பாதரசத்துக்குத் தடை!
ஜப்பானில் 1950களில் மினமாட்டா நகரில் ஏராளமானபேர் நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள தொழிற்சா லைக் கழிவுகளில் வெளியேற்றப் பட்ட மெதில் மெர்குரி என்ற பாதரசக் கழிவுதான் இதற்குக் காரணம். அந்த பாதரச வேதிப்பொருள் கலந்த நீரில் வளர்ந்த மீன்களைச் சாப்பிட்ட ஜப்பானியர்களுக்கு இந்த நோய்த்தாக்குதல்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இந்த நரம்பு நோய் மினமாட்டா நோய் என்றே அழைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து பாதரசத்தின் தீய விளைவுகள் பற்றி உலகம் முழுக்க பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. கடந்தமாதம் அதற்கு விடிவு காலம் பிறந்தது. ஐநா சபை ஏற்பாட்டின் கீழ் பாதரசப் பொருட்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் மினமாட்டா ஒப்பந்தத்தில் 90 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டன. முதல் கையெழுத்து ஜப்பானுடையதுதான்.
பாதரசம் நரம்பு செல்களை பாதிக்கக் கூடிய முக்கியமான மாசுப்பொருள். கருவுற்ற தாய்மார்கள், இளம்பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கொடைக்கானலில் இயங்கிய யுனிலீவரின் தெர்மாமீட்டர் தயாரிக்கும் நிறுவனம் பாதரசக் கழிவுகளைக் கொட்டி மாசாக்கி யதால் மூடப்பட்டது நினைவிருக்கலாம். இன்னும் அதன் கழிவுகள் நீங்கவில்லை.
ஒரு சின்ன ஸ்பூன் பாதரசம் 25 ஏக்கர் பரப்பிலான ஏரியில் உள்ள மீன்கள அனைத்தையும் அழிக்கவல்லது. இந்த ஒப்பந்தம் 2020-ல் இருந்து அமலுக்கு வர ஆரம்பிக்கும். இனி மருத்துவர் வாயில் ஜுரம் பார்க்கும் தெர்மாமீட்டரைத்(பாதரசம் கொண்டது) திணிக்க மாட்டார் என்றுதான் இந்த செய்தியை முடிக்க ஆசை. ஆனால் சீனாகூட ஓகே என்று கையெழுத்து போட்டாச்சு! இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்துப் போடவில்லையே.. இதை எங்கே போய்ச் சொல்வது?
மலாலா
வயதில் இவ்வளவு புகழ் பெற முடியுமா? தாலிபான்களின் துப்பாக்கிக்குத் தப்பிப் பிழைத்த பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்குச் சிறுமி மலாலா இன்று மேற்குலகம் கொண்டாடும் இளைஞி. அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு டின்னர், எலிசபெத் ராணியுடன் கலந்துரையாடல், ஐநா சபையில் உரை, சிஎன்என்னில் நேர்காணல், நோபெல் அமைதிப்பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுதல், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிந்தனை சுதந்தரத்துக்காக வழங்கப்படும் ஷகாராவ் பரிசு என்று மூச்சு முட்டுகிறது. உலகின் 100 செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் டைம் இதழ் இந்த ஆண்டு ஏப்ரலில் சேர்த்துக்கொண்டது. இதற்கு மேல் என்ன வேண்டும்? பெண்கல்வியைப் பற்றி தாலிபான்களின் அடக்குமுறையைப் பற்றி பிபிசியில் வலைப்பூ எழுதிய சிறுமியின் மீது இன்று உலகமே அன்பு செலுத்துகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் கல்விக்கான உரிமைச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கே மலாலாவுக்கு ஆதரவான பிரச்சாரம்தான் காரணமாக இருந்தது.
மலாலா,‘நான் அரசியல்வாதியாக, பாகிஸ்தானின் பிரதமராக ஆக விரும்புகிறேன். அதன் மூலம் என் நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க நினைக்கிறேன்’ என்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவராக ஆசைப்பட்ட சிறுமி இவர். நல்லது மலாலாவின் கனவு நனவாகட்டும் !
இலக்கியம்
28- 82
பெல் இலக்கியப் பரிசுக்கும் குட்டி நோபெல் பரிசு என்று சிறப்பிக்கப்படும் மான் புக்கர் பரிசுக்கும் இந்த ஆண்டு ‘பெண்ராசி’ போல. இரண்டு பரிசுகளையும் பெண்களே பெற்றிருக்கிறார்கள். எண்பத்திரண்டு வயதான கனடிய எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ நோபெல் பரிசு பெற்றிருக்கிறார். இந்தப் பரிசைப் பெறும் முதலாவது கனடியப் பெண் மணி இவர்தான். மான் புக்கர் பரிசு இருபத்தியெட்டு வயதுள்ள எலினார் காட்டன் என்ற நியூசிலாந்து எழுத்தாளருக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பரிசைப் பெறும் இரண்டாவது நியூசிலாந்துக்காரர் இவர். ஆலிஸ் மன்றோ சிறுகதைகளைத் தவிர நாவல் எதையும் எழுதியவர் அல்ல; அவருடைய சிறுகதைகளும் மிக நீளமானவை. எலினார் எழுதியிருப்பது இரண்டே நாவல்கள்; சிறுகதை தனக்குப் பிடிபடாத சங்கதி என்கிறார், எழுதிய நாவல்கள் இரண்டும் பெரியவை.நீண்ட காலமாக எழுதி வரும் ஆலிசும் அண்மைக் காலமாக எழுதி வரும் எலினாரும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை பாராட்டுகிறார்கள். பரிசுப் பணத்தில் இருவரும் வாங்க விரும்புவது தனக்கே தனக்கான ஒரு எழுத்து மேஜையைத்தானாம். இருவரும் ஒரே கருத்தைச் சொல்கிறார்கள் “எங்களுக்கு என்று தனியான இடமில்லை”. அவர்கள் சொன்னது மேஜையைப் பற்றி மட்டுமல்ல.
போட்டுத்தாக்கு
சின்ன வயசில் எனக்கு கீரை சாப்பிடப் பிடிக்காது!
-ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி
அவர்களுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எங்களுக்கு 60 மாதங்கள் மட்டும் கொடுங்கள்...
-உ.பி. பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி
நமது பிரதமரிடம் செல்போன் கிடையாது, அந்தரங்க இ-மெயில் இல்லை. எனவே எங்களுக்கு ஒட்டுக்கேட்பது பற்றிக் கவலையில்லை.
-மன்மோகன் சிங்கின் செய்தித்தொடர்பாளர்
வாக்குறுதி கொடுத்துவிட்டு தவறி விடக்கூடாது என்பதற்காக மின்வெட்டு இருக்கும் என்று சொல்கிறோம், ஆனால் மின்வெட்டே இல்லாமல் மின்சாரம் கொடுகிறோம்.
-தமிழக முதல்வர் ஜெயலலிதா
நவம்பர், 2013