இவ்வளவு நல்லா எழுதுறாயே இது எல்லாம் உனக்கு தேவையா?

பிரபஞ்சன்
பிரபஞ்சன்
Published on

பிரபஞ்சனிடம் எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?  எந்த வயதில் எழுதத் தொடங்கினீர்கள்? என்று கேட்டேன்.

‘எனக்கு பதினாறு வயதானபோது அப்பா ஒரு நல்ல நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதன் பளபளப்பான ஒற்றைகளைக் கிழித்து காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். அப்படி காதல் கடிதங்கள் எழுதியே அரைவாசி நோட்டுப் புத்தகம் முடிந்து போனது. காரணம் நான் அப்பொழுதெல்லாம் ஒரு கொள்கை வைத்திருந்தேன். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று. ஒரு பெண் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கோயிலை ஒருதரம் சுற்றிவிட்டு வீட்டுக்கு போவாள். இவளை எப்படியோ தவறவிட்டு விட்டேன். இவளிடம் கடிதம் கொடுப்பதற்கு சரியான இடம் கோயில்தான் என்று தீர்மானித்தேன். நோட்டுப் புத்தகத்தில் பக்கங்களை கிழித்து ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஐந்தே முக்கால் பக்கம் அவளை வர்ணித்தது. மீதியில் என் காதலைச் சொல்லியிருந்தேன்.

கோயிலில் அவள் சுற்றியபோது நானும் சுற்றினேன். முதல்நாள் கடிதம் கொடுப்பதற்கு போதிய தைரியம் வரவில்லை. இரண்டாவது நாள் அவள் பின்னாலேயே போய் பின்னுக்கு நின்றபடி கடிதத்தை நீட்டினேன். அவள் பெற்றுக்கொண்டாள். அதுவே பெரிய வெற்றி. வழக்கம்போல என்னுடைய முகத்தில் எறியவில்லை. துணிச்சலாக கடிதத்தை பெற்றுக் கொண்டவளுக்கு அதை ஒளித்து வைக்கும் சாமர்த்தியம் இல்லை. பிடிபட்டுப் போனாள். கடிதத்தை தூக்கிக்கொண்டு அவளுடைய அப்பா என் வீட்டுக்கு வேகமாக வந்ததை நான் பார்த்துவிட்டேன். நான் அதே வேகத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி முதல் வந்த பஸ்ஸை பிடித்து காசு தீருமட்டும் பயணம் செய்து கடைசி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நின்றேன். இருட்டிக்கொண்டு வந்தது, போக இடமில்லை. எப்படியோ சித்தப்பா தேடி அங்கே வந்து என்னை பிடித்து திரும்ப வீட்டுக்கு அழைத்துப் போனார்.

என்னை நிற்கவைத்து ஆறுபக்க கடிதத்தையும் அப்பா வாசித்து முடித்தார். இந்த பூலோகத்தில் நான் அனுபவித்த அவமானத்தில் அதனிலும் கீழான ஒன்று என் வாழ்கையில் பின்னர் நடக்கவில்லை. கடிதத்தை வாசித்து முடித்த பிறகு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அவர் சொன்னார், ‘இவ்வளவு நல்லா எழுதுறாயே. இதெல்லாம் உனக்கு தேவையா?' அவ்வளவுதான். என்னை தண்டிக்கவில்லை, என் எழுத்து திறமையை பாராட்டினார். எனக்குள் ஏதோ படைப்பாற்றல் இருக்கிறது என்று என்னை உணரவைத்த தருணம் அதுதான்.

'உங்களுடையது காதல் திருமணம்தானா?' இது அடுத்த கேள்வி. ‘எனக்கு வீட்டிலேதான் பெண் பார்த்தார்கள். சொந்தத்துக்குள்ளே. அப்பா இதுதான் பெண் என்றார். நான் சரி என்றேன். உடனேயே மணமுடித்து வைத்துவிட்டார்கள். எனக்கு வேலை இல்லை. நானா கல்யாணம் வேணும் என்று கேட்டேன். திருமணம் ஆன பின்பு அப்பா என் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டார். நான் எழுத்து வேலையில் மும்முரமானேன்.'

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் முகநூல் பக்கத்தில் எழுதியதிலிருந்து ஒரு பகுதி.

மகன் தப்புக்கு அப்பாவை கட்சியை விட்டு தூக்கு!

பௌத்த மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அந்த இளைஞனுக்குக் காதல். வீட்டை விட்டு அப்பெண்ணுடன் கிளம்பியவன், அப்பெண்ணையே மணமும் செய்துகொண்டான். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அவனது அப்பாதான். எப்படி? அவர் பாஜகவைச் சேர்ந்தவர். இச்சம்பவத்தைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அவரை நீக்கிவிட்டார்கள்.

இது நடந்தது லடாக்கில். ‘பல மதத்தவரும் வாழும் இப்பகுதியில் இதுபோல் மாற்று மதத்தைவரை காதலித்து ஓடிவிடுவது அமைதியைப் பாதிக்கும். இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லையென விளக்கம் அளிக்க பாஜக பிரமுகருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்‘ என லடாக் பாஜக தலைமை கூறி உள்ளது. 74 வயதாகும் நாசிர் அகமது லடாக் பகுதியில் பாஜக துணைத் தலைவராக இருந்தார். ‘எங்கள் குடும்பமே இந்த திருமணத்துக்கு எதிராக இருந்தது. இருப்பினும் எங்களைக் கட்சியை விட்டு நீக்கி விட்டனர்' என்று சொல்கிறார்.

முதல் சுதந்திரப் போர் காரணங்கள்

 குண்டுகளில் பன்றிக்கொழுப்பு, மதமாற்றம் போன்ற காரணங்கள் 1857 - இல் நடந்த முதல் சுதந்தரப்போரில் ராணுவ வீரர்கள் புரட்சியில் ஈடுபடக் காரணமாக அமைந்தது என்று சொல்வார்கள். ஆனால் இவை மட்டுமல்லாமல் பின்னணியில் பல காரணங்கள் அமைந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மொகலாயர் காலம்போய் ஆங்கிலேயர் காலம் வருகையில் வட இந்தியாவில் கங்கைக் கரையில்

வசிக்கும் விவசாயக் குடும்பங்களின் பொருளாதாரம் வரிவிதிப்பால் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ராணுவத்தில் உள்ளனர். அதுவரை நிலவிவந்த ராணுவ ஆள் சேர்ப்பு முறைகளும் மாற்றப்படுகின்றன. வழிவழியாக விவசாய குடும்பங்களில் இருந்து ராணுவங்களில் சேர்ந்து பணிபுரிந்து, பின்னர் நடுத்தர வயதில் ஊர் திரும்பும் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். இந்த பொருளாதாரக் காரணமே அந்த ராணுவ வீரர்கள் மேற்கொண்ட புரட்சிக்குக் காரணம் எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

டாண் என்று... வராத ரயில்கள்

 காலந்தவறாமையைக் கடைப்பிடிப்பதில் இந்திய ரயில்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்போது சொன்ன நேரத்துக்கு வந்து சேரும் தன்மையானது 73% என்கிற அளவில் குறைந்துவிட்டதாம். கடந்த ஆண்டு இது 84% என்ற அளவில் இருந்துள்ளது. டியர் ஆபிஸர்ஸ்... எப்பங்க 100% என்கிற இடத்தை எட்டிப்பிடிப்பீங்க?

logo
Andhimazhai
www.andhimazhai.com