விரல்நுனி விபரீதம் -18

சைபர் குற்றங்கள்: தடுப்பு வழிமுறைகள்
விரல்நுனி விபரீதம் -18
Published on

இணையத்தில் உலவும் ஒவ்வொருவரும் இணையக் குற்றங்களிங்கனால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. சைபர் குற்றங்களினால் த‌னிம‌னித‌ன்,குடும்ப‌ம், நிறுவ‌ன‌ம் என எந்தத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகலாம்.

இணைய‌த்தில் நடைபெறும் குற்ற‌ங்க‌ளையும், அவற்றை எதிர்த்துப் போராடுவ‌த‌ற்கான‌ ச‌ட்ட‌ங்க‌ளையும், குற்ற‌வாளிக‌ளுக்கான‌ த‌ண்ட‌னைக‌ளையும் தெரிந்து வைத்துக் கொள்வ‌து மட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவப் போவதில்லை. இவைகளால் ம‌ட்டும் 'இன்ட‌ர்நெட்' என்னும் மாய‌ உலகின் மந்திர சூழ்ச்சிகளில் இருந்து ஒருவ‌ர் த‌ப்பி விட‌ முடியாது.

சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள‌ வேண்டிய‌ த‌ற்காப்பு வ‌ழிமுறைக‌ள் என‌ப் பெரும் ப‌ட்டிய‌லை இணைய‌ வ‌ல்லுந‌ர்க‌ள் தயாரித்திருக்கிறார்கள். இந்த‌ப்ப‌ட்டியலில் இருக்கும் வழிமுறைகள் 'யானைப்ப‌சிக்கு இர‌ண்டு ரூபாய் கொடுத்து கார‌ப்பொறி வாங்கித்த‌ருவ‌து போலத்தான்' என்றாலும் ச‌ற்று த‌ற்காப்பாக‌ இருந்து கொள்வ‌து உசித‌ம்.

இணையத்தில் உலவும் போது செய்ய வேண்டிய முத‌ல் வேலை, நாம் இணையத்தில் அடையாள‌ம‌ற்ற‌ ம‌னித‌ர், நம்மைப்பற்றி ப‌ற்றி ஒருவ‌ருக்கும் தெரியாது என்ற‌ நினைப்பைக் கைவிடுவதுதான். என்னதான் முகமூடி அணிந்து கொண்டாலும், ஏதாவ‌து ஒரு கண் உலகின் எந்த‌ மூலையிலிருந்தாவ‌து நம்மை பார்த்துக் கொண்டுதானிருக்கும். இணையத்தில் இதை தவிர்ப்பது என்பது முற்றிலும் இயலாத காரியம்.

யாராக‌ இருப்பினும், அது தெரிந்த‌வ‌ர் என்றாலும் ச‌ரி, தெரியாத‌வ‌ர் என்றாலும் ச‌ரி, இணைய‌த்தின் மூல‌மாக நம்மைப் பற்றிய த‌னிப்பட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளை(Personal Information) த‌ருவ‌தை குறைத்துக்கொள்ள‌லாம். இய‌லுமெனில் முற்றிலும் த‌விர்த்துவிட‌லாம்.

உங்க‌ளின் அடையாள‌த்தையும், த‌னிப்ப‌ட்ட‌ அந்த‌ர‌ங்க‌ த‌க‌வ‌ல்க‌ளையும் ஆன்லைனில் புழ‌ங்காம‌ல் செய்வ‌த‌ற்கான‌ வ‌ழிமுறைக‌ளை நீங்க‌ளாக‌வே திட்ட‌மிட்டு செய‌ல்ப‌டுத்த‌த் துவ‌ங்குங்க‌ள். வங்கிக் கணக்கு எண், கிரடிட் கார்ட் எண் போன்றவற்றை நம்பிக்கையான தளங்களில் மட்டுமே உபயோகப்படுத்தவும்.

குடும்ப‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் இணைய‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தாக‌ இருப்பினும், குழ‌ந்தைக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தாக‌ இருப்பினும் அனைவ‌ரின் க‌ண்க‌ளிலும் ப‌டும்ப‌டியான‌ இட‌த்தில் க‌ணிணியை வைத்துக் கொள்ள‌லாம். யாரும் கவனிக்கவில்லை என்னும் எண்ணம் தவறு செய்வதற்கு உகந்த மனநிலையைக் கொடுக்கும்.

இணைப்புகளோடு(Attachemnts) வ‌ரும் மின்னஞ்ச‌ல்க‌ள் குறித்து அதிக‌க் க‌வ‌ன‌ம் தேவை. இணைப்புகள் ச‌ந்தேக‌த்திற்குரிய‌தாக‌ இருப்பின், 'ஆன்ட்டி வைர‌ஸ்' மென்பொருளை வைத்து 'ஸ்கேன்' செய்ய‌லாம். சிறுவர்கள் இணையத்தை உபயோகப்படுதுவதானால் 'பில்டர்'களை கணிணியில் நிறுவி வையுங்கள். இந்த 'பில்டர்கள்' மூலமாக விரும்பத்தாக பல இணையங்களை வடிகட்டி விட முடியும். சிறுவர்கள் பார்க்கும் இணையதளங்களையும், அவர்கள் பிறரோடு செய்யும் 'சாட்'களையும் கண்காணிப்பது தவறில்லை. அவர்களுக்கும் நீங்கள் கவனிப்பது தெரிந்து இருப்பது அவர்களுக்கு கொஞ்சம் பயத்தைத் தரும். இதுவும் நல்லதுதான்.

சிறுவர்கள் தங்களைப்பற்றியோ, குடும்பத்தை பற்றிய தகவல்களையோ பிறரோடு ஆன்லைனில் பரிமாற வேண்டாம் என அறிவுரை செய்து வைப்பதும், குறிப்பாக புகைப்படங்களை பரிமாறுவதை அறவே தவிர்க்கும்படி செய்வதும் முக்கியம்.

க‌ணிணியில் இருக்கும் அனைத்து மென்பொருட்க‌ளையும் த‌க்க‌ ச‌ம‌ய‌த்தில் 'அப்கிரேடு' செய்து கொள்வ‌து ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். செல‌வு செய்ய‌ வேண்டியிருக்கிற‌தே என்று 'பைரேட்ட‌ட்' மென்பொருட்க‌ளை உப‌யோக‌ப்படுத்துவ‌தை த‌விர்க்க‌லாம்.

ஆன்ட்டிவைர‌ஸ், ஆண்ட்டி ஸ்பைவேர், பைய‌ர்வால் போன்ற‌ மென்பொருட்க‌ளை க‌ணிணியில் நிறுவி வைத்திருப்ப‌து பெரும்பாலான‌ பிர‌ச்சினைக‌ளைத் த‌டுப்ப‌த‌ற்கான‌ ந‌ல்ல‌ வ‌ழிமுறை.

கடவுச் சொற்களை பிறரிடம் தெரிவிப்பது அல்லது அவற்றை எங்கேனும் சேமித்து வைப்பது என்பது ஆபத்தில் கொண்டுவிடலாம். இயன்றவரை மனதிற்க்குள்ளாகவே வைத்துக் கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் கடவுச் சொற்களை சேமித்து வைப்பதனை பிறரால் தொடமுடியாதவாறு பாதுகாத்துக் கொள்ளுங்கள். கடவுச் சொல்லை தேர்ந்தெடுப்பதும் கூட கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று, மனைவி அல்லது குழந்தையின் பெயர், உங்களின் பெயரை தலைகீழாக எழுதுவது போன்றவற்றை பிறரால் எளிதில் யூகித்துவிட முடியும். கடவுச்சொல்லில் எழுத்துக்கள்,எண்கள்,சிறப்புக் குறியீடுகள் கலந்து இருப்பது முக்கியம்.

அர‌சாங்க‌த்தின் இணைய‌த‌ளங்க‌ளோ அல்ல‌து வேறு இணைய‌த‌ள‌ங்க‌ளோ சைப‌ர் குற்ற‌த்திற்கு உள்ளாகியிருப்ப‌தாக‌ தெரிய‌வ‌ரும் போது த‌ய‌ங்காம‌ல் புகார் செய்யுங்க‌ள். குற்ற‌த்தை முளையிலேயே கிள்ளுவ‌து என்ப‌து சைப‌ர் குற்ற‌த்தை பொறுத்த‌ வ‌ரைக்கும் மிகச் சிற‌ந்த‌ விஷ‌ய‌ம்.

சைப‌ர் குற்ற‌ங்க‌ள் குறித்தும் இணைய‌த்தில் பாதுகாப்பிற்கென‌வும் ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்க‌ நிறைய ஆன்லைன் விவாத‌த்த‌ள‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஒன்றிர‌ண்டு விவாத‌த் த‌ள‌ங்க‌ளில் உறுப்பினராகிக் கொள்ளலாம். அந்த‌ விவாத‌ங்க‌ளைக் க‌வ‌னித்துவ‌ருவ‌து ந‌ம‌க்கு ந‌ம்மை பாதுகாத்துக் கொள்வ‌த‌ற்கான‌ சில‌ 'ஐடியாக்க‌ளை'க் கொடுக்கும் என்ப‌தால் உறுப்பின‌ர் ஆகி வைப்ப‌து ஒன்றும் த‌வ‌றில்லை.

இந்த‌க் க‌ட்டுரை முழுவ‌துமே அறிவுரை வ‌ழ‌ங்குவ‌து போல‌ இருந்தாலும், அனைத்து த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் எழுதுவ‌த‌ற்கு ஒரு புத்த‌க‌ம் தேவைப்ப‌ட‌லாம். ஒரு புத்த‌க‌த்தில் அடைத்தாலும் கூட‌ அவ‌ற்றையும் மீறி க‌ணிணியில் 'க‌ல‌க்கும்' கில்லாடிக‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌தால் யாராலும் அனைத்துத் த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் ப‌ட்டிய‌லிட்டு விட‌ முடியும் என்று என்னால் சொல்ல‌ முடியாது.

இயன்ற‌வ‌ரை எச்ச‌ரிக்கையுட‌ன் ந‌ட‌ந்து கொள்வ‌தும், சைப‌ர் குற்ற‌ங்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் போது த‌ய‌ங்காம‌ல் த‌குந்த‌ இட‌த்தில் புகார் செய்வ‌தும்தான் சைப‌ர் குற்ற‌ங்க‌ளுக்கான‌ 'க‌வுன்ட்ட‌ர்' ந‌ட‌வ‌டிக்கையாக‌ இருக்க‌ முடியும்.

(இன்னும்...)

ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வா.மணிகண்டன்

ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.

 ஆகஸ்ட் 11 , 2008  

logo
Andhimazhai
www.andhimazhai.com