பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே

நெஞ்சம் மறப்பதில்லை -21
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே
Published on

நான் பள்ளி கல்லூரிகளுக்கு பேச போகும் போது,என்னிடம் ஆட்டோகிராப் கேட்கும்  மாணவர்களிடம் (ஆட்டோகிராப் போடும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்பது வேறு விசயம்) பெரும்பாலும் "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே"என எழுதி கையெழுத்திடுவது தான் வழக்கம்."பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" - சொல்லும் போதே சிலிர்க்கிறது.எனக்கு பாரதியை மிகவும் பிடிக்கும்.எப்படி அவனால் "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே"என எழுத முடிந்தது என எப்போதும் ஆச்சர்யப் படுகிறேன்.

எத்தனையோ கம்பன் கழக மேடைகளில், "யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும். புகழ் ஒடுங்காது" என்ற கம்பனின் வரிகளைப் பேசியிருக்கிறேன். யாரும் யாரோடும் பகை கொள்ளாமல் இருந்தால், போர் ஒழியும் . ஆனால் புகழ் பெருகும் என்கிறான் கம்பன். வீடுகளில் உறவுகளோடு, அலுவலகத்தில் சக பணியாளர்களோடு, பக்கத்து வீட்டினரோடு, உறவினர்களோடு,பக்கத்து நாடுகளோடு என எங்கேயும், யாரிடத்தும் பகைமை பாராட்டும் உலகம் இது.பகைவனுக்கு அருள்கிற மனம் மட்டும் அத்தனை மனிதர்களுக்கும் வாய்த்து விட்டால்,இந்த உலகம் உண்மையிலேயே அழகு தான்.

என் பள்ளிப் படிப்பும்,கல்லாரி படிப்பும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் தான்.புனித ஜூலியானாள் நடுநிலைப்பள்ளி, புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி ,ஹோலிகிராஸ் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லாரி என கிறிஸ்தவ நிறுவனங்களிலேயே பயின்றதால் ,கிறிஸ்தவ மாணவிகளோடு தேவாலயத்திற்கு தினந்தோறும் செல்வேன்.சிலுவையில் கை,கால்கள் ஆணியால்  அறையப்பட்டு, முட்கிரீடம் சென்னியைத் துளைக்க,குருதி வழிய துடிக்கும் நிலையிலும், "தந்தையே இவர்களை மன்னியும்.ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்"என்று, தன்னைக் காயப் படுத்தியவர்களுக்காக, ஜெபித்த இயேசுவின் அளப்பரிய காருண்யம் ,நான் கடவுளிடம் யாசிக்கும் சிலவற்றுள் ஒன்று. பகைவனுக்கு அருள்வது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் அல்ல.மிகுந்த மனத் திட்பம் வேண்டும் அதற்கு.நம்மை பற்றி புறம் கூறுபவர்களுக்கு, வாய்ப்புகளைப் பறிப்பவர்களுக்கு ,நம்மை அழ வைப்பவர்களுக்கு,நமக்கு சாபம் கொடுப்பவர்களுக்கு,நம்மை அழ வைப்பவர்களுக்கு ,நாம் அழும் போது சிரிப்பவர்களுக்கு...அருள்வது என்பது அப்படி ஒன்றும் எளிய காரியம் அல்ல. பழி உணர்வுக்கும் ,அருள் மனதிற்கும் நடக்கும் குருக்ஷேத்திரப் போரில்,எப்போதும் பழி உணர்வு தான் வெல்கிறது .

கல்லூரி மாணவியாக இருந்த போது,அதிராம்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு பேச்சுப் போட்டிக்குப் போயிருந்தேன்.ஒலிம்பிக் டார்ச் தங்கள் நாடுகளுக்கு வந்த போது, உலக நாடுகள் அனைத்தும் , தங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களைத் தான்,அந்த டார்ச் ஐ ஏந்த வைத்தனர்.ஆனால் இந்தியாவிற்கு ஒலிம்பிக் டார்ச் வந்த போது,ஐஸ்வர்யா ராயும்,ராணி முகர்ஜியும் தான், அந்த டார்ச் ஐ ஏந்தி வலம் வந்தார்கள்,இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா விற்கு அதற்கான அழைப்பு கூட விடுக்கப் படவில்லை என பேசினேன்.அந்த செய்தி குமுதம் தலையங்கத்தில் வந்த செய்தி.போட்டி முடிந்து,முடிவு அறிவிக்கப் படுமுன் ,உணவு இடைவேளை .நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ,இன்னொரு போட்டியாள மாணவன்,நீ பேசுனது என்னோட பாயிண்ட் .உனக்கு லாட் நம்பர் முன்னாடி வந்ததால நீ பேசிட்ட.இனிமே என் பாயிண்டை பேசாதே...என சண்டை பிடித்தான்."உன் பாயிண்ட் ஆ?? அது குமுதம் தலையங்கத்தில் வந்தது .நீதான் குமுதத்தில் ,தலையங்கம் எழுதுறியா ..???எனக்கு தெரியாம போயிடுச்சே..."என நான் கூற,இருவருக்கும் வாய் தகராறு .அந்த கல்லூரி பேராசிரியர்கள் வந்து விலக்கி விட்டனர்.(இந்தியாவின் வருங்கால தூண்களின் நிலைமை அவர்களை கதி கலங்க வைத்திருக்கும்).அந்த பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைக்க,என் மீதான அவனின் வன்மம் மேலும் அதிகரித்தது.அதன் பிறகு நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா பேச்சுப் போட்டிகளிலும் ,இருவரும் ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்ச்சியோடே இருந்தோம்.

கல்லூரிப் படிப்பு முடிந்து பட்டிமன்ற மேடைகளில் சந்தித்த போதும் அது தொடர்ந்தது.திடீரென ஒருநாள், பாரதியைப் பற்றி பேசி கைதட்டல் வாங்குவதிலும்  பரிசு வாங்குவதிலும் என்ன பெருமை இருக்கிறது??? பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்ற பாரதியின் வரிப்படி வாழ்வது தானே பெருமை என ,போதி மரத்தடியில் அமராமலே,எனக்கு ஞானம் கிடைத்த பின்,கரூரில் ஒரு நிகழ்ச்சியில் அந்த மாணவனை சந்தித்தேன்.வழக்கத்திற்கு மாறாக அவனைப் பார்த்து புன்னகைத்தேன்.நலம் விசாரித்தேன்...என் செயல்பாடுகள் அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.சரியான லூசு...என்று கூட நினைத்திருக்கலாம் .ஆனால் யாரோடும் பகை கொள்ளலளாகவே நான் இரு(ற)க்க விரும்புகிறேன் ....

பொய் பேச கூடாது என முடிவெடுத்த பின் தானே அரிச்சந்திரனுக்கு சோதனைகள் அதிகரித்தது.யாரோடும் பகை கொள்ள கூடாது என்று முடிவெடுத்த பின் எனக்கு வந்த சோதனைகளும் ஏராளம்.நான் அதில் தோற்றுப்போனேன் என்பது தான் உண்மை.

எனக்கு துரோகம் செய்பவர்களைப் பார்த்து, நான்பு ன்னகைக்கும் தருணங்கள் நடத்துனரின் எச்சில் படாத பயணச் சீட்டைப் போல் அரிதாக இருக்கின்றன.அவர்களின் சின்ன சின்ன குறைகள் கூட,நுண்ணோக்கி வழியே பார்க்கும் தாவரத் தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் போல, பெரிதாகவே தெரிகிறது.

இக்கட்டுரையைக்கான வித்தைக் கொடுத்தவள் தனுஜா.என்னுடன் பள்ளியில் படித்தவள்.பதினைந்து வருடங்கள் கழித்து அவளுடைய எண்ணைக் கண்டுபிடித்து பேசினேன்.முதல் நாள் ஆசை தீர பேசினோம்.அதன்பிறகு இரண்டு நாட்கள் அவள் என் தொலைபேசியை எடுக்கவே இல்லை.மூன்றாம் நாள் கொஞ்சம் மன வருத்தத்தில்,இருந்ததாகவும் அதனாலேயே போனை எடுக்கவில்லை என்றும் சொன்னாள்.நீ விரும்பினால் அந்த வருத்தத்தை என்னிடம் சொல்லலாம் என கோரினேன் .அவள் சொன்னாள்..."தம்பி சிங்காரவேலு ன்னு ஒருத்தருக்கு போன் பண்ணினேன்.எனக்கு தெரிந்தவர்...அவருக்கு லயன்ஸ் கிளப் மூலம் அமீர் அறிமுகமாகியிருக்கான்.அமீர் தெரியுமில்ல...நம்ம கூட பேச்சுப் போட்டிக்கு வருவானே ...காயிதே மில்லத் ல படிச்சானே..." நான் ம் கொட்டினேன் .தம்பி சிங்காரவேலு ,"உங்களுக்கு அமீரை தெரியுமா "என கேட்டார்."ஓ...நல்லா தெரியுமே...ரொம்ப நல்ல பையன்.நல்லா பேசுவான்.திறமைசாலி....நான் அண்ணா ன்னு தான் கூப்பிடுவேன்...பட் பார்த்து பதினைஞ்சு வருசம் ஆச்சு"ன்னு நான் சொல்லிகிட்டிருக்கும் போதே ,"இருங்க...இருங்க...அமீர் தான் லைன்ல வர்றார்.பேசிட்டு கூப்புடுறேன்"னு சொன்னவர்,கட் பண்றதுக்கு பதிலா ,தெரியாமல் கான்ஃபரன்ஸ் கால் போட்டுட்டார்....குரல் விம்மியது அவளுக்கு.

என்னிடம் கேட்ட மாதிரியே ,அவனிடமும் தனுஜாவை தெரியுமா ....என கேட்டார் சிங்காரவேலு சார்.அதற்கு அவன்....."தெரியுமே...அண்ணன் அண்ணன்னு உயிரை விடும்.ஆனா ஒரு பையனை லவ் பண்ண ச்சு ...அவன் ஒத்துக்கல ....ஒன் சைட் லவ்...அவங்க அப்பா பின்னி எடுத்துட்டார் அவளை.அந்த ஆள் ஒரு லூசு..."என அமீர் சொல்ல,மேற்கொண்டு எதையும் கேட்க முடியாமல் போனை கட் செய்து விட்டேன் ...அந்த மன வருத்தத்தில் தான் யாருடைய போனும் எடுக்கவில்லை என்றாள்.

அவள் சொன்னதை என்னாலேயே தாங்க முடியவில்லை. "இதென்னடி கொடுமை...எல்லோருமே வாழ்க்கையில் இரண்டு, மூன்று காதலை கடந்து தான் வர்றோம்.அதுவும் பதினைஞ்சு வருசத்துக்கு முந்தின கதையை நீ இப்போ கல்யாணம் ஆகி, கணவர், இரண்டு குழந்தை ன்னு இருக்கும்போது அந்த ராஸ்கல் ஒருத்தன்ட்ட சொல்றான்... நீ சும்மாவா விட்ட.அவன் கூடத்தான் காவேரி காலேஜ் பொண்ணு கூட பழகி,காலேஜ் லயே அவன் பேர் நாறுச்சு .சிங்காரவேலு சார் கிட்ட அந்த கதையை நீ சொல்ல வேண்டியது தானே...அவன் யோக்யதை என்னன்னு தெரிஞ்சிருக்கும் ல...உங்க அப்பாவை அந்த ஆள் ஒரு லூசுன்னு சொன்னவனுக்கு எவ்ளோ திமிர் இருக்கணும்.."என நான் ஆவேசமாகப் பேச,மௌனமாய் இருந்தவள் சிறிது இடைவெளி விட்டு சொன்னாள்..."நாளைக்கும் யாராவது அமீரைப் பத்தி என்கிட்ட கேட்டா,அவன் ரொம்ப நல்லவன்னு தான் நான் சொல்வேன்.அவனை நான் அண்ணா ன்னு கூப்பிட்டிருக்கேன்.அண்ணன் தங்கச்சி உறவுக்குன்னு ஒரு புனிதம் இருக்கு.நட்புக்கு ன்னு ஒரு புனிதம் இருக்கு.இரண்டுக்கும் துரோகம் பண்ண என்னால முடியாது " மிக தெளிவாக பேசினாள்.சரிடி ...இதே மாதிரி அவனும் தனுஜா என்னை அண்ணன் கூப்பிட்டா.ஒரு அண்ணனால தங்கச்சியைப் பத்தி தப்பா சொல்ல முடியாதுன்னு யோசிச்சிருக்கணும்ல...பாசமும், நட்பும் ஒரு வழிப் பாதையா இருந்தா அர்த்தமே இல்லை.."என்ற என்னை மேற்கொண்டு பேசாமல் இடைமறித்து, "மனிதர்களை அப்படியே குறையோடு ஏத்துக்கணும்.அவர்கள் மீதான மதிப்பீடு எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும்.நமக்கு ஃபிரண்டா இருக்கும் போதும் நல்லவிதமா சொல்றதும், சண்டை வந்தா,அவங்களை தப்பா சொல்றதும் கூடவே கூடாதுன்னு என் காதல் கணவர் சொல்லியிருக்கிறார்.அதை மீற முடியாது.." என்ற தனுஜாவின் அடியொற்றியே நடக்க விரும்புகிறேன் .

தன்னை ஒருவன் இகழ்கிறான் என்று தெரிந்தும் ,அவனைப் பற்றி எல்லோரிடமும் நல்லவிதமாக சொல்ல எப்படி முடிகிறது இவளால். இவளின் நன்மொழிகள் அமீர் காதிற்கு வரும் போது நிச்சயம் நாணித் தான் போவான் .பகைவர்களுக்கு அருள்வதை விடவும்  மிக சிறந்த பழி வாங்கல் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தான் வள்ளுவப் பேராசான் ,இன்னா செய்தவர்களை நன்னயம் செய்து ஒறுக்க சொன்னார் போலும்.

தனுஜாவிடம் பேசிய பின்,யார் யாரிடமெல்லாம் நான் சண்டை போட்டேன் என யோசித்தேன். பாஞ்சாலியின் புடவையென அந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.என் தோழி,என்னுடன் பணி புரிந்த பேராசிரியை என சிலரிடம் சமாதானம் செய்து கொண்டேன். அவர்களுக்கும் மகிழ்ச்சி.கொடுப்பதற்கும் பெறுவதற்கும் எவ்வளவோ இருக்கும் உலகில்,ஏன் தான் நாம் வன்மத்தை சுமந்து கொண்டு அலைகிறோமோ....???? 

தனுஜாவின் ஞானோபதேசத்தின் விளைவு, பல வருடங்கள் சண்டை போட்டு பேசாமல் இருந்த,சினேகனிடமும் பேச விரும்பினேன்.முகநூலில் படித்த ஒரு கவிதையை(கணேச குமாரனின் பக்கத்தில் படித்ததாக ஞாபகம்)குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.

அந்தக் கவிதை...
"உன் மீது
எந்தப் பிழையும் இல்லை..
எனக்கு குறிபார்த்த வில்லில்
அம்புக்கு பதிலாக
புறா இறகைப் பொருத்தியதைத் தவிர"...

சில நிமிடங்களில் பதில் வந்தது..
"உன் மீது எந்தப் பிழையும் இல்லை
பூக்களைக் கொடுக்கும் அவசரத்தில் 
முட்களையும் சேர்த்தே கொடுத்து விட்டாய்...
நான் சேகரித்து வைத்திருப்பது பூக்களைத்தான்...
முட்களை அல்ல..."

நம் மேல் முள் எறிபவர்களுக்கு பூக்களைத் தருகிற....நம்மை சபிப்பவர்களுக்கும் வரமளிக்கிற...நம்மை இகழ்பவர்களுக்கும்,இன்னா செய்வோருக்கும் நன்னயம் செய்கிற. நம்மைத் தூற்றுபவர்களையும் வாழ்த்துகிற மனம் நமக்கு வாய்க்குமெனில்,நம்மையன்றி வேறு யார் தெய்வம்...????? நான் தெய்வமாக முயற்சி செய்கிறேன்...

"பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே"

(விடை பெறுகிறேன்)

logo
Andhimazhai
www.andhimazhai.com