அதிகார சமத்துவத்துக்கு எதிராக சாதி எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைப் பேசும் திரைப்படம்தான் நந்தன்.
காலங்காலமாக ஊராட்சி மன்றத் தலைவர் பதவி சுகத்தை அனுபவித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்). அவர் உள்ள பஞ்சாயத்து தனித்தொகுதியாக அறிவிக்கப்பட, தனது நம்பிக்கைக்குரிய விசுவாசியான கூழ்பானை என்கிற அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவராக்குகிறார். அவர் தனது கிராமத்துக்கான சுடுகாட்டை கேட்டுப்பெற, அது கோப்புலிங்கத்தின் தன்மானத்தை சீண்டிப்பார்க்கிறது. இதனால், இருவரும் எதிரெதிர் நிலைக்கு வர இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சமூக அந்தஸ்தில் கீழ்நிலையில் இருப்பவர்கள் அரசியல் அதிகாரத்துக்கு வருவதில் உள்ள சிக்கல், மீறி வந்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல வந்த இயக்குநர், அதற்கேற்ற திரைக்கதையை உருவாக்கத் தவறியிருக்கிறார். எதைச் சொல்ல வேண்டும் என்பதில் இருந்த தெளிவு; எப்படி சொல்வ வேண்டும் என்பதில் இல்லாமல் போனது வருத்தமே.
அடிமைப்படுத்துகிறோம் –அடிமையாக இருக்கிறோம் என்பதையே உணராத கோப்புலிங்கம் – கூழ்பானை கதாபாத்திரங்கள் தெளிவாக எழுதப்படவில்லை. “ஆள்வதற்காகத்தான் அதிகாரம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இங்கே வாழ்வதற்கே அதிகாரம் தேவைப்படுகிறது”என வசனம் பேசும் கூழ்பானை, ஏவல் வேலை செய்வதைப் பார்க்கும்போது, இந்த கதாபாத்திரத்தின் இயல்புதான் என்ன என கேட்கத்தோன்றுகிறது.
உயர்நிலைப்பள்ளியில் கொடியேற்று விழா என சொல்லிவிட்டு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் காட்டுவது போன்ற தொடர்பற்ற காட்சிகள் உறுத்தலாக உள்ளன. சசிகுமாரின் மகன் கதாபாத்திரம் கதையின் போக்கிற்கு எந்தளவிலும் ஒட்டவும் இல்லை; உதவவும் இல்லை.
சசிகுமாரைத் தவிர மற்ற அனைவரும் அவரவர் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகவும் பொருந்தியும் போகிறார்கள். வட்டாட்சியராக வரும் சமுத்திரக்கனி நச்சென நடித்திருந்தாலும், வெறும் அறிவுரை சொல்பவராக மட்டுமே இயக்குநர் காட்டியுள்ளார். கூழ்பானையை தன் கண்முன்னே மிரட்டும் கோப்புலிங்கத்தின் மீது தானே புகார் கொடுத்து, அவரை உள்ளே தள்ளியிருக்க முடியும். இப்படி படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங். படத்தில் ஒரு சில காட்சிகள் யதார்த்தமாக இருந்தாலும், கோப்புலிங்கத்தை காட்டும்போது அவரை சுற்றியிருப்பவர்கள் முற்றிலும் கெட்டவர்களாவும், கூழ்பானை வசிக்கும் பகுதியை காட்டும்போது அந்தப் பகுதி மக்கள் தலைகாய்ந்தவர்களாகவும் எந்நேரம் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டிருப்பவர்களாகவும், சாவுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பவர்களாகவும் காட்டுவதில் சமகால யதார்த்தம் இல்லை.
படத்தின் ஒரே ஆறுதல் வசனம். ‘போட்டியில்ல என்பது பெருமை இல்ல; போட்டி போடுற ஜனநாயகம்தான் பெருமை’ என்பது போன்ற வசனங்கள் தெறிப்பாக உள்ளன.
ஜிப்ரானின் பின்னணி இசை கதையின் போக்கிலிருந்து விலகி செல்கிறது. பாடல்களும் எடுபடவில்லை. கந்தர்வக்கோட்டை நிலவியலையும் மாண்டேஜ் காட்சிகளையும் அழகாக காட்டியுள்ளார் ஆர்.வி. சரண்.
கருடன், அயோத்தி போன்ற வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்த சசிக்குமாருக்கு நந்தன் கை கொடுக்குமா என்று பார்க்கவேண்டும்.
நந்தன் என்ற தலைப்பு கொடுத்த ஹைப்பை சுமாரான திரைக்கதை நீர்த்துப்போக செய்துவிட்டது.