வாகை சூடிய வாழை!

Jama movie poster
ஜமா
Published on

இந்த மாதம் - செப்டம்பர் -  விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.

ஜமா.  கூத்துக் கலைஞரான அப்பா மூலம்  அக் கலையின் மீது தீரா ஆர்வம் கொண்டவனாக வளர்கிறார் பாரி இளவழகன்.  மறைந்துவிட்ட தந்தையின் கனவுக்காக அர்ஜுன வேஷம் கட்டும் ஆசையில் இருக்கிறார். ஆனால் வாத்தியார் சேத்தன் தொடர்ந்து பெண் வேடங்களே தருவதால் அவ்வுடல் மொழியே ஒட்டிக்கொள்கிறது. இதனால் திருமணம் நடைபெறுவதிலும் சிக்கல். இவற்றை எப்படிக் கடந்தார் நாயகன் என்பதே ஜமா.

தெருக்கூத்து எனும் கருவோடு கதையம்சத்தையும் இணைத்து நல்லனுபவத் திரைப்படமாகக் கொடுத்து நாயகனாகவும் நடித்திருக்கிருக்கிறார் பாரி இளவழகன். இளையராஜாவின் பின்னணி இசை. இன்னும் பரவலாகப் பேசப்பட்டிருக்கவேண்டிய படம் என்று தோன்றியது!

மழை பிடிக்காத மனிதன். விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம். தியேட்டரில் வெளியாகி ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. "எனக்குத் தெரியாம ஒரு நிமிஷ ஃபுட்டேஜைச் சேத்திட்டாங்க" என்று இயக்குநர் புகார் சொன்னது புதிய திருப்பமாக இருந்தது. மற்றபடி வழக்கமான வி.ஆ படம்.

இந்தியில் ஹிட்டடித்து தமிழில் வரப்போகிறது என்று 2019ல் அறிவிக்கப்பட்ட படம். பல்வேறு பண்டிகைகளுக்கான வாழ்த்துகளுக்குப் பிறகு இந்த மாதம் ரிலீஸானது.

விழிச்சவால் கொண்ட பிரசாந்த், ஒரு கொலைக்குச் சாட்சி ஆகிறார். அதனால் அவரது லண்டன் பயணம் சிக்கலாகிறது.  பிரசாந்த் ரசிகர்கள்  ‘வா தல வா தல' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு நல்ல பெயர் கொடுத்திருந்தது படம். கார்த்திக், சிம்ரன், ப்ரியா ஆனந்த் என்று நட்சத்திரக்கூட்டமும் நல்ல பங்களிப்பைத் தந்திருந்தது.

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வந்த மின்மினியும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. நண்பனின் மரணத்தால் மன வேதனையிலிருக்கும் ஒருவன். மரணித்தவனின் இதயம் பொருத்தப்பட்ட ஒருத்தி. இருவருக்குமான வாழ்க்கைப் பயணமும், இமயமலை பயணமும்தான் மின்மினி. அழகியலோடு படமாக்கப்பட்டிருக்கிறது மின்மினி.

டிமாண்டி 2-வும் இந்த மாதம்தான். இரண்டு அருள்நிதிகளையும் ஒரு ப்ரியா பவானி சங்கரையும் காவு வாங்கத் துடிக்கும் டிமாண்டி காலனி பேய். அதிலிருந்து தப்பிக்க இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

9 வருடங்களுக்கு முன் வந்த முதல் பாகத்தோடு தொடர்புபடுத்தி ரசனையாக எடுத்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. நிறைவான நடிகர்கள் பட்டாளம். பேய்ப்படங்களைப் பார்க்கும்போது கேள்விகளே எழாது என்பது படத்தின் ப்ளஸ். மூன்றாம் பாகத்தில் ஒரு சில கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்!

எழுபதுகளில் நடக்கும் கதை, ரகுதாத்தா. தாத்தா எம்.எஸ்.பாஸ்கருக்கு புற்றுநோய் இருப்பது தெரிவதால், உடனடியாக கீர்த்தி சுரேஷுக்கு திருமண வரன்கள் பார்க்கும் வேலை துவங்குகிறது. கீர்த்தி முற்போக்குவாதியாகக் காட்டிக்கொள்ளும் ரவீந்திர விஜயைக் மணம்புரிய சம்மதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது சுயரூபம் தெரியவர அதிலிருந்து தப்பிக்க - இந்தி எதிர்ப்புப் போராளியான அவருக்கு - இந்தி கற்கவேண்டிய சூழல் வருகிறது. எப்படிச் சமாளிக்கிறார், என்ன ஆனது என்பதே கதை. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் நகைச்சுவையும் படத்தைக் காப்பாற்றுகிறது!

இந்த மாதம் ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று தங்கலான். 19ம் நூற்றாண்டில் நடக்கிறது. விக்ரமை தலைவனாகக் கொண்ட பூர்வ இனக்குடிகள், கோலார் சென்று தங்கம் எடுத்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விழைகிறார்கள். வெள்ளைக்காரர் ஒருவருக்காக அதைச் செய்ய விரையும் விக்ரமும் அவர் மக்களும் அதை சாதித்தார்களா என்பதே கதை.

தன் தாத்தா பற்றிய கதையாக விக்ரம் குழந்தைகளுக்குச் சொல்லும்போதே நாம் படத்துக்குள் மூழ்கிவிடுகிறோம். ஆனால் முதல் பாதியின் அழுத்தம் இரண்டாம் பாதியில் இல்லாமல் அங்கங்கே அலைகிறது. ஆனாலும் பேச வந்த விஷயத்தை பௌத்தம், நிலம் உட்பட்ட அரசியல் குறியீடுகளோடு சொல்ல முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருகிறார் ரஞ்சித். விக்ரம், பார்வதி இருவரின் நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.

விமல் கருணாஸ் நடித்து மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் வந்தது போகுமிடம் வெகு தூரமில்லை. இடைவேளையும் க்ளைமாக்ஸும் எழுதப்படிருந்த அதே அழுத்தமான மொழியில் எல்லா காட்சிகளும் இருந்திருக்கலாம். நாடகபாணிக் காட்சிகள் தவிர்த்து, பெரிதாகக் குறையில்லை.

வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி, பல்வேறு விருதுகளைக் குவித்து திரையையும் ஆக்ரமித்தது. பேய் பிடித்துவிட்டதாக பூசாரி ஒருவரிடம் கொண்டு செல்லப்படும் நாயகி. அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் நாயகன். இவர்களோடு சொந்தங்கள் இணைந்து செல்லும் அந்த பூசாரியை நோக்கிய பயணமே படம். கலைப்படங்களுக்கேயுரிய படமாக்கல். நிறைய காட்சிகள் வெவ்வேறு குறியீடுகளோடு ஒவ்வொருவரும் விவாதித்துப் புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாதம் வந்த படங்களில் பெரும்பாலானவை பேசப்பட்டாலும் மாரி செல்வராஜின் வாழை எல்லா படங்களை விடவும் மெச்சத்தக்க வகையில் இருந்தது.

படிக்கும்போதே விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்கும் சிறுவன் வாழ்வில் நடக்கும் எதிர்பாரா தருணமொன்றே படம். மாரியின் வாழ்க்கையில் நடந்தது என்பதே நம்மை ஏதோ செய்கிறது.

சிவனணைந்தான் - சேகர் இருவரின் நட்பும் அந்த ரஜினி - கமல் போர்ஷன்களும் அட்டகாசம். மாரியின் அக்காவாக வரும் திவ்யா துரைசாமி, கம்யூனிஸ்டாக வரும் கலையரசன் இருவருமே நிறைவான நடிப்பு. அம்மாவாக வரும் கர்ணன் ஜானகி மனோரமாவுக்கு இணையான நடிப்பை வழங்கியுள்ளார். க்ளைமாக்ஸின் கனம் மனதில் வெகு நாட்களுக்கு தங்கும் அளவுக்கு அழுத்தமானதொரு படைப்பு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com