இந்தியாவில் சைபர் குற்றங்களை எப்படி/யாரிடம் புகாராக அளிப்பது என்பதற்கு இணையத்தில் நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் புகார் அளிப்பதற்கு முன்பாக விசாரணை என்று வரும் போது புகாரை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சேகரித்து வைத்திருப்பது மிக அவசியம்.
பொதுவான வழக்குகளிலேயே சினிமாவில் வருவது போல "சாட்சிகள் சரியாக நிரூபிக்கப்படாததால் வழக்கை இந்த நீதி மன்றம் தள்ளுபடி செய்கிறது" என்ற தீர்ப்புகள் வருகின்ற சூழலில், சைபர் குற்றங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
நாம் பழகியதும், சாட் செயததும் அந்த நபரின் உண்மையான பெயரில்தானா அவர் குறித்தான நமக்குத் தெரிந்த தகவல்கள் சரியானவையா என்பது பற்றி நமக்கு நாமே சில கேள்விகளை எழுப்பினால் நமக்கே சந்தேகம் வரும். நண்பர் மனோஜ் எழுதிய "சூன்ய வெளி" (தொகுப்பு: புனைவின் நிழல்) கதையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தன்னை ஒரு சாப்ட்வேர் வல்லுநர் என்றும் அடுத்த முனையில் அறுபது வயது பெண்மணி தான் கல்லூரி மாணவி என்று 'சாட்' செய்து கொண்டிருப்பார்கள். கதையோடு படிப்பதற்கு இந்த நிகழ்வு அங்கதமாக தெரிந்தாலும் 'சாட்' உறவுகளில் எண்பது சதவிகிதத்திற்கு மேலானவை போலியான தகவல்களால் நடக்கின்றன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இணைய உறவுகளில் நம்மைப் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டு, அவற்றை வைத்து தவறான தகவல்களை பரப்பப்போவதாகவோ அல்லது அவப்பெயரை வாங்கித்தருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக மிரட்டுவதான குற்றங்கள்தான் அடிப்படையான தனிமனித தாக்குதல்கள். சைபர் ஸ்டாக்கிங், சைபர் புல்லிங் என்பது போன்ற பலவகையான சைபர் குற்றங்கள் தனி மனித தாக்குதலில் அடங்கிவிடுகின்றன.
நிறுவனங்களை பொறுத்த வரைக்கும் இன்னமும் கூட, 'இவைதான் நிறுவனங்கள் மீதான இணையக் குற்றங்கள்' என சட்டங்களால் வரையறுக்கப்பட முடியாத அளவுக்கு விதவிதமான குற்றங்கள் இருக்கின்றன.
அனைத்து விஷய்ங்களிலுமே 'வரும் முன் காப்பது' சரியான ஒன்றாலும், சைபர் குற்றங்களைப் பொறுத்த வரைக்கும் இது சாலப் பொருந்தும்.
சாதாரண குற்றங்கள், அது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைக் கடத்தல், வெடி குண்டு வைத்தல் என எதுவாக இருந்தாலும் அவை பல்லாண்டுகளாக இந்த மண்ணில் நடைபெற்றும் வரும் குற்றங்கள். சமூகத்திற்கு அந்தக் குற்றங்களின் தன்மை குறித்து நல்ல அனுபவ அறிவு இருக்கிறது. ஒருவன் கொலை செய்தால் இப்படித்தான் அக்கொலையை செய்திருக்க முடியும் என தீர்க்கமான முடிவுக்கு வந்து விட முடியும்.
ஆனால் சைபர் குற்றங்கள் அப்படியிருப்பதில்லை. பத்து வருடங்களுக்கு முன்னதாக எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும், மென்பொருள் துறையிலும் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை முற்றாகக் களைந்துவிட்டு பன்மடங்கு புதிதான ஒரு நுட்பத்தில் இன்று இயங்குகிறோம். புதுத் தொழிநுடபங்களைப் பயன்படுத்துபவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே, அந்த நுடப்ம் எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரிகிறது. செல்போனை பயன்படுத்துவோரின் சதவீதத்தில், செல்போன் சிக்னல் என்றால் என்ன அது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படி கடத்தப்படுகிறது போன்ற நுட்பங்கள் தெரிந்தவர்களின் சதவீதம் எவ்வளவாக இருக்க முடியும்?
'மாப்ளே...இங்க சிக்னல் இல்லைடா..வேற இடத்துக்கு வந்து நானே கால் பண்ணுறேன்' என்னும் வாக்கியம் மிக இய்லபான புழக்கத்திலிருக்கிறது. சில நுட்பங்களை ஒருவர் தெரிந்து வைத்திருந்தாலும் கூட அடுத்த வருடம் அதே நுடபம் இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறி.
இந்த விஷயத்தை சொல்ல வேண்டிய காரணம், இன்றைய தொழிநுட்பப் புரட்சியில், பொருட்கள் எந்த அடிப்படையில் இயங்குகின்றன என்ற செய்தி தெரியாவிடினும் அவற்றை மிகச் சுலபமாக கையாள்கிறோம். இந்த நுடப்ங்களையும், பொருட்களையும் பயன்படுத்தி ஒருவன் குற்றங்களைப் புரியும் போது, காவல்துறையோ, நீதித்துறையோ அல்லது சமூகமோ குற்றத்தின் நுனியைக் கூடத் தொட முடிவதற்கு பல நாட்கள் பிடிக்கிறது. குற்ற நுட்பத்தின் முன் அனுபவமே இல்லாத ஒரு சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. இந்தச் சமூகத்தை தாக்குவது என்பது குற்றவாளிகளுக்கு எளிது. ஆனால் குற்றவாளிகளை தண்டிப்பது சமூகத்திற்கு கடினம்.
சைபர் குற்றங்களின் தனித்துவமே அவற்றின் எல்லைகளற்ற தன்மைதான். டென்மார்க்கிலோ அல்லது நைஜீரியாவிலோ அமர்ந்து கொண்டு பாலப்பாளையத்து சுந்தரனை ஆன்லைனில் மிரட்டினால், சுந்தரன் கோபி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் கஷ்டம். கோபி சப் இன்ஸ்பெக்டர் டென்மார்க்கின் ரெனோ பெய்ஜரை 'முட்டிக்கு முட்டி தட்டி' விசாரிப்பதும் கஷ்டம்.
சைபர் குற்றங்கள் புரிபவர்களை எளிதாக மிரட்டி குற்றத்திற்குரிய விஷயங்களை அவர்களை ஒத்துக் கொள்ள வைப்பது என்பதெல்லாம் ஏலாதது. இது முற்றிலும் தொழிநுட்பம் சார்ந்த விஷயமென்பதால், குற்றவாளிகளை நேரடியாக விசாரிப்பதில் என்னதான் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தாலும், தொழிநுட்ப அறிவு இல்லையெனில் குற்றத்திற்கான அடிப்படையான தகவல்களை இம்மியளவு கூட அவரால் பெற முடியாது.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் சைபர் குற்றங்களை விசாரிப்பதற்கென கணிணித்துறையில் பயிற்சி பெற்றவர்களை வைத்து காவல் பிரிவுகள் செயல்படத் துவங்கியுள்ளன.
தமிழகத்தில் கிரைம் பிராஞ்ச் சி.ஐ.டியில். சைபர் குற்றங்களை விசாரிப்பதற்கான தனிப்பிரிவு செயல்படுகிறது. இவர்களின் இணையதளத்தில், ஹேக்கிங் உள்ளிட்ட சைபர் குற்றங்களை எட்டு பிரிவுகளின் கீழாக வகைப்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து வகையான இணையக்குற்றங்களையும் இவர்களால் எட்டு பிரிவுகளுக்குள்ளாக கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை என்றாலும், இவர்களால் இயலாதெனில் குறைந்த பட்சம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நமக்கு நிச்சயம் வழிகாட்டுவார்கள்.
சைபர் குற்றங்களால் தாக்கப்படுவதாக உணரும் போது அதனை புகாராக பதிவு செய்வதற்கு முன்னதாக சாட்சிகளை தயார் செய்ய வேண்டியிருக்கும். சாட்சியென இங்கு சொல்வது சாராயம், பிரியாணியோடு காசு கொடுத்து 'செட் அப்' செய்யப்படும் சாட்சியன்று. சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் சாட்சிகளை சைபர் சாட்சிகள் (சைபர் எவிடென்ஸ்) என்று குறிப்பிடுகிறார்கள்.
மின்னஞ்சல் மிரட்டல்களோ அல்லது ஆபாச மின்னஞ்சல்களோ வரும் போது ஆத்திரப்பட்டு அவற்றை அழிக்கக் கூடாது. அந்த மின்னஞ்சல்கள்தான் நம் புகாருக்கான முதல் சாட்சி என்பதால் அவற்றை கணிப்பொறியில் (ஹார்ட் டிஸ்க்) சேமித்து வைத்துக் கொள்வது நலம். நீங்கள் அவற்றை மின்னஞ்சலிலேயே வைத்திருந்தாலும் கூட, உங்களை மிரட்டுபவனுக்கு நீங்கள் புகார் அளிக்கப்போவது தெரிந்தால் அந்த மின்னஞ்சலையே கூட உங்களிடம் இருந்து திருடி விட முடியும்.
அனைத்து மின்னஞ்சலிலும் 'ஹெட்டர்' என்ற ஒரு பகுதி உண்டு. 'ஹெட்டரில்' மின்னஞ்சலை அனுப்பியவரின் மின்னஞ்சல் முகவரி, அவரது ஐபி எண் போன்ற பல முக்கியமான தகவல்கள் இருக்கும். எனவே இந்த 'ஹெட்டர்கள்' முக்கியமான துப்பு ஆகும். மின்னஞ்சலிலிருந்து 'ஹெட்டர்' தகவலை எடுப்பதற்கு ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும்(gmail,yahoo,hotmail) ஒரு வழிமுறை இருக்கின்றது. இணையத்தில் இந்த வழிமுறையைத் தேடி நாமாகவே கூட மின்னஞ்சலின் 'ஹெட்டர்' தகவலை எடுக்க இயலும். நம்மால் இயலவில்லையென்றாலும் சைபர் போலீஸ் எடுத்துவிடுவார்கள்.
மிரட்டல்கள் தவிர, ஆன்லைனில் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை மீறுவதும், நடந்த பேச்சு வார்த்தைகளை மறுப்பதும் சாதாரண விஷயங்கள். இவ்வகையில் ஏமாற்றப்பட்டால் அவற்றையும் சைபர் குற்றங்களின் கீழாக கொண்டு வர முடியும். இவ்வகையான முன்பே ஒப்பந்தங்களை முறையாக ஆவணப்படுத்திக் கொள்வதும், தொழில்நுட்ப ரீதியாக சில நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதும் பின்னாளில் நாம் ஏமாற்றப்பட்டால் புகார் செய்ய ஏதுவாக இருக்கும். இந்தத் தகவல்களை எப்படி ஆவணப்படுத்துவது, எந்த ஆவணங்கள் முக்கியமானவை போன்ற விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள் தற்பொழுது வலைய வருகிறார்கள். ஆலோசகர்களின் உதவியோடு நம்மை தயார் செய்து கொள்வது நல்ல விஷயம். இணையத்தின் மூலமாக ஏதாவது வணிகம் துவங்கும் போது இது போன்ற சில தகவல்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நலம்.
தமிழகத்தில் இணையக்குற்றங்களால் பாதிக்கப்படுவதாக இருப்பின் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Cyber Crime Cell,
Crime Branch CID.,
Admiralty House,
Government Estate,
Chennai - 600 002.
Tamil Nadu.
தொலைபேசி : 044-25389779, 044-25393359
இணையதளம்: www.cbcid.tn.gov.in
மின்னன்ஞ்சல்: cbcyber@tn.nic.in
(இன்னும்...)
ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
வா.மணிகண்டன்
ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.
ஆகஸ்ட் 18 , 2008