இசை ஒரு வழிபாட்டு முறை என்று சொன்னால் தகும்.வரிசையில் நிற்கிற இசைக் கலைஞர்களைத் தாண்டி அபாரமான தனித்தல் வெகு சிலருக்கே சாத்தியம்.தன் வாழ்காலத்தை இசைக்காக அர்ப்பணித்தவர்கள் பலர்.தனக்குள் விரிந்து கொண்டே செல்லக் கூடிய இசை என்னும் இன்னோர் உலகத்திற்குள் தன் மூச்சாகவே இசையைக் கொண்டவர்களின் பெயர்களைத் தொகுத்தால் அப்படியானதொரு பெயர் தான் நுஸ்ரத் ஃபதே அலிகான் என்கிற பெயர்.கலையின் செய்முறை தனக்குள் கொண்டிருக்கும் விசித்திரத்தின் விளைவாகவே கலைவடிவத்தின் ஊடாக எப்போதாவது அதிசயங்கள் நிகழும்.முன்பில்லாத அந்த அதிசயங்கள் அதன் பின் மீவுரு செய்து பார்க்கையில் புரியவரும் அதன் கடினம்.அப்படியானவற்றைத் தன்னை அகழ்கையில் அனாயாசமாக உருவாக்கித் தந்த மேதை நுஸ்ரத்.சீராக முன் அனுமானங்களின் கோர்வைகளாக நிகழ்வது இசையின் ஒழுங்கு.ஒழுங்கறுதலின் இசை எப்போதாவது பூக்கும் அரியமலர்.எதிர்பாராமையும் புதுமையும் புதிர்த்தனமும் மீறலும் உயிர்த்தலும் நுஸ்ரத் இசைக்கோர்வைகளின் பாணி.சுருங்கச் சொன்னால் மற்ற யாரும் கைக்கொள்ளாத கடினங்களைத் தன் விரல்வழி வழிந்தோடுகிற சொந்தநதிகளாய் வளர்ப்புச் செல்லங்களாய்ப் பழக்கி வைத்திருந்தார் நுஸ்ரத்.முன்பின் நிகழாத ஒற்றை வருகை அவருடையது.
ஆன்மாவின் இசையை நிகழ்த்துவதில் நுஸ்ரத் விற்பன்னர்.இசைவழி பயணிக்கிற ப்ரார்த்தனைகள் தெய்வ சன்னிதானங்களின் அடைபட்ட கதவுகளைத் திறக்கிற சாவிகள்.நுஸ்ரத்தின் பாடல்கள் சாவிக்கொத்தின் அனைத்து சாவிகளாகவும் உருவாகின.அவர் அதிசயங்களின் ராஜவீதி.கவ்வாலி இசையின் மன்னர்மன்னன் Shahanshah-e-Qawwali என்று அழைக்கப்பட்ட நுஸ்ரத் ஃபதே அலிகானை அழைப்பதற்கு அதற்கு மேல் ஒரு சொல்லாடல் இருந்தாலும் சரிவரும். ஆறு நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க கவ்வாலி இசை சந்ததி ஒன்றின் ராஜமலராக நுஸ்ரத் தோன்றினார்.முன்பின் நிகழ்ந்த அத்தனை பேருக்குமான முகவரியின் முதற்சொல்லாகத் தன் பெயரை இடம்பெறச் செய்தார்.இந்தப் புவியில் 48 வருடங்களே வாழ்ந்தார் என்றாலும் பூமி உள்ளமட்டும் தன் இசை ஒலித்துக் கொண்டே இருப்பதற்கான அத்தனை முஸ்தீபுகளையும் பக்காவாகச் செய்து விண்ணேகினார் கான் ஸாஹிப்.
ஃபதே அலிகானை காண்கிற சந்தர்ப்பங்களில் அவரது ரசிகர்கள் தங்கள் சரிதத்தின்
எல்லாச் சொற்களையும் மறந்து உன்னதமான உணர்வொருமித்தலில் ஆழ்ந்தார்கள். அவரது குரலைப் பற்றிக் கொண்டு கண்திறக்கத் தேவையற்ற பாடல்வனத்தின் ஆழங்களில் தங்களைத் தொலைத்துக் கொள்ள விரும்பினார்கள்.காரணமின்றிக் கண் நீர் உகுத்துக் கரைந்து கலைந்து கசிந்தார்கள். தங்களுடைய பெருவிருப்பப் பாடலைப் பாடும் போதெல்லாம் தங்களுக்கான ஞானக் குளியல் அது என்று அந்தப் பாடலுக்குள் எப்படியாவது நுழைந்து விட மாட்டோமா என்று திணறினார்கள். இசையன்றி வேறேதுமில்லை என்று இந்த உலகத்திற்கான பொதுசங்கதியாகவே இசையை மாற்றி விடும் முனைப்பில் அலைந்தார்கள்.இத்தனையும் பாகிஸ்தானிலோ இந்தியாவிலோ நிகழ்ந்தது என்றால் கூட அதனை நிலரீதியான முகாந்திரங்களோடு புரிந்துகொள்ளலாம்.
இத்தனையும் அவர் சென்ற இடமெல்லாம் நிகழ்ந்தது தான் ஆச்சர்யங்களின் கூட்டுத் தொகை. பாரிஸ் லண்டன் போன்ற வெள்ளையர் பூமிகளில் நுஸ்ரத் நிகழ்ச்சி நடக்கிற இடம் மட்டும் எதோ பாகிஸ்தானின் உப-முகவரி போல மாறிப் போனது தான் மாயங்களின் உச்சம். இப்படி ஓரிரு முறை அல்ல நுஸ்ரத்தின் பல பயணங்களில் நிகழ்ந்ததென்பது தான் செய்தி.
சூஃபி இசையின் தனித்துவம் ஆன்மாவோடு தொடர்புடையது.மௌனம் தியானம் ஞானம்
என்ற முப்பிரிகையில் மௌனத்தின் தியானித்தலை இசைவழி சாத்தியமாக்குவது கடின முயல்வுகளைக் கோரும் அரிய தவம். அதற்கென்றே தன்னைத் தயாரித்து ஒப்புக்கொடுத்தாலொழிய அசாத்தியமும் கூட. நுஸ்ரத்தின் குரலில் தொடங்குகிறது கதை.மென்மையும் உறுதியும் சேர்கிற குரல்கள் அபூர்வம். எப்படியாகினும் மென்மையான குரல் மென்மையை ஆடை போல் அணிந்து கொண்டு பிறகு கூடுதல் தோல் போலக் குரலின் உடல் மீது ஒட்டிக் கொள்வது தான் வழமை. உள்ளார்ந்தால் மென்மையின் நியதி அதனைச் சகல புள்ளிகளிலும் நிர்ப்பந்திக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதைத் தாண்டிய வேறொர் மென்மை இருக்கிறது.அது தான் மென்வசீகரம்.மென்மையும் கனத்தலும் தங்கத்தில் செம்பு கலந்தாற் போல் கலக்கையில் மென் வசீகரம் தோன்றும்.உலக அளவில் இப்படியான குரல்கள் சொற்பம். அப்படித் தான் நிகழும். அப்படி நிகழ்ந்தால் தான் அப்படியாக இயலும் என்பது விதிமுறை. அப்படி நிகழ்ந்தது தான் நுஸ்ரத்தின் குரல். தன்னிஷ்ட நதியில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காது கேளாதவனுக்குப் பார்க்க வாய்த்த ஊழிப் பேரலையின் ஈரத்துக்கான நிசப்தக் குறிப்புகளை மறுபடி இசைத்து எடுத்தாற் போல் அது ஒன்று இன்னொன்றாகி வேறொன்றான தனித்துவம்.கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட குரல்நதி.தணிக்கை செய்யவியலாத பெருஞ்செல்வம்.
மெரே ரஷ்க் ஏ கொமர் நஸ்ரத் ஏற்படுத்திய பேராழி. இந்த உலகம் உள்ளளவும் அவர் பெயரை இசையினூடாக நினைவுபடுத்திக் கொண்டே இருக்கப் போகிற சாஸ்வதம். இன்னொரு என்ற சொல்லே இல்லாத ஒற்றை அற்புதம் நுஸ்ரத் அலிகான். அவரது இந்தப் பாடல் இன்றைக்கும் பல்வேறு மீவுரு வடிவங்களாக முயலப்பட்டுக் கொண்டே இருப்பது அதற்கான இசைப்பேரெழிலுக்கான நற்சாட்சியம்
Aaaa...
Mere Rashk E Qamar Tu Ne Pehli Nazar
Jab Nazar Se Milaayi Maza Aa gaya
Barq Si Gir Gayi Kaam Hee Kar Gayi
Aag Aisee Lagaayi Maza Aa gaya
Jaam Mein Ghoul Kar Husan Ke Mastiyan
Chaandni Muskurai Maza Aa gaya
Chaand Ke Sa'ay Mein Ay Mere Saaqiya
Tu Ne Aisee Pilaayi Maza Aa gaya
Nasha Sheeshe Mein Angrai Laine Laga
Bazm Rindaan Mein Saagar Khanakne Laga
Maikade Pe Barasne Lagi Mastiyaan
Jab Ghata Gir Ke Chaayi Maza Aagaya
Be Hijabaana Woh Saamne Aa gaye
Aur Jawaani Jawaani Se Takra Gayi
Aankh Unki Laree Yoon Meri Aankh Se
Daikh Kar Ye Laraai Maza Aa gaya
Aankh Mein Thee Haya Her Mulaqaat Par
Surkh Aariz Hu'ay Wasal Ki Baat Par
Us Ne Sharma Ke Mere Sawaalat Pe
Aise Gardan Jhukaayi Maza Aagaya
Shaikh Sahib Ka Imaan Bik He Gaya
Daikh Kar Husan E Saqi Pigal He Gaya
Aaj Se Pehle Ye Kitne Maghroor The
Lut Gayi Parsaayi Maza Aa gaya
Mere Rashk E Qamar Tu Ne Pehli Nazar
தொன்மம் வழிந்தோடும் நுஸ்ரத்தின் குரல் யூகங்களுக்கும் தீர்மானங்களுக்கும் இடையில்
சதா நிகழ்கிற மாயவிளையாட்டு. உணர்வுகளை மழை போல் கழுவிப் புதுப்பித்து வைக்கிற ஆகமவினை.ரசிகனின் அறியாமையினூடாகவே அவனுக்குள் நிகழ்த்தித் தருகிற உன்னத மேதமையின் சாரம் நுஸ்ரத்தின் இசையின்பம்ஜென்மாந்திர இருளினூடாகச் சென்று திரும்புகிற கனாசஞ்சாரத்தின் மீட்டெடுக்க முடிவதற்கான ஞாபகசாத்தியம் போல அது.
Nusrat Fateh Ali Khan - Barsoon Kay Intizar Ka (Waiting For Years)
இசையும் குரலும் பிணைவதன் உள்ளர்த்தம் என்னவாயிருக்கும்..?இசை என்பதை தானொரு முறை நிகழ்த்தும் போது தன்னையும் அதனோடு கலந்து நிகழ்த்திக் கொள்பவனே பாடகன்.ஆக ஒரு பாடலை எப்போது நிகழ்த்துகிறானோ அது அவனைப் படர்க்கையில் நிகழ்த்தித் தருகிறது.இந்தக் கண்ணாடி வித்தையில் குரலால் மட்டும் செய்யக் கூடியதென்று சில மாயங்கள் உண்டு.இசையென்பது முடிவுற்ற நிகழ்தலாக மீண்டுமீண்டும் நிகழவல்லது.அதை முடிவுறாத் தன்மை கொண்டு அணுகுவதே குரலின் பணி.கலைஞன் தன் குரலால் முன்னர் சென்று தொடாத உயரத்தையோ அல்லது தொட்டறியாத ஆழத்தையோ தன் குரல் வழி நிரடும் போது முடிவுறாத் தன்மையின் அதிசயமாக இசை விரிவடைகிறது.கேட்கிற ரசிகனை உள்ளிழுக்கையில் அப்படியான அதிசயத்தின் சதுரபரிமாணத்தின் மூன்றாம் புள்ளியாக ரசிகனும் நான்காவது புள்ளியாகக் காலமும் மாற்றமடைவதோடு எடையற்ற நகர்தலாகப் பெருவெளியில் முடிவுறாப் பயணத்தை நிகழ்த்தத் தொடங்குகிறது. நுஸ்ரத் தன் குரல் மூலமாய்ச் சென்றடைந்த புள்ளிகள் முன்னர் நிகழாப் பேரதிசயங்களாய் நேர்ந்தன.
ஸ்படிகம் போன்ற வெண்மையைப் பூசிக்கொண்டாற் போன்ற குழந்தமை நிரந்தரித்த நுஸ்ரத்தின் இசைமனம் அலாதியானது. அவரால் நினைத்த மாத்திரத்தில் ஒரு பாடலின் உள்ளே புகுந்து கொள்ளவும் பயணிக்கவும் திரும்பவும் முடிந்தது. எந்த முன் பதற்றமோ பிந்தைய அதிர்வோ இல்லாமல் அமைதியான ஆழத்தில் பாடல்களுடன் பிணைத்துக் கொள்ளவும் விடுபடவும் அவர் கற்றிருந்தார். மேதமையும் அறியாமையும் ஒருங்கே அவர் குரல்வழி சாட்சியம் சொல்லின. ஆழ்ந்த அமைதியும் பேரன்பும் அவர் குரலின் மூலமாய்க் கேட்பவர் மனங்களுக்குள் இடம்பெயர்ந்தன. அவர் தன் ரசிகர்களின் மனங்களைக் கலயங்களாக்கினார். இந்த உலகின் அத்தனை தேடல்களுக்கும் தேவையான பூர்த்திகளை முடிவுகளைத் தன் பாடல்களின் ஏதோவொரு இருள் முடிச்சால் நிரடி சமாதானத்தின் அத்தனை சொற்களையும் இசையாக்கி அதன் நீர்மமாய்த் தானே மாறி நிரப்பினார். தீர்வதும் நிரம்புவதுமான பிற்பாடு கேள்விகளற்ற தத்துவார்த்த மௌனத்தில் அவரது ரசிகர்கள் மனமாட்டி பொம்மைகளாய் மாறினர். இதெல்லாமும் சென்ற நூற்றாண்டில் உலகத்தில் நிகழ்ந்த மாபெரிய இசை மேதை நுஸ்ரத் ஃபதே அலிகானின் சரிதத்தின் அத்தியாயங்களாகின.தீராச்சூரியன் நுஸ்ரத் ஃபதே அலிகான் புகழ் வாழ்க. வாழ்க இசை வாழ்தல் இனிது
(நிறைவுற்றது)