இணையம்: அடிப்படைத் தொழில்நுட்பம்

விரல்நுனி விபரீதம் 2
இணையம்: அடிப்படைத் தொழில்நுட்பம்
Published on

உலகின் ஏதேனும் ஒரு மூலையிலிருந்து அரங்கேற்றப்படும் ஆயிரக்கணக்கான இணையக் குற்றங்களின் சில சாம்பிள்களையும் அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம், உபயோகப்படுத்திய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றையும் பற்றி பேசுவதற்கு முன்னதாக, இணையம் இயங்கும் முறையின் அடிப்படையை கொஞ்சம் புரிந்து கொள்வது உசிதம்.

கோடிக்கணக்கான கணிப்பொறிகளை இணைத்திருக்கும் மிகப்பெரிய வலையமைவுதான் இணையம். இணையத்தின் உரிமையாளர் என்று எந்த தனிமனிதனும், நிறுவனமும் சொந்தம் கொண்டாட முடியாது. பொதுச் சத்திரம் போல இருக்கும் வலையமைப்பிற்குள் யார் வேண்டுமானாலும் எப்பொழுது நினைத்தாலும் இணைந்து கொள்ளலாம், நினைத்த நேரத்தில் வெளியேறியும் விடலாம். உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து சாலையப்பாளையத்து பழனிச்சாமி வரை யார் வேண்டுமானாலும் இணையத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள். உங்கள் நிறுவனத்தில் உள்ள கணிப்பொறிகளை எல்லாம் ஒரு வலையமைவில் இணைத்து வைக்கிறீர்கள். இப்படி இணைத்துக் கொள்வதென்பது ஒரு கணிணியிலிருந்து மற்றொரு கணிணிக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வதை சுலபமாக்குகிறது. இந்த சிறு குழுவான கணிணி வலையமைவை 'லோக்கல் ஏரியா நெட்வொர்க்(லேன்: LAN)' என்கிறோம். இந்த 'லேன்' மற்றொரு லேன் உடன் இணைக்கப்பட்டால், இரு வலையமைவிலும் உள்ள கணிணிகளிடையேயான‌ தகவல் பரிமாற்றம் எளிதாகிறது.

இப்படியான இலட்சக் கணக்கான 'லேன்'களை ஒன்றோடு ஒன்றாக இணைப்பதை நினைத்துப் பாருங்கள். கோடிக்கணக்கான கணிணிகளுக்கிடையேயான இணைப்பின் சாத்தியம் புலப்பட ஆரம்பிக்கும். இதுதான் 'இணையத்தின்' அடிப்படை.

'லோக்கல் ஏரியா நெட்வொர்க்' என்பது போல 'வைட் ஏரியா நெட்வொர்க்'(சற்றே பெரிய வலையமைவு)என்ற வேறொரு அமைப்பும் இருக்கிறது. இவை தவிர்த்து 'மெட்ரோ பாலிட்டன் நெட்வொர்க்''கேம்பஸ் ஏரியா நெட்வொர்க்' என்ற பலவகையான நெட்வொர்க்களும் உண்டு. இப்படி பலவிதமான வலையமைவுகளையும் இணைத்துக் கிடக்கும் மிகப்பெரிய நெட்வொர்க் "இண்டர்நெட்".

நீங்கள் ஒரு உங்கள் நிறுவனம் நடத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நிறுவனம் குறித்தான தகவல்களை உலகில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று நீங்கள் நினைத்து ஒரு இணையதளத்தை(வெப்சைட்) ஆரம்பிக்கிறீர்கள். நிறுவனத்திற்கென நீங்கள் நடத்தும் இணையதளம்(www.annachimaligaikadai.com). இந்தத் தகவல்களை ஒரு கணிப்பொறியில் சேகரித்து வைத்து அந்தக் கணிப்பொறியை இன்டர்நெட் உடன் இணைத்து விட வேண்டும். ஜப்பானின் டோக்கியோ நகரத்திலோ, ஆப்பிரிக்காவின் உகாண்டாவிலோ யாராவது தங்கள் கணிணியை இணையத்தில் இணைத்து விட்டு www.annachimaligaikadai.com என்று டைப் செய்து தேடினால், நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் கணிணியிலிருக்கும் தகவல்களை அங்கு அமர்ந்து கொண்டே அவர் பார்க்க இயலும். தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் உங்களின் கணிணிக்கு "சர்வர்" என்று பெயர். தகவல்களை பெற்றுக் கொள்ளும் கணிணியின் பெயர் "க்ளையண்ட்".



இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான கணிபொறிகளில், தேடுபவரின் தேவைக்கான தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் குறிப்பிட்ட கணியை கண்டுபிடிக்கும் பணியை எளிதாக்க ஒரு தொழிநுட்பத்தை கண்டறிந்தார்கள். அது ஐ.பி(இன்டர்நெட் ப்ரொடோகால்) எனப்படுகிறது.

இணையத்தில் இணைக்க‌ப்படும் எந்த கணிபொறிக்கும் தனித்த ஒரு ஐ.பி.முகவரி இருக்கும். மனிதர்களுக்கு பெயரிட்டு அழைப்பது போல, கணிப்பொறிகளுக்கான பெயர். இந்தப் பெயர்கள் 192.166.133.45 என்னும் வடிவத்தில் இருக்கும்.

ஒரு கணிபொறியிலிருந்து தகவலை அனுப்பும் போது (உதாரணமாக மின்னஞ்சல்), அந்தத் தகவல் சிறு சிறு 'பாக்கெட்'களாக உடைக்கப்படுகிறது. இந்த உடைக்கப்பட்ட பாக்கெட்களில், சென்றடைய வேண்டிய கணிபொறியின் முகவரி இணைக்கப்படும். இவை பின்னர் 'கேட்வே'கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகின்றன. 'கேட்வே' என்பதும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கம்ப்யூட்டர்தான். இவை உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சமமானவை. தகவல்களின் 'பாக்கெட்களில்' இணைக்கப்பட்ட முகவரியை பார்த்து அவைகளை சரியான இடத்திற்கு அனுப்பும் பணியின் ஆயத்த வேலைகளை மேற்கொள்கின்றன. இதன் பின்னர் 'பாக்கெட்'கள் வலையமைவில் பயணம் செய்து சேர வேண்டிய கணிபொறியை அடைகின்றன. இவை தான்தோன்றித்தனமாக அவைகளாகவே பயணப்படுமா என்றால் இல்லை. அவைகளை வழி நடத்த 'ரெளட்டர்' என்னும் தொழிநுட்பம் பயன்படுகிறது. ஆனால் அதை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. 'ரெளட்டர்' என்று ஒரு நுட்பம் இருக்கிறது என்பது வரை தெரிந்திருந்தால் போதும்.

கோடிக்கணக்கான கணிபொறிகளின் 192.166.133.45 என்னும் வடிவத்தில் இருக்கும் முகவரியை நினைவில் வைத்திருப்பது மனித மூளைக்கு சாத்தியமில்லை என்பதனை உணர்ந்த கணிப்பொறியாளர்கள் அதற்கும் ஒரு உபாயம் செய்தார்கள். www.yahoo.com, www.google.com போன்ற முகவரிகளைக் கண்டறிந்து, ஒவ்வொரு கணிப்பொறியின் எண்ணோடும், இப்படியான பெயர்களை இணைத்துவிட்டார்கள்.

குறிப்பிட்ட கணிப்பொறியை தேடுபவர்கள் யாஹூ,கூகிள் அல்லது அண்ணாச்சிமளிகைக்கடை என்ற பெயர்களை பயன்படுத்தினால் போதும்.எண்களை மனப்பாடம் செய்து குழம்பித் திரிய வேண்டியதில்லை. அதற்கென எழுதப்பட்ட சாப்ட்வேர்கள் இந்தப் பெயர்களை ஐ.பி எண்களாக மாற்றி, அந்த ஐ.பிக்குரிய கணிப்பொறியோடு, அது உலகில் எங்கிருந்தாலும் உங்கள் கணிப்பொறியை இணைத்து விடும். இனி நீங்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களை அதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கணிப்பொறியை மற்றொரு கணிப்பொறியோடு இணைக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. சாதாரண தொலைபேசிக் கம்பி வழியாக, பைபர் கேபிள் வழியாக, கம்பியில்லா முறை (வயர்லெஸ்), செயற்கைக் கோள் என நமக்கு ஏற்ற வகையில் பொருத்திக் கொள்ளலாம்.

ஒரு அடிப்படையான விஷயம், கணிப்பொறி 0,1 ஆகியவற்றை மட்டுமே கொண்டு இயங்குகிறது. இந்தத் தொழிநுட்பத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் என்கிறோம். எந்தத் தகவலாக இருந்தாலும் கணிப்பொறிக்கு உள்ளீடாக கொடுக்கும் போதும், வெளியீடாக பெறும் போது 0 அல்லது 1 என்ற வடிவத்தில் இருக்க வேண்டும். ஆம் என்பதற்கு 1 எனவும், இல்லை என்பதற்கு 0 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும். 7 என்னும் எண்ணை நீங்கள் கொடுக்கும் போது அதை 0111 என்று கணிணி மாற்றிக் கொள்ளும். இதுதான் அதற்கு புரியும் பாஷை.

(இன்னும்...)

ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வா.மணிகண்டன்

ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.

ஏப்ரல்   21 , 2008

logo
Andhimazhai
www.andhimazhai.com