‘தல’ அஜித்தின் தலை நாளுக்கு நாள் மின்னல்வேகத்தில் வெள்ளையாகிக்கொண்டே போகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரீலீஸாகும் அவருடைய படத்தில் அது உச்சத்தை எட்டலாம். மங்காத்தாவில் வெங்கட்பிரபு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைத்த இந்த நரைகார்யத்தின் பலன் பொங்கலுக்கு வர இருக்கிற வீரம் படத்தின் டீசர்களிலும் போஸ்டர்களிலும் வெள்ளிடைமலையாக தெரிகிறது. ஆங்காங்கே கறுப்பு முடி தெரிகிற அளவுக்கு முற்றிப்போயிருக்கிறது இந்த வெண்தலைமேனியா. பாவம்தான் அஜித். இன்னொரு பக்கம் கிதாரும் கையுமாக விஜய், மேலும்மேலும் இளமையாகிக்கொண்டே போகிறார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
அதுபோகட்டும். இந்த தீபாவளிக்கு வந்த ஆரம்பம் ஏற்கனவே எதிர்பார்த்தது போல SWORD FISH படத்திலிருந்து கொஞ்சம், தேசபக்தி மிக்க விஜயகாந்த் அர்ஜூன் படங்களிலிருந்து கொஞ்சம் என ஒப்பேற்றி அஜித் ரசிகர்களால் உயிர் பிழைத்திருக்கிறது. வில்லத்தனம் கலந்த ஹீரோயிசமும் கூலிங்கிளாஸோடு கையை வீசி நடந்து நடிப்பதும் இன்னும் எத்தனை காலத்துக்கு அஜித்துக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய ரசிகர்கள் எப்படிப்பட்ட மொக்கைப்படத்தையும் தங்களுடைய மகத்தான ஓப்பனிங்கால் ஓடவைத்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
இந்த முறை இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ள படம் ‘’தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படம் . சப்டைட்டில் உதவியோடு சமீபத்தில்தான் பார்க்க கிடைத்தது. இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அனேக அரசியல் குழப்பங்கள், தேர்வில் சர்ச்சைகள் என இருந்தாலும் இது மிகவும் எளிமையான நல்ல படம். எந்தவித பாசாங்குமின்றி நேர்மையுடன் எடுக்கப்பட்டிருக்கிற படமாகவும் இருந்தது.
அனுப்பியிருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் போர்க்குரல் எழுப்பிய “லஞ்ச்பாக்ஸ்” படத்தோடு இதை நிச்சயமாக ஒப்பிடவே முடியாது. இது வேறுவகையான படம். எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒட்டிக் கொண்டிருக்கிற மனிதநேயம்தான் இப்படத்தின் அடிச்சரடு. ஓர் இந்திய நெடுஞ்சாலையின் விதவித மனிதர்களை, அந்தச்சூழலை எல்லாவித இயல்புகளுடனும் அபாரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். விருதுப்படங்களுக்கே உரிய குணங்களான மெதுவாக காட்சிகள் நகர்வது, இயல்பாக மேக்கப் இன்றி திரிகிற பாத்திரங்கள், முகத்திலறையும் எதார்த்தம் என எல்லாமே இப்படத்திலும் இருக்கிறது. நல்ல படம்.
பாண்டியநாடு படத்தின் பாடல்வெளியீட்டு விழாவில், “இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்றே தெரியவில்லை, மதகஜராஜா படத்தை நன்றாக எடுத்தும் அதை வெளியிடமுடியவில்லை”என்று நடிகர் விஷால் வருத்தப்பட்டு பேசினார். பார்க்கவே பாவமாக இருந்தது. பாண்டியநாடு படத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையே தயாரித்ததாகவும் குறிப்பிட்டார். ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா என இரண்டு மாஸ் படங்களுக்கு நடுவே வெளியான இந்த குடும்பப்படம், இந்த அளவுக்கு வெற்றிபெறும் என விஷாலே நினைத்திருக்கமாட்டார். படத்தில் அப்பாவாக நடித்த பாரதிராஜா ஸ்வீட் சர்ப்ரைஸ்.
இயக்குநர் ராஜேஷ் உடனடியாக தன்னுடைய பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஓகேஓகே வந்தபோதே விமர்சகர்கள் கரடியாக கத்தினார்கள். எந்த தமிழ்சினிமா இயக்குனர் விமர்சகனை மதிக்கிறார்? கொஞ்சமாக குறைசொன்னாலும் கொதித்தெழுந்து பத்திரிகை ஆபீசுக்கே போய்,‘கூப்டுங்க சார் அந்த விமர்சகனை, காக்கா வந்து சொல்லுச்சா சார்’ என்று சத்தம்போடுகிற காலத்தில் அல்லவா நாம் வாழ்கிறோம்?
பட்டுத்தான் திருந்தவேண்டும் என்று விதியிருந்தால் யாரால் மாற்றமுடியும். ஆல்இன்ஆல் அழகுராஜா படம் முழுக்க சந்தானமும் கார்த்தியும் உருண்டுபுரண்டு கூத்தாடுகிறார்கள். ஏனோ மருந்துக்குகூட யாரும் சிரிக்க காணோம். நகைச்சுவை படமெடுப்பது அவ்வளவு சுலபமல்ல... அதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிபெற்றவர் ராஜேஷ். ஆனால் அவருடைய இந்த வீழ்ச்சியை பார்க்கும்போது மனசுக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. சீக்கிரமே தன்னை புதுப்பித்துக்கொண்டு தன் அடுத்த இன்னிங்ஸில் கலக்கவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமே!
‘’குறும்பட இயக்குனர்கள் ரொம்ப நல்லா படம் பண்றாங்க.. நிச்சயம் பாராட்டணும். ஆனா அதே சமயம், ஒரு படங்கறது முழுக்க முழுக்க வேற சமாச்சாரம். அதுக்கு முக்கியமானது திரைக்கதை. அந்த விஷயத்துலதான் இந்த பசங்க ரொம்ப வீக்கா இருக்காங்கனு தோணுது” என்று ஒரு ரிடையர்டான பிரபல இயக்குநர் ஒருமுறை நேர்ப்பேச்சில் குறிப்பிட்டுச்சொன்னார். அதை நிரூபிக்கும் வகையில் இருந்தது பீட்சா-2-தி வில்லா என்கிற படம். கடைசி சில நிமிட ஆர்ப்பாட்டங்களை மட்டுமே நம்பி படமெடுத்திருக்கிறார் இளம் இயக்குநர் தீபன். இந்த பாணி பத்து நிமிட குறும்படத்துக்கு ஓக்கே.. முழுநீளப் படத்துக்கு பத்தலையே பாஸ்.
பாலிவுட்டில் தீபிகா படுகோனேதான் சமகால சூப்பர்ஸ்டாரினி. கடைசியாக அவர் நடித்த நான்கு படங்களுமே (சென்னை எக்ஸ்பிரஸ், ரேஸ்2, யே ஜவானி ஹேதிவானி, காக்டெயில்) நூறுகோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றன. அவர் கடைசியாக நடித்த கோலியோன் கீ ராம்லீலா படம்கூட நூறுகோடியை எட்டும் என பாலிவுட் எதிர்பார்த்து காத்திருக்கிறது. படத்துக்கு படம் தீபிகாவின் உடையும் தொப்புளுக்கு கீழே தலா ஒரு இன்ச் என இறங்கிவருவது கவனத்திற்குரியது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தை இயக்கியிருக்கிறார். இவர் சோகப்படமெடுத்தாலே அவ்வளவு கலர்ஃபுல்லாக எடுக்கக்கூடியவர், காதல்கதை என்றால் கேட்கவும் வேண்டுமா ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ரங்கோலிதான். ஒரு கட்டத்தில் அதுவே சலிப்பூட்டும் படி இருந்தாலும், தீபிகா படுகோனேவின் அபாரமான நடிப்பாற்றலும் திரைக்கதையும் படத்தை மிகவும் ரசிக்க வைக்கிறது. படத்தின் முடிவு எதிர்பாராதது.
ஷோபனா! சாலையில் கடக்கையில் அவ்வப்போது கிருஷ்ணர் வேடத்தில் தோன்றும் நாட்டிய நாடக போஸ்டர்களை மட்டுமே கடந்து சில ஆண்டுகளாக பார்க்க முடிந்தது. நடுவே பத்தாண்டுகள் திரைத்துறையிலிருந்து விலகியிருந்த அம்மணி இப்போது மீண்டும் நடிக்கவந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் “திர” என்கிற மலையாளப்படத்தின் மூலமாக திரைக்கு திரும்பியிருக்கிறார். சென்ற ஆண்டில் வெளியான படங்களில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த தட்டத்தின் மறையத்து படத்தின் இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசனின் படம் இது. இந்தப்படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. த்ரில்லர் படமான இது பதைபதைக்க வைக்கிறவகையில் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் செல்லும் செய்தி முக்கியமானது.
டிசம்பர், 2013