சென்னை அண்ணாசாலை என்றதும் உடனே நினைவுக்கு வருவது நீண்டு உயர்ந்து நின்ற எல்ஐசி, சபையர் தியேட்டர் ,ஆனந்தா தியேட்டர் , ஆனால் அப்போது எனக்கு இன்று வரை நினைவுக்கு வருவது தேனாம்பேட்டை சிக்னல் அருகில் எல்டாம்ஸ் ரோடு .
எல்டாம்ஸ் ரோட்டில் மிக முக்கியமான ஒரு கோயில் முருகன் கோயில். அந்த முருகன் கோயிலை எல்லோரும் வழிபட்டு சென்ற பிற்பாடு 11 மணிக்கு அதில் ஒரு சிறிய கதவு இருக்கும் அதை திறந்து கொண்டு உள்ளே சென்று அமர்ந்து திரைப்பட வசனம் எழுதி ஒரு படம் தயாராகி இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
நீங்கள் நம்பத்தான் வேண்டும். அப்படி எழுத முனைந்தவர் தசரதன் என்கிற ஒரு இயக்குனர். அவர்கள் எழுதிய படம் சரணம் ஐயப்பா. அந்த பட வசனம் எழுதுகிற போது உடன் இருந்தவர்கள் பாவலர் அறிவுமதி நானும். அப்படித்தான் அங்கே எழுத ஆரம்பித்து அதற்கு உணவளித்து ஆதரவு தந்தவர் ஒரு பூ விற்பனை செய்கிற நண்பர்.
ஏன் இவ்வளவு தூரம் ஒரு கதை சொல்கிறேன் என்று சொன்னால் அந்த சரணம் ஐயப்பா படத்தின் மூலமாகத்தான் நான் கனவு கொண்டிருந்த ஒரு கவியரசரின் சந்திக்க வேண்டிய காலகட்டம் நிகழ்ந்தது. அந்த சரணம் ஐயப்பா என்ற படத்தின் தசரதன் சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடிகர் ஜெய்சங்கர், கமலஹாசன், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர, குட்டி பத்மினி போன்ற பிரபலங்களுடன் நடித்து முன்னுக்கு வந்தவர். ஒரு காலகட்டத்தில் இயக்குனராக மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது அதற்காகத்தான் இவ்வாறாக திரைக்கதை வடித்தார்,.
அப்படி அந்தப் படத்திற்கு பாடல் எழுதுகிற போது கூடவே என்னை அழைத்துக் கொண்டு சென்றார் அறிவுமதி அவர்களும் வந்ததாக நினைவு .
ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருக்கிறதல்லவா? அதற்கு வலதுபுறம் 500 அடி சென்றால் கவிதா ஹோட்டல் என்று ஒன்று இருந்தது. அது கவியரசு கண்ணதாசனுக்கு சொந்தமான ஹோட்டல். அங்கேயேதான் உட்கார்ந்து நிறைய பாடல்களை எழுதுவார். அப்படி கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் பாடல் வாங்குவதற்காக இயக்குநர் தசரதனுடன் சென்று இருந்தேன். உடன் அறிவுமதியும் இருந்தார். அங்கே நாங்கள் காத்திருந்தோம். ஒரு சில மணிநேரத்திற்குப் பின்பாடு மாடியிலிருந்து கண்ணதாசன் அவர்கள் வந்தார்கள் மிகப் பிரம்மாண்டமான அழகிய தோற்றம்.
படிகளில் இறங்கும்போது வேட்டியை சரி செய்துகொண்டு வந்தார்கள். பின்னால் ராம கண்ணப்பன் வந்து கொண்டிருந்தார். கீழே வந்து அமர்ந்ததும் சந்திரபோஸ் உட்பட அனைவரும் வணங்கினோம் சிரித்துக்கொண்டே உட்கார்ந்து 'என்னப்பா நல்லா இருக்கியா என்ன பாட்டு சொல்லு' என்று சொன்னதும் சந்திர போஸ் அவர்கள் ஆர்மோனிய பெட்டியில் தன்னுடைய கைவிரல்களால் மெட்டை இசைத்து முடிப்பதற்குள் கொட்டித் தீர்த்தார் கவியரசு கண்ணதாசன்.
கண்ணதாசன் அவர்கள் தமிழ் அன்னைக்கு பிறந்த குழந்தை. ஐந்து ஆறு நிமிடங்களில் பாடல் எழுதுவார். மிகச்சிறந்த ஆற்றலுடையவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் நேரில் பார்க்கிற அந்த மகிழ்வான நேரம் யாருக்கு வாய்க்கும்?.
அந்த பாடல்:
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் என்ற பாடல். இவ்வாறு பல்லவி தொடங்கி சரணத்தில் இவ்வாறு எழுதியிருப்பார்
இருப்பது காடு
வணங்குது நாடு
அவனைக் காண
தேவை பண்பாடு
என்று வரிகளால் பாடலை அர்த்தம் உள்ள தாக்கி இருப்பார்.
தசரதன் மேலே வரவேண்டும் என்பதற்காக அவரோடு உடன் இருந்த ஜெய்சங்கர், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் உதவி செய்தார்கள் . மனோரமா மகன் பூபதி தான் அதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மனோரமாவுக்கு ரொம்ப வேண்டியவர் தசரதன். கமலஹாசன் அவர்கள் அந்த படத்தில் ஒரு பாடலைப் பாடி நடித்தும் கொடுத்தார், கண்ணதாசன் அவர்களும் பாடல் எழுதியதற்கு பணம் வாங்கவில்லை .
இன்னொன்று கண்ணதாசனை நான் ஆச்சர்யமாக பார்த்தது இளையராஜா அவர்கள் இடத்தில் தான். பிரசாத் லேப்பில் நாங்கள் காத்திருந்தோம். அது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் நான் இருந்த நேரம் .
பாரதிராஜா அவர்களுடைய ’டிக் டிக் டிக்’ படம். அதில் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுத வேண்டும். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனையில் இருக்கிறார் என்ற ஒரு தகவல் .
என்ன செய்யலாம் என்று இளையராஜாவும் பாரதிராஜாவும் யோசித்துக் கொண்டிருந்தார்கள் .
வைரமுத்து அவர்களை வைத்து எழுதலாமா ? என்று யோசித்து பேசிக்கொண்டிருந்த நேரத்திற்கு இடையே கண்ணதாசன் அவர்களின் கார் பிரசாத் லேபில் உள் நுழைந்தது .
உடனே எல்லோரும் பரபரப்பாக கண்ணதாசன் அவர்களை வரவேற்று பாடலுக்கான சூழலை சொல்லி இளையராஜா அவர்கள் ஆர்மோனியப் பெட்டியில் வழக்கம்போல விரலை அசைக்க, கூடவே கண்ணதாசன் சிறிது கூட யோசிக்காமல் பாடல்வரிகளை சொல்லச் சொல்ல இராம கண்ணப்பன் எழுதி முடித்தார் . அதுவும் சில நிமிடங்கள் தான். அதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்
அது இந்த பாட்டு:
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்
ஜாலங்கள்
என்ற பாடல் வரிகள்.
எப்படி கண்ணதாசனிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது ? அவர் நூல்களை படிக்க வேண்டிய அவசியம் என்ன ?- என்று கேட்டால் என்னுடைய ஒன்பதாவது வகுப்பில் இருந்து அந்த ஆர்வம் தொடங்கியது எனலாம்.
வேட்டவலம் உயர்நிலைப் பள்ளியில் நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்திய சோவியத் நட்புறவுப் பாலம் என்ற ஒரு தலைப்பில் மாவட்ட அளவில் கவிதைப் போட்டி நடந்தது. அதில் என்னை பள்ளியிலிருந்து பங்கு பெறுமாறு என்னுடைய ஆசிரியர் கே. ஹரிகிருஷ்ணன் அவர்கள் பேர் கொடுத்து விட்டார்கள். எனக்கு கவிதை எழுத தெரியாது .ஆனால் தெரியாது என்று சொல்லாமல் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன் .
நேராக அருகில் இருக்கிற லைப்ரரிக்கு சென்றேன். கவிதைப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன் .ஒன்றுமே புலப்படவில்லை .
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது கண்ணதாசன் நூல் அகப்பட்டது.
படித்துப்பார்த்தேன் .மிக எளிமையான சொற்களால் கவி நடனம் புரிந்திருக்கிறார். என்னை கவர்ந்தது. அந்த கவிதை வரிகளை மனனம் செய்து கொண்டே அதேபோன்று இசைவாக என்னுடைய இந்திய சோவியத் நட்பை பற்றி கவிதையாக எழுதினேன் .
போட்டியில் கலந்து கொண்டேன் .முதல் பரிசு கிடைத்தது .அன்றிலிருந்து கண்ணதாசனுடைய வாசகனாக நான் மாறிவிட்டேன். நான்காயிரம் கவிதைகள் ,ஐயாயிரத்துக்கு மேற்பட்ட திரைப்பாடல்கள் ,நவீனங்கள் ,கட்டுரைகள் ,என்று பலவிதமான செயல்பாடுகளை செய்தவர்
தென்றல் ,தென்றல்திரை ,முல்லை , கண்ணதாசன் போன்ற இதழ்களை நடத்தி ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் . சேரமான் காதலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது 1980-ல் பெற்றிருக்கிறார் .61ல் குழந்தைக்காக என்ற படத்தில் வசனம் எழுதியதற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார் . இப்படிப்பட்ட மிகப் பெரிய கவிஞர் கண்ணதாசன் காரை முத்துப் புலவர் ,வணங்காமுடி ,கடகம் பிரியன்,பார்வதிநாதன் ,ஆரோக்கியசாமி என்ற புனைபெயர்களில் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
மாநிலக் கல்லூரியில் நான் படிக்கிற போது கண்ணதாசன் வீட்டுக்கு எதிரே ஒரு பார்க்கில் அமர்ந்து கொண்டு அவரை நினைத்துக் கொண்டு பல கவிதைகளை எழுதினேன் என்பது எனக்கு மகிழ்வாக இருக்கிறது. கண்ணதாசன் அவர்களை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று காலையில் துவங்கி மதியம் வரை அவர் வீட்டுக்கு எதிரே நின்று கொண்டிருந்தேன் .
பல கார்கள் நின்று கொண்டு இருந்தன. அதில் சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இருந்திருக்கக்கூடும் .எல்லோரும் காத்திருக்க என்னை எப்படிப் பார்ப்பார் என்ற சந்தேகத்தோடு நின்றுகொண்டிருந்தேன்.
திடீரென்று சூழல் பரபரப்பானது.
வெளியே தங்க நிறத்தில் வந்த கண்ணதாசன் அவர்கள் காரில் ஏறப் போனார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை காரின் கதவு திறந்து உள்ளே நுழைய போகும் போது கண்ணதாசன் எதிரே தூரத்தில் நின்று பார்த்தார். நான் தயங்கி தயங்கி நின்றேன்.. கவிதா ஹோட்டல் சரணம் ஐயப்பா படம் என்று சொல்ல பாதி பாதியாக வார்த்தை யாக வருகிறது. புரிந்து கொண்ட அவர் அருகே அழைத்து என்ன என்று கேட்டார். உங்களை பார்க்க வேண்டும் அதுதான் என்றேன் .
சிரித்துவிட்டு சரி பார்த்தாகி விட்டது அல்லவா கிளம்பு என்றார் .
மறுபடியும் நான் தயங்கினேன் .சிரித்தார் .
என்ன வேண்டும் சொல் என்றார் .
பேச வேண்டும் என்று சொன்னேன்.
பேசு என்று சிரித்தார்.
உங்களை பார்ப்பதே மகிழ்ச்சி என்று பேசினேன்.
உன் பெயர் என்ன என்றார் ?
அழகப்பன் என்றேன் .
'அழகப்பா
நீ நன்றாக கவிதை எழுத பழகப்பா
பாரினில் உயரப்பா..'
என்று சொல்லி வருகிறேன் என்று சொல்லி கையசைத்து விட்டு சென்றார். அவர் அன்று சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
கண்ணதாசனை வியந்து பார்க்கும் இன்னொரு சம்பவம் .
பழநிபாரதி பிரபலமான திரைப் பாடலாசிரியர் உங்களுக்கெல்லாம் தெரியும். தாய் வார இதழில் நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். உடன் நக்கீரன் கோபால், தாய் பிரபு, குடந்தை கீதப்பிரியன். கல்லாடன் பாபநாசம் குறள் பித்தன் என்று பல ஆளுமைகள் பணி செய்து கொண்டிருந்தோம் .
பழனி பாரதியின் தந்தை சாமி பழனியப்பன் வீட்டுக்கு சென்று உணவு அருந்திய போது ஒரு தகவலை பழனி பாரதி அவர்கள் சொன்னார். அவருடைய கண்ணதாசன் என் தந்தையை பற்றி ஒரு பாடல் எழுதி இருக்கிறார் தெரியுமா ? என்று கேட்டார்
எனக்கு ஆச்சரியமாக இருந்தது .உண்மையா என்று கேட்டேன் சாமி பழனியப்பன் அவர்கள் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினார்.
என்ன அந்த பாட்டு என்று கேட்டதும் அவர்' பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா '
என்ற பாடல் எழுதினார் என்று சொன்னார்.
அதற்கு காரணம் என்ன என்று கேட்டேன்.
கண்ணதாசனுக்கும் பழனி பாரதியின் தந்தைக்கும் மிக நெருக்கம் உண்டு ..
குன்றக்குடி அடிகளார் இடமும் ஆர்எம் வீரப்பன் உடனும் அதிக தொடர்பு கொண்டிருந்தவர் .அவர் அதோடு மட்டுமல்ல பாரதிதாசன் உடைய வழித்தோன்றல். கண்ணதாசன் அவர்களுக்கு சாமி பழனியப்பன் சென்னைக்கு வந்திருக்கிறாரே…. எப்படி வாழ்கிறாரோ என்ற கவலை .
அதனால்தான் ஒரு முறை சாமி பழனியப்பன் அவர்களைப் பார்த்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டதும் பரவாயில்லை நன்றாக இருக்கிறேன் என்று பதில் சொல்லி உள்ளார். இல்லப்பா இந்த ஊர் ரொம்பவும் பொல்லாங்கு கொண்டது நகரம் என்று சொல்லிவிட்டு அன்றே அவர் ஒரு படத்தில் அவருடைய பெயரை வைத்தே பாட்டு எழுதினார் .
கண்ணதாசன் அவர்கள் சம்பாதிக்காத சம்பாத்யம் இல்லை. ஆனால் அவர் கையில் காசு நின்றதே இல்லை. கண்ணதாசன் கவலை இல்லாத மனிதன் என்று ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அந்தக் கவலை போவதற்கு பல காலம் ஆகியது என்று நகைச்சுவையோடு தன்னை விமர்சித்து கொண்டிருப்பார் . ஆனால் ஏனோ அரசியல் அவருக்கு சரி வரவில்லை. அதனுடைய வெளிப்பாடாகத் தான் வனவாசம் என்ற நூலில் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனோ தெரியவில்லை இலக்கியவாதிகளுக்கு அரசியல் என்பது உடன்பாடாக இருந்ததில்லை என்பது வரலாற்று நிகழ்வு.
இப்போதும் நான் கண்ணதாசன் எதிரே இருக்கிற நடேசன் பார்க்கில் தான் பல சமயம் கதைகளையும் கவிதைகளையும் எழுதுவதை பழக்கமாக கொண்டிருக்கிறேன் .
காற்று இருக்கும் வரை கண்ணதாசன் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும் .கண்ணதாசன் தமிழின் தங்கமுகம்.