ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 10

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 10
Published on

எலக்ட்ரீஷியன் கோபாலின் இன்னொரு நண்பரான ரிட்டயர்ட் போலீஸ்காரர் ஒருவர் வீட்டில் ஒரு கருப்பு நிற பெண் லேப்ரடார் வாங்கியிருந்தார்களாம். அதனுடன் மேட்டிங் விடுவதற்காக என்று புளூட்டோவை ஒரு முறை அழைத்துப் போய் வந்திருக்கிறார். எனக்கு அவன் சென்றதும் தெரியாது, வந்ததும் தெரியாது. குழந்தை வளர்ப்பு, புதிய வீட்டை ஒழுங்குபடுத்துவது என்று நேரம் பறக்க, புதிதாக  கிளினிக் ஒன்றையும் ஆரம்பித்திருந்தேன்.

 இத்தனை காரணங்களால் மிருகங்களுடன் செலவழிக்கும் நேரம் குறைந்து போயிற்று. ப்ளூட்டோ புது வீட்டிற்கு வந்தபின் அங்கும் இங்கும் நடந்து கொண்டும் எல்லாம் தெரிந்தது போல் தெருவிலும் நடமாடிக் கொண்டிருந்தான். அந்தத் தெருவில் இருந்த சில நாய்களும் இவனைப் பார்த்து பயந்தன; மரியாதை கொடுக்க ஆரம்பித்தன. அதனால் அவனை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை. டேனி ப்ளூட்டோவுக்குப் பின்பாகச் செல்வான் அல்லது நாங்கள் வெளியே போனால் கூட்டிக்கொண்டு போவோம். சோறு போடுவதை தவிர அப்போதைக்கு அவர்கள் இருவராலும் அதிக வேலை இல்லை.

 இப்படி இருக்கையில் நாங்களே எதிர்பாராத ஒரு தருணத்தில் ப்ளூட்டோ மேட்டிங் சென்ற இடத்தில் அந்தப் பெண் நாய் நிறைய குட்டிகளை ஈன்றிருக்கிறது. அதில் கருப்பு குட்டிகளும் அடக்கம். "உங்க பங்குக்கு ஒரு குட்டி உண்டு.. வந்து உங்களுக்குப் பிடிச்சதை எடுத்துட்டுப் போங்க.. மத்ததை வெளியே குடுத்துடுவார்" என்றார் எலக்ட்ரீஷியன் கோபால்.



அது ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது.  கருப்பு லேப்ரடார் ஆசையைக் கிட்டத்தட்ட கைவிட்டிருந்தோம்.. மறந்தே போய் விட்டோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். மனதில் ஒரு ஓரமாக இன்னொரு லேபிரடார் வந்தால் நன்றாக இருக்கும் என்று  நினைத்த நேரம் இப்படி லட்டு போல ஒரு குட்டி வந்து சிக்கும் என்று நினைக்கவே இல்லை.

 இரண்டு மூன்று முறை அவர் அழைத்தும் என் கணவரால் போக முடியவில்லை. இவ்வளவு நாள் நாய்கள் வளர்த்திருக்கிறேனே, நானே போய் முயற்சி பண்றேன் என்று என் மகள்கள் அஞ்சனா, அபர்ணா இருவரையும் அழைத்துக் கொண்டு ஏட்டையா வீட்டுக்குப் போனேன். குட்டிக் குட்டியாக ஆறேழு லேப்ரடார்கள் இருந்தன. அதில் மூன்று கருப்பு என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த வகையில் ஒரு குட்டியை தேர்வு செய்தேன். ஒரு கூடையில் வைத்துத் தந்தார் ஏட்டையா.

 திரும்பி வரும்போதே அந்தக் குட்டி என்னையும் என் சிறிய மகளையும் நக்கிக் கொடுத்தது. அது குறுந்தகடுகளின் காலம். கார்ட்டூன் கேரக்டர்களையும், குழந்தைப் பாடல்களையும் சிடிக்கள் வழியாக பிள்ளைகளுக்கு நிறைய அறிமுகப்படுத்தி இருந்தோம். அந்த சிடிக்களை வரிசையில் பூப்பி என்ற ஒரு நாயை ஹீரோவாக கொண்ட ஒரு பாடல் சிடியைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும்கூட!

பாடலில் வரும் பூப்பி எப்போதும் சந்தேகம் கேட்டுக் கொண்டே இருக்கும்.. அதற்கு கோழி, மாடு மற்ற விலங்குகள் எல்லாம் பதில் சொல்வது போல் இருக்கும்.. "பூப்பி! பூப்பி! பௌ! பௌ! பௌ!" என்று டைட்டில் சாங்குடன் அந்த குறுந்தகடு ஆரம்பமாகும். அந்த பாதிப்பில் இந்தக் கருப்புக் குட்டிக்கு பூப்பி என்று பெயர் வைத்தேன்.

ப்ளூட்டோவிடம் இதுதான் உன் குழந்தை என்று கூறி பூப்பியைக் காட்டுவோம். வெள்ளை நிற ப்ளூட்டோ முதுகில் கருப்பு பூப்பி குட்டியை ஏற்றிவைத்து அழகு பார்ப்பாள் அபர்ணா. ப்ளூட்டோ அவனைப் பாசமாகப் பார்த்துக் கொண்டான். டேனி அதைவிடப் பாசமாக பார்த்துக்கொண்டான். அவனுக்கு ஒரு வயது நிரம்பி இருந்தது. மற்ற நாய்களின் மேல் பரிவும் பிரியமும் டேனிக்கு இயல்பிலேயே இருந்தது. நாவால் நக்கி நக்கி பூப்பியை எச்சிலால் குளிப்பாட்டியே விடுவான்.  டேனியின் தலை மட்டுமே பூப்பியின் மொத்த உருவத்துக்கு சமமாக இருக்கும்.

டேனி பாசமாக பூப்பியின் தலையைக் கவ்வுவதைப் பார்த்தால் எங்களுக்குத் தான் பயமாக இருக்கும். ஒரு வாரத்துக்குள்ளாகவே இருவரின் நல்ல குணங்களையும் பூப்பி கற்றுக்கொண்டான். ஆனால் அடுத்த வாரத்தில் முன்னங்கால்கள் இரண்டையும் உடைத்துக் கொண்டான், சாகும் நிலைக்குப் போய் பிழைத்தான்..



எங்கள் வீட்டில் மோட்டார் பழுதாகி இருந்தது. அதைப் பிரித்துப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள். பின்பு மோட்டாரை மாட்டிவிட்டு அதை இயக்கிப் பார்த்திருக்கிறார்கள். கம்ப்ரசருக்கு வெளியே மாட்டும் வலையை மாட்டவில்லை. அந்த நேரம் பார்த்து அருகில் போய் எதிலோ கால் வைத்திருக்கிறது பூப்பி. வைத்த வேகத்தில் ஷாக் அடித்து ஒரு நான்கு அடி தள்ளிப் போய் விழுந்துவிட்டது. பேச்சு மூச்சு இல்லை. தெய்வாதீனமாக அப்போது என் கணவர் வீட்டில் இருக்க, அவர் வந்து மார்பை அழுத்தி, செயற்கை சுவாசம் கொடுத்து பூப்பியை மூச்சுவிட வைத்துவிட்டார்.

 விழுந்ததில் முன்னங்கால்கள் இரண்டும் தொங்கிப் போயிருந்தன. தெரிந்த எக்ஸ்ரே நிலையம் ஒன்றுக்கு பதறிப்போய் போன் அடித்தோம். இந்த மாதிரி எங்க குட்டி நாய்க்கு கால்ல அடிபட்டுருச்சி எக்ஸ்ரே எடுக்கலாமா என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். 'அதனாலென்ன இது மாதிரி நிறைய நாய்களுக்கு எக்ஸ்ரே எடுத்திருக்கேன்.. ராத்திரி நேரம் கடைசிப் பேஷன்ட்க்கு எடுத்துட்டு அப்புறம் மெஷினைக் கிளீன் பண்ணிக்கலாம். கூட்டிட்டு வாங்க' என்றார்.

 தற்காலிகமாக இரண்டு கால்களிலும் ஒரு ஸ்கேலை அணைவாகக் கொடுத்து கட்டுப் போட்டு வைத்திருந்தோம். இப்படி பண்ணிட்டியே பூப்பி?' என்று கேட்டால் வாலை ஆட்டிக் கொண்டு, நடிகர் பாண்டியராஜன் ஸ்டைலில் ஒரு 'திருட்டு முழி' விழித்தான். இன்று வரை அந்த 'முழி' அவனிடம் இருக்கிறது.

இரவில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது இரண்டு முன்னங்கால்களிலும் எலும்பு முறிவு இருந்தது. அதன் பின் பிளாஸ்டர் ஆஃப் பரிசை வாங்கி வந்து மனிதர்களுக்கு செய்வதுபோல் தூக்கிப்பிடித்து கட்டுப்பட்டோம். சிறுவயது நாய்கள் கட்டை கடித்துக் கடித்துப் பிய்த்துவிடும், அதுவும் இவ்வளவு சிறிய நாய்கள் என்றால் குணப்படுத்துவது கஷ்டம் என்பது போன்ற ஒரு பொறுப்புத்  துறப்பை  (disclaimer) அப்போதும் என் கணவர் வழங்கியே இருந்தார். ஆனால் பூப்பி நல்லபடியாகவே ஒத்துழைத்தான். கட்டைப் பிரிக்க முயலவில்லை. இந்த விஷயத்தில் எல்லா நாய்களும் அப்படித்தானா, இல்லை எங்கள் நாய்கள் கெட்டிக்காரப் பசங்களா என்று தெரியவில்லை.. எந்த சிகிச்சை கொடுத்தாலும் தன் நன்மைக்காகத் தான் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டு மிக நன்றாய் ஒத்துழைப்பது பார்த்திருக்கிறேன். நடுவில் ஒரே ஒருமுறை மட்டும் மாவுக்கட்டை மாற்றினோம். நான்கு வாரங்களின் இறுதியில் நன்றாக சேர்ந்துவிட்டன பூப்பியின் இரண்டு எலும்புகளும்.



 ஏற்கனவே வீட்டில் கால்சியம் ப்ரோட்டின், அயர்ன் என்று எல்லா மாத்திரைகளும் நிறைய குவிந்திருந்தன. (எங்கள் ஊரின் அனைத்து நர்ஸிங் ஹோம்களிலும் இருக்கும் அனைத்து சாம்பிள் சத்து மாத்திரைகளும் எங்கள் வீட்டில்தான் கிடந்திருக்கும் என்று நினைக்கிறேன்). அவை கொடுத்த ஊட்டத்தால் நன்றாகத் தேறி விட்டான் பூப்பி. இப்போதும்  கூர்ந்து கவனித்தால் வேகமாக ஓடுகையில் முன்னங்கால்கள் இரண்டும் பின்னங்கால்களை விட குட்டையாக இருப்பது தெரியும். இதனிடையே டேனிக்கு இரண்டு முறை கால்களில் புண் வந்து ஆறியது. அதற்கான சிகிச்சையைக் கொடுத்தோம். எடுத்த எடுப்பிலேயே பூப்பிக்கு இப்படி வந்துவிட்டதே என்று நாங்கள் பயந்திருக்க, நல்லவேளையாக அதன்பின் அதிகமாக வைத்தியம் பார்க்க நேரவில்லை.

ஆனால் நாங்கள் உண்டு, வேலை உண்டு என்று இருக்க விடாமல் ப்ளூட்டோ ஒரு நாள் காணாமல் போனான். அந்த சமயத்தில் நான் ஒரு மணி நேரப் பிரயாணத்தில் இருக்கும் வேறு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். வாரம் ஒருமுறை 24 மணி நேர பணி இருக்கும். அதாவது திங்கட்கிழமை காலையில் 7.30 க்கு வேலைக்கு சென்றால் செவ்வாய்க்கிழமை காலை 7:30 வரை பணியில் இருக்க வேண்டும். அந்த வாரம் புதன்கிழமை என்னுடைய டியூட்டி. புதன்கிழமை காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற நான், வியாழன் காலையில் 24 மணி நேரப் பணியை முடித்து அன்று சில அவசர அறுவை இருந்ததால் அன்றைய முற்பகல் பணியையும் முடித்து விட்டு, மாலை 4 மணிக்குத் தான் வீட்டிற்கு வந்தேன்.

வீட்டில் யாருடைய முகமும்  சரியாக இல்லை. என்ன ஆச்சு என்று கேட்டாள் ப்ளூட்டோவை காணவில்லை என்றார்கள். 'எல்லா பக்கமும் தேடிட்டோம். நேத்து காலைல நீ போன உடனே எங்கேயோ போச்சு.. வந்துரும் வந்துரும்னு ராத்திரி வரை பார்த்தோம்.. நைட் வண்டி எடுத்துட்டு போய் எல்லா பக்கமும் தேடிப்பார்த்தாச்சு.. காலையில் இருந்து நிறைய பேர்கிட்ட சொல்லி வச்சிருக்கேன்.." என்றார் என் கணவர்.

 என் பங்குக்கு நானும் டூவீலரை எடுத்துக்கொண்டு சுற்றி வந்தேன் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொன்னேன். அவ்வளவு கடுமையான பணி முடித்து வந்தும் தூங்கவே முடியவில்லை. குழந்தைகள் அரைமணிக்கு ஒரு முறை ப்ளூட்டோ வந்துடுச்சா வந்துடுச்சா என்று கேட்ட வண்ணம் இருந்தனர். இரவு படுத்த பின்பும்கூட மாற்றி மாற்றி வாசலைத் திறந்து அவனாக வந்திருப்பானா என்று பார்த்தோம். வரவே இல்லை. வெள்ளிக் கிழமையும் முழுவதுமாக தேடியும் கிடைக்கவில்லை.

கணக்குக்கு மூன்று பகல்கள் ஆகியிருந்தன. அன்று மாலையும் கிடைக்கவில்லை என்றவுடன் கையிலிருந்த ப்ளூட்டோவின் புகைப்படத்துடன் ஒரு அச்சகத்துக்குப் போனேன். பள்ளிக்காலத்தில் எங்கள் ஆங்கிலத் தேர்வில், 'நாயைக் காணவில்லை' என்று நோட்டீஸ் போர்டில் வைக்கும் விதமாக அடிக்கடி ஒரு குறிப்பு எழுதச் சொல்லி ஒரு கேள்வி கேட்பார்கள். பத்தாம் வகுப்பு முழுப் பரீட்சையின் போதும் அதுதான் கேட்டதாக ஞாபகம். அந்த அனுபவங்களை எல்லாம் திரட்டி,

"காணவில்லை! ப்ளூட்டோ என்ற வெள்ளை நிற லேப்ரடார் வகை நாயை மூன்று நாட்களாகக் காணவில்லை. தகவல் தெரிந்தவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தக்க சன்மானம் உண்டு!" என்று எழுதி எங்கள் டிரைவரின் அலைபேசி எண்ணையும் போட்டு ஒரு பிட் நோட்டிஸ் அடிக்கச் சொன்னேன். ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் காப்பிகள் அடித்து கொடுத்தார் ப்ரிண்ட்டிங் பிரஸ் காரர். அதை எடுத்துக்கொண்டு போய் 500, 500 ஆகப் பிரித்து எங்கள் ஊரின் பிரபல நியூஸ் ஏஜெண்டுகளைத் தேடி தேடி கொடுத்துவிட்டு மறுநாள் காலையில் செய்தித்தாள்களில் வைத்து விநியோகிக்கும் படி கூறிவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்தபோது இரவு மணி பத்து. அப்போதும் ப்ளூட்டோ வந்திருக்கவில்லை. தூக்கம் பாதி விழிப்பு பாதியுமாக அன்றைய இரவும் கழிந்து. மறுநாள் காலை விடிந்தது..

என்ன நடந்ததென்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com