இரட்டையர் இடம் மாறினால்?

இரட்டையர் இடம் மாறினால்?
Published on

இத்தனை நாள் கொரோனா கும்மியடித்துக் கொண்டிருக்க, அது போட்ட குட்டி ஒமிக்ரான் இப்போது எட்டிப்பார்த்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அதனால் திடீரென்று ஜனவரியில் மீண்டும் தியேட்டருக்கு விதிமுறைகளும், ஞாயிறு முழு ஊரடங்குமெல்லாம் அறிவிக்கப்பட... வரவேண்டிய பல படங்களை சைலண்டாகத்  தள்ளிவைத்தனர் திரைத்துறையினர். பல்லாண்டுகளாக அப்டேட் கேட்டு வாங்கி, ஒருவழியாக ரிலீஸாக வேண்டிய வலிமை தள்ளிவைக்கப்பட்டது. டிசம்பர் மாதம் பூராவும்  ராம் சரண், ஜூனியர் என்,டி.ஆர், ஆலியா பட் ஆகியோரோடு எஸ்.எஸ்.ராஜமௌலி நகரம் நகரமாகச் சென்று ப்ரமோட் செய்த RRR படமும் தள்ளிவைக்கப்பட்டது. ‘அடப்போங்கடா' என்று ரசிகர்கள் ஓ.டி.டியில் தஞ்சமடைந்தனர்.

ஜனவரி படங்களுக்கு போகும் முன், டிசம்பர் மாதக் கடைசியில் ரிலீஸான ‘83' படம் பற்றிக் கொஞ்சம். ஊருலகமே அறிந்த கதைதான். 1983இல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற நிகழ்வை உணர்வுபூர்வமான படமாகக் கொடுத்திருக்கிறார்கள். கபில்தேவாக ரன்வீர்சிங், அவர் மனைவி ரோமியாக தீபிகா படுகோனே, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக  நம்ம ஜீவா என்று பலரும் நடித்திருந்தார்கள்.

இந்தியாவிலேயே பெரிய எதிர்பார்ப்போ, பாராட்டுகளோ இல்லாமல் உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய அணி, லண்டனுக்குச் சென்றதில் இருந்து பலருடைய ஏளனங்களைத் தாண்டி கோப்பையோடு திரும்பிவருவதைத்தான் அட்டகாசமான திரைக்கதையில் படமாக்கியிருந்தனர். டீம் மேனேஜர் ப்ரித்விராஜ் மான் சிங்காக நடித்த பங்கஜ் திரிபாதிக்கு ஸ்பெஷலாகப் பாராட்டுகள்.   ஒரு ஸ்போர்ட்ஸ் படத்துக்குத் தேவையான அத்தனை பேக்கேஜ்களோடு ரசிகர்களைக் கவர்ந்தது 83.

ஜனவரியில் வெளியான ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு, பன்னெடுங்காலமாக சினிமா கைவைத்துப் பார்க்கும் ‘இரட்டையர்கள் இடம்மாறினால்?' கதைதான். அன்பாகவும் அறிவாகவும் ஹிப்ஹாப் ஆதி நடித்திருந்தார்.

மதுரைக் கதை. ஆனால் மதுரை ஸ்லாங் எல்லாம் இல்லை. 2கே கிட்ஸின் மனம் கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி படத்திலும் பாட்டிலும் சோபிக்கவில்லை. எப்ப கைவெச்சாலும் ஓடுகிற கதைதான். ஆனால் அதற்கான ஸ்க்ரீன்ப்ளே மேஜிக் மிஸ்ஸிங்!

அடுத்து, ‘40 கதை கேட்டுத் தூங்கிட்டேன்' என்று ஆடியோ ரிலீஸில் பேசி நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட அஸ்வின் குமார் நடிப்பில்  ‘என்ன சொல்லப் போகிறாய்.'  இயக்குநராக ஹரிஹரனுக்கும்  நாயகனாக அஸ்வின் குமாருக்கும் முதல் படம்.

தேர்ந்தெடுத்த காதலி, ‘ம்ஹும் எனக்கு லவ் ஃபெய்லியர் பையன் தான் வேணும்' என்று சொல்லிவிட சும்மா லுலுலாய்க்கு ஒரு காதலை செட்டப் செய்கிறார் அஸ்வின். அது முக்கோணக்காதலாக மாற, இறுதியில் என்னவானது என்பதே கதை.

நடிப்பில் பாஸாகும் அஸ்வின் குமார், அடுத்தடுத்து நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து, ஆடியோ வெளியீட்டில் மைக்கில் நன்றி வணக்கம் மட்டும் சொன்னால் ஒரு ரவுண்ட் வருவார். ‘குக்கு வித் கோமாளி' புகழ்,  ஏமாற்றம். இரண்டாம் பாதி இழுவையாகிவிட படமும் சோதிக்கிறது!

அடுத்ததாக காமெடி நடிகர் சதீஷ், நாயகனாக அவதாரமெடுத்திருக்கும் ‘நாய் சேகர்'.  ஐ.டி இளைஞன் சதீஷுக்கு பவித்ராவைக் கண்டதும் காதல். இன்னொரு புறம் மிருகங்களை வைத்து விபரீத ஆராய்ச்சிகள் செய்து வருகிறார் விஞ்ஞானி ஜார்ஜ் மரியன். அவரது நாய், சதீஷைக் கடித்துவிட நாய்  மனிதனின் டி.என்.ஏக்கள் இடம் மாறுகின்றன. இடையில் சிலைக்கடத்தல் உட்பட சிலபல கதைகள் சேர்த்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

பழைய படங்களின் பின்னணி இசையைப் பயன்படுத்தியது உட்பட பல விஷயங்கள் கவர்கின்றன. ஆனால் காமெடியாக வந்து வயிறுகுலுங்க வைத்திருக்க வேண்டிய படம் காமெடி குறைவால் ஒரு கட்டத்தில் தலை வலிக்க வைக்கிறது. இவற்றையெல்லாம் விட மாதக்கடைசியில் ZEE 5 இல் வெளியான, இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இயக்கத்தில் வந்த  ‘முதலும் நீ முடிவும் நீ' பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறது.

90களில் நடக்கும் நாயகன் நாயகி ஸ்கூல் லவ், ஒரு சண்டையில் பிரிய நேர்கிறது. பிற்பாடு, அவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கிறதென்ற சிம்பிள் ஒன் லைன். ஆனால் மிகச் சிறப்பான கதை, திரைக்கதையில் படத்தை ரசிக்க வைத்திருந்தார் தர்புகா சிவா.  பள்ளிக்கூட எபிசோட்கள் அடங்கிய படத்தின் முற்பாதி அட்டகாசம். இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்திரிக்கு வேலை கொடுத்திருக்கிறார். இசையும் குறைவில்லை.

படத்தின் கதாபாத்திரங்கள் வடிவமைத்திருந்த விதம், அவர்களுக்கான காட்சியமைப்ப்புகள், அவர்களின் நடிப்புகள் என்று நிறைவாகவே இருந்தது. அடுத்தடுத்து நல்ல படைப்புகளை தர்புகா சிவாவிடமிருந்து எதிர்பார்க்கலாம்!

பிப்ரவரி, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com