ஆரம்பிக்கலாங்களா?

ஆரம்பிக்கலாங்களா?
Published on

இந்த மாத முதல் ரிலீஸ், விக்ரம். ரிலீஸுக்கு முந்தைய ப்ரமோஷன்களெல்லாம் தடபுடலாக இருந்ததால், ‘என்னடா ரொம்ப ஓவராப் போறாங்களோ‘ என்று பேச்சு அடிபட்டது. கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என்ற பரபரப்பு அக்னிக்குஞ்சை, ‘சூர்யா வேற இருக்காராம்‘ என்ற சேதி  காட்டுத்தீயாக மாற்றியது.

கமலே எதிர்பார்க்காத ஓபனிங். தியேட்டர்கள் அலறின. முதல் நாள் முதல் இதை அச்சுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை விக்ரம் மக்களை ஏமாற்றவில்லை. வெய்ட்... பெரும்பாலான மக்களை.

கைதியின் தொடர்ச்சியாகத்தான் இருந்தது படம். கைப்பற்றப்பட்ட பல்லாயிரம் கிலோ போதை மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் எங்கே இருக்கிறதென்று தேடி அடைய நினைக்கும் ஒரு கும்பல்.. அழிக்கத் துடிக்கும் சீக்ரெட் ஏஜண்ட் விக்ரம். இவர்களுக்கிடையேயான ரேஸிங் சேஸிங்தான் விக்ரம்.

முதல் பாதியின் இடைவேளையில் ‘ஆரம்பிக்கலாங்களா' என்று கேட்பதுதான் ஹீரோ கமலுக்கான முதல் வசனம். முதல் பாதி முழுவதையும் ஃபகத் தாங்கிப் பிடிக்க, விஜய் சேதுபதியும் உடன் கெத்து காட்டுகிறார். இடைவேளைக்குப் பிறகு கமல் ராஜ்ஜியம். இருபது நிமிடங்களுக்கொருமுறை சர்ப்ரைஸ் ஒன்றை வைத்து பரபரவெனப் படமாக்கியிருக்கிறார் லோகேஷ்.

டீனா (வசந்தி), உப்பிலி (சந்தானபாரதி), லாரன்ஸ் (இளங்கோ குமரவேல்) என்று எல்லாருமே ஏஜெண்ட்தான் எனும்போது, விசாரிக்க வரும் பகத்திடம் விக்ரம் போன இடம் வந்த இடமெல்லாம் ஒப்பிப்பது ஏன் என்பது போன்ற லாஜிக் கேள்விகளெல்லாம் படம் பார்க்கும்போது தோன்றாமல் படமாக்கிய விதத்தில் இயக்குநர் ஜெயித்துவிட்டார். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்று ஒன்றையும் இந்தப் படம் மூலம் அமைத்துவிட்டார்!  பின்னணி இசை மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் அனிருத்!.

அடுத்து ஓ2.  சுவாசிப்பதில் சிரமப்படும் மகனுடன் கொச்சின் செல்கிறார் நயன்தாரா. அதே ஆம்னி பேருந்தில் பயணப்படும் சிலருடன் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார். நிலச்சரிவில் சிக்கிக்கொள்ளும் அவர்கள் ஆக்ஸிஜனுக்குப் போராட எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பதத்திற்கு நியாயம் சேர்க்கிறார் நயன்தாரா. அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் குழந்தை நட்சத்திரம் ரித்விக். ஜி.எஸ்.விக்னேஷுக்கு இது முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயக்கத்தில் நேர்த்தியைக் கூட்டியிருக்கிறார். இசையும் படத்துக்குக் கைகொடுத்திருக்கிறது.  மிகச் சிக்கலான, சவாலான ஒளிப்பதிவை  கோரும் இந்தக் கதைக்களத்துக்கு தமிழ் அழகன் தன் கேமரா மூலம் சிறப்பு செய்திருக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜி - என்.ஜே.சரவணன் இயக்கத்தில் ‘பதாய் ஹோ' இந்திப் படத்தின் ரீமேக்கான ‘வீட்ல விசேஷம்' இந்த மாதம் வந்து பேசப்பட்ட  ஃபீல் குட் படம். ஸ்கூல் வாத்தியாரான ஆர்.ஜே. பாலாஜி, தன் காதலுக்கு நீரூற்றிக்கொண்டிருக்க, வீட்டில் அம்மா கர்ப்பம் என்று சேதி வருகிறது. அவரும், அவரது தம்பியும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.

ரீமேக் என்றாலே சில சொதப்பல்கள் இருக்குமே என்ற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியிருக்கிறார்கள். சத்யராஜ், ஊர்வசி என்று நடிப்பு ஜாம்பவான்களை சரியாகப் பயன்படுத்தி தன் டிரேட்மார்க் பஞ்ச்களுடன் படத்தைக் கொண்டு செல்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. செண்டிமெண்ட் காட்சிகளும் காமெடியும் ஓகே என்றாலும் இடைவேளைக்குப் பிறகு  செண்டிமெண்ட் கொஞ்சம் அதிகமாகி சீரியல் டைப் வருவது மட்டும் குறையாகத் தெரிகிறது. ஆனாலும் குடும்பத்தோடு காணச் சிறந்ததொரு படம் இது என்பது நிஜம்!

பத்ரியின் இயக்கத்தில் ஜெய், சுந்தர்.சி நடிப்பில் கடைசி வாரத்தில் வந்தது பட்டாம்பூச்சி.

சைக்கோ கொலைகாரனாக ஜெய். அவர் ஏன் கொலை செய்கிறார் என்று கண்டுபிடித்து நிரூபிக்க வேண்டிய காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சி. எண்பதுகளில் நடக்கிற கதைக்கு அந்தக் காலம்போலவே காட்சிகளையும் யோசித்தது ஐடியாவாக செய்திருப்பார்களோ என்னவோ... சொதப்பலாகத் தெரிகிறது. ஜெய் நடிக்க சிரமப்படுவது திரையில் தெரிகிறது. ஒன்லைனாக ஓகே என்றாலும் இன்னும் காட்சிகளில் விறுவிறுப்புக் கூட்டியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

அதேநாளில் வெளியானது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன். கொஞ்சம் பணம் சேர்த்து குடும்பத்தை கரை சேர்க்க நினைக்கும் ஆட்டோ ஓட்டுநர் விஜய் சேதுபதி, அதற்காக ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக மாறுகிறார். அந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஓடிப்போய்விட, விஜய் சேதுபதியை மோசடிப் பேர்வழியாகப் பார்க்கிறார்கள் ஊர்மக்கள். அந்த அவப்பெயரிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே கதை.

விஜய் சேதுபதி அனைத்து உணர்ச்சிகளையும் கொடுத்து நடித்திருக்கிறார். காயத்ரியும் அவருக்கு ஈடுகொடுக்க முயல்கிறார். ஃபீல் குட் படங்களுக்கும் சீரியல் டைப் படங்களுக்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம். இந்தப் படம் கொஞ்சம் சீரியல் டைப்பாகப் போகிறது என்பது பெரும்குறை. இளையராஜா - யுவன் முதன் முதலாக இணைந்து இசையமைத்திருக்கிறார்கள் என்று டைட்டில் மட்டும் சொல்கிறது.  

படங்களைத் தாண்டி அமேசான் ப்ரைம் ஓடிடி யில் வெளியான ‘சுழல்' இந்த மாதம் ஹிட்டடித்த இன்னொரு படைப்பு. புஷ்கர் காயத்ரி எழுத்தில் பிரம்மா மற்றும் அனுசரண் முருகையன் ஆகியோர் இயக்கத்தில் எட்டு எபிசோட்களாக வெளிவந்தது சுழல்.

நீலகிரி மலைப்பகுதியைச் சேர்ந்த சாம்பலூர் என்ற ஊரில் ஒரு ஃபேக்டரி தீவிபத்துக்குள்ளாவதைத் தொடர்ந்து  ஃபேக்டரி யூனியன் லீடர் பார்த்திபனின் மகள்  மாயமாகிறார். அந்த ஊர் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டி, சப் இன்ஸ்பெக்டர் கதிர், ஃபேக்டரி முதலாளி ஹரீஷ் உத்தமன், ஃபேக்டரி யூனியன் லீடர் பார்த்திபன் இவர்களுக்குள்ளேயே நடக்கிறது கதை. வசனங்களும் இசையும் சுழலுக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. மயானக் கொள்ளை காட்சிகள் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. இடதுசாரி சிந்தனை கொண்ட பலரும் குற்றவாளிகளாக்கப்படுவது குறை. அடுத்த படைப்பின்போது இதனை கவனத்தில் கொண்டால் நலம்!

மற்றபடி தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு சீரிஸ்... சுழல்!

ஜூலை, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com