நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை
Published on

கடந்த மாதத்தில் ஒரு நாள்..

திருச்சி ஃபெமினா வணிக வளாகத்தில், பகலவனைப் பார்க்காத பத்மமெனக் கூம்பிய  கைகளில்,  நான் வளையல்களை  அளவு  சோதித்துக் கொண்டிருந்த போது தான் அந்தக் குரல் கேட்டது.

சுமதிஈஈஈஈஈ………

அனிச்சையாய் திரும்பியவள் ஆச்சர்யத்தில் கத்தினேன்.

கிறிஸ்டிஈஈஈஈஈ………………

கால வெள்ளத்தில் என்றோ நான் தொலைத்துவிட்ட அந்த மழைத்துளி, சிப்பியாக அன்று கரை ஒதுங்கி, என் கை சேர்ந்தது.

திருச்சியில் நான் படித்த புனித பிலோமினாள் பள்ளியும், கிறிஸ்டி படித்த புனித அன்னாள் பள்ளியும் அருகருகே இருந்ததால் மாலை நேரத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, அவளை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.  கிறிஸ்தவ பள்ளிகளில் செயல்பட்டு வந்த இளம் மாணவர்  இயக்க நிகழ்ச்சிகளில் ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன்.

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில், பி.எஸ்.சி சேர்ந்த போது கிறிஸ்டியும் அந்த வகுப்பில் இருந்தாள்.

வீட்டிலிருந்து நான் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்த நேரம் அது. வீட்டிலிருந்து உணவு எடுத்து வரும் சூழலோ,  கேன்டீனில் காப்பிடும் வசதியோ இல்லாத அந்நாட்களில், மதிய உணவு இடைவேளையில், மாணவிகள் சாப்பிடும் போது “கேண்டீன்ல போய் சாப்பிட்டுக்குறேன்” என்று சக மாணவிகளிடம் சொல்லி விட்டு, நூலகத்தில் அமர்ந்திருப்பேன்.

ஒரு வாரம் போயிருக்கும்.

வழக்கம் போல் “கேண்டீனில் சாப்பிட்டுக்குறேன்” என்றபடி வகுப்பிலிருந்து வெளியே வந்தேன்.

“ஹலோ… மேடம்...” என்று என்னைத் துரத்திக் கொண்டு வந்த குரல் கேட்டு திரும்பினேன்.

கிறிஸ்டி நின்றிருந்தாள்.

 மேடம் எங்க போறீங்க? கேண்டீனுக்கா…

ம் ………

நானும் பாக்குறேன். டெய்லி கேண்டீன் போற, ஆனா பர்ஸ் எடுக்காம போற, உங்க அப்பா தான் கேண்டீன் நடத்துறாரோ…..

நான் அசடு வழிந்தேன்.

உனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்திட்டு வந்திருக்கேன்.  உன் டேபிள்ல வச்சிருக்கேன்.  எடுத்துட்டுவா  என்றபடி வகுப்பிற்குள் நுழைந்து விட்டாள்.

அந்த டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு, வட்டமாக அமர்ந்திருந்த மாணவிகளோடு அமர்ந்தேன்.  டிபன் பாக்ஸைத் திறந்ததும், “ஏ… நீயும் லெமன்;  சாதமா,  நானும் லெமன் சாதம், சேம் பின்ச்” என்று சிரித்தாள்.  என் வறுமையையோ, எனக்கும்  சேர்த்து உணவு எடுத்து  வந்த  அவளின் பெருமையையோ வெளிக்காட்டாதவளை ஆச்சர்யத்தோடு பார்த்தேன்.

அதன்பின், பல ஆண்டுகள் நான் கவலை இருட்டில் மூழ்கிய போதெல்லாம், கிறிஸ்டி தான் கலங்கரை விளக்கமாக இருந்தாள். நான் அரளிவிதையைத் தேடிய போதெல்லாம் ஆறுதல் சொன்னாள்.  துன்பம் தூக்குக் கயிற்றைப் போல்,  என்னை இறுக்கிய போதெல்லாம்,  என் கால்களைத் தாங்கிப் பிடித்தாள்.

அவளுடைய அப்பா செருப்பு செய்கிற வேலை பார்த்தார்.  “என் செருப்பு ரொம்ப தேய்ஞ்சு போச்சுடி  ஏற்கனவே  அதுல ஏகப்பட்ட தையல் இருக்கு , அப்பா கிட்ட சொல்லி,  நாளைக்கு  ஒரு  செருப்பு  எடுத்துட்டுவர்றியா? பணத்தைக் கொஞ்சம், கொஞ்சமா தர்றேன் என்றேன்.  அடுத்த நாள்,  ஒரு புதிய செருப்பைக் கொண்டு வந்து கொடுத்தாள்.  ஐந்து ரூபாயாக, பத்து ரூபாயாக, அதற்கான பணத்தை நான் திருப்பிக் கொடுத்த போதெல்லாம், அவள் வாங்க மறுத்து விட்டாள்.  சுமதி செருப்புக்குப் பணம் கொடுத்துட்டா  என்று,  தன் உண்டியல் காசை,  அவள் அப்பாவிடம் கொடுத்தது  வெகுநாட்கள் எனக்குத் தெரியாது.

கவர்னர்  ஃபாத்திமா பீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எங்கள் கல்லூரி  விழாவில், நான் “ஸ்டார்  ஸ்பீக்கர்  ஆஃப் ஹோலிகிராஸ் காலேஜ்” என்று கௌரவிக்கப் பட்டேன்.  நிகழ்ச்சியின் போது,  வெறும் கழுத்தோட இருக்காதே  என்று,  தன் கழுத்திலிருந்த  ஒரு கிராம் கோல்டு கவரிங் செயினை என் கழுத்தில்  மாட்டியவள்,  எத்தனையோ முறை அதை வற்புறுத்தி நான் திருப்பிக் கொடுத்த போதும் வாங்க மறுத்து விட்டாள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில்,  நான் எம்.ஏ. தமிழ்  படித்த போது, கல்லூரிக் கட்டணம், தேர்வுக்கட்டணம்,  விடுதிக்கட்டணம் என எல்லாவற்றிக்கும் ஸ்பான்சர் கேட்டு அலைகிற என் போராட்டத்தை, கிறிஸ்டியிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

பல மாதங்கள் விடுதிக்குப் பணம் கட்டாததால், வார்டனால் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்ட தேர்வுக்கு முந்தைய முன்னிரவில், தன் வீட்டில் கதவுகளை எனக்காகத் திறந்து விட்டவள் அவள்.

கிறிஸ்டியை நான் மிகவும் நேசிக்க ஆரம்பித்த தருணம் ஒன்று உண்டு.

அவளுடைய அப்பா இறந்த செய்தி கேட்டு, அவள் வீட்டிற்குச் சென்றேன். “சொந்த ஊருக்குக் கொண்டு போயிரட்டாங்க” என்று பக்கத்து வீட்டில் சொன்னார்கள். அந்த ஊர், புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கிறது என்றும், திருச்சியிலிருந்து பதிமூன்று ரூபாய் கட்டணம் என்றும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

தண்ணீர்  குடித்து, தண்ணீர்  குடித்தே இரைப்பையை நிரப்ப முயன்று தோற்றுப் போன அந்நாட்களில், பதிமூன்று ரூபாய் + பதிமூன்று ரூபாய்  என்பது எனக்கு மிகப்பெரிய தொகை.  என் வகுப்பு மாணவி பௌலினிடம்  முப்பது ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு, கிறிஸ்டியின் சொந்த ஊருக்குச் சென்றேன்.

ஏறக்குறைய எங்களுடன் படித்த எல்லா மாணவிகளும் அங்கே இருந்தனர். கிறிஸ்டியோடு சேர்ந்து அவர்களும் அழுதார்கள். பொதுவாக, யாராவது அழுதால் எனக்கும் அழுகை வந்து விடும். ஆனால், ஏனோ அன்று அழுகை வரவில்லை. மருத்துவமனையில் கிறிஸ்டியின் அப்பா மரணத்தோடு நடத்திய போராட்டத்தை அருகிலிருந்து பார்த்தவள் என்பதாலோ, என்னவோ எனக்குக் கொஞ்சம் கூட அழுகை வலவில்லை. பறைகள் சத்தம் போட்டு விம்மிய போதும் நான் மௌனமாகவே இருந்தேன். ஒப்பாரிகளுக்கும் மனம் நெகிழாமல், தேசிய கீதத்திற்கு நிற்பது போல் ஆடாமல், அசையாமல் நின்றேன். அந்த ஊரிலிருந்து, மாலை ஐந்து மணிக்கு, திருச்சிக்கு கடைசி பேருந்து என்பதால், கிறிஸ்டியிடம் சொல்லி விட்டு, எல்லோரும் பேருந்து நிலையத்திற்கு வந்தோம். “ரொம்ப பசிக்குதுடி திருச்சிக்குப் போனதும் முதல்ல சாப்பிடணும்…  எந்த ஹோட்டலுக்குப் போகலாம்? என மாணவிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போது, நான் என் கையிலிருக்கும் பணத்தைப் பார்த்தேன். பேருந்திற்குப் போகமீதி இருக்கும் நான்கு ரூபாயில், ஒரு காபி கூட குடிக்க முடியாது என்பதால், அந்த மாணவிகளின் பேச்சில் கலந்து கொள்ளலாமல், ஒதுங்கி நின்றேன்.     சிறிது தூரத்தில் கிறிஸ்டி வருவது தெரிந்தது.

 “இங்க எதுக்குடி வந்த?” என்று கேட்ட மாணவிகளிடம் ,’’ உங்களை பஸ் ஏத்தி விட்டுட்டுப் போறேனே…” என்றாள்.

மாணவிகள் தங்களுக்குள் பேச்சைத் தொடர்ந்ததும் யாரும் அறியாமல் என் கைகளைப் பற்றி ஐம்பது ரூபாயைத் திணித்தவள், எப்படியும் கடன் வாங்கிட்டுத் தான் வந்திருப்பன்னு தெரியும். திருச்சிக்குப் போனதும்  அவங்க கூட ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு, அப்புறமா ஹாஸ்டலுக்குப் போ” என்றாள். அதுவரை ஒரு சொட்டு கண்ணீர்  கூட சிந்தாமல் நின்று கொண்டிருந்தவள், இப்போது  அவளை கட்டிக் கொண்டு, ஐயோ கிறிஸ்டி என்று கதறத் தொடங்கினேன்.

தன் அப்பா இறந்து கிடந்த நேரத்திலும், என் வயிறு பட்டினியாக இருக்கக் கூடாது என்று நினைத்த கிறிஸ்டியின் பேரன்பை, இன்று வரை என்னால் திருப்பித் தரமுடியவில்லை.

என் உணவில்லா வயிற்றுக்கு…  செருப்பு இல்லாத பாதங்களுக்கு ….. நகை இல்லாத கழுத்துக்கு… துடைக்க ஆளில்லாமல் நான் சிந்தித் தீர்த்த கண்ணீர்த் துளிகளுக்கு.. சாய்ந்து கொள்ள தோள் கிடைக்காமல் தோற்று அழுத என் விம்மல்களுக்கு… ஏதோ ஒரு வகையில் தன்னாலான உதவிகளைச் செய்த கிறிஸ்டி…

 எனக்கு என்றும்.. எப்போதும்… ஞாலத்தின் மாணப் பெரியவள்!

-அடுத்த புதன்கிழமை சந்திப்போம்

(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர்.)

logo
Andhimazhai
www.andhimazhai.com