தண்ணீர் சுழித்தோடிச் சென்றுகொண்டிருந்தது. பெரிய கெண்டைமீன்கள் ஆவென வாயைத் திறந்து காற்றை விழுங்கின. அவ்வளவு பெரிய மீன்களை பாலவர்மர் பார்த்ததே இல்லை. அகன்று விரிந்து பெரும் கடலென ததும்பி ஆரிய வர்த்தம் தாண்டி திராவிட நாடுவரைக்கும் புண்ணிய நதி என்று பெயர்பெற்றிருந்த கங்கையில் சென்றுகொண்டிருந்த பெரிய படகு ஒன்றில் அமர்ந்திருந்தார் அவர். நல்ல வெயில் அடித்தது. ஆனால் அந்த வெயிலை மீறி கங்கையின் பரப்பில் மோதி எழுந்த காற்று குளிராக வைத்திருந்தது. யுவான் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார். படகின் ஓட்டத்தில் எப்படி அவரால் நிலையாக அமர முடிகிறது என பாலவர்மர் ஒரு கணம் சிந்தித்தார். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அந்த படகில் பயணம் செய்தனர். சில வியாபாரிகள், சில விவசாயிகள், சில பிராமணர்கள். மூட்டைமுடிச்சுகளுடன் ஏறியிருந்தனர். படகின் மீது காய்ந்த புல்லைப் பரப்பி அதன் மீது அமர்ந்து அந்த பயணம் போய்க்கொண்டிருந்தது. மேலாடை எதுவும் இன்றி தன் நீண்ட முடியை கொண்டையாகக் முடிந்துகொண்டு, நட்பாக தோற்ற மளித்த சக பயணி ஒருவர், பாலவர்மரை அணுகி அவர்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். பாலவர்மரும் தங்கள் பயணத்தைப் பற்றி விளக்கினார்:
மித்ர சேனரின் விஹாரத்தில் சில காலம் தங்கி கற்ற பின் யுவான் சுவாங் தன் பயணத்தை வடக்கு நோக்கி தொடங்கினார். பிரமபுரா என்ற தேசம் வந்தது. அங்கிருந்து தென் கிழக்காகப் பயணம் செய்து அஹிக்சேத்திரம் என்ற நாட்டை அடைந்தனர். பின்னர் இன்னும் தெற்காகப் பயணம் மேற்கொண்டு விராசனா என்ற பகுதி வழியாக கபிதா என்ற நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இங்கு இருந்த மூன்று ஏணிகள் மிகவும் புகழ்பெற்றவை. தன் தாய் மாயாதேவிக்கு தான் பெற்ற ஞானத்தை அறிவிக்க துஷித சொர்க்கத்துக்கு முற்காலத்தில் ததாகதர் சென்று திரும்பிய ஏணி ஒன்று. மஹாபிரம்மா இறங்கி வந்த ஏணி ஒன்று. இடதுபுறம் இருந்த ஏணி சக்ரதேவர் இறங்கி வந்த ஏணி. பல காலம் முன்பு இந்த ஏணிகள் அப்படியே இருந்திருக்கின்றன. ஆனால் யுவான் சுவாங் போன காலகட்டத்தில் இந்த் ஏணிகளில் இருந்த தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்காக இதைக் கொள்ளை அடித்துக் கொண்டு போய்விட்ட படியால் அங்கே கல்லால் செய்யப்பட்ட ஏணிகளே இருந்தன. அவற்றில் அபூர்வமான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. இந்த ஏணிகள் ஒரு பெரிய விஹாரம் எழுப்பப்பட்டு அதற்குள் அமைக்கப்பட்டிருந்தன. மிகப் பிரம்மாண்டமான புத்தர் சிலையொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. மிக அழகான பிரம்மா, சக்ரதேவர் ஆகியோரின் சிலைகளும் இருந்தன. அசோகர் அமைத்த எழுபது அடி உயர கல்தூண் இருந்ததையும் யுவான் கண்டார்.
பின்னர் கன்னோஜி வழியாக அயோத்திக்கு வந்தனர். அயோத்தி புகழ்பெற்ற பௌத்த ஸ்தலமாக இருந்தது. நூற்றுக்கணக்கான பௌத்த விஹாரங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் தங்கி இருந்தனர். ஹீனயானமும் மகாயானமும் சமசக்திவாய்ந்த அளவில் அங்கு பயிலப்பட்டன. இங்கிருந்து சற்று தள்ளி கங்கைக் கரையில் ததாகதர் மூன்று மாதங்கள் தங்கி இருந்து தர்மத்தை விளக்கிய இடத்தில் 200 அடி உயரமான அசோக மகாராஜா கட்டிய ஸ்தூபி ஒன்று உள்ளது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கிழக்கு நோக்கி ஹயமுகா என்ற நகரை அடைவதற்காக இந்த படகுப் பயணம்.
‘‘கன்னோசியைச் சேர்ந்தவன்தான் நான். என்னுடைய பெயர் ஆதித்தன்’’ என்று தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார் இவ்வளவு நேரமும் பயணத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்த மனிதர்.
‘‘ஆதித்தரே, உங்கள் அரசர் ததாகதரின் தர்மத்துக்கு மிகப்பெரிய ஆதரவளித்துவருகிறாரே... அதைக் கண்டு நானும் யுவான் சுவாங்கும் பெரிதும் மகிழ்ந்தோம்’’
‘‘ஆமாம். எங்கள் சக்கரவர்த்தி சிலாதித்தர் என்கிற ஹர்ஷவர்த்தனர் புகழ் இத்தேசமெங்கும் வெல்ல இயலாத மாபெரும் வீரர் என்று பரவி நிலைத்திருப்பதுடன் அவர் ததாகதரின் தர்மத்தைப் பின்பற்றுவதும் அதற்காக வாரி வாரி வழங்குவதும் நாடு முழுக்க பிரமிப்பாகப் பார்க்கப்படுகிறது’’
‘‘பிக்குவே, நான் ஒன்று கேட்டால் கோபித்துக்கொள்ள வேண்டாம்’’ என்ற வாறு இடைமறித்தார் இன்னொருவர். தன்னை அயோத்தியைச் சேர்ந்த விவசாயி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் பெயர் ஜெயந்தா என்றார்.
‘‘புத்தரின் தர்மத்தைக் கடைபிடிக்கும் நீவிர் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் சுற்றுபவர்கள். ஏதாவது நான்கு வீடுகளுக்கு காலையில் போய் சும்மா நின்றாலே உணவு தேறிவிடும். பின் எதற்கு இந்த மன்னர்களும் வாரி வாரி உங்கள் ச்கோதரர்களுக்கும் விஹாரங்களும் வழங்குகிறார்கள்? சூளைகளில் சுடப்படும் செங்கல்கள் அனைத்தும் புதிய விஹாரங்களுக்கும் ஸ்தூபிகளுக்குமாக வாரிக்கொண்டு போய்விடுகிறார்கள். எங்கள் ஊர்களில் வீடு கட்ட செங்கல் கிடைப்பதே பெரும் பாடாக உள்ளது. ஏன் இவ்வளவு செல்வத்தை அதை கொஞ்சம் கூட அனுபவிக்கத்தெரியாத உம்மைப் போன்ற பிக்குகளிடம் அளிக்கவேண்டும்? பிக்கு என்றாலே பிச்சைக்காரன் என்றுதானே பொருள்? சரி இந்த மன்னர்கள்தான் எம் போன்ற மக்களிடம் வரியாக வசூலித்த நாணயங்களை உங்களுக்கு அளிக்கிறார்கள். ஆனால் நீங்கள் சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வாழ்கிறீர்கள். உங்களுக்கு எதற்கு இதெல்லாம்? எங்களுக்கு வேண்டாம். அந்த செல்வத்தை எல்லாம் உழைத்து வீணாய் போகும் விவசாயிகளுக்குக் கொடுங்கள் என்று ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?’’
ஜெயந்தாவின் முகத்தில் குறும்பு தவழ்ந்தது. நட்பு பாவத்துடன்தான் இதை அவர் கேட்கிறார் என்பதை பாலவர்மர் உணர்ந்துகொண்டார்.
‘‘சரி ஜெயந்தரே.. என்னுடன் பயணம் செய்கிறவர் சீனதேசத்தின் மாபெரும் அறிஞர். இங்கும் அவர் பெயரும் புகழும் பரவிக்க் கொண்டிருக்கின்றன. ததாகதர் பெருமானின் அருளால் நிச்சயம் அவர் ஹர்ஷ்வர்த்தன சக்கரவர்த்தியைச் சந்திப்பார். அப்போது நானும் உடன் இருப்பேன். ஆகவே, மறக்காமல் உங்கள் செல்வத்தை எல்லாம் அயோத்தியைச் சேர்ந்த ஜெயந்தா என்கிற விவசாயிக்கு அளியுங்கள் என்று சக்கரவர்த்தியிடம் விண்ணப்பம் செய்துகொள்கிறேன். போதுமா?’’
எல்லோரும் சிரித்தனர்.
‘‘இப்படி கோபமே வராமல் அமைதியாய் இருப்பதால்தான் மன்னர்கள் எல்லாம் உம்மைப் போன்ற பிக்குகளுக்கு வாரி வழங்குகிறார்கள் போலிருக்கிறது. இன்று ஜம்புத்வீபத்தில் உள்ள விஹாரங்களில் செல்வம் கொழிக்கிறது. ஆதித்தரே, இந்த நதியில் படகுக்கொள்ளையர்கள் உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர்களை ஒருவேளை நாம் பார்க்க நேர்ந்தால் அய்யா கொள்ளைக்காரர்களே, நதியை விட்டுவிட்டு நாட்டுக்குப் போங்கள். ஒரு பௌத்த விஹாரத்தில் கொள்ளை அடித்தால் போதும். வாழ்நாளுக்கு நீங்கள் கொள்ளையே அடிக்க வேண்டாம் என்று கூறுவேன்’’
‘‘ஆமாம். நீர் அப்படிக் கூறுவீர். கொள்ளையர்களும் உமக்கு நன்றி சொல்லிவிட்டு உம்மை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்’’ என ஆதித்தன் பதில் சொல்ல மீண்டும் சிரித்தார்கள்.
‘‘ஆதித்தரே உங்கள் சக்கரவர்த்தியைப் பற்றிக்கூறும்... நாங்கள் கேட்கிறோம்’’ என்றார் பாலவர்மர். ஏற்கெனவே கன்னோசியில் அவரைப் பற்றி அறிந்திருந்தாலும் அவரது குடிகளில் ஒருவர் என்ன சொல்கிறார் என்று அறிய விரும்பினார் அவர்.
‘‘கன்னாசி அல்ல ஹர்ஷ சக்கரவர்த்தியின் சொந்த மண். அவர் இங்கிருந்து மேற்கே இருக்கும் ஸ்தனீஸ்வரம் என்ற ராஜ்யத்தின் மன்னர் பிரகரவர்த்தனரின் புதல்வர். பிரகரவர்த்தனர் ராஜபுத்திரர். அவரது மகன்கள் இருவர். மூத்தவர் ராஜ்யவர்த்தனர். இளையவர்தான் ஹர்ஷ வர்த்தனர்.
இவர்களின் ச்கோதரி ராஜ்யஸ்ரீ. இளவரசி ராஜ்யஸ்ரீ மீது சகோதரர்கள் இருவரும் உயிரையே வைத்திருந்தனர். மன்னர் சூரிய வழிபாட்டில் ஈடுபாடுடையவர் என்றாலும் இளையவரான ஹர்ஷவர்த்தனர் புத்தமதத்தில் சேர்ந்து அரசாட்சியில் ஈடுபாடு இன்றி இருந்தார். மன்னர் மரணத்துக்குப் பின்னர் மூத்த இளவரசரானா ராஜ்யவர்த்தனர் ஆட்சிக்கு வந்தார். இளவரசியாரை கன்னோசிக்கு அதாவது எங்கள் தேசத்தின் மன்னராக இருந்த கிரகவர்மருக்கு மணம் செய்து கொடுத்திருந்தனர். அப்போது மாளவதேசத்து மன்னன் தேவகுப்தனால் ஏற்பட்டது பெரும் கொடுமை. அவன் எங்கள் தேசத்தின் மீது படையெடுத்து கிரஹவர்மரைக் கொன்றதுடன் இல்லாமல் இளவரசியாரையும் சிறையில் அடைத்துவிட்டான். அவனைப் பழிவாங்க ராஜ்யவர்த்தனர் பெரும் படையுடன் வந்தார். போரில் பெரு வெற்றி பெற்றார். ஆனால் அப்போது கவுட தேசத்து மன்னன் சசாங்கன் ராஜ்யவர்த்தனரைக் காணவந்தான். நட்பு நாடி வந்த அவன் மாளவ தேசத்து மன்னனுடன் சதியில் ஈடுபட்டிருந்தான் என்பதை ராஜ்யவர்த்தனர் அறிந்திருக்கவில்லை. அந்தோ பரிதாபம். நயவஞ்சகமாக அவன் ராஜ்யவர்த்தனரைக் கொன்று விட்டான். ஸ்தனீஸ்வரத்தின் சைன்யங்கள் சிதறி ஓடின. ராஜ்யத்துக்கு மன்னர் இல்லை. புலவரும் பெரும் மதியூகியுமான பாணி ஹர்ஷரை, ராஜ்யப் பதவியை ஏற்குமாறு வேண்டினார். ஆனால் ஹர்ஷருக்கோ வெறும் பதினாறு வயதுதான் அப்போது ஆரம்பத்தில் மறுத்தார். ஆனால் தங்கையின் கணவரைக் கொன்றவனை தண்டித்து இளவரசியாரை மீட்க வேண்டிய கடமையும் அவருக்கு இருந்தது’’ ஆதித்தன் சொல்லிக் கொண்டிருந்தபோது படகோட்டி ஒருவன் அழகான பாடல் ஒன்றைத் தொடங்கினான்.
காற்றில் ஏறி கடலை நோக்கி
மலையில் ஏறி மடுவை நோக்கி
சேற்றில் ஏறி மேட்டை நோக்கி
பாய்ந்து செல்லும் வெள்ளத்தில்
பசியென்னும் கரங்களில்
சிக்கித் தவிக்குதே எங்கள் வாழ்வு
வெள்ளி நிலவின் உலகில்
கொஞ்சம் கிள்ளித் தர ஆளிருக்கா,
புள்ளினங்கள் ஓலமிடும் பாலையில்
பாசம் தர யாரிருக்கா?
கொள்ளையனின் கொடுவாள் முன்பே
கவசம் தர யாரிருக்கா?
பாட்டை ரசித்துக் கேட்டபின் ஆதித்தன் மீண்டும் பேசத் தொடங்கினார்.
‘‘ஹர்ஷ வர்த்தனர் தான் மிகவும் உளப்பூர்வமாக வணங்கும் போதிசத்துவர் அவலோகிதேஸ்வரப் பெருமான் அனுமதியை இதற்காக நாடினார். அவரது சிலைக்கு முன்னாள் விரதமிருந்து வணங்கியபிறகு, அவலோகிதேஸ்வரர் அவருக்கு ராஜ்யபாரம் சுமக்க அனுமதி அளித்ததாகச் சொல்கிறார்கள். அத்துடன் இன்னொரு ரகசியப் பேச்சும் உள்ளது. எப்போதும் மகாராஜா என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டாம் என்றும் நிஜமான சிம்மாசனத்தில் அமரவேண்டாம் என்றும் ஹர்ஷருக்கு தெய்வீகமாக உணர்த்தப்பட்டதாம். அதன் படியே காமரூபத்தின் அரசரான பாஸ்கரவர்மரின் துணையுடன் சசாங்கனை முறியடித்தார். பின்னர் இளவரசியை மீட்டதுடன் குடிபடைகளின் வேண்டுகோளுக்கு இணங்க கன்னோசிக்கே தலை நகரை மாற்றிக்கொண்டார். ஆறு ஆண்டுகள் விடாமல் எதிரிகளை எல்லாம் முறியடித்து இப்போது இப்பகுதி முழுக்க போரே இல்லாமல் பெரும் அமைதியை ஏற்படுத்தியுள்ளார் எம் மன்னர். அவலோகிதேஸ்வரர் உணர்த்தியதுபோலவே அவர் கன்னோசியின் நிஜமான சிம்மாசனத்தில் அமராமல்தான் ஆட்சி செய்கிறார். ஒரு நாளை மூன்றாகப் பிரித்து வைத்துக்கொண்டு காலையில் அரச அலுவல்கள், மீதி இரண்டு வேலையும் மத அலுவல்கள் என்று செய்துவருகிறார். ததாகதரின் தர்மத்தை ஏற்றுக் கொண்டவர் எனினும் மக்களின் மத நம்பிக்கைகளில் எந்த இடையூறும் செய்வதில்லை. பிற தர்மங்களையும் அவர் அனுமதித்து அள்ளி வழங்கியே வருகிறார். இளவரசியார் ராஜ்யஸ்ரீயும் பௌத்த மதத்தைத் தழுவியவரே. எம் மன்னருக்கு உதவியாக அரசு அலுவல்களைக் கண்காணிக்கிறார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையும் எம் மன்னர் கருவூலத்தில் உள்ளதையெல்லாம் வறியவர்களுக்கு வாரி வழங்கிவிடுகிறார். அந்த தினங்களில் ஆரிய வர்த்தத்தில் உள்ள வறியவர்கள் எல்லாம் கன்னோசியில்தான் குவிந்திருப்பர். கருவூலம் காலியாகும் வரை அள்ளித் தரும் தர்மநிகழ்ச்சி அது’’
ஆதித்தன் கண்களை மூடி தம் மன்னரின் புகழில் ஆழ்ந்தார். காற்றில் வேகம் ஏறியதால் படகும் சற்று வேகம் பிடித்தது.
பிரம்மதத்தன்
(பயணம் தொடரும்)
வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....
பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பிரம்மதத்தன்
(பயணம் தொடரும்)
வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....
பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.