Meyyazhagan

ஹீரோ திருந்தும் கதை!

Published on

அக்டோபரில் ரஜினியின் வேட்டையன் படையெடுக்கப் போவதால் பெரிய படங்களே கம்மி. ஆனால் செப்டம்பர் இறுதியில் வந்த ஒரு படத்தைப் பற்றிப் எழுதியே ஆகவேண்டும்.

மெய்யழகன்!

96 பெருவெற்றிக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கும் படம். போஸ்டர் டிசைனிலேயே அரவிந்த்சாமி, கார்த்தி இருவரின் தோழமையான ஸ்டில்கள் கவர்ந்திழுக்க, 'அத்தான்' என்று கார்த்தி அரவிந்த்சாமியை விளிக்கும் டிரெய்லரும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

சிறுவயதில் சொத்து பிரிக்கப்பட்டதால் தஞ்சை, நீடாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டினை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்த அரவிந்த்சாமி, பல வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமணத்துக்காக நீடாமங்கலம் வருகிறார். அங்கே அவரை 'அத்தான் அத்தான்' என்று கவனித்துத் தள்ளுகிறார் கார்த்தி. சொந்த வீடு பறிபோன ஊர் என்பதால் எதுவும் பிடிக்காமல் இருக்கும் அரவிந்த் சாமிக்கு கார்த்தி யார், எந்த வகையில் சொந்தம் என்பதே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவரைப் பற்றி அவர்மூலமே தெரியவருகிறது. ஆனால் அவரின் பெயர்கூட தெரியவில்லையே என்ற குற்றவுணர்வில் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்குத் திரும்புகிறார் அரவிந்த் சாமி. கார்த்தியின் பெயரை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்று முடிகிறது படம்.

பெரும்பாலானோரை, தன் டிரேட்மார்க் நெகிழ வைக்கும் கலையில் வசியப்படுத்தியிருக்கிறார் பிரேம். கார்த்தியின் நடிப்பும் அதற்கு போட்டிபோடும் அரவிந்த் சாமியின் நடிப்பும் படத்தை வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. இருவருக்குமிடையேயான காட்சிகளை அவ்வளவு மனதுக்கு நெருக்கமாக உணர்ந்து எழுதியிருக்கிறார் பிரேம். கார்த்தியின் வீட்டில் அரவிந்த் சாமி தங்கும் அந்த இரவை வெகுநாட்களுக்கு தமிழ்ரசிகர்கள் பேசும் வண்ணம் காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஒரு சிலருக்கு படம் ப்ளாஸ்டிக் தன்மையாகப் பட்டாலும் உறவு, ஊர் என்று கொண்டாடும் பலரையும் படம் கொஞ்சம் கசியவைத்தது என்றே சொல்லலாம்.

வேட்டையன் படத்தை கடைசியில் அலசலாம். இந்த மாதம் வெளிவந்த வேறு இரண்டு படங்களை முதலில் பார்க்கலாம்.

வேட்டையனோடே களமிறங்கியது ப்ளாக். Coherence எனும் ஹாலிவுட் படத்தின் உரிமையை வாங்கி (எவ்ளோ நல்ல விஷயம்!) தமிழுக்காக சில மாற்றங்களோடு ரீமேக் செய்திருக்கிறார்கள்.

ஜீவாவும் ப்ரியா பவானி சங்கரும் தாங்கள் வாங்கியிருக்கும் கடற்கரை வில்லாவுக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்கிறார்கள். அங்கே நடக்கும் அமானுஷ்யங்கள், அந்த முடிச்சுகள் எப்படி அவிழ்கிறது என்பதே படம்.

பாலசுப்ரமணியின் இயக்கமும் தமிழுக்கான மாற்றங்களும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது எனலாம். படம் பேசும் அறிவியல் விஷயங்கள் ஒரு சிலருக்குப் புரிவதில் குழப்பமிருக்கும் என்றாலும் முடிந்த அளவு எளிமையாகப் பேசியிருக்கிறாரகள். எந்த எதிர்பார்ப்புமின்றிப் பார்த்ததால் படம் அட சொல்ல வைத்தது.

போஸ் வெங்கட்டின் சார் படமும் இம்மாதம் வெளியானது. கல்விதான் ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்க சாதியினரின் பிடியிலிருந்து வெளியேற்றும் என்பதால் ஆரம்பப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தும் குறிக்கோளுடன் இருக்கிறார் சந்திரகுமார். ஆனால் அவரால் முடிவதில்லை அவர் மகனான விமல் அதை சாதிப்பதில் என்னென்ன சிக்கல்கள் எழுகின்றன, அவற்றை எப்படிக் கையாண்டு கடந்தார் என்பதே கதை.

நல்ல, பாராட்டத்தக்க ஒன்லைன். கல்வியை எட்டாக்கனியாக்க ஆதிக்க சாதியினர் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்வார்கள் என்பதை வெளிப்படையாக பேசிய விதத்தில் சபாஷ்தான். ஆனால் காதல், காமெடி (?) என்று படத்தில் பல வேகத்தடைகள், காட்சியமைப்பாகவும் படத்தில் நிறைய தொய்வு. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பேசப்பட்டிருக்கும் படமாக வந்திருக்கும்.

வேட்டையன். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்ன மாதிரியான படம் பண்ணப் போகிறார் என்பதே பலநாட்கள் பேசுபொருளாக இருந்தது. எரிகிற அந்தத் தீயில் என்கவுண்டர் செய்யும் போலீஸாக ரஜினி என்று காண்பித்த டிரெய்லர் எண்ணெய் ஊற்ற பற்றிக்கொண்டது அவ்விஷயம். ஞானவேல் என்கவுண்டரைக் கொண்டாட மாட்டாருப்பா, படம் வரட்டும் பேசுவோம் என்று எழுதிய பலரின் நம்பிக்கையையும் காப்பாற்றியிருந்தார் இயக்குநர்.

தப்பு செஞ்சா என்கவுண்டர்தான் என்ற அதிகாரச் செருக்குடன் இருக்கும் போலீஸ் ரஜினி. என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸ் செய்வது உடனடித் தீர்வல்ல. தவறு என்ற கோணத்தில் அணுகும் நீதிபதி சத்யதேவாக அமிதாப்.

குற்றவாளி என ஒருவரை என்கவுண்டர் செய்கிறார் ரஜினி. ஆனால் அவர் குற்றவாளி அல்ல என்று அறிந்ததும், நொறுங்கிப் போகிறார். இடைவேளைக்குப் பின் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிப்பதும் என்கவுண்டர் எதற்கும் தீர்வல்ல என்று உணர்ந்து திருந்துவதும்தான் கதை.

துஷாரா, பகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா என்று நடிகர் பட்டாளம். பகத் பாசிலின் காட்சிகள் படத்துக்கு பெரும் பலம். சீரியஸுக்கு நடுவே பெரிய ரிலாக்ஸாக இருந்தது அவை. கம்பீரமான சிங்கமாக திரையில் தோன்றுகிறார் அமிதாப். துஷாராவுக்கு சொல்லக்கூடிய ஒரு படம். நம்ப முடியாத லாஜிக் மீறல்களைத் தாண்டி பொதுமக்கள் 'இது ஒண்ணும் தப்பில்ல' என நினைக்கும் ஒரு விஷயத்தை சூப்பர் ஸ்டார் போன்ற ஒருவரை வைத்துப் பேசவைத்தது பாராட்டுக்குரியது. வழக்கமாக வில்லன் திருந்துவதாக படம் இருக்கும்; இதில் ஹீரோ, அதுவும் ரஜினி க்ளைமாக்ஸில் தன் கருத்தை மாற்றிக்கொள்வதாக அமைத்ததற்கே இயக்குநருக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com