பிடி சார் படத்தில்
பிடி சார் படத்தில்

இந்தக் கதைய சொல்லாட்டிதான் என்ன?

சென்ற மாத இறுதியில் பார்த்தபடம். ரத்னம். ப்ரியா பவானி சங்கரைக் கண்டதும் பேரன்பும் பெருமதிப்பும் கொள்கிறார் விஷால். அவருக்கு ஆபத்து வர, காக்கிறார். அவருக்காக ஆந்திரா வரை சென்று பிரச்னையைத் தீர்க்க முயல்கிறார். விஷாலின் மாமா என வரும் அரசியல்வாதி சமுத்திரக்கனியும் துணை நிற்கிறார். இதெல்லாம் ஏன், காதலா இல்லை வேறு என்ன காரணம் என்பதை ஒரு கிலோ மசாலா, அரைக் கிலோ வறமிளகாய் கலந்து சொல்லியிருக்கிறார் ஹரி.

ஹரி படங்களுக்குரிய வேகம், கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. இரண்டு  பாடல்கள் சிறப்பு. அதுவும்   எஸ்.பி.பி. சரண் குரலில் வந்த 'எதனால' பாடல்  படம் முடிந்தும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

குரங்கு பெடல். மதுபானக்கடை மூலம் கவனமீர்த்த கமலக்கண்ணனின் இயக்கத்தில் வந்த படம். ராசி.அழகப்பனின் 'சைக்கிள்' சிறுகதைக்கு அழகான திரை வடிவம் கொடுத்திருக்கிறார் கமலக்கண்ணன்.

நடித்த அனைவருமே திருப்திகரமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். காளி வெங்கட், சந்தோஷுடன் ஜென்சன் திவாகர், பிரசன்னா என பலரின் நடிப்பும் அட்டகாசம். ஃப்ளாஷ்பாக்கி்ல் தோல்பாவைக் கூத்து சுவாரஸ்யம். இரண்டாம் பாதியும் முதல்பாதி போலவே இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்!

அரண்மனை 4. 'யாரு என்ன சொன்னா என்ன.. தயாரிப்பாளர் ஹேப்பியா இருக்கணும்' என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியிருக்கிறார் சுந்தர் சி. அதே பழைய மாவில், கேரட், தேங்காயெல்லாம் போட்ட புது தோசை. தமன்னா, ராஷி கன்னா என்று இரண்டு நாயகிகள்.

சுந்தர்.சியின் தங்கை தமன்னா தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து அவர்கள் இருந்த அரண்மனைக்குச் செல்கிறார்கள் சுந்தர்.சியும் அவரின் அத்தை கோவை சரளாவும். அங்கே.. சரி விடுங்க. இந்தக் கதைய சொல்லாட்டிதான் என்ன!

ரசவாதி. மௌனகுரு கொடுத்த சாந்தகுமாரின் இயக்கம். அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேசன்,  ரம்யா என்று நட்சத்திரங்கள்.

கொடைக்கானலில் சித்தமருத்துவராக இருக்கும் அர்ஜூன் தாஸைக் கண்டாலே ஆகமாட்டேன் என்கிறது இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கருக்கு. அர்ஜுனுக்கும், தான்யாவுக்குமான காதல் வேறு அவரைக் கடுப்பேற்றுகிறது. ஏன் என்பதை இழுவையோ இழுவைக்குப் பிறகு ப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். ஆனால் அதற்குள் நமக்கு ஒரு மாதிரி ஆகிவிடுகிறது.

STAR. கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளோடு வந்த படம். பெரிய நடிகனாக வளர வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கும் கவின் தன் வாழ்வில்  சந்திக்கும் மேடு பள்ளங்களே படம்.

ஒன்லைனாகச் சொன்னால் ஒன்றுமில்லை. ஆனால் முதல்பாதி முழுவதும் நம்மை அப்படிக் கட்டிப்போடுகிறார்கள் இளன் - கவின் - யுவன் கூட்டணி! தந்தை லால், தாய் கீதா கைலாசம் இருவரும் நடிப்பில் விளாச, போட்டி போட்டு பெர்ஃபார்மென்ஸ் காட்டுகிறார் கவின். கல்லூரித் தோழனாக வரும் தீப்ஸ் சைரஸ் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர். 

இரண்டாம் பாதியில் அப்படியே தலைகீழாக நம்மை படத்தோடு ஒன்றவே விடாத காட்சிகள். கொஞ்சம் செதுக்கியிருந்தால் பெஸ்ட் ஆஃப் கவினுடையதாக வந்திருக்கும்.

சேத்துமான் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் 'உறியடி' விஜயகுமார் நடிப்பில் வந்தது எலக்சன். நாட்டின் அரசியல் களம் சூடாக இருக்கும் நேரத்தில் உள்ளாட்சி அரசியலைப் பேசும் படம்.

நல்லதொரு கதைக்களன். ஆனால் நாடக பாணியிலான நீள நீள வசனங்கள், தேவையற்ற திணிப்புக் காட்சிகள் என்று அலைபாய்ந்து சுமார் என்ற பெயரை மட்டுமே எடுக்கிறது.

ராமராஜன் கம்பேக் என்று பேசிக்கொண்டிருந்த சாமானியன், வந்த வேகத்தில் அடங்கிப் போக அதே வாரத்தில் ஓரளவு பேசப்பட்டது சந்தானம் நடிப்பில் வந்த இங்கு நான்தான் கிங்கு கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டியது. கல்யாணம் ஆகவேண்டும் என்ற ஆசையில் கடன் வாங்கி வீடு கட்டி அந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர பாடுபடும் கதாபாத்திரம் சந்தானத்துக்கு. இதற்கிடையில் சென்னையில் ஒரு குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அதற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், திருமணம் ஆனதா இதையெல்லாம் சமாளித்தாரா என்பதே கதை.

வழக்கம்போல ஒன்லைனர்களில் அசத்துகிறார்  சந்தானம். உருவகேலிகளை மட்டும் கொறைக்கமாட்டேனே என்கிறார்.

கடைசி வாரத்தில் ஆதி நடிப்பில் பி.டி. சார். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வந்த இப்படத்தில் ஒரு சமூகப்பிரச்னையைப் பேசியிருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் ஒரு பெண், அது தற்கொலை அல்ல என்று வாதாடும் ஹீரோ.

நல்ல கருதான். ஆனால் ஆதி என்ற கேரக்டரை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள். ஆனால் மற்ற கதாபாத்திரங்களுக்கான  காட்சிகளுக்கும் இன்னும் மெனக்கெட்டிருந்தால் பிடிசார் பாஸாகி இருப்பார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com