பிரயாகை - போதியின் நிழல் 34

பிரயாகை - போதியின் நிழல் 34
Published on

அதிகாலையிலே துயில் எழுந்தவுடன் குர்ர்ர்.. குர்ர் என்ற பறவையின் குரல் கேட்டு பின் தொடர்ந்து வெளியே சென்றார் யுவான் சுவாங். காய்ந்த மரமொன்றின் கிளையில் கரிய பறவைகள் இரண்டு இருந்தன. காலை ஒளியில் அவற்றின் கரிய வண்ணம் மென்மையான மினுமினுப்பைப் பெற்றிருந்தது. இந்த உலகமே தங்களுடையது தான் என்ற இறுமாப்பில் அவை இருப்பதாக சீனப்பிக்குவுக்குத் தோன்றவே அவர் மென்நகை புரிந்தார். அழகிய குன்றின் மீது அவர் தங்கியிருந்த விகாரம் இருந்தது. அதிலிருந்துபார்த்தால் சரிவில் பிரயாகை நகரம் தெரிந்தது. கங்கையும் யமுனையும் சந்திக்கும் நகரம். ஆனால் பூமிக்கடியில் சரஸ்வதியும் சந்திப்பதாக நேற்று யுவான் சந்தித்த துறவி ஒருவர் சொன்னார்.

அழகிய கோபுரங்களும் ஸ்தூபிகளுமாக காலை ஒளியில் பிரயாகை ஒரு நகருக்கு உரிய வனப்பபுடன் தெரிந்தது. நகரின் கிழக்கே இருநதிகளும் சந்தித்தன. அக்காட்சி உச்சியில் இருந்து பார்க்கையில் இரண்டு கடல் துண்டுகள் சங்கமாவதுபோல் தோன்றின. அவற்றில் மேல்பரப்பு சூரிய ஒளியில் தாமிரத் தகடுகளாக ஜொலித்தது. இந்த காட்சியை விட்டால் பிற இடங்களில் அகன்ற, அடர்ந்த காடுகள். காடுகள் திருத்தப்பட்டு உருவாகியிருந்த வயல்கள். யுவான் கண்களைஇடுங்கிப் பார்த்தபோது பெரும் மனித திரளொன்று ஆறுகளின் சங்கமத்தின் அருகே திரண்டிருந்தது. காவி அணிந்திருந்த மனிதர்கள். ஆரிய வர்த்தத்தின் வைதிக மதத்துக்காரர்கள் என்று யுவான் யூகித்தார். நதிச் சங்கமத்தில் நீராடுவதற்காக எங்கோ மூலையில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறார்கள்.

''அவர்களின் நம்பிக்கைகள்தான் எவ்வளவு எளிமையானவை? நேராக வந்து இப்புண்ணிய நதிகளில் விழுந்து குளித்துவிட்டால் போதும். எல்லா பாவங்களும் கழுவப்பட்டு சொர்க்கம் உறுதி. மிக எளிய முறை. மூச்சைக் கவனித்து, புலால் மறுத்து, ஆசைகள் துறந்து மனதைக் கவனித்து வாழும் ததாகதரின் தர்மத்தின் சிரமமங்கள் இவர்களுக்கு இல்லை. எல்லாவற்றையும் எளிமைப் படுத்தி வாழ்கிறார்கள். ஆனால் நதிகள் அவர்களுக்கு புறத்தூய்மையைத் தான் அளிக்கின்றன. பிறப்பின் சங்கிலியை அறுப்பதில்லை. பிரபஞ்சத்தில் அவர்களின் வாழ்வின் தொடரை நிறுத்துவதில்லை. அவர்களின் துயரங்கள் தொலைவதில்லை. " என்று நினைத்துக்கொண்ட யுவான் பின்னர்,'' ஆனால் உலக மக்களுக்குகெல்லாம் பொதுவான் பெருவழி இதுவென்று நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் எல்லோரும் அவ்வழியை ஏற்றுக் கொள்வதில்லை. அவரவர்க்கு அவரவர் வழி. ஆனால் இங்கே பெரும்பாலானோர் ததாகதரின் தர்மத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பேரை அவரது சொற்கள் வசீகரித்திருக்கவேண்டும்? கடல்கள் மலைகள் தாண்டி சீனதேசத்தில் கூட அவரது தர்மம் பெருமளவுக்கு பரவி இருக்குமானால் இங்கே எப்படி ஆழமாக அது பரவி இருக்கவேண்டும். இது கடந்த ஆயிரமாண்டுகளில் இச்சமூகத்தின் ஆழ்மனதிலும் கலாசாரத்திலும் கலந்து ஓடிக்கொண்டிருக்கும்.எந்த தர்மத்தை இம்மனிதர்கள் தழுவினாலும் கூட அவர்களின் ஆழ்மனதில் ததாகதரின் தர்மம் நிச்சயம் பூமிக்கடியில் ஓடும் நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும்.. இதோ பூமிக்கடியில் வந்து இணைகிற சரஸ்வதி போல..." என்ற முடிவுக்கு யுவான் சுவாங் வந்து சேர்ந்தார்.



குன்றின் மேலிருந்து பார்க்கையில் நதிச்சங்கமத்துக்குக் மேற்கே சமதளப்படுத்தப்பட்ட பெரும் நிலப்பரப்பு விரிந்து கிடந்தது. அது மன்னர்களும் பெரும் பிரபுக்களும் தங்களின் செல்வத்தைப் பிரித்து தானமாக வழங்கும் இடம். சமீபத்தில் ஹர்ஷ சக்கரவர்த்தி தான் ஐந்தாண்டுகள் சேமித்த செல்வத்தை இங்கு வறியவர்களுக்கு வாரி வாரி வழங்கினாராம். பெரும் உலோக அண்டாக்களில் தானியங்களும் தங்கக் குவியலும் சேர்ந்து கிடக்க, பெரும் ஜனத்திரள் எந்திய கரங்களுடன் வரிசையில் நின்றிருந்த காட்சியை கற்பனை செய்துபார்த்தார் யுவான்.

''ஹர்ஷ சக்கரவர்த்தி வாழ்க..."
''புத்தம் சரணம் கச்சாமி"'
''தர்மம் சரணம் கச்சாமி"
''சங்கம் சரணம் கச்சாமி"

கோஷங்கள்.. வியர்வை வீச்சம்... அள்ளிக் கொடுக்கும் ஹர்ஷரின் கரங்கள்.... அவருக்கு பெரிய விசிறிகளை வீசும் சேடிப்பெண்கள். அவரது தலைக்கு மேல் விசாலமாக அமைக்கப் பட்டிருந்த கூடாரங்கள். வாளேந்திய வீரர்கள்.

சட்டென்று நேற்று அந்த துறவி சொன்னது நினைவுக்கு வந்தது. உடலெல்லாம் சாம்பலைப் பூசி உச்சி வெயிலில் சுடுமணலில் அவர் யமுனையின் கரையில் உட்கார்ந்திருந்தார்.

யுவானைப் பார்த்ததுமே சிரித்தார்.

''எம் தேசத்து ஞான நதியில் கொஞ்சம் குடித்துப் போக வந்திருக்கிறாய்..."

''ஆம். சுவாமி..."

''இதே இடத்தில்தான் சிறிது காலம் முன்பாக ஹர்ஷனும் வந்து உட்கார்ந்திருந்தான். எல்லாருக்கும் கொடுத்துக் களைத்திருந்தான். கும்பல் இன்னும் கலையாததால் தன் சகோதரி ராஜ்யஸ்ரீயை தன்னுடைய இடத்தில் தானம் செய்ய அமர்த்திவிட்டு காலாற இங்கு வந்திருந்தவன் என் எதிரே அமர்ந்திருந்தான். அவன் மனது அலைபாய்ந்ததை நான் அறிந்தேன்.

'ஏன் சுவாமி.. என்னிடம் தானம் பெற நீங்கள் வரவில்லை? இந்த ஆரிய வர்த்தமே இன்று இங்கு திரண்டு நிற்கிறது... வீச்சமடிக்கும் ஒரு விலங்கின் தோலை மட்டுமே கோவணமாகக் கட்டி இருக்கும் நீங்கள் என்னிடம் வந்தால் ஒரு பட்டாடையாவது கொடுத்திருப்பேனே" என்றான். தயக்கத்துடன் தான் கேட்டான்.

''எனக்கு வேண்டியதைத் தர உன்னால் இயலாது ஹர்ஷா.. அதை நீ நன்றாக அறிவாய்...? இன்று உன் குடிகளுக்கெல்லாம் கொடுக்கிறாய் அல்லவா? அதெல்லாம் மீண்டும் உன்னிடம்தானே வரி என்ற பெயரில் வரப்போகிறது... இந்த பிரயாகையில் இன்று நிரம்பி வழியும் இடம் எது தெரியுமா? மதுபானங்கள் விற்பனையாகும் கடைகள்தான். தாசிகளும் சூதாட்டக் காரர்களும் உன்னால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். உன்னிடம் வனகி மக்கள் இவர்களிடம் கொடுக்கிறார்கள். ஹர்ஷா.. இதற்குப் பதிலாக நீ நேரடியாக தாசிகளுக்கும் மதுக் கடைகாரர்களுக்கும் கொடுத்துவிடலாம்' என்றேன். ஹர்ஷன் பேயறைந்ததுபோல் உட்கார்ந்திருந்தான். அவன் மன சஞ்சலம் அதிகரித்திருந்தது. 'ஹர்ஷா.. ராஜ்யபாரத்தை விருப்பமின்றி ஏற்றுக் கொண்டவன் நீ.. கடந்த முப்பது ஆண்டுகளாக போரே இல்லாமல் நாட்டை வைத்திருக்கிறாய்.... ரத்தமும் உயிர்ப்பலியும் இன்றி உன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் இதுவும் கடந்துபோகும்.நாளைக்கு அரண்மனை சதியும் போர் வெறியும் உன் தேசத்தைத் தாக்கும். உன் குழந்தைகள் அவற்றை சமாளிக்க வேண்டுமெனில் 'புத்தம் சரணம் கச்சாமி' மட்டும் போதாது. இன்று உன்னிடம் வாங்கித் தின்னும் இக்கூட்டம், நாளை உன் குழந்தைகள் பக்கம் நிற்காது' என்றேன். அவன் ஏதும் பேசவில்லை. கிளம்பிப்போய்விட்டான். அவனுக்குத் தெரியும். இந்த ஆரியவர்த்தத்தில் ஒரு விபத்தாக வந்த மன்னன் அவன். வேண்டாவெறுப்பாக மணிமுடியை அவன் சுமந்துள்ளான். உம்மைப் போன்ற ஒரு பிக்கு நாட்டை ஆளமுடியுமா? முடியாது. அவன் உள்ளத்தில் பிக்குவாகவும் வெளியே மன்னனாகவும் இரட்டை வேடம் போடுகின்றான்"


விஹாரத்துக்குள் திரும்பினார் யுவான். தியானக் கூடத்தில் அரைக்கண் மூடிய ததாகதரின் முகத்திலிருந்து எல்லையில்லாத கருணை வழிந்து கொண்டிருந்தது. கண்களை மூடி பத்மாசனமிட்டு அமர்ந்த யுவானின் மனக்கண்ணில் ஆவேசமாக வாளேந்திய தோற்றத்தில் பாலவர்மரின் முகம் ஒரு கணம் தெரிந்து மறைந்தது. பின் எல்லையற்ற நீலப் பெருவெளியில் அவர் கரைந்துபோனார்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com