’ஒரே ஒரு நொடி’யில் நடக்கும் நிகழ்வு பலரின் வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை க்ரைம் த்ரில்லர் ஜானரில் சொல்லும் திரைப்படம்தான் ’ஒரு நொடி’.
கந்துவட்டிக்காரர் தியாகுவிடம் (வேலராமமூர்த்தி) வாங்கிய பணத்தையும் அதற்கான வட்டியையும் கொடுத்துவிட்டு, தன்னுடைய சொத்துப் பத்திரத்தை வாங்கப் போகும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) திடீரென காணாமல் போகிறார். உடனே அவரின் மனைவி சகுந்தலா காவல் நிலையத்தில் புகார் அளிக்க, விசாரணையைத் தொடங்குகிறார் இன்ஸ்பெக்டர் தனம் குமார் (பரிதி இளமாறன்). அந்த விசாரணை பல மர்மங்களோடு நகர, சேகரன் என்ன ஆனார் என்பதற்கான விடை சொல்வதுதான் இப்படத்தின் மீதி கதை.
ஒரு குற்றம், அதையொட்டி நடக்கும் காவல் விசாரணை, அதில் ஏற்படும் திடீர் திருப்பங்கள், இறுதியில் குற்றவாளி யார் என்பதை சொல்வதுதான் படத்தின் திரைக்கதை. இதை பரபரப்பாக சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர் மணிவர்மன்.
இன்ஸ்பெக்டராக நடித்துள்ள தனம் குமாரின் நடிப்பு கச்சிதமாக இருந்தாலும், அவரின் நிறம், வசனம் போன்றவற்றில் யதார்த்தம் மிஸ்ஸிங். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், சிவரஞ்சி ஆகியோரின் நடிப்பில் எங்கும் குறையில்லை. சலூன் கடைக்காரராக நடித்திருப்பவர் இறுதிக் காட்சியில் மனதை உலுக்கிவிடுகிறார். அவருக்கு வாழ்த்துகள்!
ஒளிப்பதிவாளர் கே,.ஜி.ரதீஷ் படத்தைத் தாங்கிப்பிடிக்கிறார். கொஞ்சம் அதிகப்படியான க்ளோஸ் அப் ஷாட்களை தவிர்த்திருக்கலாம். சஞ்சய் மாணிக்கத்தின் இசை கவனிக்க வைக்கிறது. படத்தின் பாடல்களும் ஓகே ரகம். “கொல்லாதே கண்ணார”என்ற ஒரு டூயட் சாங்க் அசைபோட வைக்கிறது.(யாரு புது கவிஞரா?)
திரைக்கதையில் குறைவான விறுவிறுப்பும், டப்பிங்கில் நேர்த்தியின்மையும், செயற்கைத்தனமான வசனமும் கொஞ்சம் உறுத்துகிறது. ஆனால், படத்தின் இறுதிக் காட்சி கல்லையும் உருகவைக்கும் என்பதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.
போர் தொழில் வரிசையில் ‘ஒரு நொடி’ நல்ல க்ரைம் த்ரில்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!