ஈகோ மோதல்!

ஈகோ மோதல்!
Published on

அன்னபூரணி. இந்தியாவின் சிறந்த செஃப் ஆக நினைக்கும் நாயகி நயன்தாரா. கோயில் பிரசாதம் செய்யும் தந்தைக்கு மகளான இவருக்கு, நம்பர் ஒன் கார்ப்பரேட் செஃப் ஆன, சத்யராஜ்தான் ரோல் மாடல். வீட்டுக்குத் தெரியாமல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கிறார். இதில் விருப்பமில்லாத அப்பா, நாயகிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதைக் கடந்து கனவை அடைந்தாரா நாயகி என்பதே கதை.

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, எடுத்துக் கொண்ட கதைக்களம் குட். நயன்தாரா - வின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம். சத்யராஜ், அச்யுத்குமார், கே.எஸ்.ரவிகுமார், ஜெய், கார்த்திக் குமார் என்று படத்திற்கு சரியான கதாபாத்திரத் தேர்வுகள். ஆனாலும் கொஞ்சம் பிரசார நெடியாக காட்சிகளைவிட அதிகம் பேசும் வசனங்கள் அயர்ச்சி. நல்லதொரு ஒன்லைன் சுமாரான திரைக்கதையால் பெரிதாய் கவனமீர்க்கவில்லை.

அதே வாரத்தில் வெளியானது பார்க்கிங். ஹரிஷ் கல்யாண் & இந்துஜா ஜோடி முதல் மாடியில். அரசு ஊழியர் எம்.எஸ். பாஸ்கர் கீழ்த்தளத்தில். சுமுகமான இக்குடும்பத்தினரின் உறவு ஹரிஷ் கார் வாங்கியதும் கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் அதிகரிக்க அந்த ஈகோ மோதல் எதுவரை செல்கிறது என்பதே கதை.

சுவாரஸ்யமான ஒன்லைனும் அதற்கேற்ற திரைக்கதையும் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வாவ் சொல்ல வைக்கிறது. ஹரிஷ் கல்யாணுக்கு சவாலான படம். என்ன சவால் என்றால் எம்.எஸ்.பாஸ்கர் என்ற நடிப்பு ராட்சஷனுக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டிய படம். அதை கவனமாகவே கையாண்டு பாஸாகிறார் ஹரிஷ். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவதிலும், படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே எம்.எஸ்.பாஸ்கர் என்ற நடிகர் நம் மனதிலிருந்து மறைந்து அந்தக் கதாபாத்திரமாகவே நிலை நிறுத்தபவர் எம்.எஸ்.பாஸ்கர். இதிலும் அப்படியே!

இடைவேளைக்குப் பின் கொஞ்சம் தள்ளாடியதும், க்ளிஷேவான க்ளைமாக்ஸும் மைனஸ். ஆனாலும் பாராட்டலாம்!

அடுத்த வாரம் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பில் ‘உறியடி' விஜயகுமார் நடித்த ஃபைட் க்ளப். கால்பந்தாட்டக்காரனாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் இளைஞனை வன்முறைப் பாதை எப்படி மாற்றுகிறது என்பதே கதை.

வடசென்னைவாசியாக நடித்திருக்கிறார் விஜய்குமார். தன் கனவுப்பாதை தடுமாறியபின் தன் முறுக்கேறிய உடம்பால் அடிதடி சண்டை என இறங்கி ஸ்கோர் செய்கிறார். பிற நடிகர்களும் அவ்வாறே. ஆனால் வடசென்னைக்கு மீண்டும் சண்டை - அடிதடி - புகை - போதை என்று நிறம் கொடுத்திருக்க வேண்டாம் இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத். கோவிந்த் வஸந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும் தெறி ரகம். இரண்டாம் பாதி சறுக்கலை சரி செய்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் நடித்த காஞ்சூரிங் கண்ணப்பனும் அந்த வாரம் வெளியானது. கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும்போது இறகுகளால் ஆன ட்ரீம் கேச்சர் கிடைக்கிறது. தெரியாமல் அதன் இறகைப் பிய்த்துவிட கனவில் அரண்மனைக்குள் சிக்குகிறார். கனவில் ஏற்படும் காயங்கள் நிஜத்திலும் இருக்கிறது. இப்படி அந்த ட்ரீம் கேச்சரின் இறகைப் பிய்த்த ஒவ்வொருவரும் கனவில் அரண்மனைக்குள் சிக்குறார்கள். இப்படி கனவுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் பேயாட்டத்தில் சிக்கும் சதீஷ் அண்ட் கோ எப்படி மீள்கிறது என்பதே கதை.

சிக்கலான இந்தக் கதையை புரிகிற விதத்தில் படமாக்கியதே சாதனைதான். ஆனாலும் ஆரம்பக் காட்சிகளுக்குப் பிறகு நடப்பதை யூகிக்க முடிகிற காட்சிகள் நம்மை அலுக்க வைக்கின்றன. யுவன் சங்கர் ராஜா ஆங்காங்கே காப்பாற்ற ஓரளவு தப்பிக்கிறது.

அதே வாரம் வெளியான கண்ணகி, யஷ்வந்த் கிஷோரின் இயக்கத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் என நான்கு நாயகிகளைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. நால்வரும் நான்குவித பின்னணியில், நான்குவித சிக்கல் / மனநிலையில் இருப்பவர்கள். நான்கு கதைகளும் ஒன்றிணைகிற க்ளைமாக்ஸில் யஷ்வந்த் ரசிக்க வைக்கிறார்.

நடிப்பிலும் நால்வருமே சோடை போகாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.  அம்மு அபிராமியின் தந்தையாக நடித்திருக்கும் மறைந்த நடிகர் மயில்சாமி வெகுவாக ரசிக்க வைக்கிறார். அகச்சிக்கல்களைப் பேசும் படத்தில் அதற்கான காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் க்ளைமாக்ஸ் காப்பாற்றும் என்றே கடந்து விட்டாரோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால் கவனிக்க வைக்கிற கதை + படமாக்கல் என்பதில் ஐயமில்லை!

And, Happy New Year!

logo
Andhimazhai
www.andhimazhai.com