செவ்வாய் மொழி

செவ்வாய் மொழி
Published on

காமிரா கண்கள்

கடலூரைச் சேர்ந்த இன்பன் என்கிற ஏழாம் வகுப்பு மாணவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இவை. இன்பன் இந்த சிறுவயதுக்குள் தமிழக மலைகள், காட்டுப்பகுதிகளுக்கு பலமுறை தந்தையுடன் புகைப்படம் எடுக்க சென்று வந்துள்ளார். வனவிலங்கு புகைப்பட பயிலரங்குகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருக்கும் இவரால் இப்போதைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பறவைகளை இனம் கண்டு சொல்ல முடியும். தோட்டக் கள்ளன் என்று அழைக்கப்படும் வலசைப் பறவைகளைத் தேடித்தேடி காண்பதில் இன்பனுக்குப் பிரியம் அதிகமாம்!

 இவரது தந்தை இளந்திரையன் கடலூரில் குழந்தைகள் மருத்துவர். இவரும் பறவை ஆர்வலராகவும் இயற்கை விரும்பியாகவும் இருப்பவர். #வளர்க

செவ்வாய் மொழி

செவ்வாய்க்குப் போன ஐந்தாவது விண்கலன் பெர்சவெரன்ஸ் எக்கச்சக்க தகவல்களை அள்ளிக்கொடுக்கும்போலிருக்கிறது. 1997-இல் இருந்து தொடர்ந்து செவ்வாய் நோக்கி அமெரிக்கா விண்கலன்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. பெர்செவரன்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல். பாராசூட் விரிய செம்மண் பூமியில் தான் இறங்குவதை வீடியோ எடுத்து அனுப்பி வைத்ததுடன் அங்கே இருந்து தான் கேட்ட முதல் ஒலியையும் அனுப்பி வைத்திருக்கிறது. மெலிதாக காற்று வீசும் ஓசைதான் செவ்வாயில் இருந்து நாம் கேட்கும் ஓசை!

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கள் வாழ்ந்திருக்கும் வாய்ப்பு கொண்டது செவ்வாய் என்று அறிவியல் உலகம் நம்புகிறது. பெர்செவரன்ஸின் ரோபாட்டிக் கரங்கள் தான் இறங்கி இருக்கும் இடத்தைச் சுற்றி மண்ணையும் பாறையையும் சுரண்டி சிலிண்டர்களில் அடைத்து வைக்கும்.

இன்னும் பத்து ஆண்டு கழித்து அங்கே அனுப்ப இருக்கும் விண்கலன் ஒன்று இந்த சிலிண்டர்களை பூமிக்குக் கொண்டுவரும்.

பெர்செவரன்ஸ் தன்னுடன் ஒரு ஹெலிகாப்டரையும் கொண்டு போயிருக்கிறது. இதுவும் செவ்வாயின் வான் வெளியில் பறந்து ஆராய்ச்சி செய்யும். இன்னொரு கோளில் இப்படி பறக்க விடுவது இதுதான் முதல் தடவையாம்.

இங்கு வளிமண்டலத்தின் அடர்த்தி மிகக்குறைவு. பூமியில் இருப்பதுபோல் ஒரு பெர்சண்ட்தான். இங்கு இருக்கும் கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் பரிசோதனை செய்யும் கருவியும் போயிருக்கிறது!

இந்த பெர்செவரன்ஸ் விண்கலனை அனுப்பிய குழுவில் முக்கிய பங்கு வகித்தவர் இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானியான ஸ்வேதா மோகன். நெற்றியில் அவர் இட்டிருந்த அழகான பொட்டைப் பார்த்ததிலேயே இந்திய நெட்டிசன்கள் தாங்களும் செவ்வாய் கிரகத்திலேயே குடிபுகுந்த மகிழ்ச்சியை அடைந்துவிட்டனர்! நமக்கெல்லாம் இது போதும் மேடம்! #அசத்துங்க

மீண்டும் ஜார்ஜ்குட்டி!

மலையாள சினிமாவான திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேபிள் வியாபாரம் செய்து வந்த ஜார்ஜ் குட்டி (மோகன் லால்) இதில் தியேட்டர் முதலாளி ஆகிவிடுகிறார். முதல் காட்சியிலேயே ஜார்ஜ் குட்டி பிணத்தை காவல் நிலையத்தில் புதைப்பதை ஒருவர் பார்த்து விடுகிறார் என்று அதிர வைக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். ஜார்ஜுக்கு சினிமா எடுக்கும் ஆர்வமும் இருக்கிறது. நடிப்பதற்காக ஒருவரை தேர்வு செய்து வைத்து அடிக்கடி அவருடன் குடிக்கிறார். சினிமா கதாசிரியரை சந்திக்கிறார். புதிதாக குடி வந்திருக்கும் பக்கத்து வீட்டு குடிகார கணவனை கண்டிக்கிறார். கதையை சொல்லாமல் இயக்குநர் எங்கெங்கோ போகிறாரே என்று நாம் நினைக்கும் சமயத்தில் ஒவ்வொன்றாக அத்தனை முடிச்சுகளையும் நிதானமாக இணைக்கிறார்.

மற்றொரு பக்கம் இளைய மகளின் கல்லூரி நண்பனாக ஒருவர், ராணியின் தோழியாக ஒருவர் என்று காவல் துறை வலை விரித்து வைத்து காத்திருக்கிறது. காவல் துறையா, ஜார்ஜ் குட்டியா யார் அடுத்து வரும் நிகழ்வுகளை சரியாக அனுமானித்திருக்கிறார்கள் என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

உலகமெங்கும் இரண்டாம் பாக சினிமாக்கள் மொக்கையாக வந்து கொண்டிருக்கும் காலத்தில் முதல் பாகத்தின் தன்மையை சிதைக்காமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான இரண்டாம் பாகத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவரே.

தமிழில் கமல்,கௌதமி நடிப்பில் பாபநாசம், தெலுங்கில் வெங்கடேஷ்,மீனா இந்தியில் அஜய் தேவ்கான், ஷ்ரேயா என்று அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்ட முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கு தெலுங்கு, இந்தியில் தயாராகிவிட்டார்கள். தமிழில் பாப நாசம் 2 வருவதற்கு முதல் சிக்கல் கௌதமி. கமலுடன் மீண்டும் இணைந்து நடிப்பாரா கௌதமி என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

இதற்கிடையில் இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் திருஷ்யம் போலவே மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் இயக்குநர் போஸ் கொடுத்திருக்கிறார். இவ்வளவு பக்காவான இரண்டு கிரைம் திரில்லரை எழுதியிருக்கிறாரே ஒரு வேளை உண்மைக் கதையோ? என்று நெட்டிசன்கள் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

போலவே படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை என்று வழக்கு சிபிஐ வசமாகிறது, ஜார்ஜ் குட்டி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்கிறார் என்று இணையவாசிகள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  #பலே சேட்டா!

உற்சாகத்தில் இந்திய அணி!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. இந்தியா இங்கிலாந்துக் கிடையேயான மூன்றாவது டெஸ்ட் மேட்ச்சை இந்தியா அதிரடியாக இரண்டே நாளில் வென்றதைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பிரகாசமாக வைத்துள்ளது. நான்காவது டெஸ்ட்டில் டிரா செய்தாலே போதும் இந்தியா, நியூசிலாந்து பைனல். ஒருவேளை இந்தியா தோற்றால் பைனலில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா மோதும்.

இஷாந்த் சர்மாவுக்கு 100 வது போட்டி, மிக வேகமாக 400 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது வீரராக அஸ்வின், பங்கேற்ற முதல் டெஸ்ட் தொடரிலேயே அசத்திய அக்‌ஷர் படேல் என்று பல சாதனைகள் இந்த போட்டியில் நிறைந்திருந்தாலும் விமர்சனங்களுக்கும் குறைவில்லை.

விமர்சனங்களுக்கு காரணம் பெயர்கள் தாம். அகமதாபாத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில்தான் இந்த போட்டி நடந்தது. பந்து வீச்சாளர் முனைகளுக்கு ரிலையன்ஸ் முனை, அதானி முனை என்று பெயர். பரபரப்புக்கு கேக்கவும் வேண்டுமா?

அத்துடன் சென்னை மைதானத்தில் பந்து அதிகமாகச் சுழல்கிறது என்று விமர்சனம் செய்தவர்கள் அகமதாபாத் பிட்சைப் பார்த்தபின், சென்னை பிட்ச் தயார் செய்தவரைக் கையெடுத்துக் கும்பிடணும் என்று சொன்னது விசேஷம்!

#போட்டுத்தாக்கு

பாட்டுப் பாட வா!

சமூக ஊடகங்கள் மூலம் கவனம் பெறும் திறமையாளர்களில் ஒருவர் ரோஜா ஆதித்யா. ஸ்ம்யூல் செயலியில் ஏராளமான பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பெற்றவர். மக்களிசைத் தனிப் பாடல்கள் மூலம் சமூகம் சுற்றுச்சூழல்

விவசாயம் என விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தவர், இப்போது  இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கி இருக்கும் ஏலே படத்தில் பாடி இருப்பதன் மூலம் திரை உலகுக்கும் வந்திருக்கிறார்.

#வரவேற்பு

முதல் நாவல்!

மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா முதல் முதலாக நாவல் எழுதி இருக்கிறார். சஹிதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாவலில்,‘என் கனவுகளை,  ஆசைகளை நான் எதிர்நோக்கும் வாழ்வியலை நான் ஆசைப்படும் மனித மேன்மைகளை சஹிதா என்று உருவமிட்டு உயிர்கொடுத்து உலவ விட்டிருக்கிறேன்'  என்கிறார் இந்த புதிய நாவலாசிரியர்.  முதன்முதலாக ஆன்மீகத் தேடலை ஒரு பெண்ணின் பார்வையில்  சொல்லும் நாவலாம். #படிச்சுருவோம்

மார்ச் 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com