அமுலுக்கு ஆலோசனை...வாங்கி கட்டிக் கொண்ட பீட்டா!
அமெரிக்காவைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, அமுல் பால் நிறுவனத்துக்கு ஆலோசனை சொல்வதாக களமிறங்கி, பெரிய பஞ்சா யத்தைக் கூட்டி இருக்கிறது.
இனி அமுல் நிறுவனம் மாட்டுப் பால் வாங்கி விற்பனை செய்வதை நிறுத்திக்கொண்டு, நனி சைவமான தாவரப் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பாலை தயாரித்து விற்பது நல்லது. ஏனெனில் உலகெங்கும் மாட்டுப்பால் உண்பதற்கான சந்தை வீழ்ந்து தாவரப் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் சோயா பால் போன்றவற்றின் தேவை அதிகரித்து வருகிறது!- இதுதான் பீட்டா கூறிய அபாயகரமான ஆலோசனை.
விலங்குகள் நல அமைப்பான பீட்டா விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் எல்லா பொருட்களையுமே புறக்கணிக்கவேண்டும் என சொல்லிவருகிறது. ஆனால் இது உலகில் சாத்தியமே இல்லை என்பதால் கடும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்த பால் விஷயத்திலும் பீட்டா கடும் கண்டனத் துக்கு உள்ளாகி இருக்கிறது. பீட்டாவை அமுலின் நிர்வாக இயக்குநர் சோதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘‘இங்கு உற்பத்தி ஆகும் பாலில் 70 சதவீதம் நிலமில்லாத ஏழை விவசாயிகள் வைத்திருக்கும் மாடுகள் மூலமாகவே கிடைக்கிறது. பத்துகோடிப் பேரின் வாழ்க்கை இதில் அடங்கி உள்ளது. அவர்களின் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு இது உதவுகிறது. இவர்களுக்கு பீட்டா உதவி செய்யுமா? ஆய்வுக்கூடத்தில் உருவாகும் தாவரப் பாலை இவர்கள் வாங்கி அருந்தமுடியுமா?
கோடிக்கணக்கான விவசாயிகளின் உழைப்பில் உருவானது அமுல் நிறுவனம். அதன் உற்பத்தி கட்டமைப்பு வசதியை இந்த தாவரப்பால் தயாரிப்புக்கு பயன்படுத்தச் சொல்வது விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம்,''என சீறி இருக்கிறார் அவர்.
இத்துடன் சமூக வலைத்தளங்களில் பீட்டா மீதான விமர்சனம் அதிகரிக்கவே, ' நாங்கள் அமுலுக்கு உலக நிலவரத்தை மட்டுமே தெரிவித்தோம். அவர்களுக்கு எந்த அழுத்தத்தையும் அளிக்கவில்லை'' என்று பீட்டா பம்மி இருக்கிறது!
இந்திய சட்டங்களைப் பொறுத்தவரை சோயா பால் உள்ளிட்ட தாவரப் பொருட்களில் கலவை செய்து செயற்கையாக தயாரிக்கப்படும் திரவம் எதுவும் 'பால்' ஆக ஏற்றுக்கொள்ளப்படவில்லை!
ஓ...டயானா!
பிரிட்டன் முன்னாள் இளவரசி டயானாவைப் பற்றி அவர் இறந்து 23 ஆண்டுகள் ஆகியும் செய்திகளுக்குக் குறைவில்லை. தற்போதைய செய்தி அவர் 1995இல் பிபிசிக்கு கொடுத்த நேர்காணலின் பின்னணி பற்றியது.
பிரிட்டனின் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டைசன், மே இருபதாம் தேதி வெளியிட்ட விசாரணை அறிக்கை பிபிசி நிருபர் ஒருவர், டயானாவை பேட்டிக்காக சந்திக்க ஏமாற்று வேலைகள் செய்துள்ளதாகக் கூறி உள்ளது.
என்னதான் அப்படி ஏமாற்றி இருக்கிறார்?
டயானாவின் சகோதரர் எர்ல் ஸ்பென்சர் என்பவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பிபிசி நிருபர் பஷீர், அவரிடம் டயானாவின் நடவடிக்கைகள் வேவு பார்க்கப்படுவதாகக் கூறினார். அதற்கு ஆதாரமாக, அவர்களின் முன்னாள் ஊழியர், உதவியாளர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்குக்கு இதற்கு ஊதியமாக பணம் செலுத்தப்பட்டிருக்கும் வங்கி கணக்கு அறிக்கைகளைக் கொடுத்தார். இந்த அறிக்கைகளை பஷீர் போலியாக ஒரு வடிவமைப்பாளரைக் கொண்டு தயாரித்து எர்ல் ஸ்பென்சரை நம்ப வைத் தார் என்பதே குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து ஸ்பென்சர், டயானாவிடம் இந்த விவரங்களைக் கூறினார். பஷீரையும் அறிமுகப்படுத்தினார்.
அச்சமயம் டயானா பிரிட்டிஷ் இளவரசர் சார்லசை விட்டுப் பிரிந்து மூன்றாண்டுகள் ஆகி இருந்தது. இருவரும் விவாகரத்துப் பெறாமல் பரஸ்பரம் பிரிந்தனர். சார்லஸ், கமீலாவை மணந்துகொண்டிருந்தார். 34 வயதான டயனா, அரசகுடும்பத்தின் மீதிருந்த கோபத்தையெல்லாம்
பிபிசிக்கு பேட்டியாகக் கொடுக்க முடிவுசெய்தார். அதற்கு பஷீர் கொடுத்த போலி டாகுமெண்டுகள் தூண்டுதலால இருந்தன.
1995-இல் இந்தப் பேட்டி வெளியானபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டயானா ஒரு ராணுவ அதிகாரியுடன் காதலில் இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் கூறி இருந்தார்.
இந்தப் பேட்டியும் அதன் விளைவுகளும் அரசகுடும்பத்துடன் டயானாவுக்கு இருந்த உறவை மேலும் சிக்கலாக்கியது. அவருக்கு மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.
பிரிட்டன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த டயானா, இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விபத்தில் இறந்துவிட்டார்.
இப்பேட்டி ஒளிபரப்பான போதே டயானாவை ஏதோ ஒருவிதத்தில் ஏமாற்றி இப்படி ஒரு பேட்டி எடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தது. டயானா தன் சொந்த முடிவின்படியே இந்த நேர்காணலை அளித்ததாக பிபிசிக்கு கடிதம் எழுதினார். பஷீரையும் பிபிசி விசாரித்தது. அதில் அவர், சில போலி டாக்குமெண்டுகளை ஸ்பென்சருக்குக் காட்டியதாக ஒப்புக் கொண்டார். அதன் பிறகு போய்த் தொலை என்று பிபிசியும் அவரை விட்டுவிட்டது. அதன் பின்னர் பஷீர் பல ஊடக நிறுவனங்களுக்கு வேலை மாறிச் சென்று மீண்டும் பிபிசிக்கே வந்தார்.
இந்தப் பேட்டி வெளியாகி கால்நூற்றாண்டு ஆன நிலையில் ஏன் இப்போது பிரச்னை வெடித்தது?
டயானாவின் சகோதரர் எர்ல் ஸ்பென்ஸர் கடந்த ஆண்டு செப்டம்பரில் டெய்லி மெய்ல் என்ற பத்திரிகைக்கு இந்த நேர்காணல் பற்றி, தான் ஏமாற்றப்பட்டது பற்றியெல்லாம் சொல்லி இருந்தார். இதைத் தொடர்ந்துதான் பிபிசியில் இப்படி ஒரு விசாரணை நடந்து, அறிக்கை வெளியாகி உள்ளது.
இதற்காக பஷீர் மன்னிப்புக் கோரி உள்ளார். பிபிசி நிர்வாகமும் மன்னிப்புக் கோரி இருப்பதுடன், தங்கள் இதழியல் தரம்மேலும் மேம்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
நம் ஊரில் இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவுகூடக் காணவேண்டாம்! ஆஃப் தி ரெக்கார்டு என்று கூறியதை அதிகாரபூர்வ பேட்டியாகவும், ஆளையே பார்க்காமல் பேட்டிகளை அடித்துவிடுவதையும் தொழிலாகச் செய்யும் இதழியல் ஜாம்பவான்கள் மத்தியில் அல்லவா வாழ்கிறோம்!
மூணே மூணு வார்த்தை!
எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சுக்கோ என்றார், வைரமுத்து. அதுபோல் உலகையே கட்டம் கட்டமாப் பிரிச்சு ஒரு செயலி உருவாக்கி இருக்காங்க. மூணு மீட்டர் நீளம் மூணு மீட்டர் அகலம் உள்ள கட்டங்கள். உலகில் எங்கே போனாலும் நீங்க இருக்கற இடத்துக்கு முகவரி தெரியலன்னா, இந்தச் செயலியைப் பார்த்து, நீங்க இருக்கிற கட்டத்துல எழுதி இருக்கற மூன்று சொற்களைச் சொன்னால் போதும். நீங்க இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சு உங்களைத் தேடி வந்திடலாம். ஒவ்வொரு கட்டத்
துக்கும் மூணு வார்த்தைகளை ஒதுக்கி அதில் எழுதி இருக்காங்க. இந்தச் செயலி பேரே What3words என்பதுதான். ஆக நீங்க இருக்கிற
இடத்துக்கு என்ன மூணு சொல் கொடுத்திருக்காங்கனு இந்தச் செயலியை இறக்கிப் பார்த்துக் கோங்க... எண்கள் இல்லாமல் மூன்று ஈஸியான வார்த்தைகள் என்பதால், குழப்பம் இல்லாமல்
சொல்லிடலாம் சரியா?
கி.ரா.வும் பிரபாகரனும்!
புலிகள் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில், அவருக்கு வழக்கறிஞர் கே.ராதாகிருஷ்ணன், கி.ரா.எழுதிய கோபல்லகிராமம் நாவலைக் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறார். அதை இரண்டே நாளில் வாசித்துவிட்டு, ‘என்னண்ணே, அற்புதமா இருக்கு! கதையில் நாயகனும் இல்லை.. நாயகியும் இல்லை.. காதலும் இல்லை.. ஒரு போராளி இனக்குழுவின் வரலாறு அழகா இருக்கே.. யார் இவரு? அவரைப் பார்க்கணும்' என்றார், பிரபாகரன். அச்சமயம் அவர் மதுரையில் தங்கி இருந்தார். மத்திய அரசு போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கலாம் எனச் சொன்னபோது, ராதாகிருஷ்ணனுடன் அதற்காக சிங்கம்பட்டி ஜமீன் எஸ்டேட்களைப் பார்க்க பிரபாகரன் சென்றார். அப்போது, கோவில்பட்டியில் மதிய உணவு அருந்தி இருக்கிறார்கள். பிறகு இடைசெவல் கிராமத்துக்கு இருவரும் போனார்கள். அங்கே கி.ரா.வைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். கிளம்பும்போது தன்னுடைய நூல் ஒன்றில் கையெழுத்திட்டுக் கொடுத்த கி.ரா., ‘உங்கள் பெயர் பிரபாகரன் என்று எழுதவா?' எனக் கேட்டார். அதற்கு, ‘இல்லைங்க.. கரிகாலன் என்று எழுதுங்க!' என்றாராம், பிரபாகரன். ‘‘சோழநாட்டுக் கரிகாலன் அழியாப் புகழுடன் ஆண்டதுபோல், ஈழநாட்டுக் கரிகாலனும் வெற்றியை மட்டுமே பெறவேண்டும்!' என்று கி.ரா. எழுதிக் கையெழுத்திட்டாராம்!
-விஜயா பதிப்பகமும் கதைசொல்லி இதழும் நடத்திய, கி.ரா. இணையவழி அஞ்சலிக் கூட்டத்தில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அளித்த தகவல்
ஜூன், 2021