அமெரிக்காக்காரன் பின் லேடனை பிடிக்கிறானோ இல்லையோ, பயங்கரவாதத்தை ஒழித்தே தீர்வது என்ற கங்கணத்தைக் கட்டிக் கொண்டு சில நட்பு நாடுகளோடு கூட்டு சேர்ந்து அற்புதமாக ஆயுத வியாபாரத்தை மேற்கொள்கிறான். அமெரிக்கப் பொருளாதாரத்த்தின் அடிநாதமே ஆயுத வியாபாரம்தான் என்ற பேச்சு இருக்கிறது. தன் வியாபாரத்திற்கு வளம் சேர்க்க வேண்டுமெனில் உலகம் முழுவதும் போரை நடத்த வேண்டியிருக்கிறது. தன்னைச் சீண்டும் கீயூபாவையோ அல்லது மெக்ஸிகோவையோ தட்டிப் பார்த்தால் உலக நாடுகளின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம். (கிடைக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. என்னதான் ஈராக் நமக்கு நட்பு நாடென்றாலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவிற்கு இந்திய அரசு கூஜா தூக்குவது போலும் நடக்கலாம்). இருந்தாலும் தேவையில்லாமல் குறிப்பிட்ட நாடுகளின் மீது மட்டும் போர் தொடுத்து பகை வளர்க்க விரும்பாமல், உலகின் பொது எதிரியான பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதாகச் சொல்லி அமெரிக்கா தன் வியாபாரத்தை நடத்தி வருகிறது. என்னதான் ஆடு நனைந்தாலும் ஓநாய் வருத்தப்படும் அல்லவா?
பயங்கரவாதிகளும் எத்தனை நாளைக்குத்தான் ரஜினிகாந்தின் 'ஜக்குபாய்' கெட்டப்பில் மலைகளில் ஒளிந்து கொண்டு திட்டம் தீட்டுவார்கள்?. உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பொறியியல் கல்வியும்,கணிப்பொறி அறிவியலும் படித்த விற்பன்னர்களை தங்களோடு சேர்த்துக் கொண்டு, பயங்கரவாதிகள் கம்ப்யூட்டரை தட்டியும் படம் காட்டுகிறார்கள்.
சைபர் டெரரிஸத்தின் முக்கியமான அம்சமே வியர்வை வழிய, யாராவது உளவு பார்ப்பார்களோ என்று பயந்தோ பதுங்கியோ செயல்பட வேண்டியதில்லை.மொத்த திட்டத்தையும் நல்ல ஏ.சி அறையில் அமர்ந்து கோழிக்கறியை கொறித்துக் கொண்டே செய்து விடலாம். யார் செய்தார்கள் என்பதையும் கண்டறிவதில் சிரமம் இருக்கும். தற்கொலைப்படையைத் தயார் செய்வது, குண்டுகளை வடிவமைப்பது போன்றவற்றை எல்லாம் பெருமளவில் குறைத்துவிடலாம்.
பயங்கரவாதிகளின் திட்டங்களை கவனித்தால் அவர்களின் முக்கியமான நோக்கங்களாக இரண்டு இருப்பதை உணரலாம். ஒன்று அரசாங்கத்தை பயமுறுத்தி அரசு எந்திரத்தை திசை திருப்பவதாக இருக்கும். இரண்டாவது மக்களுக்கு அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்வது. பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள ரயில்கள், சந்தைகள்,பூங்காக்கள் போன்ற இடங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் நிகழ்வதன் காரணம் இரண்டாவது நோக்கமாக இருக்கும்.
சைபர் டெரரிஸம் என்பதற்கான சரியான வரையறை இதுவரையிலும் கொடுக்கப்படவில்லை. 1980களில் பேரி காலின் என்பவர் இந்தச் சொல்லை முதன்முதலாக பிரஸ்தாபித்தார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல் பரிமாற்றங்களுக்கும், தங்களின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்கும், வெடிமருந்து தொழிநுட்பங்களுக்கான தகவல்களை சேகரிக்கவும் இணைய ஊடகத்தை பயன்படுத்துவதை சைபர் டெரரிஸம் என்று சொல்கிறார்கள். அல்லது நாம் வேறு சில கட்டுரைகளில் நாம் பார்த்த விஷயங்களான அரசாங்கத்தின் இணையத்தளங்களை தகர்ப்பது, வைரஸ்களை பரப்புதல், அதிமுக்கிய தகவல்களை இணையத்தில் இருந்து திருடுவது போன்றவற்றையும் சைபர் பயங்கரவாதத்தில் வகைப்படுத்துகிறார்கள்.
1998 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவு 'ஈமெயில் பாம்' மூலமாக உலகின் பல நாடுகளில் இயங்கி வந்த ஸ்ரீலங்காவின் தூதரகங்களைத் தாக்கினர். இத்தாக்குதலை கிட்டத்தட்ட உலகின் முதல் சைபர் பயங்கரவாத நடவடிக்கை எனலாம். 'மின்னஞ்சல் வெடிகுண்டு' என்பது ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மின்ன்ஞ்சல் முகவரிக்கு அனுப்புவதாகும். இந்த மின்னஞ்சல் தாக்குதலை தாக்குப் பிடிக்க இயலாமல் 'சர்வர்'ஐ படுத்துக் கொள்ளும்.மின்னஞ்சல் சேவை என்பது எவ்வளவு முக்கியமான காரணி என்பதனை சாப்ட்வேரில் இருக்கும் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்குத் தெரியும் அதன் முக்கியத்துவம்.
பேரி காலின் 1997 ஆம் ஆண்டு சில சாத்தியமுள்ள சைபர் பயங்கரவாதங்கள் குறித்தான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.
குழந்தைகளுக்கான சத்துப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் கம்ப்யூட்டரில், சத்துப் பொருளில் அதிக அளவு இரும்புச் சத்தை கலக்குமாறு மாற்றி அமைத்துவிடல் ஒரு சாத்தியம். இந்தச் சத்துப் பொருளை உட்கொள்ளும் குழந்தைகள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் அல்லது மரணம் கூட சம்பவிக்கும்.
விமானங்களை தரையில் இருந்து கட்டுப்படுத்தும் அறையின்(Control room) கணிப்பொறியின் கட்டுப்பாட்டை இணையத்தின் மூலமாக தன் கீழ் கொண்டு வந்து இரண்டு விமானங்களை நேரடியாக மோதும்படி செய்யலாம்.
மூன்றாவதாக உலகின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க நினைப்பவர்கள் பங்குச் சந்தையின் கணிப்பொறிகள், பணப்பரிமாற்றம் செய்யும் வங்கிகள், நிதி நிறுவன்ங்களின் கணிப்பொறிகளில் விளையாடிப் பார்க்கும் வாய்ப்பிருக்கிறது. இன்றைய சூழலில் இந்தியப்பங்குச் சந்தையில் தங்களின் கைவரிசைகளை, சைபர் டெரரிஸ்ட்கள் காட்டினால் பத்தாயிரம் கோடிகளுக்கும் அதிகமான இழப்பை சில மணி நேரங்களில் நடத்திக் காட்டிவிடலாம்.
இந்த சாத்தியங்கள் நடப்பதற்கு வழியே இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதச் செய்யும் வாய்ப்பை எதிர்த்து பின் வரும் வாதத்தை முன் வைக்கிறார்கள். ஒரு விமானம் நேருக்கு நேராக எதிர்த்து வரும் பொழுது அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு பயிற்சி பெற்ற விமானி மேற்கொண்டு விட முடியும் என்பது அவர்களின் கருத்து. ஆனால் காலின் முன் வைத்த இந்த சாத்தியக்கூறுகளை தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளவையாக மட்டுமே பார்க்க வேண்டும். திருடன் இப்படித்தான் திருடுவான் என்பதனை எவராலும் நிர்ணயித்துவிட முடியாது.
அணைகள்,மின் உற்பத்தி,மின் விநியோக நிலையங்கள் போன்ற அமைப்புகளில் பயன்படும் கருவிகளை மையப்படுத்தப்பட்ட கணிப்பொறிகளின்(Centralised Computer) மூலமாக கட்டுப்படுத்தவும், இயக்குவதற்க்கும் உதவும் தனிப்பட்ட மென்பொருட்கள் இருக்கின்றன. கண்காணிக்கப்படும் கட்டுப்பாடு மற்றும் தகவல் சேகரிக்கும் அமைப்பு (Supervisory Control And Data Acquisition System) எனப்படும் இவற்றை சுருக்கமாக 'ஸ்கேடா'(SCADA) என்கிறார்கள். இவை ஒரு அமைப்பை கட்டுப்படுத்தும் கணிப்பொறிகளை ஒரு வலையமைவில் வைக்கின்றன. ஒரு மின்சார ட்ரான்ஸ்பார்மரை மின்னல் தாக்குவதாக வைத்துக் கொள்வோம். இந்தத் தாக்குதலினால் மற்ற ட்ரான்ஸ்பார்மகளுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாவதற்கு முன்பாக அந்த ட்ரான்ஸ்பார்மர்களுக்கான இணைப்பை கணிப்பொறி துண்டித்துவிடும்.
இன்னொரு உதாரணமும் சொல்லலாம். நீர் தேக்கி வைக்கும் பெரிய அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அணையில் தேக்கி வைத்தால் அணைக்கு பாதிப்பு உண்டாகும். முழுவதுமாக நீரைத்திறந்து விட்டால் டெல்டா மாவட்ட கரையோர கிராமங்களில் வெள்ள பாதிப்பு உண்டாகலாம். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆற்றின் நீர் மட்டட்டத்தின் அளவை அந்ததந்த இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கணிபொறிகளிலிருந்து அணையில் இருக்கும் மையக் கணிணிபெற்றுக் கொள்ளும். இந்த மையக் கணிணி ஆற்றின் நீர்மட்டத்தையும், அணைக்கு வரும் நீர் மட்டத்தையும் கணக்கிட்டு அணைக்கும் பாதிப்பு வராமல், டெல்டா மாவட்டங்களும் பாதிப்படையாமல் அளவான நீரை வெளியேற்றும். இந்தக் கணிப்பொறிகள் அனைத்தும் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஸ்கேடா' சாப்ட்வேர் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த ஸ்கேடா அமைப்பு அணு உலை போன்ற இடங்களிலும் கூட வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன.
பயங்கரவாதிகள் இந்த ஸ்கேடா அமைப்பில் ஏதேனும் சிக்கலை உருவாக்குவதன் மூலம் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேண்ட் கடற்கரையில் ஒரு மிகப்பெரிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையம் முழுவதும் 'ஸ்கேடா' அமைப்பின் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு அசகாய சூரன், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் 'ஸ்கேடா' அமைப்பின் தலைமை கணிப்பொறியை தன் இல்லத்தில் இருந்தே இயக்கி பல மில்லியன் கேலன்கள் கழிவு நீரை கடற்கரையில் குயிண்ஸ்லேண்ட் திறந்து விட்டுவிட்டான். மூக்கை பிடித்துக் கொண்டே விசாரணை செய்து முடிவில் அவனைக் கைது செய்த போலீஸ், அவன் 'கழிவு நீர் சுத்திகரிப்பு' நிலையத்திற்கு ஸ்கேடா மென்பொருளை வடிவமைத்த நிறுவனத்தில் பணி புரிந்தவன் என்று கண்டறிந்தது.
ஒரு வேளை இவன் பணி புரிந்த நிறுவனம் அணு உலைக்கு 'ஸ்கேடா' வடிமைத்துக் கொடுத்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று பத்திரிக்கைகள் எகிறிக் குதித்து தலையங்கம் எழுதித் தள்ளின.
இப்படியான சில தனித்தன்மை வாய்ந்த தொழிநுட்பங்களில் பணிபுரிந்த அனுபவமிக்க ஆட்களை பயங்கரவாதிகள் வளைத்துப் போட்டு செயலாற்றும் போது சைபர் டெரரிஸத்தின் எல்லை பிரமாண்டமாக விரிவடையக் கூடும்.
சைபர் டெரரிஸம் குறித்தான சமீபத்திய கணிப்பு பினவரும் வரிகளுடன் முடிகிறது. "எதிர்காலத்தில் வெடிகுண்டுகளை வைத்துச் செய்யும் காரியங்களை விட அதிகப்படியான காரியங்களை கணிப்பொறியின் விசைப்பலகை மூலம் பயங்கரவாதிகளால் நிறைவேற்ற முடியும்".
இந்த நாட்கள் அதிக தொலைவில் இல்லயென்றே நான் கருதுகிறேன்.
(இன்னும்...)
ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
வா.மணிகண்டன்
ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.
ஜுலை 21 , 2008