சில நாட்களுக்கு முன்பு சென்னை பிரசாத் லேப்பில் வாழ்க விவசாயி என்ற ஒரு படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன் இயக்குனர் மோகன் தான் நேசிக்கும் பொன்னி நதியின் பெயரை தனக்கு முன்பாக வைத்து க் கொண்ட கலைஞன்.
தமயந்தி யுகபாரதி யின் பாடல்களுக்கு சிறப்பாக இசை அமைத்திருந்தார் ஜெய்கிருஷ்.
அப்போது உடனே எனக்கு நினைவிற்கு வந்தது 1967 இல் வெளியான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்து வெளிவந்த விவசாயி படம் தான். நான் எங்கள் கிராமத்தின் அருகே உள்ள கீழ்பென்னாத்தூர் வாசன் திரை அரங்கில் 72 வாக்கில் அப்படத்தைப் பார்த்திருக்கிறேன் .
'நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்' என்ற பாடல் இன்னும் நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது .
அந்த பாடல் வரிகள் வாழ்வின் எதார்த்தத்தை மட்டுமல்ல இன்றும் தேவைப்படுகிற வரிகளாக அமைந்துவிட்டன.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இன்று கூட நீங்கள் பார்க்கலாம் இடதுபுறமாக ஒரு சிலை இருக்கும் . அம்பேத்கர் சிலை .
அம்பேத்கர் சிலை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள் அதன் அருகாமையிலேயே மிகப்பெரிய ஒரு வரலாற்றுக் குறிப்புகள் இருக்கிறது .
அம்பேத்கர் சிலை எதிரே நா காமராசன் இருந்தார்.அதற்கு பின் புறமாக கவிஞர் சுரதா அவர்கள் இருந்தார்கள்.
பின்புறம் முல்லைச்சரம் ஆசிரியர் பொன்னடியான். அவர் பாரதிதாசன் கூடவே இருந்து பணியாற்றியவர் .
அவருடைய இடம் இருக்கும் அருகே ஜெயகாந்தன் வீடு . சிலைக்கு வலது புறம் எழுத்தாளர் இந்திரன் வீடு, இடது புறம் கவிஞர் சாமி பழனியப்பன் வீடு அதாவது அவரின் தமிழ் வாரிசு பழநிபாரதி வீடு. அதற்கு எதிர்புறமாக பார்த்தால் கவிஞர் வைரமுத்து வீடு. இப்படியாக சுற்றியும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் நிறைந்த இடம்தான் அந்த அம்பேத்கர் சிலை. அதுவல்ல முக்கியம் நான் சொல்லவந்தது அம்பேத்கர் சிலையை இன்றும் பார்க்கிறபோது டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அருகே இருக்கிற மாநகராட்சி கூடத்தில் ஒரு சாதாரண கணக்காளர் திருமணத்தை முன்னின்று நடத்தினார் என்கிற அந்த நிகழ்ச்சி தான் நினைவிற்கு வருகிறது அந்த நிகழ்ச்சி மிகச் சாதாரணமானது தான் என்றாலும் கூட
எம்.ஜி ஆரை சந்தித்துப் பேசுவது என்பது மிகவும் அரிதான சமயத்தில் அந்த நிகழ்வு நடந்தது.
எப்படி அது நிகழ்ந்தது என்றால் நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் நடத்திய அண்ணா, தாய் வார இதழ் அலுவலகம் வந்து விடுவார். அங்கு வந்து எல்லோருக்கும் கை கொடுத்து சன்மானம் கொடுப்பது வழக்கமாக இருந்தது.
அப்படி நாங்கள் வரிசையில் நின்று வாங்கிய போது நான் அவரின் கையைத் தொட்டு மலர் போன்று இருக்கிறது என்று ரசிக்க, அவர் சிரித்த நெகிழ்ச்சியான அனுபவம் இப்போதும் நெஞ்சில் .
அப்படி நாங்கள் வரிசையாக நின்று வாழ்த்துப் பெறும் சமயம் அலுவலகத்தில் கணக்காளராக இருக்கிற ராஜேந்திரன் என்பவர் எனக்கு திருமணம் என்று தான் வாயை எடுத்தார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எம்ஜிஆர் முடித்தார்.
அப்போது பெண் கூட அவர் பார்க்கவில்லை. வீட்டுக்கும் தெரியாது. ஆனால் உடனே அதற்கு பொறுப்பாக இரண்டு மூன்று அமைச்சர்களையும் ஆசிரியர் வலம்புரிஜான் அவர்களையும் திருமணத்தை பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார் .
வேறு வழியில்லாமல் ராஜேந்திரன் வீட்டிற்கு அமைச்சர்கள் சென்று துரிதமாக ஒரு பெண் பார்த்து நாளையும் குறித்து திருமணம் அந்த கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மாநகராட்சி கூடத்தில் மிகப் பிரமாதமாக நடந்தேறியது .
இரண்டு மணி நேரத்திற்கு மேல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் திருமதி ஜானகி அம்மையார் அவர்களும் அமர்ந்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள். எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய ஆச்சரியம். இவ்வளவு நேரம் இருந்து அவர் வாழ்த்தி திருமணத்தை நடத்தியது என்பது ஆச்சரியமாக இருந்தது .
அதோடு மட்டுமல்ல அவர் பெண்ணுக்கு தங்கசங்கிலியும் போட்டார். கூடவே ராஜேந்திரன் அவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வும் தந்து ஊதியமும் அதிகரித்து மேற்கொண்டு என்ன படித்தாலும் நான் செலவு செய்கிறேன் என்று சொல்லி வாக்களித்தார். இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ராஜேந்திரன் பணியாற்றுகிறார்.
எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது அவர் முதல்வராக இருந்த சமயம். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்படி நடத்துகிறபோது ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி அவர்கள் பாராட்டு விழா நடத்தினார். அந்த கவியரங்கத்தில் நானும் கலந்துகொண்டேன் .
வலம்புரிஜான் அவர்கள்தான் பரிந்துரைத்தார்கள். கவியரங்கத் தலைமை புலமைப் பித்தன் அவர்கள்.
அதிகாலை ரயில் முதல் வகுப்பு பெட்டியில் இருந்து இறங்கியதும் அமைச்சர் முத்துசாமி பொன்னாடை போர்த்தி அருமையான ஒரு இடத்தில் தங்க வைத்து விழாவை மிக சிறப்பாக நடத்தினார். அந்த விழா இன்னும் எனது நினைவிற்கு வருகிறது .
தமிழகத்திற்கு முதலமைச்சர்; எனக்கோ முதலாளி. எனவே மகிழ்ச்சியோடு அந்த கவியரங்கத்தில் கலந்துகொண்டு நான் தமிழ் சொற்களால் புகழ் மாலை சூட்டி மகிழ்ந்தேன்.
அந்த வரிகள் இன்னும் நினைவிருக்கிறது
‘வெண் தாடி வேந்தன்
சிந்தனை வேட்டு வைத்த
ஈரோட்டில்
இன்று நாங்கள்
ஒரு பூச்செண்டு வைக்கிறோம்
கொடுத்தே சிவந்த
வள்ளல் கரங்களுக்கு
நாம்
என்ன செய்ய இயலும் ?
நன்றி காட்டுவதைத் தவிர!
இது
பூக்களுக்கு
வகுப்பு எடுக்கிற விழா அன்று!
ஒரு மனிதப் பூ
மண்ணில்
மலர்ந்ததற்கான
மகரந்த உச்சரிப்பு!
பள்ளி
சோற்றுக்கு
உத்தரவாதம் அளிக்காத போது
சிலேட் டை நிரப்புவதை விட
பிளேட்டை நிரப்புவதுதான்
சிறந்த படிப்பு !
மக்கள் திலகம்
பாமரர்கள் இட்ட
நெற்றிப்பொட்டு !
அது
டாக்டர் என்ற
பட்டத்தை விடவும்
உயர்ந்த வெற்றிப் பொட்டு!
தேசம்
இவரைப் பசிக்க
வைத்துப் பார்த்தது
இவரோ
தேசத்தைப்
புசிக்க வைத்து பார்த்தார்
அவர்
வெண்திரையில்
வெளிப் பட்டதை
நடிப்பு என்றார்கள் !
வரப்புகளைத் தாண்டி
வயற் காட்டிற்கு
இவரைத் தவிர
எந்தப் படிப்பு
எட்டிப்பார்த்தது !
மக்கள் திலகம்
தலைவனாய் இருக்கிற
முதல் தொண்டன் !
தொண்டு
அவரது இரத்தத்தின்
சுருக்கெழுத்து
குண்டுகளை
ஏந்தியும்
தொண்டு செய்கிற
மந்திரச்சொல் அவர் !
கல்லுக்கு
பால் வார்ப்பது இருக்கட்டும்
பிள்ளைக்கு பசிக்கிறது
என்கிற கவனம் முதலில்
திரும்பட்டும் !
கூர்ந்து பாருங்கள்
சத்தமில்லாமல்
ஒரு மேகம்
இதயத்தில்பொழிகிறது
அதைத்தான்
இந்த ஊர்
இதய தெய்வம் என்கிறது ‘
என்ற வரிகளை பார்த்து புலமைப்பித்தன் மிகவும் பாராட்டினார். எனக்கு வயது 22 இருக்கும் என நினைக்கிறேன்.
எனது தந்தையார் கைத்தறி நெசவு செய்பவர். என்னை எட்டாவது வரை படிக்கக வைக்கக்கூடாது என்று முதலாளி என் தந்தையை நிர்ப்பந்தம் செய்து கொண்டிருந்தார் . காரணம் வேலை செய்ய ஒரு ஆள் கூட கிடைக்கும் என்ற நோக்கம்தான்.
ஆறாவது வகுப்பில் நான் படிக்க பணம் இல்லாமல் தவித்த போது தானப்பன் ஆசிரியர் எனக்கு ஒரு யோசனை சொன்னார். பேசாமல் எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் போடு பணம் கிடைக்கும் என்றார் .
மாலை நேரத்தில் வாசன் தியேட்டரில் டிக்கெட் கொடுத்தும் வேலையும் அவர் பார்ப்பார். அவருக்கும் எனக்கும் சினிமா அதிகம் பார்க்கிற பழக்கம் அங்கே தான் ஏற்பட்டது. அதிகமாக எம்ஜிஆர் படங்களையும் அங்கே தான் பார்த்தேன்.
உடனே தபால் கார்டு வாங்கி பெறுபவர் என்ற இடத்தில் எம்ஜிஆர் சத்யா ஸ்டூடியோ மெட்ராஸ் என்று மட்டும் எழுதி எனக்கு படிப்பதற்கு பணம் வேண்டும் என்று எழுதி அனுப்பினேன் .
ஆனால் அடுத்த ஒரு வாரத்திலேயே எனக்கு பதினைந்து ரூபாய் மணியார்டர் வந்து சேர்ந்தது .அதை எம்ஜிஆர்தான் அனுப்பினாரா என்று எனக்கு தெரியாது அவர் அருகில் இருப்பவர் கூட அதை பார்த்து அனுப்பி இருக்கலாம் ஆனால் எம்ஜிஆரின் பெயரால் வந்ததிலிருந்து அவர் மேல் எனக்கு தீராத பற்று.
ஒருமுறை தேர்தல் பிரசாரத்திற்காக திருவண்ணாமலைக்கு எம்ஜிஆர் அவர்கள் வருவதாக இருந்தது . என் அப்பாவிடம் நான் அடம்பிடித்து செல்லவேண்டும் என்று சென்று காத்திருந்தேன். 13 மணி நேரம் கழித்து அவர் வந்தார். ஆனால் மூட்டை முடிச்சுகளோடு சாப்பாட்டை கட்டி கொண்டு வந்து அமர்ந்திருந்த பெருங்கூட்டம் அவர் முகத்தைப் பார்த்ததும் திருப்தி அடைந்தது. எனக்கும் அவ்வாறே மனதில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தது.
மாநிலக்கல்லூரியில் சென்னைக்கு வந்து படித்து விட்டு ஊர் திரும்ப முடியாத சூழலில் எனக்கு தாய் வார இதழில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வலம்புரிஜான் அவர்கள் அந்த வாய்ப்பைத் தந்தார். எனக்கு முதலாளி எம்ஜிஆர் என்பது இன்னும் இனிப்பான ஒரு செய்தியாக மாறிவிட்டது.
வாரத்தில் வியாழக்கிழமை ஆனால் தாய் வார இதழை படித்துவிட்டு அதில் பிழை இருந்தால் சொல்லியும் நன்றாக எழுதி இருந்தால் பாராட்டியும் தொலைபேசி செய்து பாராட்டும் பழக்கம் எம்ஜிஆருக்கு இருந்தது .
1984 அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன் அவருக்கு கிட்னி வேலை செய்யாததன் விளைவாக அவர் அமெரிக்காவிற்கு பறந்து சென்றார். அங்கு மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்தார். மிகவும் உடல்நிலை சோர்வாக இருந்த நேரம். தமிழகமே சோர்ந்து இருந்தது. அப்பொழுது ஒரு தேர்தல் வந்தது.
எம்ஜிஆர் பற்றிய தவறான செய்தி அரசியலில் ஒரு கலவரமான செய்தியாக பரப்பப்பட்ட து.
அதைக்கண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கலங்கியது .
அதற்கு பரிகாரமாக ஆர்.எம்.வீ அவர்கள் ஒரு காரியம் செய்தார்கள் .
எம்ஜிஆரை சாப்பிடுவது போலவும், மனைவியோடு பேசுவது போலவும், உணவு உண்பது போலவும் உண்மைக் காட்சியை பாக்யராஜ் அவர்கள் மூலம் படம் எடுத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள் .
அந்த படக் காட்சிக்கு ஏற்றவாறு வலம்புரிஜான் எம்பி அவர்கள் ஒருநாள் நள்ளிரவு 7 சேனல் ஸ்டுடியோவில் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதி டப்பிங் செய்யப்பட்டு ஓரிரு நாளில் தமிழகமெங்கும் உள்ள கிராமங்களில் அந்த குறுந்தகடு காண்பிக்கப்பட்டது .
அந்த தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் வெற்றியும் பெற்றார் .
எம்ஜிஆர் பிறந்த நாள் ஒன்றில் எனக்கு திருமண நிகழ்வு. திருமணத்திற்கு வலம்புரி ஜான், முத்துலிங்கம், மு மேத்தா, நா காமராசன் போன்ற மிகப் பெரும் கவிஞர்கள் வந்து கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் அமெரிக்காவில் இருந்தபோது முசிறிப்புத்தன் கலைவாணர் அரங்கத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும். அப்போது தான் நம்முடைய ரசிகர்கள் கொஞ்சம் தெம்பாக இருப்பார்கள் என்று திடீரென்று ஒரு நிகழ்வை கலைவாணர் அரங்கத்தில் வைத்துவிட்டார்கள் . அதற்கு எல்லாக் கவிஞர்களும் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது .
சீர்திருத்த திருமணம். வசந்த நினைவுகள் என்ற என் கவிதை நூலை வெளியிட்டு பெரியார்தாசன் அவர்கள் மங்கலநாண் எடுத்துக் கொடுத்து திருமணம் முடிந்துவிட்டது. பின் ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்து கொண்டு முடித்துக்கொண்டோம். மிகச் சாதாரணமாக எளிமையாக நடந்தது அந்த எம்ஜிஆர் பிறந்த நாளில் என் திருமணம் என்பது என்னவோ ஒரு விதத்தில் எம்ஜிஆர் உடன் பின்னிப் பிணைந்திருந்தது
1985 பிப்ரவரி 4. கிண்டி ரவுண்டானாவில் எம்ஜிஆர் சென்னைக்கு வருகிறார். நலமாக வருகிறார். நடப்பாரா கை தூக்கி சைகை செய்வாரா என்று எதிர் பார்த்துக் கொண்டு நேரத்தில் ஏகோபித்த கூட்டத்தின் எதிரே வந்து சடசடவென்று மேடையில் ஏறி கையை எடுத்து அசைத்து காண்பித்து புன்னகையில் எல்லோர் மனதிலும் பால் வார்த்தார் .
சில ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திடீரென மறைந்தார் என்ற செய்தி கேட்டு நாடே அதிர்ந்தது .
எல்லா கிராமங்களில் இருந்தும் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தும் மக்கள் அழுது கொண்டு சென்னைக்கு படையெடுத்தார்கள். அப்பொழுது நான் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களிடம் துணை இயக்குனராகவும் மய்யம் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். புதுவையில் இருந்து என் மனைவியின் உறவினர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லாம் எம்ஜிஆரின் பக்தர்கள் இன்று வரை.
அந்த நேரத்தில் கமல்ஹாசன் அவர்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். எம்ஜிஆரின் மேல் மிகவும் பற்றுதல் கொண்டிருக்கும் அவர் தொலைபேசியில் அழைத்து நீங்களும் திருமதி சரிகா அவர்களோடும் சென்று எம்ஜிஆரை பார்த்து விட்டு வாருங்கள் என்று சொன்னார். எனவே திருமதி சரிகா அவர்களோடு அப்பொழுது மேனேஜராக இருந்த டி என் எஸ் அவர்களோடும் சென்று பார்க்க புறப்பட்டோம் .