எவர்கிரீன் குதிரை!

எவர்கிரீன் குதிரை!
Published on

ஜெ ய்பீம். நவம்பர் 2ம்தேதி

அமேசான் ப்ரைமில் வெளியான இந்தப் படம் கிளப்பிய அதிர்வில் இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறது பலரது மனங்கள்.

இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை சந்தேகத்தின் பேரில்  காவல் நிலையம் அழைத்துச் சென்று

சித்திரவதை செய்கிறார்கள் காவல் அதிகாரிகள். திரும்ப வராத அவனுக்காக நீதிமன்றப் படியேறுகிறாள் அவன் மனைவி. ஒரு நேர்மையான வழக்கறிஞர் அவளுக்கு உதவ -  நீதியை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் நம்மைப் போன்ற அருகிவரும் உயிரினங்களுக்கு -நம்பிக்கையூட்டும் வகையில் வழக்கு நகர்கிறது. இறுதியின் அவள் கணவனுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிறார் வழக்கறிஞர்.

த.செ.ஞானவேலுக்கு ஒரு ராயல் சல்யூட். மிகவும் எளிமையான கதையை சிக்கலில்லாமல் புரிய வைப்பதுதான் மிகச் சிக்கலானது. அதை திறம்படச் செய்திருக்கிறார் ஞானவேல். சூர்யா எனும் மனிதனின் பங்களிப்பை என்ன

சொல்வது! பொதுவாழ்விலும் பல அறப்பணிகளைச் செய்துவரும் அவர், இந்தக் கதையை தயாரிக்க இசைந்து நடித்துமிருப்பது தமிழ் திரைக்கு நல்லதாக அமைந்திருக்கிறது.

ராஜாக்கணுவாக மணிகண்டனும், செங்கேணியாக லிஜோமோல் ஜோஸும். நடித்திருக்கிறார்களா.. இல்லை இவர்கள்தான் அந்த நிஜமான வலியை அனுபவத்தவர்களா என்று ஒரு கட்டத்தில் தோன்றுமளவு கண்கள், உடல், விரல் என்று ஒவ்வொன்றிலும் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், எடிட்டிங், உடைகள் என்று ஒவ்வொரு தொழில்நுட்பக்கலைஞர்களும் நன்றியும் வாழ்த்துகளும்.

ஜெய்பீம் வந்த  இரண்டே நாளில் தீபாவளி.  “ஆங்.. நான் ஒருத்தன் இருக்கேன் பார்'  என்று தியேட்டரில் குதித்தார் அண்ணாத்தே. “நமக்கு இவங்க யார்கூடவும் வாய்க்கா வரப்புத் தகராறெல்லாம் இல்லைங்க. ஆனா இவ்வளவு செண்டிமெண்ட் வெச்சு படத்தை எடுத்திருக்காங்களே?' என்று தோன்றியது படம் பார்த்ததும். ரஜினி எனும் எவர்க்ரீன் குதிரையை பல்லு பிடுங்காம விடமாட்டார்கள் போல இவர்கள்!

தங்கை கீர்த்தி சுரேஷ், லவ் மேரேஜ் செய்து அண்ணன் ரஜினியைப் பிரிந்து சென்றுவிடுகிறார். கல்கத்தாவில் இருக்கும் அவரைக் காக்க எல்லைச் சாமியாய் செல்கிறார் ரஜினி.

“தங்கச்சி கண்லயே படமாட்டீங்க... ஆனா தங்கச்சிக்கு ஒவ்வொரு ஆபத்து வரப்பவும் நீங்கதான் காப்பாத்துவீங்க” என்று சொல்லியிருக்கிறார் சிவா. அட நல்ல ஒன்லைன் என்று ரஜினியும் ஓகே சொல்லியிருக்கிறார். சில இடங்களில் அண்ணன் & தங்கை காட்சிகள் உணர்வுபூர்வமாக இருக்கின்றன. மற்றபடி டிரீட்மெண்டில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்!

அதே நாளில் வந்த எனிமி.. இதுக்கு அது ஓகே என்று சிலர் சொன்னாலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை ரகம்தான்.

சின்ன வயது ஃப்ரெண்ட்ஸ் பெரிய வயதில் எனிமியாகி மோதிக்கொள்கிறார்கள் என்பதே கதை. ஹீரோ விஷால், வில்லன் ஆர்யா என்பது செம காம்போ. அதற்கேற்ப இன்னும் ஸ்ட்ராங்கான கதையைப் பிடித்திருக்கலாம் என்பது மட்டும் குறை.

விட்டேனா பார் என்று வந்தது எம்ஜிஆர் மகன், ஹாட்ஸ்டாரில். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று ஹிட்டடித்த பொன்ராமின் படம் என்று உட்கார்ந்தால் பொடனியில் அடிக்கிறார் பொன்ராம். மகனுடன் கோபித்துக்கொண்ட அப்பா, அவ்வளவுதான்.  அதுவும் சத்யராஜ் &- சசிகுமார் வேறு. ஆனால் அழுத்தமான காட்சிகள் இல்லாததாலும், டெக்னிக்கலாக அதே திருவிளையாடல் காலத்தில் இருப்பதாலும்.. ஐ அம் சாரி சார் ரகம்.

கடைசியாக பொன் மாணிக்கவேலும் அதே ஆயாசத் தைத்தான் தருகிறார். பிரபுதேவாவெல்லாம் ஒவ்வொரு அசைவிலும் ரசிகர்களைக் கொள்ளையிடும் ஓர்  ஆசாமி. இந்த வயதிலும் ஃபிட்டான உடம்பு. ஆனா கதை எடுபடலியே!

வந்தான் சுட்டான் ரிபீட்டு! அதாங்க  மாநாடு. இந்த படம் ரிலீசான கதையும் படத்தோட கதையும் ஒரே மாதிரிதான்! டைம் லூப்! அட்டகாசமான திரைக்கதை, எடிட்டிங் என்பதால் படத்தை கூட்டமான ரசிகர்களுடன் பார்க்க முடிகிறது. டைம் லூப்பில் சிக்கும் சிம்பு,  தன்னால் கொல்லப்படும் முதல்வரைக் காப்பாற்றுகிறாரா என்பதுதான் கதை. இந்த நடிகர் எவ்வளவோ நல்ல படங்களைத் தந்திருக்க வேண்டிய மனுஷனாச்சே என்ற ஆதங்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

டிசம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com