எல்லா அம்சங்களும் கோலோச்சும் உள்ளாட்சித் தேர்தலில் தொண்டன் ஒருவன் தலைவன் ஆவதே எலக்சன் படத்தின் ஒரு வரிக் கதை.
வாணியம்பாடி அருகே, அரசியல் கட்சியொன்றில் கொள்கைப் பிடிப்புள்ள தொண்டனாக இருக்கிறார் ஜார்ஜ் மரியன். அவருக்கு நேரும் அவமானத்தை துடைப்பதற்காகத் தேர்தலில் நிற்கும் அவருடைய மகன் உறியடி விஜய் குமார், தேர்தலில் வென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
உள்ளாட்சித் தேர்தல் என்றால் என்னவெல்லாம் ஞாபகம் வருமோ, அவற்றை அப்படியே படத்தில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் தமிழ். கூடவே, தேர்தல் என்றால் என்ன என்றும் பாடம் எடுத்திருக்கிறார்.
குடவோலை முறை தேர்தல், பிரிட்டிஷ் கால நீதிக் கட்சி, சுதந்திரத்துக்குப் பிந்தைய தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் ஆகிய விசயங்களை கதைக்கு ஏற்றவாறு படத்துக்குள் கொண்டுவந்திருப்பது இயக்குநரின் கைவண்ணத்தைக் காட்டுகிறது.
நாயகன் ’உறியடி’ விஜய்குமார் ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். ஆனாலும் மற்ற பாவனைகள் அவருக்குக் குறைவுபோல என்பதாகவே பல காட்சிகள் காட்டுகின்றன.
ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். கதாபாத்திரத்தின் மீட்டரைக் கச்சிதமாக உள்வாங்கி இருவரும் தங்கள் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
திலீபன், பிரீத்தி அஞ்சு அஸ்ராணி, நாச்சியாள் சுகந்தி ஆகியோரும் நடிப்பில் கவனிக்கவே வைக்கின்றனர்.
வேலூர், ராணிப்பேட்டை பகுதியின் நிலவியலை, திரைக்கதைக்கு ஏற்ற விறுவிறுப்புடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், மகேந்திரன் ஜெயராஜ்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை விறுவிறுப்புக்கு உயிர் கொடுக்கும் அளவுக்கு, ஏனோ பாடல்களை அசைபோட வைக்கவில்லை.
படத்தொகுப்பாளர் பிரேம் குமார் படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம்கூடக் குறைத்திருக்கலாம்.
திரைக்கதை கொஞ்சம் தளர்வாகவும் காதல் காட்சிகள் புதுமையில்லாமலும் இருப்பது படத்தின் விறுவிறுப்பைக் குறைத்துவிடுகிறது. படத்தின் வசனம் இதை நிவர்த்தி செய்துவிடுகிறது.
பழைய வடாற்காடு குறிப்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வட்டார வழக்கை வசனத்தில் வார்த்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் அழகிய பெரியவன், இயக்குநர் தமிழ், விஜய்குமார் ஆகிய மூவரின் கூட்டுழைப்பால் உருவான வசனம், படத்துக்கு முக்கிய பலம்.
புதிய கதைக்களத்தோடும், கூர்மையான வசனங்களோடும் வந்திருக்கும் எலக்சன், நல்ல அரசியல் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை!