புலன் மயக்கம்- 97

Published on

ஒளியை நிகர்த்தவன்

உன் வாழ்க்கையில் எப்போது பாரதி வந்தார்..? இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்களா..? இப்படி ஒரு கேள்வியை குறுக்கும் நெடுக்குமாகக் கடந்ததாவது உண்டா..?

 சரி...

 இந்த அத்தியாயம்    திரைப்படுத்திய பாரதியின் பாடல்கள் பற்றியது.

 பாரதி அதுவரைக்குமான தமிழ் மொழியின் பயன்பாட்டைத் திருத்தி அமைத்தவன். உண்மையில் வேறொங்கோ பாய்ந்துகொண்டிருந்த பெருவெள்ளம் நம் மொழி.அதன் வேகத்தை மடைமாற்றித் திசைதிருப்பித் தணிக்கை செய்தவன் பாரதி. எப்படி எல்லாம் எழுதலாம் என்பதற்கான இலக்கணப் புத்தம் புதிய பாய்ச்சல்களைச் செய்து காட்டியவன்.இதழாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தவன். கவிதையில் முதல்வனாக இருந்த போதிலும் கதைகளையும் புறந்தள்ளாதவன். கட்டுரைகளின் பாலும் பெருநேசம் கொண்டிருந்தவன். விடை தேவையற்ற வினாக்களை உண்டாக்கிக் காலத்தின் அனாதி வெளியின் மீது எறிந்தவன். தன் வாழ்வை சாகாவரமாக்கிக் கொள்ளத் தெரிந்தவன்.மாவுருவாக இருப்பதற்கு உருவேண்டாம் என்றும் பேருருவாய்த் தெரிவதற்குப் பேரெதற்கு என்றும் அரூபத்தின் பெருவாழ்தலைக் கைக்கொண்டவன்.

ஒரு துளிக் கூட இன்பம் என்று சொல்ல முடியாத கசகசத்தலைக் காலம் உள்ளும் புறத்தேயும் வழங்கியது. அந்த மாமனிதன் தன்னால் ஆன அளவுக்குத் தன் புறவுலகத்தை எள்ளினான். மாற்ற விழைந்தான். சதா போர்ப்பட்சி படபடக்கிற மனவானில் கருமேகங்கள் சூழ்ந்தபடியே இருக்க அவற்றினூடாகப் பட்சிகளையும் பறவைகளையும் குழந்தைகளையும் இயற்கையின் எல்லா நன்முத்துக்களையும் கோர்த்துக் கவிமுத்தம் செய்து பழகியவன்.

சோகத்தை புறத்தே எறிபவன் ஞானி. பாரதி தன் வாழ்தலின் நிமித்தமாகத் தன் கவிதைகளைக் கொண்டான்.தன் காலத்தின் தேவைகளாகவே சொற்களைப் புழங்கினான். தன் ஆயுளுக்கு அப்பால் வாழ்வதற்குண்டான எல்லா ஏற்பாடுகளாகவும் தன்னை அகழ்ந்து மொழியுட்புகுந்தான். அவனது எழுத்து அவனது கொடை. காலம் அவன் முன் கைகட்டிக் கடனாளியாகிற்று. தீராக்கடன் தமிழுள்ளளவுமாம் பாரதி பெரும் புகழொளி.

பாரதி படிப்பினூடாக தானுமொரு பிம்பமாக என்னுள் நுழைந்தான். வேண்டா வெறுப்பாகக் குறள்களையும் சங்ககாலச் செய்யுட்களையும் கைக்கொண்ட எனக்கு இணக்கமான மொழியருகாமை பாரதியின் எழுத்துகளில் கிடைத்ததாக உணர்ந்தேன். திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் தனித்து தெரிந்தன. ஒவ்வொரு சொல்லாய் ஆள முற்பட்டவர்கள் யாவர்க்கும் அவனே அரசனானான். சக்கரவர்த்திகளெல்லாம் சாமரம் வீசும் பாரதி ஒளியை நிகர் செய்தவன்.

தொடர்ந்து உயர்ந்தோங்கிப் படபடக்கும் பாட்டுக்கொடி பாரதி.எது உயரம் என்பதெல்லாம் வீண் எது பாரதியின் இடம் என்பது உயரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு உயர்ந்தது. எந்தத் திரைக்கலைஞனுக்கும் பாரதியின் ஒரு சொல்லையாவது புழங்கிவிட மாட்டோமா என்று தோன்றாவிட்டால் தான் அது அதிசயம்.திரைவெளியெங்கும் பாரதியின் சொல்லாடல்கள் நிரம்பித் ததும்புகின்றன.மகாகவி என்பது பாரதியின் பெயர்.வேறார்க்கும் இல்லை இனி.

பாரதி என்ற திரைப்படம் காணும் போது மனசு கதறி அழ நேர்ந்தது.அருகாமையில் அல்லாத படர்க்கையில் காணும் போதே விம்மி வெடிக்கிற இதே மனம் அவன் காலத்தில் வாழ்ந்திருந்தால் என்னவாயிருக்கும்..?வைரமுத்து எழுதிய கவிராஜன் கதை நூலைப் படித்துவிட்டுப் பித்துப் பிடித்தாற் போல் சிலகாலம் அலைந்தேன். பாரதி வேடமிட்ட குழந்தைகளைக் கண்டால் எப்படிச் சொல்வதென்றறியாமல் திகைப்பேன். அது வேடமல்ல குழந்தாய், வழி...நீ அதனுட்புகு.அங்கேயே திரி.அதோடு வாழ்.அதுவே வாழ்வாங்கு என்று சொல்ல முற்படுவேன்.

அதிகதிகம் பாரதியின் பாடல்களைத் திரையில் காணும் போதெல்லாம் வானொலியில் கேட்கும் போதெல்லாம் என்னவோ ஒரு இனம்புரியாத திருப்தி மனதில் வியாபிக்கும். அதே போலத் தான் பாரதியின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட சின்னஞ்சிறியதோர் படபடத்தலும் உடன் வரும்.இன்று நேற்றல்ல.திட்டமிடாத எப்போழ்திலும் ஒரே ஒரு பாடலாய் பாரதியின் எந்தப் பாடலையும் கேட்டுவிட்டுக் கடந்து சென்றதே இல்லை அந்த நாளை.முழுவதுமாய் பாரதியில் ஆழ்ந்து பாரதியின் சொற்களோடு வாழ்ந்து தான் திரும்ப முடிகிறது.

என் மொழியினுள்ளே ஒரு திருத்தலமாய் பாரதியின் பாடல்கள்.தாயொருத்தி மருத்துவளாகவும் அமையப்பெறல் எத்துணை கொடுப்பினை..?அப்படி அமைந்தவை தான் பாரதியின் பாடல்கள். செல்லங்கொஞ்சிக் கண்டிப்பதற்கு பாரதியை நிகர் செய்த இன்னொரு கவி இல்லவே இல்லை.அப்படி இருந்தால் அவர்கள் யாவரும் பாரதியின் மொழிவழிப் பிள்ளை.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ இந்தப் பாடல் வறுமையின் நிறம் சிவப்பு 

 தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே வறுமையின் நிறம் சிவப்பு

 காக்கை சிறகினிலே நந்தலாலா ஏழாவது மனிதன்

வீணையடி நீ எனக்கு 

 ஆசைமுகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி.... 

தீராத விளையாட்டுப் பிள்ளை

ஏவிஎம் வசம் இருந்த பாரதியின் பாடல்கள் மீதான் உரிமை நாட்டு உடைமை ஆக்கப்படும் வரை குவிந்த பயன்பாட்டிலேயே இருந்து வந்தது. தேசவிடுதலைக்குப் பிற்பாடு பாரதியின் பாடல்களுக்குத் தனிச் சுதந்திரமாக அவனது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கம் நிகழ்ந்தது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஒரு விதத்தில் பரவலான மக்கள் கவனத்தை உறுதிப்படுத்தியது. அடுத்த காலத்துக்கு மேலெழுதப்படுவதற்கும் குன்றாத சர்வ காலப் போற்றுதலுக்கும் பாரதியின் பாடல்கள் உரித்தாகின. பயபக்தியுடனே பாரதியின் பாடல்கள் திரைப்படுத்தப் பட்டன. ஏழாவது மனிதன், வறுமையின் நிறம் சிவப்பு, எத்தனை கோணம் எத்தனை பார்வை, சிந்து பைரவி, கண்ணே கனியமுதே, நீதிக்குத் தண்டனை, மனதில் உறுதி வேண்டும், போன்ற எண்பதுகளின் படங்கள் பாரதியின் பாடல்களை இடம்பெறச் செய்ததன் மூலமாக இசை மற்றும் காட்சி ஆகிய இருவித நீட்சிகளாய் அவற்றின் சொலல்வழிப் பரவசத்தை அதிகரித்துத் தந்தன. 

 எம்எஸ்விஸ்வநாதன் இசையில், நீதிக்குத் தண்டனை படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, அதன் தீவிர மற்றும் பரபரப்பான இடையிசை மற்றும் இணைப்பிசை வித்தியாசமான ஒரு வரவேற்பை அதற்குத் தரச் செய்தது. 

உச்சி தனை முகர்ந்தால் கருவம்

ஓங்கி வளருதடி

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி

தன் மனச்சூலில் பதியனிட்டு உடல் பெயர்த்துக் கரு வளர்த்த பெண் குழந்தைக்குத் தகப்பனானவன் ஆனமட்டும் செய்து பார்த்த சொல்லாபிஷேகம் இப்பாடல். கண்ணம்மாவும் செல்லம்மாவும் பாரதி தன் உயிர் வகுத்த இரு பெண் பறவைகள். பத்தோடு பதின் ஒன்றாக வாழ்ந்து மரித்த பட்சிகளல்ல. பாரதி எனும் பெயருக்கு நிகரான மொழியாளும் யட்சிகள். மறைபொருளாகவும், உள் ஆழ அர்த்தங்களாகவும் ஏகத் தெரிந்த ஏதிலிகள். எங்கே எப்போது தோன்ற வேண்டுமெனத் தான் மட்டும் அறிந்த ஆலவிருட்சங்கள். 

ஏழாவது மனிதன் எல்.வைத்தியநாதனின் மரணமற்ற உன்னத இசையில் ஏசுதாஸின் இந்திர ஜாலக் குரலில் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடல் இணை நடிகையைக் கொஞ்சியபடியே அத்தனை அழகழகான ரகுவரன் சட்டென்று திசைமாறிப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். பல்லவி சரண பேதமற்ற தொகையறாக் கூட்டம் இந்தப் பாடல். இதன் இணைப்பிசைதான் எவ்வளவு அழகு.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணமெய்தினேன் 

பாடலை இசையோடு புனைந்தான் பாரதி. ஒத்துச் செல்வது ஓரழகு, மீறலோ நூறழகு. 

பாரதியின் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவின் இசையில், ஞானராஜசேகரன் இயக்கி, சாயாஜி ஷிண்டே வாழ்ந்து வெளிவந்தது. பவதாரிணிக்குத் தேசிய விருது கிடைத்தது. மகாநதி மகாகவியின் பாடல்களை ஆழம் குன்றா அனுபவச் சாரங்களாக மாற்றித் தந்தது. ரௌத்திரம் உள்ளிட்ட பிற்பாடான படங்களிலும் பாரதியின் பாடல்களுக்கு வருகைகள் இருந்தன. 

இது அடுத்த நூற்றாண்டின் காலம். யூட்யூபில் இரண்டு யுவதிகள் ஆடியதாக ஒரு காணொளி கிடைத்தது. பாரதியின் ஆசை முகம் பாடல் காணவாய்த்தது. ஆஷ்ஸை முகம் மறந்து போஷ்சே என்று பாடியதைக் கேட்கும்போது பாரதியின் தரப்பு வழக்கறிஞராகி வாட்டீஷ் தீஸ் ப்ளீஷ் என்று கெஞ்சத் தோன்றியது. பின்னர் கிட்டிய சுசித்ரா கார்த்திக் பாடிய இதே பாடலின் அவரது பிரதி அதிகம் ஈர்த்தது. அதற்கு மாலினியின் அபினயங்கள் கூடுதல் கிறக்கத்தைத் தந்தன. 

உலக அல்சைமர் தினத்தை இசைவழி நிர்மாணித்த மகாகவி தன் பாடலுக்குக் கூடுதல் பயன்பாடு இருந்திருக்கும் என எண்ணியிருப்பானா?

திரைப்பாடல்கள் என்பதைத் தாண்டி இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான ஒரு மகா வடிவ இணைப்புப் பாலமாய் பாரதியின் பாடல்களைச் சுட்டலாம். பாரதி அளவுக்கு முன்னும் பின்னும் அப்படியே எடுத்தாளப்பட்ட இன்னொரு கவியின் பங்களிப்பு இல்லவே இல்லை. பாரதியின் ஒரு மரபுத் தொடர்ச்சியாகப் புதுக் கவிஞர்களையும் இன்னொரு நதிவழி நகர்தல்களாக அப்துல் ரகுமான், புலமைப் பித்தன், மு.மேத்தா, போன்ற ஆளுமைகளையும் மேலும் ஒரு திரை மரபாய் கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோரையும் கொள்ளலாம். அதிகம் வாழ்காலமாய் ஆயுள் பெறாமற் போன அதே பாரதிதான் தனக்குப் பிற்பாடு தமிழைத் தொட்டெழுதிய அனேகப் பலருக்கும் தன் சாயல் தந்தவர்.

தமிழின் சிறப்பு ழகரம், அதனினும் உவப்பு அகரம், எல்லாவற்றிலும் பொன் வார்த்து எழுதப்பட வேண்டிய ,மூன்றெழுத்து மாத்திரம் சிகரம். அது பாரதி எனும் சாகாவரம். மொழிவழி நிகழ்ந்தவன் பாரதி. ஒரு மனிதனின், ஒரு சரிதத்தின் பெயர் மாத்திரமன்று. அது ஒரு உன்னதத்தில் உணர்வது. பாரதி உணர்தல் இனிது. வாழ்தல் இனிது.

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com