கல்விக்குத் தடையாக கடவுளே வந்தாலும் காலி பண்ணிடுவோம் என்ற கருத்தை பேசும் திரைப்படம்தான் சார்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் ‘மா.பொ.சி’ என்ற பட அறிவிப்பு வெளியானதும் தலைப்பு குறித்த சர்ச்சை எழுந்தது. பின்னர் ‘சார்’ என பெயர் மாற்றப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. சுதந்திரத்துக்கு பிந்தைய ஆண்டுகளில் கதை நிகழ்வதுபோன்ற காட்சி அமைப்பும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வசனங்களும் விமலின் இன்னொரு வாகைசூடவா மாதிரியான படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதை படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.
கல்வி கற்றால் நம் குடும்பத்துக்கு யாரும் அடிமையாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்கும் ஆதிக்கச்சாதி குடும்பத்துக்கும், இதை எதிர்க்கும் நல்லாசிரியர் குடும்பத்துக்கும் இடையேயான முரண்,மோதலே படத்தின் கதை.
மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விமல் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வித்தியாசமில்லாத தோற்றம், ஒரேமாதிரியான முகபாவனைகள், வெள்ளந்தியான பேச்சு போன்றவற்றை விமல் விடவே மாட்டார் என்பதால் அதைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கலாம். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சரவணன், சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் ஆசிரியராக வரும் சந்திரகுமாரின் தோற்றம் பெரியாரை நினைவுப்படுத்துகிறது. அவரின் பேரனான விமல், ‘நா அண்ணாதுரையின் பேரன்டா’ என்று பேசும் வசனம் கவனிக்கத்தக்கது.
இனியன் ஹாரிஸூடைய ஒளிப்பதிவும், சித்துகுமார் இசையில் ‘படிச்சுக்குறோம்’ என்ற பாடல் உருக்கமாக உள்ளது. பின்னணி இசையும் படத்திற்கு பலம். டீசர், டிரெய்லரில் இடம்பெற்றிருந்த ’சாமியை கொன்னுட்டேன்…’, ‘மனுநீதியை கிழிச்சு போடுங்கனா… மக்கள் கொடுக்குற மனுவை கிழிச்சு போடுறாங்க...’ என்ற வசனங்களை தணிக்கை குழு வெட்டியதால் படத்தில் இடம்பெறவில்லை போல. சுகுணா திவாகரின் வசனம் நறுக்கென்று இருந்தாலும், க்ளைமேக்ஸ் காட்சி வசனங்களை கட்டுரை எழுதுவதுபோன்று எழுதிவிட்டிருக்கிறார்.
அயலி, அசுரன் மாதிரி கல்விதான் முக்கியம் என அழுத்தமாக பேசியிருக்க வேண்டிய சார், குத்து டான்ஸ், காதல் காட்சிகள், அடிதடி சண்டைகள் என வழக்கமான கமர்சியல் சினிமா எல்லைக்குள் சிக்கிக்கொள்கிறார்!
சாதியும் கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை பேசத்துணிந்த இயக்குநர் போஸ் வெங்கட் மேக்கிங்கில் சறுக்கியிருக்கிறார். கல்வியை மாற்றத்துக்கான ஆயுதமாகப் பார்க்கும் நல்லாசிரியர் குடும்பத்தினர், ஐம்பதாண்டுகளில் எத்தனை மாணவர்களை உருவாக்கினார்கள்? அவர்களுக்கு ஏன் கிராமத்தினர் உதவ முன்வரவில்லை? பள்ளிக்கூடத்தை இடிப்பதற்கு போலியான ஆவணத்தை உருவாக்கிய ஊர்த் தலைவர் மீது மாவட்ட கல்வி அதிகாரி ஏன் புகார் கொடுக்கவில்லை? போஸ்டரில் கணக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர் போன்று விமலை காட்டிவிட்டு, படத்தில் தமிழ் ஆசிரியராக காட்டுவது ஏன்? என்பதுபோன்ற பல கேள்விகள் எழுகின்றன. வலிந்து திணித்த துயரக் காட்சிகள், சலிப்பான காதல் காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது. நல்ல கருத்தை ரசிக்கும்படி சொல்லத்தவறிட்டீங்களே சார்!