பாபநாசம், கமலஹாசனின் ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும்படிக்கு ஒரு அபாரமான வெற்றி!
மோகன்லால் அளவுக்கு இல்லையப்பா என்று நிறைய விமர்சனங்கள், சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்தாலும் மகாநதிக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் கமல் படமாக நின்னுச்சுல்ல! இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், கமலஹாசனின் ஆன்ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் அடக்கம்தான்! கடந்த பத்தாண்டுகளாக தான் நடிக்கிற எல்லா படங்களிலும் இயக்குநரை டம்மி பீஸாக்கிவிட்டு சகல டிபார்ட்மென்ட்களிலும் தலையிட்டு தன்னுடைய ‘டச்’ இருக்கும்படி மெனக்கெடும் துடிப்புகளை அடக்கிக்கொண்டு நடிப்பில் மட்டுமே காட்டிய அக்கறைகூட காரணமாக இருக்கலாம். தொடர்ந்து அவர் இதுபோன்ற இளம் இயக்குநர்களின் புதியகளங்கள் கொண்ட படங்களில் நடிகராக மட்டும் நடிக்கலாம்!
ஒரு நல்ல படத்திற்கும் இன்னொரு நல்ல படத்திற்கும் நடுவில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொக்கைப்படங்களில் நடித்தே ஆகவேண்டும் என்று தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தனுஷ் யாருக்காவது சத்தியம் பண்ணியிருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அவருடைய கிராஃப் அப்படித்தான் இயங்குகிறது. அவ்வகையில் விஐபி என்கிற வேலை இல்லா பட்டதாரிக்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் மூன்றாவது மொக்கைப்படம் மாரி! ஆடி மாதத்தில் வெளியாகியும் தோல்வியடைந்த முதல் ‘மாரி’ இதுவாகத் தான் இருக்கும்!
படம் முழுக்க செஞ்சிருவேன் செஞ்சிருவேன் என்று இருநூற்றி முப்பத்தி மூன்றரை முறை சொல்லுகிற தனுஷ் எதுவுமே செய்யாமல் இருப்பது நகைமுரண். புறா ரேஸும் முழுமையாக இல்லாமல் லோக்கல் விஷயங்களும் இல்லாமல் மசாலாவாகவும் இல்லாமல் பாலாஜிமோகன் தனுஷை வைத்து பண்ணியிருக்கிற நல்ல தமாஷ்! ரோபோ ஷங்கர் மட்டும் நன்றாக டைமிங் காமெடி பண்ணுகிறார். சூரியைவிட பெட்டர். அநிருத் போட்ட தரலோக்கல் பாடல்கள் எல்லாம் வீணாய்ப்போனதுதான் வருத்தம்.
தமிழில் கடைசியாக வந்த சைன்ஸ் பிக்சன் எது என்று யாரிடமாவது கேட்டால் நன்றாக யோசித்து விட்டு எம்ஜிஆர் நடித்த கலையரசி என்பார்கள்! அது வந்து ஆகிவிட்டது ஐம்பத்தி மூன்றாண்டுகள்! இத்தனைக்கும் நாம் சந்திரனுக்கு ராக்கெட்விட்டு செவ்வாயை நெருங்கிவிட்டோம். எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி எந்திரன் எடுக்கவேண்டியதாயிருந்தது. ஒரு தலைமுறைக்கு ஒருபடம்! இப்படிப்பட்ட சோகமான நிலைமையில் “இன்று நேற்று நாளை” மிகமுக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது. ஹாலிவுட்டின் நூற்றுக்கும் அதிகமான டைம் மெஷின் படங்களின் சாறுதான் என்றாலும் மிகக்குறைந்த பட்ஜெட்டில் தரமாக எடுக்கப்பட்ட நல்ல படம்! புதுமுக இயக்குநர் ரவிக்குமார் தமிழ்சினிமாவுக்கு நல்ல வரவு! இன்னுமே கூட அறிவியல் விளக்கங்களை குறைத்து ஃபேன்டஸியான விஷயங்கள் சேர்த்து ஜாலி பண்ணியிருந்தால் அதிரிபுதிரி வெற்றிபெற்றிருக்கும். விஷ்ணு எனப்படுகிற நடிகர் ஏன் எல்லா படங்களிலும் எல்லாவித கேரக்டரிலும் ஒரே மாதிரியாகவே நடிக்கிறார் என்பது ஆராயப்படவேண்டியது!
விவேக் முன்பு “நான்தான் பாலா” படத்தின் வழி சீரியஸ் ஹீரோ ஆக முயற்சி செய்து முட்டியை பேத்துக் கொண்டதால், மீண்டும் தன் முகத்தை நூற்றி இருபது விதங்களில் கோணலாக வைத்துக்கொண்டு “டேய் 40ல போனா 80 வரைக்கு இருப்போம், 80ல போனா 40லயே போய்டுவோம்” என்பது மாதிரி சிரிக்கவே முடியாத காமெடி கருத்து வசனங்கள் சொல்லி ஹீரோவாக நடித்து வெளியான படம் பாலக்காட்டு மாதவன்! எலி வடிவேலுவுக்கு நடந்ததுதான் இவருக்கும் நடந்திருக்கிறது! 7ஜி ரெயின்போ காலனியோடு சோனியா அகர்வால் ரிடையர்டாகியிருக்கலாம்.
பாகுபலியும் காமராஜும் ஒரே நாளில் திரைக்கு வந்தன! காமராஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்தான். சில காட்சிகள் சேர்க்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்திருந்தார்கள். காமராஜரை போலவே எளிமையாக நான்கே நான்கு தியேட்டர்களில் வெளியாகி காமராஜரைப்போலவே பத்து காசு கூட வசூல் செய்யாமல்படம் பொட்டிக்கு திரும்பியது!
பாகுபலி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம். 300 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. தமன்னாவை அவருக்கே தெரியாமல் டச்சிங் டச்சிங் பண்ணுவதெல்லாம் மனித உரிமை மீறல் என்று பெண்ணியப்போராளிகள் கொந்தளிக்கிறார்கள். ஆனாலும் படம் தொடர்ந்து நான்கு வாரங்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது! காரணம் எத்தனை நாளாச்சு இப்படி ஒரு ராஜாராணி படம் பார்த்து! அதுவும் அந்த போர்க்காட்சிகள் எல்லாம் டாப்டக்கர். முழுக்க தெலுங்குப்படம்தான். அதே அரைச்ச மசாலாதான். ஆனால் பார்க்க ஜாலியாக இருக்கிறது.
பாகுபலியின் வெற்றி இதே ஜானரில் இன்னும் நான்கு படங்களையாவது கொண்டுவருவதற்கான தொடக்கமாக இருக்கலாம். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஜாம்பான்கள் தொடங்கி தொடங்கி தொங்கலில் விட்ட பொன்னியின் செல்வனை தூசிதட்டுவதற்கான உத்வேகத்தை இது கொடுக்கலாம்! கல்தோன்றி முன்தோன்றா காலத்திலிருந்து பேசப்படும் கமலஹாசனின் மருதநாயகத்திற்கு உயிர்வரலாம்!
ஆகஸ்ட், 2015.