நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 22

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 22

Published on

முற்றும் எனத் தலைப்பிட்டு பின்னோக்கிச் செல்வது போன்ற காலச்சூழல் தான் இப்போது நான் நினைவு கொள்வது. இருந்த போதும் மறைந்த போதும் தனித்த குரலும் தமிழ் ஆளுமையும் தன்னிகரற்ற சமூகச்சிந்தனையுடைய தலைமைப்பண்பாக மதித்துப் போற்றப்பட்டவர். அவர்தான் கலைஞர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த நாளன்று மெரினா கடற்கரை அருகே சென்று நல்லடக்கம் செய்யும் தருணத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேரலையில் அவரைப்பற்றி நினைவுகளை ஆற்றலை பகிர்ந்து கொண்டேன். அந்த வாய்ப்பை அளித்த போது பழ கருப்பையா எஸ் பி முத்துராமன் இருவரும் உடன் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது கலைஞரைப் பற்றி நான் எழுதி வாசித்த கவி வரிகள்

‘ஒரு சமூகத்தை

மொழியால்

உயர்த்திக் காண்பித்த

ஒரு பேனா

இன்று

தன்னையே

எழுத்தாக்கிக் கொண்டது.

 தீண்டத்தகாதது ஏதுமில்லை

தாண்டுங்கள் என

கைநீட்டியது.

பெண்மைக்கு உயர்வு

இருண்மைக்கு

தளர்வு தந்தது.

அப்பேனாவுக்கு

கலைஞர் என்று பெயர்.

சில சமயம்

கலைஞருடன் உரையாடிய

நெகிழ்வு எனக்கு.

பகுத்தறிவு

பண்பு

மொழி

நாடு

அத்தனையும்

அழகாய் ஆண்ட

உயர்மனம் கலைஞர்.

மறையவில்லை

சாதித்து அமைதியான

அணுத்துகள்

அஞ்சலி

புகழோடு.

இது பிறகு திருவண்ணாமலை ந. சண்முகம் வெளியிட்ட நூலில் பிரசுரமானது. இது இப்படி இருக்கட்டும். கண்ணதாசன் கவிதைகள் ஈர்த்தது போலவே கலைஞரின் கவிதைகளும் என்னை வெகுவாக பள்ளி வயதில் ஈர்த்தது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் மரபுக்கவிதைகளில் வாசிக்கும் போது கிடைக்காத நேரடி பொருள் இந்த கவிஞர்கள் இடத்தில் கிடைத்தது.

கவிதை என்பது வாசிக்கும் எளிய மனிதருக்கும் சென்றடைய வேண்டியதுதானே? அந்த நோக்கத்தை கலைஞரின் கவிதைகள் சரிவரச் செய்தன. பள்ளிப் பருவத்தில் நான் அதிகம் கவிதை எழுதத் தூண்டுகோலாக இருந்தவர்களில் கலைஞரும் மிக முக்கியமானவர். அப்படி காரணமான என்னை காலம் கல்லூரிக் கால கட்டத்தில் கலைஞரிடமே விருது வாங்க வைத்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது நடந்தது.

வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில், தமிழக அளவில் நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் நான் முதல் பரிசு பெற அதை கலைஞர் அவர்கள் கரங்களால் நான் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. கவிதையில் நுட்பமான அங்கதம் இருப்பதை கலைஞர் சுட்டிக்காட்டியது இன்றுவரை இடம் சுட்டி பொருள் விளக்குக என்பது போல் மனனம் ஆகி விட்டது.

அப்போது நான் மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அன்றிலிருந்து அரசியல் தவிர்த்த எந்த இலக்கிய நிகழ்வில் கலைஞர் பேசினாலும் நான் ஆஜர் ஆகி விடுவேன். பிறகு சிலசமயம் தாய் வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த போது பாவை சந்திரன் அழைக்க நான் குங்குமம் அலுவலகம் சென்றதுண்டு. அப்போது கலைஞர் முரசொலிக்கு வர சந்தித்ததுண்டு.

அதன்பின் மே மாதம் 1996-இல் கலைஞர் முதலமைச்சராக தேர்தலில் வெற்றி பெறுகிறார். தேர்தல் முடிவு வந்ததும் நாசர், ரகுவரன், கிரி, இளையபாரதி உடன் நானும் கலைஞருக்கு வாழ்த்து சொல்ல கோபாலபுரம் வீட்டிற்கு செல்கிறோம். உயர் பதவியில் உள்ள ஐஏஎஸ் , ஐபிஎஸ் , முக்கிய அரசியல் பிரமுகர்கள் எல்லாம் பூங்கொத்து பத்தகங்களோடு காத்திருக்க எங்களை காத்திருக்க வைக்காமல் உடனே மாடியில் உள்ள கலைஞரிடம் சந்திப்பு நடந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் முதல்வரானார் தருணம். பரவசமும் பதட்டமும் வாழ்த்த வந்தவர்களுக்கும் தொற்றிக் கொண்டது. முகமனுடன் வாழ்த்திய பிறகு கலைஞரிடம் கேட்க வேண்டியதை கேட்க நா பரபரத்தது. நாசர் அப்பா என்று பேசிக்கொண்டிருந்தார். ரகுவரன் உடல்நலம் காக்க கலைஞர் அறிவுறுத்தினார். என்முறை வந்தது.

பட்டென மனதில் இருந்ததை கேட்டு விட்டேன். தமிழ் தமிழ் என பேசுகிறோம் ஆனால் பாண்டிச்சேரியில் வணிக வளாகம் உட்பட தூயதமிழில் விளம்பர பலகை வைக்கின்றனர். குளம்பி., உணவகம் என எதையும் தமிழ்படுத்தி வைக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே என்று துடுக்குத்தனமாக கேட்டு விட்டேன். நாசருக்கு அதிர்ச்சி. ரகுவரன் சைகையால் நீ கொஞ்சம் பேசாமல்இரு என்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் பதவி ஏற்கவில்லை வாழ்த்த வந்ததை விட்டு விட்டு இது என்ன கேள்வி என்கிற உணர்வு சுற்றியுள்ள எல்லோர் மனதிலும் தோன்றி கலவரப்படுத்தியது.

நான் சுதாரித்து ‘உங்கள் தமிழ் உள்ளம் நான்றிவேன் அதனால் கேட்டேன். என்றேன். கலைஞருக்குப் புரிந்து விட்டது. நீ கவிஞர் தானே என்றார். தலையசைத்தேன். இப்ப என்ன பண்றீங்க என்றார். ஒரு படத்தை இயக்குகிறேன் என்றேன் பேர் என்ன என்றார். மிஸ்டர் தேவராஜ் என்றேன். சிரித்து விட்டார். நீ முதலில் தமிழில் தமிழில் பேர் வைத்திருக்கிறாயா என்று கேட்பது போலிருந்தது . உடனே என்னை சமாதானப் படுத்தும் விதமாக பேசினார் .

நீ சொல்வது சரிதான் . நம் கழகத் தொண்டர்களே அண்ணா சாலையில் உள்ள அறிவாலயத்தை மௌண்ட் ரோடு கட்சி ஆபீஸ் என்று தான் சொல்கிறார்கள். எல்லாம் போகப் போக சரியாகி விடும் தமிழ் படுத்துவது நடந்தேறும்.  என்றார். கலைஞர் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் இவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பார்களா என்பது ஐயம்.

கலைஞர் சந்திப்புக்குப்பின் மிஸ்டரை படத் தலைப்பிலிருந்து நீக்கி விட்டேன். தேவராஜ் ஆனது. கடைசியில் படம் முடிவடைந்து தயாரிப்பாளர் அசிரத்தையால் வெளிவராமல் போனது .

நாயகன் நான்கு தேசியவிருதுகள் வாங்கியதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் கலைஞர்களுக்கு பாராட்டு விழா ஒன்று நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டார். நான் அப்போது அபூர்வசகோதரர்கள் படத்தில் உதவி இயக்குனராகப் பணி செய்ததுடன் மய்யம் பத்திரிகைப் பணியும் பார்த்துக் கொண்டுள்ளேன். விழாப் பணிகளில் என்னையும் கமல் சார் ஈடுபடுத்தினார். அவ்விழாவில் குமரி அனந்தன் , ஜானகி எம்ஜிஆர் , சிவாஜி கணேசன். கலைஞர் கலந்து கொண்டு வாழ்த்தினர் .

இது அல்ல செய்தி. கலைஞரை முறைப்படி விழாவுக்கு அழைக்க நானும் அப்போது கமல் ரசிகர் மன்றம் அகில இந்திய பொறுப்பு வகித்த ஜி .நாகராஜன் அவர்களும் சென்றோம். அண்ணா அறிவாலயத்தில் ஆற்காடு வீராசாமி அவர்களுடன் கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். அழைத்தோம். அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஆற்காட்டார் எப்படி நடத்துவீங்க நாங்களும் உதவறோம் ‘என்று சொன்னதும் சார் அதை நாங்க பாத்துக்கறோம் நீங்க கவலைப்படாதீங்க என்றதும், தம்பி இது தலைவர் கலந்துக்கற விழா நீங்க அனுபவம் இல்லாத சின்ன பசங்க எனச்சொல்ல கலைஞர் விடுங்க அதெல்லாம் பாத்துக்குவாங்க என்றார் சிரித்துக்கொண்டே எங்களை பார்த்துக் கொண்டே..

விழாவை ஸ்கெச் போட்டு மேடை அமைப்பு கார் நிற்குமிடம் அமர்வதற்காக பகுதிகள், குடிநீர் தீயணைப்பு பாதுகாப்பு, போக்குவரத்து அணுகுமுறை, வரவேற்பு என திட்டுமிட்டு நடத்தியதைப் பார்த்து கலைஞர் அழைத்துப் பாராட்டியது பசுமையான நினைவு.

வள்ளுவர்கோட்டத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றிய அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெள்ளி விழா நடைபெற்றது அதில் கமல் அப்பு வேடத்திலேயே வந்து  கலைஞரிடம் விருது வாங்கினார் .

எனக்குத் தரும்போது டெக்னீஷியன்களுக்கு நடிகர் ராஜ்குமார் வழங்கினார். பிறகு தேவர்மகன் வெள்ளி விழா மீண்டும் கலைஞர் வருகை அதில் கமலே வழங்கி விட்டார். அந்த விழாவில் கலைஞர் தேவர்மகன் கதை திரைக்கதை மிகச்சிறப்பானது என்று கமலைப் பாராட்டினார்.

கமல் மேடையேறிப் பேசும் போது கலைஞர் பாராட்டியது எனக்கு பெருமகிழ்ச்சி. அதில் பெரும்பங்கு ராசி அழகப்பனுக்கும் உரியது என்று பாராட்ட ஓரத்தில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து கலைஞர் புன்முறுவல் பூத்தது இன்றளவில் மறக்க இயலாதது. இந்த நிகழ்வின் சாரம் தினமணிகதிர் பின் அட்டையில் பிரசுரமாக நிலை கொள்ளாத மகிழ்வு.

உன்னத தலைமைகளுடன் உடனிருப்பது ஒரு வரம்தான். காலம் மாற மாற அதே கலைஞர் மீண்டும் முதல்வராகிறார். 2009-இல் அதே மெரினா கடற்கரை அருகில் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறந்த படங்களுக்கான விருது அளிக்கப்படுகிறது. மேடையில் ரஜினியும் கமலும் அருகருகே அமர்ந்த படி உள்ளனர். வண்ணத்துப்பூச்சி சிறுவர்களுக்கான படம். அஞ்சலிக்குப் பிறகு மிகநீண்ட இடைவெளி.

சிறந்த குழந்தை நட்சத்திரமாக அதில் முதன்முறையாக நடித்த ஶ்ரீலட்சுமி விருது பெற்றார் . மீண்டும் வண்ணத்துப்பூச்சி சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான திரைப்படம் விருதுக்காக நான் பெற மேடை ஏறினேன். கலைஞர் புன்னகைத்த படியே விருது தருகிறார். அவர் அமர்ந்தபடி விருதுதர நான் அவர் கையைப் பற்றிக் கொண்டு இருக்கிறேன். பின்னால் அமைச்சர் பரிதி இளம் வழுதி போதும் விடுங்க என்கிறார்.

நான் கலைஞரைப் பார்த்து விடாமல் பூபோல் நயமாக உள்ளது கொஞ்ச நேரம் இப்படி இருக்கிறேனே என்கிறேன் . கலைஞர் சிரித்த படி அதற்கென்ன என்கிறார். பரிதி மீண்டும் எச்சரிக்க வணங்கி விருது பெற்று திரும்புகிறேன்.

தூர இருக்கும்போது விமர்சிக்கும் மனம் இப்படி ஒரு தருணம் தலைமைப்பண்புள்ளவரிடம் ரசிக நிலைக்கு மாறுவது என்னவோ விடை தெரியாத புதிராகவே உள்ளது.

பலசமயம் அப்துல் ரகுமான்,  கவிதாயினி நிர்மலா சுரேஷ்,  வாலி கலந்து கொண்ட பல இலக்கிய நிகழ்வுகளில் கலைஞரைச் சந்திப்பது வழக்கம். ஒரு முறை டாக்டர் ஜகத்ரட்சகன் எம்பி அவர்களுடன் சென்று கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுண்டு.

கலைஞரின் பேச்சுக்கு உருகாதார் யார்?

குறளோவியம் பொன்னர் சங்கர் நெஞ்சுக்கு நீதி தென்பாண்டிச் சிங்கம் போன்ற படைப்புகளைப் புரட்டும் போது விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபட்ட சமூக நீதித்தலைவர் கலைஞர் சந்திப்புகள் தானாக மனதில் கூடு கட்டும்.

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com