ஆடுவதற்கு முன்பே வெற்றியை அறிவிப்பதற்கெல்லாம் தனி தில் வேண்டும். லிங்குசாமி மாதிரி இயக்குநரிடம் இயல்பிலேயே அது நிறைய இருக்கிறது.
சதுரங்க வேட்டை என்கிற ஊர் பேர் தெரியாத ஒரு இயக்குநர் இன்னொரு ஊ.பே.தெ. நடிகர் இணைந்த ஒரு படத்தை வாங்கி ரிலீஸுக்கு முன்பே “ஹாட்ரிக் வெற்றி” என்று போஸ்டர் அடித்து வெற்றிபெற்றுள்ளார்.
இதற்கு முன்பு அவருடைய திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டில் ஹிட்டானதாக சொல்லப்பட்ட மஞ்சப்பை, கோலிசோடா ஆகியவற்றை விடவும் இது நன்றாகவே இருந்தது. குறைகள் இல்லாமல் இல்லை. பிரச்சாரப் படம்தான், படம் முழுக்க ஏகப்பட்ட கருத்துதான், விழிப்புணர்வு ஏற்படுத்துவதான் என்றாலும் “நான்தான் முகேஷ்” டைப் டாகுமென்ட்ரியாக இல்லாமல், அந்த எண்ணமே எங்கும் எழாத படி படமாக்கிய எச்.வினோத் தமிழ்சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம்.
ஒல்லிபெல்லி குரூப்ஸ் தனுஷூம் அனிருத்தும் சேர்ந்து இரட்டை ஆளாக ஒரு படத்தை ஹிட்டாக்கியிருக்கிறார்கள். வேலை இல்லா பட்டதாரி என்கிற அந்தப்படம் ஒரு அழகான பலூனைப்போல வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் தலையை சிலுப்பிக்கொண்டு கூர்ந்து கவனித்தால் உள்ளே ஒண்ணுமேயில்லை என்பது புரியும். அந்தகாலத்து எம்ஜிஆர் படங்களில் தொடங்கி தனுஷ் தன் படத்திலிருந்தே காட்சிகளை உருவி படமாக்கியிருக்கிறார். இதையெல்லாம் மீறியும் இப்படம் பேய் ஓட்டம் ஓடக்காரணம் மேலே சொன்ன ஒல்லிபெல்லி பையன்கள் பண்ணியிருக்கும் ரசிக்க வைக்கிற சேட்டைதான்! அதிலும் இந்த அனிருத் பையன் நாளுக்குநாள் மொக்கை படங்களையும் ஓடவைக்கிற ஆளாக மாறிக்கொண்டிருக்கிறார்.
வேஇப படத்தின் ஒரே குறை படத்தின் இறுதியில் காட்டப்படும் தனுஷின் சிக்ஸ் பேக்கும் அதற்கு கொடுக்கிற பில்ட் அப்பும்தான். வத்திப்போன வயித்தை காட்டி பாருங்கடா சிக்ஸ்பேக் என்றால் பூதக்கண்ணாடி வைத்து தேடவேண்டியிருக்கிறது. சிக்ஸ்பேக்கை அல்ல வயிற்றை! உண்மையில் சமகால தமிழ் சினிமாவில் கொடி இடை என்பது தனுஷூக்குதான் இருக்கிறது. அனேகமாக பேன்ட் ஸைஸ் 26 ஆக இருக்கலாம்! (அனிருத்துக்கு 25ஆக இருக்கலாம்!)
ஒரு மாபெரும் மேதை. உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். அப்பேர்ப்பட்ட மனிதரின் வாழ்க்கையை படமாக்குவதென்றால் பிரமாண்டமாக எடுத்திருக்க வேண்டாமா? ஞான.ராஜசேகரனின் ‘ராமானுஜன்’ தூர்தர்ஷனில் வருகிற டெலிஃபிலிம் அளவுக்கே வந்திருப்பது வேதனைதான். ரமேஷ் விநாயகத்தின் இசை மட்டும் அற்புதம்.
சில படங்களை பார்க்கும்போது அடேங்கப்பா நல்லாருக்கே என்று தோன்றும். ஆனாலும் படம் முடிந்தபின்னும் ஏதோ குறைவதாக தோன்றும். என்னமோ தப்பு பண்ணிருக்கான்யா இவன் என்று நினைத்துக்கொண்டே இருப்போம். நல்ல படம் பார்த்துவிட்ட திருப்தியே இருக்காது. அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இடம்பெறக்கூடியது அரிமா நம்பி. படத்தில் கதை திரைக்கதை எடிட்டிங் இசை நடிப்பு வசனம் என எல்லாமே தூள்தான் என்றாலும் ஏதோ குறை.
சஸ்பென்சான அந்த குறையோடே படம் ஒரளவு ஹிட்டாகிவிட்டது.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திருஷ்யம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரிலீஸாகி வெற்றிபெற்றுள்ளது. த்ருஷயம் படத்தின் தமிழ் ரீமேக் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள். கமல் நடிக்கிறார் என்பது பழைய செய்தி. படம் பூஜை போட்ட அடுத்த நாளே படத்திற்கு தடை விதித்துள்ளது எர்ணாகுளம் நீதிமன்றம். கமல் படத்தில் சர்ச்சை இல்லாமல் எப்படி? யாரோ ஒரு எழுத்தாளர் இப்படத்தின் கதை என்னோடதாக்கும் என்று கேஸ் போட்டு தடை வாங்கியிருக்கிறார். ஆனால் பாருங்கள் மக்கழே... உண்மை விசித்திரமானது. த்ருஷ்யமே ஜப்பானிய படமான ‘’சஸ்பெக்ட் எக்ஸ்”ன் காப்பிதான். வொன்டர்... வொன்டர்!
கமலுக்கு எட்டாதது சேரனுக்கு எட்டியிருக்கிறது. தியேட்டர்கள் உதவியின்றி திரைப்படங்களை நேரடியாக மக்களுக்கே கொண்டு சேர்க்கிற ஒரு ஐடியாவுக்கு செயல்வடிவம் கொடுத்து பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார்
சேரன்! திருட்டு டிவிடியை சமாளிக்க மக்களுக்கு நேரடியாக ஒரிஜினல் டிவிடி விற்பது. டிடிஎச் வழி படத்தை ரிலீஸ் பண்ணுவது, மொபைல் மற்றும் இணையம் வழி ரசிகர்களை சென்றடைவது என பல்வேறு வழிகளுக்கான ஏற்பாடுகள் சேரனின் இ2ஏ செய்ய இருக்கிறதாம்! அவருடைய ““ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை” தொடங்கி மேலும்ரோகிணி இயக்கத்தில் வெளிவரவிருக்கிற “அப்பாவின் மீசை” வரை நாலைந்து படங்களை வெளியிட இருக்கிறார் சேரன். கமலுக்கு நேர்ந்தது சேரனுக்கு நேராமலிருந்தால் அடுத்த பத்தாண்டுகளில் சேரன்தான் தமிழ்சினிமாவை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்! அப்படிப்பட்டது இந்த ஐட்டம்! சூதானமாக ஆடுவது சுகம்.
ஆகஸ்ட், 2014.