மாயாஜாலத்திற்கு மக்கள் எவ்வளவு தூரம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம் ஒருவருடத்திற்கு மேல் தியேட்டர்களில் ஓடி வியக்க வைத்த ஜகன்மோகினி என்னும் திரைப்படம். அதை தயாரித்து இயக்கியவர் விட்டாலாச்சார்யா. 1978 இல் வெளிவந்தது. அதில் இப்போது ஜீ டீவியில் வரும் செம்பருத்தி தொடரில் விசுவாசமான கார் ஓட்டுனராக நடிக்கும் நரசிம்மராஜூ தான் கதாநாயகன். அதில் ஜெயமாலினி கொடுமைக்கார பிசாசாக பல்வேறு ரூபங்கள் எடுத்து கெடுப்பார். அதில் பெரிய ஆச்சரியம் குட்டிப் பிசாசு காமடியனை துரத்துவது, அடுப்பில் விறகு போல் காலைச் சொருகி அடுப்பு எரிய தேள் பூரான் போன்றவற்றை வறுப்பது, அதோடு பாம்பு, ஆடு பேசுவது, பாம்பு சாமி கும்பிடுவது என நம்ப முடியாத பல விஷயங்களை மக்களை ரசிக்க வைத்து வெற்றி பெற்றதில் விட்டாலாச்சார்யாவைப் போல் வேறு எவருமில்லை.
நான் பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரிக்கு காலடி எடுத்து வைத்த காலம் தமிழகம் ஆந்திரா இரண்டு மாநில மக்களும் ஜகன்மோகினிக்கு மயங்கி கிடந்தனர். மாட்டு வண்டி கட்டிக்கொண்டு ஊர்த் திருவிழாவிற்கு செல்வது போல் தியேட்டர்களுக்கு மக்கள் சாரை சாரையாக செல்வதை வாயடைத்து நான் நின்று பார்த்தேன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வேப்பமர உச்சியில் ஒண்ணு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க, வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்று சொல்லி மூடத்தன செய்திகளை விளையாட்டாகக் கூட நம்பி விடாதே ‘ என்று சின்னப்பயலே சின்னப் பயலே சேதி கேளடா வென பகுத்தறிவு ஊட்டி பாடல் எழுதிய காலத்தை உடைத்து விட்டாலாச்சார்யா கற்பனை உலகத்தில் அனைவரையும் சஞ்சரிக்க வைத்து வெற்றி கண்டு விட்டார். எப்படி இது சாத்தியமானது? இது பெரிய ஆச்சரியம்.
மாயாஜால மன்னன் விட்டாலாச்சார்யாவை நான் தாய் வார இதழில் பணியாற்றுகையில் சந்திக்கச் சென்றேன். இப்போதுள்ள அபிராமி தியேட்டருக்கு எதிரே ஒரு தெருவில் குடியிருந்தார். அனேகமாய் காலை ஒன்பது மணியிருக்கலாம். போய் வீட்டு காலிங் பெல்லை அழுத்த மிகச் சாதாரணமாக எதிரில்வந்து நின்றார். விட்டாலாச்சார்யா என்று இழுத்தேன். நானேதான் உள்ள வாங்க என்றழைத்து அமர வைத்துப் பேசினார்.
என்முதல் கேள்வி” ஏன் ஜனங்களை தேவையில்லாமல் பேய் பூதம்னு ஏமாத்தி படம் எடுக்கறீங்க? “ அவர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் மிக எளிதாக மாறி பதிலுரைத்தார் . ”என் முதல் படம் ராஜ்யலஷ்மி., இரண்டாவது படம் 54 இல் கன்யாதானம் இது ஒரு புரட்சிகரமான படம். ஆரம்பத்துல சமூகப் படங்கள் தான் எடுத்தேன். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தெலுங்கில் நான் தான் டைரக்ட் பண்ணேன். பிறகு ஜனரஞ்சக்கமாக மாயாஜால படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். பிரமாதமான வரவேற்பு. நீங்க ஒண்ண பாக்கணும் என் படங்கள்ல பயமுறுத்தல் இருக்காது நகைச்சுவை அதிகம் இருக்கும். பேய பார்த்து சிரிக்க வைச்சேன். தீயது அழியும்னு அழுத்தமா சொன்னேன். கடவுள் நம்பிக்கை எவருக்கும் கை கொடுக்கும் என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கேன். சினிமா பொழுது போக்குதானே “ என்று சரளமாக தமிழில் பேசினார் .
அவருக்கு நடிகர்கள் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் பிரச்சனையேயில்லை ஆட்டைப் பாம்பாக உருமாற்றி படமெடுத்து கதையாக்கி விடுவார். இந்த பார்முலாதான் பின்னாளில் இயக்குனர் ராம நாராயணன் அவர்களுக்கு பயன்பட்டிருக்கக் கூடும் .
மந்திர தந்திர மாயாஜால வித்தைகளை படமெடுத்து வெற்றி பெறுவதற்கு சற்றும் குறையாதது சரித்திரப் பின்னணியில் கதை எழுதி வெற்றி பெறுவது. நீண்ட காலம் பார்த்து பேசவேண்டும் என எண்ணிய எழுத்தாளர் சாண்டில்யன். அவரை ஒரு நாள் மாலை வேளையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடுவேனா கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குப் போனேன்.
வீரபராக்கிரம சாகசங்களை செய்கிற ராஜகுமாரன்கள், கச்சை கட்டி சொக்கும் அழகிய ராஜகுமாரிகள், குதிரைக் குளம்பின் ஓட்டம் போன்றவற்றை கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தும் அசகாய சூரர் சாண்டில்யன் நேரில் பார்க்க எந்த சம்பந்தமும் இல்லாத மனிதர்போல் தோற்றமளித்தார். குள்ளம். நெற்றி நடுவில் திருநாமம். பார்க்க பாந்தமாக இருந்தார். இவரிடமிருந்தா கடல்புறா, யவனராணி, சேரன் செல்வி, இந்திரகுமாரி, ஜலதீபம் போன்ற சரித்திரப் பின்னணி கொண்ட நாவல்கள் பிறந்து படிப்பவர்களை பரவசப்படுத்தின என்று ஆச்சரியமாக இருந்தது.
அவரிடம் எங்கே பிறந்தீர்கள் என்று கேட்டேன். திருக்கோவிலூர் என்றார். என்னது திருக்கோவிலூரா.. சார் வேட்டவலத்திலிருந்து சைக்கிள்ல போய் அங்கே டெண்ட் கொட்டாய்ல படம் பார்த்துட்டு வருவோம்… என்றேன். சிரித்தார். அப்போ எம்ஜிஆர் படம் அதிகம் பார்ப்பீங்களா என்று கேட்டார். ஆமாம் எப்படி சார் கரெக்டா சொல்றீங்க என வியந்து கேட்டேன். இதிலென்ன இருக்கு இந்த கால பசங்க ஒண்ணு எம்ஜிஆர் இல்லண்ணா சிவாஜி .அவ்ளோதானே. முதல் கேள்வியிலேயே சிக்கிக்கிட்டீங்கென சிரித்தார். நான் சந்தித்த வருடம் 1984.
அவரின் பிறந்த ஊருக்கு அருகில் வேட்டவலம். அங்கு ஜமீன் அரண்மனை ஒன்று உள்ளது. அதன் எதிரேதான் நான் படித்த அரசினர் உயர் பள்ளி. அவர் ஐயங்கார். நான் ஐயர் தெருவில் உள்ள அரசினர் விடுதியில் தங்கி படித்தேன்.
சோழ பாண்டிய அரசு பின்னணியில் எழுதப்பட்ட நாவல்கள் சாண்டில்யன் மனதில் ஏன் தோன்றியது என்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் ? அவரிடம் பேசுகையில் எனக்கு வந்த கோபத்தைக் கேள்வியாகக் கேட்டேன். ஜெயகாந்தனைப் போல் நிதர்சனமாக விளிம்பு நிலை மக்களைப் பற்றி ஏன் எழுதவில்லை.
சரித்திரப் புனைவு காலத்தை வீண்டிக்கிற வேலைதானே என கேட்டேன். அவரோ, “ ஆரம்ப கால சிறுகதைகள்லாம் சமூக கதைகள்தான் எழுதினேன் . வாசகர்கள் மத்தியில் எடுபடலை. வேற என்ன பண்றது ரூட்டு மாத்தி குதிரையில ஏறினேன். ராஜகம்பீரமா போய்கிட்டிருக்கு. எது ப்ராப்தமோ அதான் நடக்கும்,” என்றார் மென்மையாக.
உங்கள் கதைகளில் ரொமேன்ஸ் அதிகம். அதைவிட வர்ணனைகள் கற்பனையை அதிகம் ஆக்ரமிக்கிறதே என்று கேட்டேன். ”அது ஒரு ரசனை தானே அது இல்லாமல் எப்படி இருக்க முடியும்? சரித்திர கம்பீரத்திற்கு ஈடு கொடுக்கணும்ல.. என்று இயல்பாக தன் எழுத்தை நியாயப்படுத்தினார்.
இதே போன்று வேறொரு அனுபவம் அதுவும் எண்பதுகளில்தான் நிகழ்ந்தது. சைதாப்பேட்டை காந்தி லைப்ரரி நடத்திக்கொண்டிருந்த பெரியவர் மூலம் காந்தி ஜெயந்தி விழா சாலையில் மேடைபோட்டு நடந்தது. அதில் கோவி மணிசேகரன், அனுராதாரமணன், சைதை துரைசாமி உடன் நானும் பங்கேற்று விழாவில் பேசினேன். பேசும்போது கற்பனையில் சரித்திரம் கதை எழுதுபவர்களால் நாட்டுக்கு என்ன நன்மை? என்று ஆவேசமாக பேசி கைதட்டல் பெற்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் கோவி மணிசேகரன் வீட்டுக்கு வா என்றழைத்தார் .
”நீ என்னை என்ன நினைச்சுட்டே. சும்மா வெறும் வரலாற்றுப் பின்னணியில் கதை விடலை. ஆதார சுருதியோட நம்முடைய கலாச்சாரம் பண்பாடு மேலோங்கற வேலை பாக்கறேன். 50 சரித்திர நாவலை தொடப் போறேன். சமூக நாவல் முப்பது சிறுகதை தொகுதி இருபத்தைந்து க்கும் மேல.நாடகம் நிறைய. அண்ணாமலை யூனிவர்சிட்டி யில் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணவன். படிக்காத முட்டாள் இல்ல. என்னை இந்த தமிழ் சமூகம் சரியா புரிஞ்சிக்கலை….” என்று விளக்கம் தந்தார்.
அதன்பின் 1990 இல் குற்றாலக் குறிஞ்சி நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதும் , ஆதித்தனார் விருதும் அவர் பெற்றது மகிழத்தக்கது.
பன்முகத் தன்மை கொண்ட கோவி அவர்கள் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் மூன்று ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் என்பது ஆச்சரியம். இவர் தனியாக தென்னங்கீற்று, யாக சாலை என்ற படங்களை இயக்கியும் உள்ளார்.