நான்கு ஆண்டுகள் சிரமப்பட்டு பொறியியல் படிப்பு படித்தால் எஞ்சினியர் வேலைக்குத்தானே போவார்கள்? ஆனால் இங்கே இரு பெண்கள் நம்பமுடியாத இன்னொரு செயலைச் செய்துள்ளனர். நீட் எழுதி பாஸ் செய்து மருத்துவம் படிக்கிறார்கள்.
நீட் 2021- இல் 1118 வது இடம் பிடித்துள்ளார் மும்பையைச் சேர்ந்த ஆக்ரிதி. இவர் பிட்ஸ் பிலானியில் பி.டெக் படித்துவிட்டு சில நிறுவனங்களில் வேலையும் பார்த்துவிட்டு, இப்போது எம்பிபிஎஸ் படிக்க இருக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த ஜானவி, அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்தவர். அவருக்கு முடக்குவாத நோய் வந்தபோது, சரியான சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் இல்லை என்பதை உணர்ந்தார். பிறகு தானே எம்பிபிஎஸ் படித்தால் என்ன எனத் தோன்றியதால் பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து 2020-இல் பாஸ் ஆகியும்விட்டார்! இப்போது அமெரிக்காவில் ஓரிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்!
பனிரெண்டாவது படிக்கையில் கணிதமும் உயிரியலும் சிரமப்பட்டு படித்து பொறியியல் அல்லது மருத்துவம் எடுத்துப் படிப்பார்கள்.
கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்ட கல்விப் பின்னணி கொண்டவர்கள் மருத்துவம் படிக்க வரும்போது, இதன் ஆய்வுப் படிப்புகளில் மிக நன்றாக செயல்பட முடியும் என்ற ஒரு கருத்தும் உலவுகிறது! ஆனாலும் பொறியியலும் மருத்துவமும் ஒருவரே படிப்பது என்பது ரொம்ப ஓவர் யுவர் ஹானர்!
நாட்டில் சுயதொழில் செய்யும் பெண்கள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து, வேலைக்குப் போய் சம்பளம் வாங்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்! இங்கு உள்ள சிறு,குறு, நடுத்தர தொழிலகங்களில் 20.37% பெண்களால் நடத்தப்படுகிறது! இந்தியாவில் உள்ள மொத்த தொழிலதிபர்களில் பெண்களின் எண்ணிக்கை என்பது 13.76 சதவீதமாக உள்ளது என போர்ப்ஸ் பத்திரிகை கூறுகிறது. இப்பத்திரிகையின் கணக்குப்படி 2011&12இல் சுயதொழில் செய்யும் பெண்கள் எண்ணிக்கை 55.6% ஆக இருந்தது. 2018-19-இல் இது 52.9% ஆக குறைந்துள்ளது. அதே சமயம் சம்பளம் வாங்கும் பெண்கள் எண்ணிக்கை 13.4% &இலிருந்து 22.9% ஆக உயர்ந்துள்ளதாம். என்ன ஆச்சு பெண்களே
சொந்தமாக தொழில் செய்வதை விட வேலைக்குப் போவதே நல்லது என நினைத்துவிட்டீர்களா?
கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்'& என்ற வாசகத்துடன் ஒரு படத்தை டென்னிஸ் வீரர்
சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். குறும்பான அந்த படத்துக்கு அட்டகாசமான வரவேற்பு!
தூக்கி எறியும் சானிடரி நாப்கினில் 1.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர்கள்!
மேற்குலகில் 1888-இல்தான் முதன்முதலாக பெண்-களுக்கு மாத சுழற்சி நாட்களில் உபயோகிப்-பதற்காக சானிடரி நாப்கின்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது உலகமெங்கும் இவை பயன்பாட்டில் உள்ளன. பொதுவாக இவற்றில் 90 சதவீதம் ப்ளாஸ்டிக் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆக இவை மட்க 800 ஆண்டுகள் வரை ஆகும். எனவே முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்கூட இன்னும் மட்காமல்தான் எங்கோ இருந்துகொண்டிருக்கும் என்பதே திடுக்கிட வைக்கும் உண்மை.
இப்படி திடுக்கிட்டதால்தான் 25 வயதாகும் அஜிங்கியா தாரியா என்ற இளைஞர் பேட்கேர் லேப்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். பயன்படுத்தப்பட்ட
சானிடரி நாப்கின்களை மறு சுழற்சி செய்து நம் கிரகத்தைக் காப்பாற்றும் நிறுவனம் இது.
இந்தியாவில் பெண்கள் மாத சுழற்சி நாட்களில் உபயோகிக்கும் சானிடரி நாப்கின்களைப் பற்றி ஒரு கணக்கு எடுத்திருக்கிறார்கள். 1,13,000 டன் அளவுக்கு ஆண்டுதோறும் இவை குப்பையில் எறியப்படுகின்றன.
தாரியா உருவாக்கி இருக்கும் எந்திரம், இந்த உபயோகித்த நாப்கின்களை தூய்மைப்படுத்தி, நார்நாராகக் கிழித்து அதில் உள்ள ஈரம் உறிஞ்சும் பாலிமர்களை, பேக்கேஜிங் தொழிலில் பயன்படுத்தும் அளவுக்கு மறுசுழற்சி செய்கிறது.
மார்ச் 2020-இல் தங்கள் நிறுவனம் மூலம் இந்த எந்திரங்களை விற்க ஆரம்பித்தார். புனே, மும்பையில் மட்டும் பெருநிறுவனங்களில் 550 எந்திரங்களைப் பொறுத்தி இருக்கிறார்.
பல்வேறு அமைப்புகள் இவருக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் தம் நிறுவனம் 1.5 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டும் என இவர் கணித்துள்ளார்.
ஒரு நாப்கினை மறுசுழற்சி செய்ய 30 பைசா ஆகிறதாம். இதில் கிடைக்கும் செல்லுலோஸை கிலோ 30 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
தொழிலுக்குத் தொழிலும் ஆச்சு! பூவுலகுக்கு சேவை செய்தது மாதிரியும் ஆச்சு. இதைத் தொடர்ந்து தாரியாவுக்கு பாராட்டுகளும் விருதுகளும் குவிகின்றன.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டு முக்கியமானது: ‘‘ இவர்களின் வேலை நாம் செயற்கைக்கோள்களை வடிவமைப்பதுபோலவே முக்கியமானது.''
பெகாசஸ் என்று கேள்விப்பட்டோம் இல்லையா? நம் நாட்டு முக்கியப் புள்ளிகளின் போன்களை ஒட்டுக்கேட்க உதவும் இஸ்ரேல் நாட்டு மென்பொருள். இந்தியாவிலும் இந்த பிரச்னை புயலைக் கிளப்பி இருக்கிறது. இந்த விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் எங்கள் வாடிக்கையாளர்களின் போன்களை நீ எப்படி ஒட்டுக் கேட்கப் போச்சு என்று களத்தில் குதித்துள்ளது. பெகாசஸை உருவாக்கி உலகம் முழுக்க களேபரத்தை உருவாக்கிய என்.எஸ்.ஓ என்ற இஸ்ரேல் நிறுவனம் மீது வழக்கு போட்டுள்ளது!
சிட்டிசன் லேப், அம்னெஸ்டி டெக் ஆகிய இருநிறுவனங்கள்தான் இப்படி செல்போன்களில் பெகாசஸ் மென்பொருள் ஏற்றப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து ஆதாரத்துடன் நிரூபித்தன. ஆப்பிள் நிறுவனம் இவற்றைப் பாராட்டி உள்ளது.
இஸ்ரேல் நாட்டு உதவியுடன் செயல்படும் என்.எஸ்.ஓ. நாங்கள் பெகாசஸை அரசுகளுக்கு மட்டுமே விற்றுள்ளோம் என்று கூறிவருகிறது. இந்நிலையில் ஆப்பிள் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கு, ஒட்டுக்கேட்பு முயற்சிகளுக்கு தடைபோடுவதுடன் பெரும் விழிப்புணர்வையும் உண்டாக்கலாம்!
டிசம்பர், 2021