ஹேப்பி பர்த்டே டூ யூ!

நெஞ்சம் மறப்பதில்லை-4
ஹேப்பி பர்த்டே டூ யூ!
Published on

ஏழு தேவதைகள் படத்தின் கம்போசிங். படத்தின் இயக்குனர் சங்கர் மாதவன், இசையமைப்பாளர் மணிகண்டன் பாடலாசிரியரான நான், இந்த வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்த இனிய நந்தவனம் பத்திரிக்கையின் ஆசிரியர் சந்திரசேகர், எனக்கு துணையாக உடன் வந்த மாணவிகள் சுதா,பிரதீபா என் எல்லோரும் கம்போசிங்கில் இருந்தோம். படத்தில் ஏழு கதாநாயகர்கள், ஏழு கதாநாயகிகள்.

ஏழு கதாநாயகர்களும் பாடும் பாடலை ப்ரியன் எழுத, ஏழு கதாநாயகிகளும்  பாடும் பாடலை நான் எழுதினேன். ஏழு நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் கதாநாயகிகள் ,தங்கள் பிரிவுத் துயரையும், நட்பின் வலிமையையும் பாடுவது தான் சூழல் .

"நீ கடித்துக் கொடுத்த நெல்லிக்கனி தண்ணீர் குடிக்காமல் இனிக்குமடி... விடுமுறை வேண்டாம் என்றே தான் சுற்றி வந்தேன் துளசிச்செடி"

"தாவணி விலகலை சரி செய்ய நீ  இல்லை தனியாய் சாப்பிட்ட தட்டில் சோறு தீரவில்லை"

’’மரத்தின் நிழலில் மலர்களாவோம்.. உன் மகரந்த மடியில் துயரம் மறப்போம் "

"மறந்தே போவேன் பிறந்த நாளைநினைவாக தருவாய் பரிசுப்பொருளை"  போன்ற வரிகளை சரணத்தில் எழுதி இருந்தேன்.பல்லவிக்கான முதல் வரியை யோசித்துக் கொண்டிருக்கும் போது, இயக்குனர் சங்கர் மாதவன், "வானவில்லாய் ஏழு தேவதை காணவில்லையே  ஏழு நாட்களாய் " என்று எழுதி ,"இதுவே இப்பாடலின் முதல் வரியாய் இருக்கட்டும்" என்றார்.

"இந்த வரியில் சொற்குற்றம், பொருள் குற்றம் இருக்கு சார் . ஏழு தேவதைன்றது தப்பு.ஏழு தேவதைகள் தான் சரி"

"ஆயிரம் நிலவே வா ன்றது தப்பு. ஆயிரம் நிலவுகளேன்றது தான் சரி. ஆனா, இலக்கணப்பிழையோட இருந்த அந்த பாட்டு ஹிட்.  ஒவ்வொரு பூக்களுமே ன்றது தப்பு. ஒவ்வொரு பூவுமே ன்றது தான் சரி. அந்த பாட்டும் ஹிட்.  இலக்கண பிழையோட இருக்க இந்த பாட்டும் ஹிட் ஆகும். இந்த வரியே இருக்கட்டும்".

அதெல்லாம் முடியாது என அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போது, நாஞ்சில் சம்பத் அண்ணனின் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“தென் ஆப்ரிக்காவில் ஒரு நிகழ்ச்சிக்கு , தமிழ் நாட்டில் இருந்து ஒரு பேச்சாளரை ஏற்பாடு செஞ்சிருக்காங்க.அவர் திடீர்னு வர முடியாதுன்னு சொல்லிட்டாராம்.ஒரு வாரம் தொடர் சொற்பொழிவு .நீ போக முடியுமா ?'' என்றார்.

 ஆனால் ,அவர் சொன்ன தேதியில் ,என் மகள் லக்‌ஷனாவின் பிறந்த நாளும் இருந்ததால்,"இல்லண்ணா... பாப்பா பர்த் டே அன்னிக்கு நான் அவ கூட இருக்கணும், நான் தென் ஆப்ரிக்காக்கு போகல" என்றேன். இந்த உரையாடலைக் கவனித்த இயக்குனர் சங்கர் மாதவன் ,"என்ன கவிஞரே, ஏதோ வெளிநாட்டுக்கு போகலன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க" என்றார்.

''ஆமா சார் ,தென் ஆப்ரிக்காவில் ஒரு நிகழ்ச்சி. அந்த சமயத்துல தான் பாப்பாவோட பிறந்த நாள் வருது.அதனால வரலன்னு சொல்லிட்டேன்''

''ஒரு நல்ல வாய்ப்பை தவற விடுறீங்களே கவிஞர்? ...''

''நானும் பென்னியும் லவ் மேரேஜ் சார்.இப்ப வரைக்கும் ரெண்டு வீட்லயும் ஏத்துக்கல. பாப்பாக்கு உறவுன்னு இருக்கிறது நாங்க ரெண்டு பேர் தான்.போன வருஷம் பாப்பாவோட பிறந்த நாளுக்கு அவ கேக் வெட்டும் போது, நானும் பென்னியும் மட்டும் தான் இருந்தோம். நாம தான் பேருக்குக் கூட உறவுகளோ, நட்புகளோ இல்லாம இருக்கோம்னா, நம்ம குழந்தையும் யாரும் இல்லாம இருக்குதேன்னு நினைச்சு ரொம்ப நாள் அழுதிருக்கேன்.இந்த வருஷம் நானும் வெளிநாடு போயிட்டா , பாப்பாவும் பென்னி யும் மட்டும் தான் இருப்பாங்க, பாப்பாவை விட எனக்கு வெளி நாட்டு வாய்ப்பு முக்கியம் இல்ல....''

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டார் .அன்று தேதி ,ஜுலை 23,2011 ..

ஆகஸ்ட் 12, 2011. என் மகள் லக்‌ஷனாவின் பிறந்தநாள்.  கேக்கில் மெழுகுவர்த்திகளைப் பொருத்திக் கொண்டிருந்த போது ,"ஹேப்பி பர்த்டே டூ யூ" என்றபடி ,பரிசுப்பொருளை ஏந்திக்கொண்டு ,தன் நண்பர்களுடன் , வீட்டிற்குள் நுழைந்தார் இயக்குனர் சங்கர் மாதவன்.

அவரை எதிர்பார்க்காத நான், ஐயோ...சார் நீஙகளா என இன்ப அதிர்ச்சியில் கத்தினேன். என் மகளின் பிறந்த நாள் ,என் வீட்டு முகவரி, சென்னையிலிருந்து என் வீட்டுக்கு வரும் வழி ஆகியவற்றை, என்னுடன் கம்போசிங் வந்த மாணவிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன் நண்பர்களிடம் , நம்ம படத்துல பாட்டு எழுதுன கவிஞரோட குழந்தைக்குப் பிறந்த நாள் .லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட அவங்களுக்கு, சொந்தம்னு யாரும் இல்ல .வாங்க ,நாம போய் வாழ்த்திட்டு வருவோம் என தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு , சென்னையிலிருந்து பத்து மணி நேரம் பயணித்து ,கோபி செட்டிப்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்து,என் குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வார் என் யார் தான் எதிர் பார்த்திருக்க முடியும் ?

என் கணவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு ,"பாப்பா பிறந்தநாளுக்கு அவ கேக் வெட்டும்போது நானும் பென்னி யும் மட்டும் தான் இருந்தோம்னு கவிஞர் சொன்னது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு பிரதர் ,அதனால தான்,இந்த வருஷம் உங்க குழந்தை பிறந்த நாளுக்குக் கிளம்பி வந்தேன் .ஒருத்தருக்கொருத்தர் இப்படி அன்பை பரிமாறிக்கலன்னா , அப்புறம் என்ன மனுஷங்க நாம? உங்களுக்கு யாரும் இல்லன்னு நெனக்காதீங்க. நாங்கள்லாம் இருக்கோம் " என்றார்.

நான் மிக பெரிய பாடலாசிரியராக இருந்து, அவர் என் குழந்தைக்கு வீடு தேடி வந்து, வாழ்த்து சொல்லி இருந்தால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

பிரபலமானவர்கள், பணக்காரர்களின் பிறந்த நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அவர்கள் வெளி நாட்டில் இருந்தபோதும் , விமானத்திற்கு செலவு செய்து கொண்டு போய், வாழ்த்து சொல்லிவிட்டு வந்தவர்களை எனக்கு தெரியும். அதே சமயம், பிறந்த நாள் அன்று தன் வீட்டிற்கு வந்து, இன்று எனக்கு பிறந்த நாள் என்றவரிடம் ,ஒரு வாழ்த்து கூட சொல்லாமல் திருப்பி அனுப்பியவரையும் எனக்குத் தெரியும்.

 சிறகிருந்தும் பறக்காத பென்குவின் போல, வாய் இருந்தும் வாழ்த்தாத மனிதர்கள்.

வாழ்த்து என்பது ஆத்மார்த்தமாக இல்லாமல் ,ஆதாயத்திற்காக என்றாகி விட்ட இந்நாட்களில்,பெரிதும் அறியப் படாதவளாக, எந்த அடையாளமும் இல்லாதவளாக இருக்கும் என். வீடு தேடி வந்து,என் குழந்தைக்கு வாழ்த்துச் சொன்னதை இன்றும், நன்றியோடும், ஆச்சர்யத்தோடும் பார்க்கிறேன்.

குப்பைத் தேடி முளைக்கும் குடைக் காளான் போல, யாருமற்ற எளியவர்களின் கூடாரத்திற்குள்,  மின்மினியென நுழைந்து , தன்னாலான சிறு வெளிச்சத்தைத் தந்து சென்ற இயக்குனர் சங்கர் மாதவனுக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவது ?

எங்களைப் போலவே, காதல் திருமணம் செய்து கொண்டு , உறவுகள் என யாரும் இன்றி தவிக்கும் தம்பதிகளின் குழந்தையின் பிறந்த நாளுக்கு, வீடு தேடி சென்று வாழ்த்துவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நன்றிக்கடனை அடைத்து விடலாம். கடந்த வருடம் ,என் பிரசவத்திற்கு முன், நான் பணிபுரிந்த, கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் ,விரிவுரையாளர் பற்றாக்குறை காரணமாக ,ஒரு இரண்டு மாதங்கள் மட்டும், வேலைக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். வகுப்பில், மாணவிகளின் விபரங்கள் அடங்கிய குறிப்புப் புத்தகத்தைப் புரட்டியபோது, அடுத்த நாள் மாலதி என்ற மாணவிக்குப் பிறந்த நாள் என்பதைத் தெரிந்து கொண்டேன் . மறுநாள், ஒரு டெய்ரிமில்க் சாக்லேட்டை வாங்கிக்கொண்டு , வகுப்பிற்குள் நுழைந்தேன்.

மாலதியை அழைத்து ,"ஹேப்பி பர்த்டே "என்றபடி சாக்லேட்டை நீட்டினேன். விழிகளை அகலமாய் விரித்து, எப்படி மேம் தெரியும்? என்று அவள் கேட்டு முடிக்கும்முன்பே, மற்ற மாணவிகள் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாடத் தொடங்கினர்.

"ரொம்ப தேங்க்ஸ் மேம். முதல் முறையா இப்படி பிறந்த நாள் கொண்டாடுறேன்"  என தழுதழுத்தாள்.

கதலி கிடைத்த களிறின் தும்பிக்கையென ,என் கையால் அவள் தலை தொட்டு ஆசிர்வதித்தேன்.

ஒரு வாரம் கழித்து, கல்லூரிப் பேருந்தில் பயணிக்கும் போது தான், மாலதியைப் பார்த்தேன். ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்தவளின்  கையில் இரண்டு ரோஜாப்பூக்கள். ஆடாமல் ,அசையாமல் அந்தப் பூக்களை அவள் பிடித்துக் கொண்டிருந்த விதம்,வினோதமாய் தெரியவே , அவளை சைகையால் அழைத்து,என்னமோ மார்ச் பாஸ்ட்ல , கொடியை பிடிச்சுட்டுப் போற டீம் லீடர் மாதிரி , பூவை பிடிச்சுட்டு இருக்க .தலையில் வைக்க வேண்டியது தானே? ஹேர்பின் வேணுமா ? என்றேன் .இந்த பூ எனக்கு இல்ல மேம். பக்கத்து கிளாஸ் கிருத்திகா , மதியானம் என் கூட தான் சாப்பிடுவா..,  இன்னிக்கு அவளுக்கு பர்த்டே .அவளும் இது வரைக்கும் பர்த்டே கொண்டாடுனதில்ல .அவளுக்குக் கொடுக்கத் தான் வாங்கிட்டுப் போறேன்..என்றவளை நெகிழ்ச்சியாகப் பார்த்தேன். இனி, கிருத்திகாவும் , யாரோ ஒருத்தியின் பிறந்த நாளுக்குத் தன்னாலான சிறு பரிசைக் கொடுத்து சந்தோஷிக்கச் செய்வாள், இல்லையா ?

ஆட்கள் பயணிக்காத சரக்கு ரயிலுக்கும், கை  காட்டிச் சிரிக்கும் குழந்தையைப் போல,எதிர்பார்ப்பற்ற. நேசத்தோடு ஒருவருக்கு நாம் சொல்கிற வாழ்த்தால், அவர்கள் அடைகிற ஆனந்தம் தான் எவ்வளவு அலாதியானது?

ஒருமுறை ராஜுமுருகன் அண்ணன், ஒரு பிரபல இயக்குனரின் பெயரை சொல்லி, அவருக்குப் பிறந்தநாள் . நீயும் வர்றியா? அறிமுகப் படுத்தி வைக்கிறேன் என்றார்.

இல்லண்ணா....  நீ போ. உன் படத்துக்கும் , அவருக்கும் தானே சம்பந்தம்? நீ போறது தான் சரி. நான் இன்னொரு நாள் வர்றேன் என்றேன். தன்னுடைய தொடரில் ,ரமேஷ் என்ற துப்புரவுத் தொழிலாளியின் மகள் திருமணத்திற்குப். போக வேண்டும் என்று அவர் எழுதியதைப் படித்துவிட்டு ,"ரமேஷ் அண்ணா. வீட்டு கல்யாணத்துக்குப் போகும்போது ,என்னையும் கூட்டிட்டுப் போறியாண்ணா?" என் கேட்டேன்.

பிரபல இயக்குனரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். என் கால்கள் செல்ல விரும்புவது ,துப்புரவுத் தொழிலாளியான ரமேஷ் அண்ணனின் வீட்டை நோக்கித் தான். இந்த வருடம் நவம்பர் 12 அன்று என்  பிறந்தநாளுக்கு வந்த வாழ்த்துச் செய்திகள் பலவும், புதிய எண்ணிலிருந்து வந்திருந்தன .நீங்கள் யார் என்ற என் கேள்விக்கு ,".எங்க ஸ்கூலுக்கு பேச வந்தீங்களே" "எங்க காலேஜ்க்கு பேச வந்திருந்தீங்களே", " எங்க ஊர் கோவிலுக்கு நீங்க பேச வந்தப்போ , நான் தான் ரிசீவ் பண்ணினேன்" என பதில்கள் வந்தன ."ஓ....அப்படியா....என் பிறந்தநாள் எப்படித் தெரியும்" என கேட்ட போது, பயோ டேட்டா அனுப்பி இருந்தீங்களே என்றார்கள் .எப்போதோ தங்கள் பள்ளிக்கு ,...... கல்லூரிக்கு ..... கோவிலுக்கு ....லயன்ஸ் கிளப்பிற்கு .....பேச வந்தவளின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து வாழ்த்தியவர்களின் பேரன்பில் நெக்குருகிப் போனேன்.

இதுவரை ஒருமுறை கூட பிறந்தநாளுக்கு புத்தாடை உடுத்தியிராதவர்களுக்கு ........ இதுவரை ஒருமுறை கூட பிறந்தநாளுக்கு "கேக்"வெட்டாதவர்களுக்கு........ இதுவரை ஒருமுறை கூட பிறந்தநாள் கொண்டாடாதவர்களுக்கு,,....... தன்னால் கொண்டாட முடியாமல் போன பிறந்தநாளுக்கும் சேர்த்துத் தன் பிள்ளையின் பிறந்த நாளை , வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்பவர்களுக்கு ....... இதுவரை ஒருமுறை கூட கணவரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து கிடைக்கப் பெறாத மனைவிகளுக்கு .......

பிறந்தநாள் அன்றும் "தண்டச்சோறு" என அப்பாவிடம் திட்டு வாங்கி அழும் மகன்களுக்கு ......

படிப்பின் பொருட்டோ , வேலை நிமித்தமாக..... ..... குடும்பத்தைப் பிரிந்து ,பிறந்தநாள் அன்று தனிமையில் பொழுதைக் கழிக்கும் அப்பாக்களின் செல்ல மகள்களுக்கு,........

தன் பிறந்தநாள் எதுவென்றே தெரியாதவர்களுக்கு ..........

இதுவரை கூட்டத்தில் நின்று "ஹேப்பி பர்த்டே " என பாடுகிற வாய்ப்பு மட்டுமே கிடைக்கப் பெற்றவர்களுக்கு ..........

தன் பிறந்தநாளில் , நெருங்கிய உறவினரை சாகக் கொடுத்து , எந்த பிறந்தநாளையும். கொண்டாட முடியாமல் , எல்லா பிறந்தநாளுக்கும் திதி கொடுத்துக் கொண்டிருக்கும் அபாக்கியசாலிகளுக்கு........

என்றோ ஒருநாள் வரப்போகும் பேரப் பிள்ளைகளுக்காக, ஆண்டு முழுவதும் அப்பத்தாவின் சுருக்குப்பையில் சுருண்டு கிடக்கும் சில்லறை காசுகளைப் போல ,மிகவும் நேசிக்கும் ஒருவரின் ஒரு நொடி வாழ்த்துக்காக, வருடம் முழுக்கக் காத்திருந்து ஏமாந்து போனவர்களுக்கு ..........

குறுநகையைப் பரிசாகக் கொடுத்து, இதயத்தின் ஆழத்திலிருந்து அன்பின் ஈரத்தோடு........உரக்கக் குரல் எழுப்பிச் சொல்கிறேன் ...........

"ஹேப்பி பர்த்டே டூ யூ........."

(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )

கடந்த மாதத்தில் ஒரு நாள்.. - நெஞ்சம் மறப்பதில்லை-1 

கடக்க முடியாத ஞாயிற்றுக்கிழமைகள்! - நெஞ்சம் மறப்பதில்லை-2 

அன்பிற் சிறந்த தவமில்லை! - நெஞ்சம் மறப்பதில்லை-3

logo
Andhimazhai
www.andhimazhai.com