பெருவழிப்பாதை – 2

பெருவழிப்பாதை – 2
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
Published on

இடம்: திண்டுக்கல், பாலமேடு மாணிக்கம்பட்டி கிராமம்

நாள்:1973, வெயில் தகிக்கும் மே மாதத்தின் ஒரு நாள்.

அடிக்கும் வெயிலைவிடவும் அங்கு அரசியல்களம் தகிப்பாக இருந்தது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த ராஜாங்கம் இறந்துவிட்டார், எனவே அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க.வும் , மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசும் தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. இவர்களோடு கட்சி தொடங்கி ஏழே மாதங்களான எம்.ஜி.ஆரும் தனது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாயத்தேவரை வேட்பாளராக நிறுத்தியிருந்தார்.

மூன்று கட்சிகளும் தீவிரமாக பரப்புரை செய்துகொண்டிருந்தனர், அதோ அந்த மேடையில் முழங்கிக்கொண்டிருக்கும் சிறுவனைப் பாருங்கள்.. (அவன் பெயர் பாலன் என்று வைத்துக் கொள்வோம்) அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன் காங்கிரஸ் கட்சியின் சூறாவளிப் பரப்புரையாளன், கடந்த காமராஜர் ஆட்சியின் பெருமைகளையும், அவர் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்களையும்பற்றி அவன் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறான்.

அந்த மேடையைக் கடந்து சாலையில் சென்ற ஒரு கறுப்புநிற அம்பாசிடர் கார் சற்றுத்தள்ளி நிற்கிறது. காரிலிருந்தவர் சிறுவன் பாலன் பேசுவதைக் கேட்கிறார். பேசிக்கொண்டிருந்த சிறுவனும் அவரைக் கவனிக்கிறான். எதிர்பாராத மகிழ்ச்சியில் தன் பேச்சின் வேகத்தை அதிகமாக்குகிறான், காரணம் காருக்குள் இருந்த அந்த மனிதர் காமராஜர்.

பேசிமுடித்தபிறகு அவனை அழைத்துவருமாறு கூறுகிறார், சிறுவன் அழைத்து வரப்படுகிறான்.

எந்த ஊரு?

நத்தம், பிரச்சாரத்துக்காக அலங்காநல்லூர்ல ரூம் போட்டுக் குடுத்திருக்காங்க அந்த வழியாத்தான் போறேன், உக்காரு, போறவழில எறக்கிவிட்டுட்டுப் போறேன்.

-எனக்குத் தனியா கார் கொடுத்திருக்காங்க.

அது பின்னால வரட்டும், நீ என்கூட வா.

இது தன் பேச்சுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்னும் மகிழ்ச்சியோடு பாலன் அந்தக் காரில் அமர்கிறான், கார் நகர்கிறது.

படிக்கறயா?

ஆமாங்கய்யா, பத்தாவது படிக்கறன்

பத்தாவது படிக்கற பயலுக்கு நடுராத்திரில எதுக்கு அரசியல்கூட்டம்?

அப்பா காங்கிரஸ், நான் பத்து வயசுலயே அரசியலுக்கு வந்துட்டேன், உங்களை ரொம்பப்பிடிக்கும்.. நாகர்கோயில் இடைத்தேர்தல்ல உங்களுக்காக பிரச்சாரம் பண்ணியிருக்கேன்.

அப்ப நீ கெடறதுக்கு நாந்தான் காரணமா?

அய்யா...

படிப்பைக் கெடுத்துக்கிட்டு நீ ஏன் அரசியலுக்கு வரணும், இப்ப என்ன சுதந்திரப் போராட்டமா நடக்குது... தேர்தல் அரசியல்ல யாரோ ஜெயிப்பாங்க, தோப்பாங்க... நீ படிக்கற வேலைய மட்டும் பாரு...

இல்லைங்கய்யா.. பொதுவாழ்க்கைக்கு வந்து உங்களைமாதிரி மக்களுக்கு சேவை செய்யணும்ன்னு ஆசைப்படறேன்.... சிறுவன் தயங்கிச் சொல்கிறான்.

அதுக்காக அரசியலுக்கு வரணும்ன்னு அவசியமில்ல, காமராஜர் அதைச்செஞ்சாரு, இதைச் செஞ்சாருன்னு மேடைல பேசினியே..

அந்தத் திட்டமெல்லாம் நான் தனியொரு மனுசனா செஞ்சிரல.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்கிட்ட கலந்துபேசித்தான் செஞ்சிருக்கேன்.. ஐ.ஏ.எஸ் படிச்சு கலெக்டரானாலும் மக்களுக்கு சேவை பண்ணலாம்.. நீயும் படிச்சு கலெக்டராகு.. என்று சொல்லும்போது அந்த கார் அலங்காநல்லூரை அடைந்திருந்தது.. பின்னால் வந்த காரில் அந்தச் சிறுவனை ஏற்றிவிட்டபின் காமராஜர் கிளம்பிச் சென்றார்.

கலெக்டர், ஐ.ஏ.எஸ் என்பதையெல்லாம் அதுவரை அந்தச் சிறுவன் நினைத்துப் பார்த்த்தேயில்லை, இப்படியொரு அறிவுரையையும் கேட்டதில்லை, அறிவுரை சொன்னது காமராஜர், மறுக்கமுடியுமா..? அந்தக்கணம் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவதென்று அந்தச் சிறுவன் முடிவெடுத்தான், கூடவே இன்னொரு முடிவையும் எடுத்தான், ‘தாய்மொழியான தமிழில் படித்து, தமிழிலேயே குடிமைப்பணித் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆவேன்..'

திட்டமிட்டபடியே இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றான், மதுரை தினமணி நாளிதழில் உதவி ஆசியராகச் சேர்ந்தான்.. பணியிலிருந்தபடி ஓய்வு நேரத்தில் படித்து காமராஜர் சொன்னதிலிருந்து பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப்பணித்தேர்வை எழுதினான், ஆம், தமிழில்..

ஒரு நாள் தனது நாளிதழ் பணியில் டெல்லியிலிருந்து டெலிபிரிண்டரிலிருந்து வந்த செய்தியை அவன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் குடிமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இடம் பெற்றிருந்தது, நம் சிறுவனின் பெயரோடு... அதனை அவனே அச்சுக்கு அனுப்பினான்.

தனிப்பட்ட எந்தப் பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், தமிழில் குடிமைப்பணித் தேர்வெழுதி, முதல் முயற்சிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சிறுவன் 1986 ஆம் ஆண்டில் ஒடிசாவில் சப்கலெக்டராகப் பணியமர்த்தப்பட்டான்..

பணியில் சேர்ந்ததும் அந்தச் சிறுவன் கேட்டான், இந்த எல்லைக்குள் இதுவரை அரசாங்க அதிகாரிகளே போய்ப்பார்க்காத கிராமம் இருக்கிறதா..?

ஒரு மலைக்கிராமம் இருக்கிறது, அதன் பெயர் நகடா.. என்று அதிகாரிகள்  சொன்--னார்கள், அந்தக் கிராமத்திற்குச் சென்று மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி தன் பணியைத் தொடங்கினான் அதிகாரியான அந்தச்‘சிறுவன்..'

தன்னலம் கருதாத தன் பணித்திறத்தாலும், நேர்மையான செயல்பாடுகளாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி படிப்படியாக உயர்ந்து ஒடிசா அரசின் தலைமைச்செயலாளராகவும், வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி 2018&ல் ஓய்வு பெற்றார்..

ஓய்வுபெறும் கடைசி நாளன்று பணியின் முதல்நாள் சென்ற அதே நகடா கிராமத்திற்குச் சென்றார்...இடைப்பட்ட இக்காலத்தில் அக்கிராமத்திற்கு பலகோடி ரூபாய் செலவில் சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தன...

மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தின் திறந்து வைத்து தன் பணியினை நிறைவு செய்தார் அந்தத் தலைமைச்செயலாளர். அந்த அனுபவத்தைப்பற்றிச் சொல்லும்போது அவர் பின்வருமறு எழுதுகிறார், ‘அந்தப் பள்ளியைத் திறந்து வைக்கும்போது என் விழியெல்லாம் கண்ணீர், மனசெல்லாம் கண்ணீர்..'

ஒடிசாவின் முதல்வராக இருந்தவரும், தமிழ்நாட்டின்மேல் பேரன்பு கொண்டவருமான பெருமகன் பிஜுபட்நாயக் நம் அதிகாரிமேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார், அந்த நம்பிக்கை நவீன் பட்நாயக் முதல்வரானபிறகும் தொடர்ந்தது.

பணிஓய்வு பெற்ற பிறகும் நம் அதிகாரியை தமிழ்நாட்டிற்கு அனுப்ப முதல்வர் நவீன்பட்நாயக்கிற்கு மனமில்லை, ‘ஒடிசாவிற்கு உங்கள் சேவை இன்னும் தேவையாக இருக்கிறது, நீங்கள் என்னுடனே இருந்துவிடுங்கள், உங்களை என்னுடைய அரசியல் வாரிசாக அறிவிக்கிறேன்..' என்றார்..

அதனை அன்போடு மறுத்த அந்த அதிகாரி கூறினார், ‘உங்கள் அன்புக்கு நன்றி, ஒடிசா என் உயிரில் கலந்தது.. என் தேவை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள், ஓடிவந்து நிறைவேற்றுவேன், இப்போது என் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன, அவற்றைச் செய்ய அனுமதி கொடுங்கள்..' என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினார் அந்த அதிகாரி..

அப்போதும்கூட தனது சிறப்புத் தலைமை ஆலோசகராக நியமித்தார் முதல்வர் நவீன்பட்நாயக் இன்றும் அப்பொறுப்பைத் தொடரும் அந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழின் தொன்மை, சிறப்புகளைச் சொல்லும் பல ஆய்வுகளைச் செய்து நூல்களாகவும் எழுதிக் கொண்டிருக்கிறார்..

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை (Journey of a Civilization - Indus to Vaiga) போன்றவை அவர் எழுதிய முக்கியமான நூல்கள் பெருமைக்குரிய அந்த அதிகாரியின் பெயர் ஆர்.பாலகிருஷ்ணன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com