திரைவிமர்சனம்: கோழிப்பண்ணை செல்லதுரை !

கோழிப்பண்ணை செல்லதுரை
கோழிப்பண்ணை செல்லதுரை
Published on

பெற்றோர்கள் அவர்கள் பொறுப்பிலிருந்து திசைமாறினால் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை உருக்கமாக சொல்லும் திரைப்படம்தான் கோழிப்பண்ணை செல்லதுரை.

தன்னுடைய அம்மா வேறொரு ஆணுடன் ஓடிப்போக, அந்த கோபத்தில் தன்னுடைய அப்பாவாலும் கைவிடப்படுகிறார்கள் 11 வயது செல்லத்துரையும் அவனது தங்கையும். ஆதரவாக இருந்த பாட்டியும் இறந்துவிட, சாப்பாட்டிற்கே கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. திக்கற்ற அவர்களுக்கு யார் துணையாக வருகிறார்கள்?தனது பாட்டி ஊரில் சிறுவன் செல்லத்துரை தன் தங்கையை எப்படி வளர்த்து கரை சேர்க்கிறார்? விட்டுச் சென்ற பெற்றோர் என்ன ஆனார்கள்? என ஒரு நாவல் மாதிரி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

திருமணமான பெண்ணின் எல்லை தாண்டிய உறவால் ஒரு குடும்பம் எப்படி சிதைகிறது? அடுத்த தலைமுறை என்ன ஆகிறது? என்பதை இயக்குநர் சீனு ராமசாமி யதார்த்தமாக சொல்ல வந்துள்ளார். படத்தின் இறுதிக்காட்சி துயர காவியம் எனலாம். 

நாயகன் ஏகன் தன்னால் முடிந்த அளவிலான நடிப்பைக் கொடுத்திருந்தாலும். சில இடங்களில் கச்சிதமாகவும் பல இடங்களில் மிகையாகவும் நடித்திருக்கிறார்.போகப்போக நடிப்பில் தேறிவிடுவார் என நம்புவோம்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. அவருக்கு வழக்கமான நகைச்சுவை காட்சிகள் உள்ளன. ஆனால் நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி யோகி பாபு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதில் அழகாக பொருந்தியுமிருக்கிறார். 

தங்கையாக நடித்த சத்யா தேவி கச்சிதமான நடிப்பை வழங்கி கவர்கிறார். நாயகியாக நடித்த பிரிகிடா இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். 

என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசையையும் பாடலையும் உயிர்ப்போடு கொடுத்திருக்கிறார். படத்துக்கு பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும். ஈரானிய படம் பார்க்கும் உணர்வைத் தந்தது அசோக் ராஜின் கேமரா கோணம்.

ஆபாச வசனங்களும், ரத்தம் தெறிக்கும் வன்முறைகளும் இல்லாதது என கதையில் ஆறுதல் தரும் விஷயங்கள் நிறையவே உள்ளன. குடும்ப ஆடியன்ஸை படம் நிச்சயம் கவரும்.

மெதுவாக நகரும் திரைக்கதை, கோழிப்பண்ணை செல்லதுரைக்கு மைனஸ் எனலாம். ஆனால் அழுத்தமான குடும்ப சமூக வாழ்வியல் கதைகளை மட்டுமே சொல்லும் இயக்குநர் சீனு ராமசாமி ஒருவர் மட்டும்தானே? அவரையும் போய் வணிக ரீதியில் விறுவிறு கதை சொல்லுமாறு கேட்கக் கூடாது அல்லவா?

logo
Andhimazhai
www.andhimazhai.com