கெத்தாக நிற்கும் படம்!

GOAT Movie
Published on

இந்த மாசம்  GOAT மாசம்டா..." என்று விஜய் ரசிகர்களால் கோலாகலமாக இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தமிழரசன் பச்சமுத்து என்ற அறிமுக இயக்குநர், "கொஞ்சம் இங்க பாரு கண்ணா..." என்று லப்பர் பந்தில் செஞ்சுரி அடித்துக் காண்பித்துவிட்டார். இரண்டுமே கிரிக்கெட் போட்டியில் முடியும் படம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். வரிசையாகப் பார்ப்போம்!

ஐந்தாம் தேதி வெளியானது விஜய் - விஜய் நடிப்பில் THE GOAT. வெங்கட் பிரபு இயக்க, அவரது ஆஸ்தான குழுவுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா உட்பட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்களும் ஒரு பாடலில் திரிஷா, சில நிமிடக் காட்சியில் சிவகார்த்திகேயன் என்று விவிஐபிக்களும் பங்கெடுத்திருக்கிற படம்.

விஜயகாந்தாகத் தோன்றி விஜயாக மாறும் ஆரம்பமே ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைகிறது. ஒரு பரபர படத்துக்கு உண்டான சில பல காட்சிகளும் உண்டு. ஆனாலும் வெங்கட் பிரபுவின் அக்மார்க் ரைட்டிங் மிஸ்ஸிங் என்று தோன்றியது. விஜய் என்ற உச்ச நட்சத்திரத்துக்கு எழுதுவதால் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் கடைசி சேஸிங் சண்டை, ஐபிஎல் ஃபைனல் ஃபினிஷிங் ஒரு மாதிரி ஓகே ரகம்தான்.

விஜய் படம் வந்ததால் அடுத்த வாரம் பூராவும் புதுப்பட ரிலீஸ் இல்லாமல் அமைதி. செப்டம்பர் 20இல் அதற்கெல்லாம் சேர்ந்தாற்போல தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை, இரண்டாம் உலகப்போர், நந்தன், லப்பர் பந்து என்று நிறைய படங்கள்.

தோழர் சேகுவாரா சமூக ஊடகங்களில் வைரலான பகுதிகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று இருந்தது. படம் கன்னாபின்னாவென்று வந்ததற்குக் காரணம் நிறைய சென்சார் வெட்டுகள் என்று சொல்லப்பட்டது.

கோழிப்பண்ணை செல்லத்துரை, அறிமுக நடிகர் ஏகன் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்தது.  பெற்றோரால் கைவிடப்பட்டு, தங்கை சத்யாவை வளக்கும் பொறுப்பான அண்ணன் ஏகன். அவருக்கு ஆதரவு கொடுக்கிறார் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு. பிரிகிடா சகாவின் காதலையும் புறக்கணித்து பயணிக்கும் ஏகனின் வாழ்வில் தங்கையில் காதல் குறுக்கிடுகிறது. அதனை  ஏகன் எவ்வாறு எதிர்கொள்கிறார், என்ன ஆகிறது முடிவில் என்பதே கதை.

முதல் படம் என்ற அறிகுறியில்லாத நடிப்பு ஏகனுக்கு. யோகிபாபுவிடனான காட்சிகளிலும், தங்கையின் பாசக்காட்சிகளிலும் நடிப்பில் கவர்கிறார். யோகிபாபு படத்தின் பெரிய பலம். ஆனால் அழுத்தமான காட்சிகளும் திரைக்கதையும் இல்லாதது படத்தை மிகவும் தொய்வாக்குகிறது. சீனு ராமசாமியின் பாணி படங்களின் ரசிகர்களை மட்டும் கவரலாம்.

இந்தக் கூட்டத்தில் ஆச்சர்யப்படுத்திய மூன்று படங்களில் ஒன்று கடைசி உலகப்போர், இன்னொன்று நந்தன், மூன்றாவதும் இம்மாதத்தின் ஆகச்சிறந்த படமும் என்ற இடத்தில் லப்பர் பந்து.

கடைசி உலகப்போர், ஹிப்ஹாப் ஆதியின் தயாரிப்பில், எழுத்தில், இயக்கத்தில், நடிப்பில் வெளிவந்தது. 2028ல் நடக்கும் கதை. ஐ.நாவிலிருந்து விலகி சீனாவும் ரஷ்யாவும் ரிபப்ளிக் என்ற கூட்டமைப்பை  உருவாக்குகிறது. அதில் இந்தியா இணைவதில்லை. இங்கே தமிழ்நாட்டில் ஊழல்வாதியான நட்டி நடராஜின் கைப்பாவை முதல்வராக நாசர். நாசரின் உடல் நலக்குறைவால் அமைச்சராகும் அனகாவை ஹிப்ஹாப் ஆதி வழிகாட்டுகிறார். இதனால் கடுப்பாகிறார் நட்டி நடராஜ், ஹிப்ஹாப் ஆதியை தீவிரவாதியாக சித்தரிக்க முனைகிறார். இதற்குள் ரிபப்ளிக்கின் தாக்குதலுக்கு சென்னை இலக்காக, போர் என்ன ஆனது, தமிழ்நாடு என்ன ஆனது என்பதே கதை.

ஃபேண்டஸி என்ற தொடாத சப்ஜெக்டைத் தொட்டு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. நட்டி நடராஜ், நாசர், அனகா என்று அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் தயாரிப்பு - இயக்கத்தில் வெளிவந்த நந்தன் படமும் அட சொல்ல வைத்தது. ஊர் பிரசிடெண்ட் என்ற நிரந்தர நாற்காலியில் இருக்கும் பாலாஜி சக்திவேலின் கிராமம் தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. தன் சொல்லுக்குக் கட்டுப்பட்ட 'கூழ்ப்பானை' சசிகுமாரை நிற்க வைக்கிறார். ஆனால் பொம்மை பிரசிடெண்டான சசிகுமார் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. தன் அம்மாவின் பிணத்தை எரிக்கக்கூட முடியவில்லை என்ற ஏக்கத்தில் ஒரு சிறு முயற்சியை மேற்கொள்கிறார். ஆனால் அதற்கே ஆதிக்க சாதியினரின் அவமானத்துக்கு ஆளாகிறார். ராஜினாமா செய்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

 ‘காலணிக்குரல்கள்' என்ற ஆரம்பகாட்சியிலேயே நிமிர வைக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இறங்குகிறது.

இம்மாதத்தில் - ஏன் - இதுவரை வந்தவற்றை வைத்துப் பார்த்தால் - இவ்வருடத்தில் ஆகச் சிறந்த படைப்பாக 'கெத்தாக' நிற்கிறது லப்பர் பந்து!

சின்ன வயதிலிருந்தே உள்ளூர் லப்பர் பந்து கிரிக்கெட்டில் 'கெத்து' - பூமாலையாக நடித்திருக்கும் அட்டகத்தி... ஸாரி.. கெத்து தினேஷ். அவரை சின்ன வயதில் பார்த்து இன்ஸ்பயரான 'அன்பு' ஹரீஷ் கல்யாண். ஒரு கட்டத்தில் ஹரீஷ் சொல்லும் ஒரு கமெண்டால் இருவருக்கும் சின்னதாக ஈகோ முளைக்கிறது. அந்த ஈகோ கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிறது. இந்நிலையில் தினேஷின் மகள் சஞ்சனாவுடன் ஹரீஷுக்கு காதல் உருவாகிறது. கிரிக்கெட் விளையாடப்போனாலே கோபப்படும் மனைவி ஸ்வாசிகா ஒருபுறம், தனக்குப் பிடிக்காதவனுடன்  மகளின் காதல் ஒரு புறம் இவற்றை தினேஷ் எப்படி எதிர்கொள்கிறார், அன்பு எப்படி தினேஷின் குட்புக்கில் இடம்பிடிக்க முயல்கிறார் என்பதையெல்லாம் அட்டகாசமான திரைக்கதை, அழுத்தமான காட்சிகள் என்று படைத்து அசத்தியிருக்கிறார்  தமிழரசன் பச்சமுத்து.

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் கெத்து தினெஷை கடிந்துகொண்டு டிராக்டரில் ஏற்றியபடி கிரவுண்டை களேபரம் செய்யும் அவரது மனைவி ஸ்வாசிகா, காதலுக்கு தந்தையை ஒப்புக்கொள்ள வைக்கப் பாடுபடும் சஞ்சனா, பால சரவணன், காளிவெங்கட், கீதா கைலாசம், கர்ணன் ஜானகி, ஜென்சன் திவாகர், இப்படி ஒவ்வொருவரின் நடிப்பைப் பற்றியும் ஒவ்வொரு பத்தில் எழுதலாம் எனுமளவுக்கு அழுத்தமான ரைட்டிங்.

கிரிக்கெட், கிராமத்து குடும்ப வாழ்வு எல்லாம் தாண்டி இப்படம் பேசும் சமூகநீதியும் சாதி அரசியலும் மிகவும் அழுத்தமானது. காளிவெங்கட்டை பால சரவணன் கேள்வி கேட்கும் அந்த ஒரு காட்சி அரங்கையே கைதட்ட வைக்கிறது. கோபித்துக்கொண்டு போன மருமகள் வீட்டுக்கு கீதா கைலாசம் போகும் காட்சியும் அப்படித்தான். இப்படி ஒவ்வொரு காட்சியுமே ரசிர்களை ஒன்றிப் பார்க்க வைத்த ஒரு படம் என்றால் பல வருடங்களுக்குப் பிறகு இதுதான்!

logo
Andhimazhai
www.andhimazhai.com