நான் முந்தைய சில கட்டுரைகளில் குறிப்பிட்டது போலவே சைபர் குற்றங்கள் என்று இணையத்தில் தேடத் தொடங்கினால் தீராப் பசி கொண்ட பூதத்தை போல நம்மையே நம்மால் உணர முடிகிறது. நம் தேடல் முடிவற்றதாக நீண்டு கொண்டேயிருக்கிறது. சைபர் குற்றங்கள் வடிவம், வழிமுறைகள், எல்லை என்ற வரையறைகள் எதுவும் தனக்கில்லையென விரவிக் கொண்டிருக்கின்றன.
பெரும்போக்கில் சைபர் குற்றங்களை வகைப்படுத்தினால் மூன்று பிரிவுகளாக்கிவிடலாம்.
1) வலையமைவில் செய்யப்படும் குற்றங்கள்
2) வலையமைவைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள்
3) கணிணிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள்
வலையமைவில் செய்யப்படும் குற்றங்கள்
சைபர் பிரிவின் இந்தக் குற்றப் பிரிவில் ஹேக்கிங்,பிஷ்ஷிங்,வைரஸ், வேறு இணையத்தளங்களை மாற்றியமைத்தல், சைபர் டெரரிஸம், சேவை மறுப்புத் தாக்குதல், தகவல்களைத் திருடுதல் போன்றவற்றை உள்ளடக்கலாம்.
வலையமைவை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள்
இந்தப் பிரிவின் கீழ் பிறரின் அடையாளத்தை ஆன்லைனில் திருடுதல், பிறரின் பெயருக்கு களங்கம் உண்டாக்குதல், போர்னோகிராபி, ஸ்பாம் மின்னஞ்சல், உரிமமற்ற மென்பொருட்களை விநியோகித்தல், சூதாட்டம் போன்ற குற்றங்கள் வருகின்றன.
கணிணியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்கள்
மார்பிங், மென்பொருள் திருட்டு(இணையத்தை பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. பிறரின் கணிப்பொறியின் கடவுச் சொல் தெரிந்தால் அவரின் கணிணியிலிருந்து மென்பொருளைத் திருடி விட முடியும்), ஆவண மோசடி(சான்றிதழ்கள், கள்ள நோட்டு வடிவமைத்தல், பத்திரத்தாள்களை வடிவமைத்தல்) போன்ற குற்றங்களை மூன்றாவது பிரிவில் வகைப்படுத்தலாம்.
கணிணி உலகில் பயன்படுத்தும் இந்தக் குற்றங்களின் பெயர்களை இக்கட்டுரைகளில் கொஞ்சமாவது தீண்டியுள்ளதாகவே உணர்கிறேன். சில குற்றங்களை இந்தக் கட்டுரைகளில் தொடவே இல்லை. உதாரணம் சைபர் புல்லிங். சைபர் புல்லிங் என்பது ஆன்லைன் மூலமாக மற்றவரை மிரட்டுதல் ஆகும். சைபர் குற்றங்கள் பற்றி எதுவுமே தெரியாத ஒரு நபர், இந்தத் தொகுப்பில் உள்ள பிற கட்டுரைகளைப் பற்றி புரிந்து கொண்டிருந்தால், சைபர் புல்லிங் என்பது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து யூகம் செய்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
சைபர் குற்றங்களைப் பற்றியும் அவை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பன பற்றியும் மேலோட்டமாகவாவது எழுதுவதற்கு முயன்ற போது எனக்கு இன்னும் கணிணித்துறை பற்றிய பயிற்சி தேவை என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. சில பிரச்சினைகளை ஆழமாக அலச முடியாமல் போனதற்கும், சில குற்றங்களை தொடாமலேயே தவிர்த்துவிடவும் இது காரணமாக அமைந்தது எனலாம். ஆனால் கணிணித்துறையில் எந்த மட்டத்தில் இருப்பவரும் கணிணி பற்றி எழுத ஆரம்பித்தால் அவருக்கு இன்னும் பயிற்சி தேவை என்பதனை உணர்வார் என என்னை நானே ஆறுதல் செய்து கொள்ளவும் நேர்ந்தது. இதுதான் உண்மையும் கூட.
எழுதியவரைக்கும் அனைத்துக்கட்டுரைகளும் எழுதப்படிக்கத் தெரிந்த யாவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்ற சிரத்தையை நினைவில் வைத்தே எழுதியிருக்கிறேன். எட்டாவது படிக்கும் போது செய்த அட்டகாசத்திற்கு பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்ட என் தாய்மாமன் மாணிக்கம்தான் இந்தக் கட்டுரைகளின் டார்கெட். அவருக்கு புரிந்துவிடுமெனில் படிப்பவர்கள் அனைவருக்கும் புரிந்துவிடும் என நம்புகிறேன்.
சைபர் குற்றங்களின் நுட்பங்கள் என இன்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாமே டார்வினின் 'சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட்' என்ற தத்துவத்திற்கு ஆளாகி பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. நேற்று இருந்த ஹேக்கிங் தொழிநுட்பம் நாளை முற்றாகக் காணாமல் போய்விட முடியும். ஆனால் ஹேக்கிக் என்பது அழியப்போவதில்லை. வேறொரு உயர்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஹேக்கிங்கை குற்றவாளிகள் மேற்க்கொள்வார்கள். இது போன்ற விஷயங்களையும் கட்டுரைகளை எழுதும் போது மனதில் வைத்திருந்தேன். அதாவது குற்றங்களின் கருவை மிகுதியாக அலசுவதும், குற்றங்களை செயல்படுத்த இன்று உப்யோகப்படுத்தும் நுட்பத்தை குறைவாக மட்டுமே சொல்வது என்றும். பொதுவாக இந்த இருபது சொச்சம் கட்டுரைகள் சைபர் குற்ற்ங்களைப் பற்றிய ஒரு தோராயமான வடிவத்தையாவது படிப்பவர்களுக்குத் தர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
முற்றும்
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
வா.மணிகண்டன்
ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.
ஆகஸ்ட் 25, 2008