‘வாழ்க்கை ஒரு பயணம்' என்று தேய் வழக்காய் சொல்லப்படுவதுண்டு. பல தன் வரலாற்று நூல்களின் பெயர்கள் ‘எனது வாழ்க்கைப் பயணம்' என்றோ பாதை என்றோ இருக்கும். சமீபத்தில் நான் அப்படிப் படித்த நல்லதொரு தன் வரலாற்று நூல் கேரள இடது சாரிக் கவிஞர் ‘செறுகாடு'எழுதிய ‘எனது வாழ்க்கைப் பாதை' தமிழில் நிர்மால்யா மணி அவர்கள் மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது.
வாழ்க்கை ஒரு பயணம் எனில் பயணமும் ஒரு வாழ்க்கைதான். உலகப் பயண இலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்தியர்களின் இடம் மிகக் குறைவு. நமது சரித்திரப் பாட நூல்களில் இந்தியாவுக்கு வந்து தங்கள் பயண அணுபவங்களை எழுதிய பிரபல பயணிகள் பற்றிப் படித்திருப்போம்.யுவான் சுவாங், பாஹியான், மெகஸ்தனிஸ், இபின் பதூதா, அல் பெருனி என்று பட்டியல் நீள்கிறது. ஆனால் அவர்களது இந்தியப் பிரதிபிம்பங்கள் எங்கே?
இதற்கு சில சமூக வரலாற்றுக் காரணங்கள் உண்டு.இந்தியர்களுக்கு தாங்கள் வசிக்கும் நிலப் பரப்பைக் குறித்து இருந்த வினோதமான ஒரு தன்னிறைவு மற்றும் பூமியின் பிற பகுதிகளைக் குறித்து இருந்த ஆர்வமின்மை அல்லது விலக்கம். இது அவர்களை கடல் கடந்து செல்கிறவர்களைச் சாதி விலக்கம் செய்கிற அளவுக்குக் கொண்டு சென்றது. காந்தி இவ்வாறு கடல் கடந்து சென்றதற்காக சாதி விலக்கம் செய்யப்பட்டவர்தான்.இந்தியாவைச் சூழ்ந்து இருக்கும் கடல் கறுப்பு நீர் என்றே சொல்லப் பட்டது. காலா பாணி. அதைக் கடப்பவர்கள் தங்களது ஆரியத் (வெண்மை)தூய்மையை இழந்து விடுகிறார்கள். தமிழர்கள் இவ்விதம் நினைத்தது போல் தெரியவில்லை. ஆனால் திரைகடலோடி திரவியம் தேடிய தமிழர்களும் பயண இலக்கியத்தில் தங்கள் காலடிகளை விட்டுச் செல்லவில்லை.
ராமாயணத்தில் சில பயண இலக்கியக் கூறுகள் உண்டு.அதில் வனவாசத்திலும் சீதையைத் தேடியும் ராமன் பயணித்த நாடுகள், வனங்கள், மனிதர்கள், குரங்குகள், அசுரர்கள் அவர்கள் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை விவரிக்கும் சில வர்ணனைகள் உண்டு. தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் நீலகேசி என்கிற சமணப் பெண் துறவி சமயவாது செய்ய வட இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார். அப்போது பல்வேறு சமயத் துறவிகளுடன் வாதம் செய்யும்போது சில இடங்களில் அவர்களிருந்த சூழலையும் சில வரிகளில் தீற்றிச் செல்கிறார்.இதே போல் வெகு பின்னால் ஆதிசங்கரர் நிகழ்த்திய பயணம் குறித்து எழுதப்பட்ட சங்கர விஜயம் போன்றதொரு நூல்தான் அது.
இந்தியர்கள் நிகழ்த்திய பயணங்கள் எல்லாம் இதுபோல் இந்தியாவுக்குள், காசி யாத்திரை போன்ற தல யாத்திரைகளாகவும் சமய யாத்திரைகளாகவுமே இருந்தன.முகலாயர்களுக்கு அல்லது இஸ்லாமியர்களுக்கு இந்தக் கடல் தாண்டுவது குறித்த சமயத் தடை எதுவும் இல்லை என்பதால் அவர்களே இந்தியாவை விட்டு வெளியே பயணித்த முதல் உலகப் பயணிகள் என்று சொல்ல வேண்டும்.ஆனால் அவர்களது பயணங்களும் பல நேரங்களில் ஹஜ் யாத்திரை போன்ற புனித யாத்திரைகளாகவே அமைந்தன.அக்பர் காலத்தில் தான் முதல்முறையாக ஹஜ் யாத்திரை செல்வோருக்கு அரசு மானியம் வழங்கப் பட்டது.இதில் சுவையான செய்தி என்னவெனில் இந்த யாத்திரை சென்றவர்கள் பெரும்பாலும் அரச குடும்பத்துப் பெண்கள். வருடக்கணக்கில் நீடிக்கும் இந்த கடினமான யாத்திரைகள் அந்தப்புரத்தை விட்டு வெளியேறத் தடை விதிக்கப் பட்டிருந்த அவர்களுக்கு மாபெரும் விடுதலையாக இருந்திருக்கும்.