ராட்சசி படம் மூலம் பள்ளிக்கூட ஆசிரியையாக களமிறங்குகிறார் ஜோதிகா. மிகவும் விறுவிறுப்பாக அதேசமயம் சமூகத்துக்குத் தேவையான கருத்துச் சொல்லும் படமாக எடுத்திருக்கிறேன் என்று
சொல்லும் படத்தின் இயக்குநர் கௌதம் ராஜுடன் பேசினோம்.
படத்தில் என்னதான் கருத்து சொல்லவருகிறீர்கள்?
அரசு பள்ளிகளை நன்றாக நடத்தினால் அவை
சிறப்பாக இயங்கும், முழுமையான மாணவர்களை உருவாக்கும் எனும் கருத்தைத்தான் இப்படம் பேசுகிறது. அரசுப் பள்ளி எப்படி இயங்கினால் நன்றாக இருக்குமென எனது பார்வையில்
சொல்லியிருக்கிறேன். என் பார்வை என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. பாரதி புத்தகாலயம் வெளியிட்ட 'கனவு ஆசிரியர்', உலக புகழ்பெற்ற புத்தகங்களாக 'லெட்டர் டு டீச்சர்', 'மை டீச்சர்' போன்ற புத்தகங்களால் எனக்கு ஏற்பட்ட தாக்கத்தையும் இதில் சேர்த்திருக்கிறேன். ஆந்திரத்தின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பெற்றவுடன் பள்ளிகளில் 'நோ பேக் டே' என்றொரு திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார் அல்லவா? அதாவது அன்றைக்கு பள்ளிக்கு புத்தகப் பை கொண்டு போகவேண்டாம்! இந்த அறிவிப்பைக் கேட்டதும் நாங்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தோம்! இது ஏற்கெனவே ராட்சசி படத்தில் இடம் பெற்றுவிட்டது! அந்த சந்தோஷம்தான்! ஒரு பள்ளிக்கு வரும் தலைமை ஆசிரியை எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்றுதான் இந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதத்தொடங்கினோம். எனக்கு எப்பவுமே ஒரு கருத்தைச் சொல்லவேண்டும்; அதே சமயம் படம் விறுவிறுப்பாக சுவாரசியமாக வணிகரீதியாக இருக்கவேண்டும். அதுதான் முக்கியம்.
நீங்கள் சினிமா பயின்றது எங்கே?
திரைப்பட கல்லூரி மாணவன் நான். அங்கே படத்தொகுப்பு பிரிவில் படித்துவிட்டு உதவி இயக்குநர், இணை இயக்குநர் என ஒவ்வொரு படியாக நகர்ந்துதான் இயக்குநர் நிலைக்கு வந்திருக்கிறேன். முதலில் விக்ரமன் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பிறகு ரம்மி படத்தில் இணை இயக்குநராகவும், தெலுங்கில் அசோக் இயக்கிய படத்திலும் பணியாற்றியிருக்கிறேன். இதற்கு முன்பாக விகடனில் நிருபராக பணியாற்றியபோதுதான் பாரதி தம்பி, ராஜூ முருகன் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. ராட்சசி படத்துக்கும் பாரதிதம்பிதான் வசனம் எழுதி உள்ளார்.
உதவி இயக்குநராக இருக்கும்போது நாம் சந்திக்கும் போராட்டமானது தனிமனிதர்
சார்ந்தது மட்டுமே. அது நம் வாழ்க்கையை பக்குவப்படுத்த, சமூக புரிதலை பெற உதவுகிறது என நான் நினைக்கிறேன். சுமார் நான்கு படங்கள் ஏற்கெனவே இயக்கத் திட்டமிட்டு அலுவலகம் போட்டு, நடிகர்கள் ஒப்பந்தம் போட்ட நிலையில் நின்று போய்விட்டன. இந்த தடங்கல்களிலில் இருந்து தான் நானும் கற்றுக்கொண்டேன். இந்த படத்துக்கான கதை தயாரானதும் ஜோதிகா அவர்களை அணுகியபோது அவருக்குக் கதை பிடித்துவிட்டது. அவர் சமூகப் பொறுப்பான கதைகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார். பெண்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் படங்களை தருவதிலும், அவர்களுக்கு ஆதர்சமாக விளங்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் ஜோதிகா உறுதியாக இருக்கிறார். அவருக்கு ராட்சசி கதை பிடித்ததும் அதற்குள் முழுமையாக வந்துவிட்டார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஏற்பாடு செய்ததில் இருந்து பல விஷயங்களில் முழுப் பொறுப்பு ஏற்று ஒத்துழைப்பு தந்தார். படம் தயாரிப்பு முடிவானதும் திரைக்கதையை இறுதி செய்ய பத்து மாதங்கள் ஆனது. அதன் பின்னர் படப்பிடிப்பு
சென்றுவிட்டோம்.
இது பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட படம் என்று சொல்கிறார்கள். வலிமையான கருத்தைச் சொல்லும் படங்களுக்கு ஆணா - பெண்ணா என்கிற பாகுபாடே இல்லையென நினைக்கிறேன். அரசுப் பள்ளியை மையப்படுத்தி உருவாகும் ஒரு படத்தில், அதுசார்ந்த கருத்தை யார் சொல்கிறார் என்பது அவசியமற்றது. பார்வையாளர்களுக்கு அக்கருத்து சென்றுசேர்ந்ததா இல்லையா என்பதே முக்கியம். கருத்தை முன்வைக்கும் நபர் 'பாஸிட்டிவாக' இருந்தால்போதும். ஜோ மேடம் மிகவும் 'பாஸிட்டிவ்' ஆனவர்!
எல்லோருக்கும் பிடிக்கும் அம்சங்களும் ராட்சசியில் இருக்கும். மாணவப் பருவ காதலியாக, முதல் ஆசிரியரை பாவித்து அவர் பயன்படுத்திய குட்டிகுரா டாப்பாவையும் பான்ட்ஸ் டாப்பாவையும் கையில் வைத்து திரிந்தவர்கள்தானே நாம்... இதுபோன்ற நம் வாழ்வின் மழலைத்தனமான ஞாபகங்களும் ராட்சசியில் உண்டு!
ஜுலை, 2019.