை தமிழ் ரசிகர்களால் எப்போதுமே ஏற்க முடியாது என்பது இந்தப் படத்தின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. மோகன்லால் போன்ற உண்மையான நடிகர்களை நடிக்க வைக்க எத்தனையோ இயக்குநர்கள் காத்திருக்கும்போது எப்படி இந்த மாதிரி கதைகளில் சிக்கிக் கொள்கிறார் என்றே தெரியவில்லை.
இந்த வருடத்தின் மிகச் சிறந்த படம் வெளியான மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இடம் பிடித்தது ‘ஜோக்கர்’ படத்தினால்தான். வீட்டில் கக்கூஸ் இல்லாததால் ஒரு சாதாரண குடிமகனின் வாழ்க்கை எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்பது சினிமா மொழியில் மிக யதார்த்தமாக பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன்.
மன்னர்மன்னன் என்னும் இந்தக் குடிமகன் தன்னைத்தானே இந்தியாவின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டு முன்னெடுக்கும் போராட்டங்களும், அறிவிப்புகளும் இன்றைய இந்தியாவுக்கே அவசியம் தேவையான அரசியல் அரிச்சுவடி.
ஏற்கெனவே கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருக்கும் கிச்சா சுதீப்பின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை இணைத்திருக்கிறது ‘முடிஞ்சா இவன புடி’ திரைப்படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘வில்லன்’ படத்தின் சாயல் இந்தப் படத்தில் தெரிகிறது. தமிழ், கன்னடத்தில் தயாரித்து வெளியிட்டிருக்கும் இந்தப் படத்தின் தீயான திரைக்கதையையும், சூப்பரான இயக்கத்தையும் பார்த்தால், கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்தில் தான் கத்துக்கிட்ட வித்தைகள் அனைத்தையும் மொத்தமாக இறக்கி வைத்திருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது. கூடவே அழகியான நித்யா மேனனையும் நடிக்க வைத்து அழகு பார்த்திருக்க.. படத்தின் ஓட்டம் கர்நாடகாவில் இன்னமும் நிற்கவில்லையாம்.
கடுமையான உழைப்பு, நிரம்ப பொருட் செலவு, அழகான இயக்கம்.. மிகச் சிறந்த நடிப்பு.. இத்தனை இருந்தாலும் மனதைத் தொடாத கதை இல்லையென்றால் அது உப்பில்லாத பண்டம் போலவே. இந்த ‘வாகா’ படமும் அந்த நிலைமைக்குத்தான் ஆளாகியிருக்கிறது.‘ஹரிதாஸ்’ கொடுத்த இயக்குநராச்சே என்கிற ஆர்வத்தில் படத்திற்கு வந்த அனைவரையும் இம்மி பிசகாமல் ஏமாற்றியிருக்கிறார் ஜி.என்.ஆர்.குமாரவேலன்.
இந்த ஆண்டின் இன்னுமொரு சிறந்த படம் ‘தர்மதுரை’. தாய்மையைப் போற்றுவோம் என்கிற கோஷத்துடன் மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி ஒரு தனி மனிதனின் காதலையும் பேச வைத்து.. அமைதியான, அற்புதமான திரைக்கதையில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. அவருடைய நடிப்புக்கு உரம் போடுவது போலவும், உதாரணம் காட்டுவது போலவும் படத்தின் பல காட்சிகளில் வாழ்ந்தே காட்டியிருக்கிறார். ஒட்டு மொத்தமாய் படம் காட்டிய திருப்தியை தயாரிப்பாளரும் தற்போது அனுபவித்து வருகிறார்.
3 வருட தாமதத்திற்கு பின்பு வெளியான ‘நம்பியார்’ படத்தின் தயாரிப்பாளரான நடிகர் ஸ்ரீகாந்துக்கே நிஜ வில்லனாகிவிட்டது. இந்த மாதிரி படத்துக்கெல்லாம் எப்படி தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதை கேட்க வைத்திருக்கிறது ‘யானை மேல் குதிரை சவாரி’ என்ற படம். இந்த இரண்டு படங்களையும் விட்டால் இந்த மாதத்திய பேய்ப் பட லிஸ்ட்டில் முதலாவது படம் ‘பயம் ஒரு பயணம்’. பாதி அளவுக்கு பயமுறுத்தியிருப்பதால் பேய் ரசிகர்களுக்கு பிடிக்க வாய்ப்புண்டு.
சின்ன பட்ஜெட்.. சின்ன கதை.. ஆனால் உள்ளத்தைத் தொட்டுவிட்டது ‘வென்று வருவான்’ படம். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு கழுத்தில் கயிற்றுக்காக காத்திருக்கும் குற்றவாளி, “எனது அம்மா பாட, நான் கேட்க வேண்டும். இதுதான் எனது கடைசி ஆசை” என்கிறான். அதனை ஜெயிலர் நிறைவேற்றி வைக்க இதன் பின்பு நடக்கும் திடீர் திருப்பங்கள்தான் படத்தின் கதை.
மலையாள மென்மை மற்ற மொழிகளுக்கு செட் ஆகாது என்பதற்கு ‘தட்டத்தில் மறையத்து’ படத்தின் தமிழ் வடிவமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படமும் உதாரணமாகிவிட்டது.
செப்டெம்பர், 2016.