சுத்தமான காப்பி!
வரவர ஒரு திரைப்படத்தையும் மனதார பாராட்ட முடியவில்லை. நம்முடைய நீண்ட பாராட்டு பத்திரத்தை வாசிக்கும்போதே ‘அடப்போங்க பாஸு.. அது அந்த கொரியன் படத்தோட காப்பி.. இது இந்த ஈரான் படத்துல சுட்டது’ என உடைத்துப்போட்டு கும்மி அடிக்கிறார்கள் சமகால இணைய இளைஞர்கள்.
கூகிள்காலத்தில் யாருமே தப்பமுடியாது!
இப்படி ஒரு சூழலில் நம்மூர் படைப்பாளிகள் காப்பியடிக்கும்போது எவ்வளவு நுணுக்கமாக யார்கண்ணிலும் சிக்கிவிடாத வகையில் IMDB யில் தேடினாலும் கிடைக்காத படங்களிலிருந்து சுட்டு படமெடுக்க வேண்டாமா? பண்றது திருட்டுதான் என்றாலும் அதில் ஒரு நீக்குபோக்கு வேண்டாமா? வைகைப்புயல் வடிவேலு சொல்வதுதான் ‘நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்யா!’
அந்த வகையில் மூடர்கூடம் இன்னுமொரு காப்பி பேஸ்ட் சித்திரம். படம் பார்க்கும்போது அடடே ரொம்ப பிரமாதமான படமா இருக்கும் போலருக்கே! என்ன ஒரு வித்தியாசமான கதைசொல்லிப்பா இந்த நவீன். தமிழ் சினிமாவை அப்படியே அலேக்காக தூக்கி அடுத்த கட்டத்தில் வைத்துவிட்டாரே. தென்னகத்து குவான்டின் டாரன்டினோப்பா இவர். என்ன ஒரு அசத்தலான திரைக்கதை பாணி.. சீனுக்கு சீன் கிழிகிழி என மூடர்கூடம் படம் பார்த்து நாம் புகழ்ந்துகொண்டிருக்க ‘சார்சார்.. நிறுத்துங்க.. இது கொரியமொழியில் வெளியான ‘அட்டாக் ஆஃப் தி கேஸ் ஸ்டேஷன்’ படத்தோட அப்பட்டமான காப்பி என்று டிவிடியை தூக்கி வீசுகிறார்கள்.
அந்த ஒரிஜினல் படத்தையும் பார்த்து முடித்தால்... அடப்பாவிங்களா இப்படியா அட்டை ட்டூ அட்டை காப்பியடிப்பீங்க என வருத்தமாக, மனசுக்கு பாரமாக இருந்தது. ஆனாலும் நவீன் தமிழ் சினிமாவின் மற்ற காப்பி பேஸ்ட் இயக்குனர்கள் போல் இல்லை. கொஞ்சமாவது சொந்தமாக சில சுவாரஸ்யமான விஷயங்களையும் சமகால அரசியல் சிந்தனைகளையும் சேர்த்திருக்கிறார். அதற்காக அவரை இந்தமுறை விட்டுவிடலாம் என்றே தோன்றுகிறது.
ஆறு மனமே ஆறு!
ஒரு பயபுள்ளைய பெத்துட்டு அப்பாக்கள் படும் அவஸ்தைகளை சொல்லும் இரண்டு படங்கள் சமீபத்தில் வெளியாகின. ஒன்று தங்கமீன்கள். இன்னொன்று ஆறு மெழுகுவர்த்திகள்.
இன்று புகழ்பெற்ற நடிகராக(?) வலம்வரும் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் முதன்முதலாக நாயகனாக நடித்தபடம் லத்திகா. இது Butterfly on wheels என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல் அல்லது காப்பி. அந்த படத்தின் கதைப்படி கடத்திச் செல்லப்பட்ட தன்னுடைய குழந்தையை தேடி ஒரு தகப்பன் தெருத்தெருவாக அலைவான். பவர்ஸ்டார் தன்னுடைய அபார நடிப்பால் பயங்கரமாக சிரிப்பு காட்டியிருப்பார்.
அதே கதைதான் ஆறுமெழுகுவர்த்திகள் படத்திலும். தொலைந்துபோன தன்னுடைய குழந்தையைத் தேடி தெருத்தெருவாக திரிகிறார் ஷாம். கடைசியில் குழந்தையைத் தேடிப் பிடித்தாரா இல்லையா என்பதே கதை. ஒரு படம் முழுக்க யாருக்குமே நடிக்க வரவில்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம்.
Human trafficking போன்ற ஒரு முக்கியமான பிரச்னையை கையாளும்போது நிறையவே அக்கறையும் பொறுப்பும் தேவை. போகிற போக்கில் மாற்றுதிறனாளிகள், பிச்சைக்காரர்கள், சேரிவாசிகள், மாடுவெட்டுகிற தலித்துகள், திருநங்கைகள் என இந்த வேலைகளில் ஈடுபடுவது இவர்கள்தான் என காட்சிப்படுத்துவது அப்படிப்பட்ட மக்களின் மீதான துவேஷத்துக்கே வழிவகுக்கும். இப்படிப்பட்டவர்களை சந்தேகத்தோடு அணுகுகிற மனப்பான்மையை உண்டாக்கும்.
மற்றபடி ஒரு நல்ல திரைப்படமாக வந்திருக்க வேண்டிய படம், சுமாரான படமாகவே வந்திருப்பதில் வருத்தமே...
அக்டோபர், 2017