மனம் திறந்த பேச்சு

தெற்கே உதித்த சூரியன் - 20
மனம் திறந்த பேச்சு
Published on

காலை நேரம்.ஒரு கிராமத்தின் சாலை ஓரமாகப் பரமாச்சாரியார் நடந்து சென்று கொண்டிருக்கிறார் . பக்தர்கள் கூட்டம் பராக்கு பார்த்துக்கொண்டும் நடு நடுவே ஜய கோஷமிட்டுக் கொண்டும் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு பெரிய குளம் . நீர் நிறைந்தும் தாமரை மலர்ந்தும் காணப்படுகிறது. பின்புறமாக - ஆகாயத்தில் தகத்தகாயமாக சூரியனின் வருகை.

பரமாச்சாரியார் நின்றார். குளத்தின் படிகளில் ஒரு காட்சி . கிராமத்து வயது முதிர்ந்த ஏழை விவசாயி , குளத்தில் குளித்து விட்டு நெற்றியிலும் உடலிலும் திருநீறு அணிந்தவாறு , உதிக்கின்ற சூரியனை நோக்கி கைகளை உயரத்தூக்கி கும்பிட்டவாறு - கண்களை மூடி தியானத்தில் இருக்கிறார்.

பரமாச்சாரியார் பரவசத்துடன் சில நிமிடங்கள் அங்கேயே நின்று அந்த பெரியவரை பார்த்தவாறு இருக்கிறார். பிறகு திரும்பி

" இது தான் உண்மையான பக்தி " என்று கூறினார்.

ஆம். பரமாச்சாரியார் விரும்பியதெல்லாம் ஆணவம் துளியும் கலக்காத எளிய பக்தியைத்தான் !

அவர் மூட நம்பிக்கைகளை ஒரு போதும் ஆதரித்தது இல்லை . இந்து மதவாதிகள் நடத்திய டாம்பீகமான விழாக்களை தவிர்த்து விடுவார். ஜாதகம் , வாஸ்து , பல வகையான விசித்திர வழிபாடுகள் ஆகியவற்றைப்பற்றி அவர் முக்கியத்துவம் தந்தது இல்லை.

ஒரு முறை சாந்தோம் கடற்கரை பக்கம் பக்தர்கள் சூழ அவர் வந்து கொண்டிருக்கிறார். ஓர் இளைஞர் - மெல்லிய உருவம் கொண்டவர் - முதல் நாளில் இருந்து காத்திருந்தவர்- பரமாச்சாரியாரை நெருங்கினார். தனக்கு சித்து வேலை கைவசம் வந்துவிட்டதாக கூறினார். சித்து மூலமாக வரவழைத்த சிறிய தெய்வ உருவங்களை காட்டினார்.

பரமாச்சாரியார் அமைதியாகக் கேட்டார். பிறகு அந்த தெய்வ உருவங்களை வெற்றிலை - பாக்கு - தேங்காய் புஷ்பங்களுடன் சேர்த்து எதிரே அலைகள் கிளம்பும் கடலில் சேர்த்துவிடுமாறு கூறினார். " உனக்கு குரல் வளம் இருக்கிறது. தமிழ்நாடெங்கும் ராமாயணம் - பாகவதம் போன்ற சொற்பொழிவுகளை நிகழ்த்து " என்று கூறி ஆசி வழங்கி அனுப்பினார்.

(ஆனால் அந்த இளைஞர் அப்படி செய்யவில்லை. இன்று மிகப்பெரிய அளவில் சாமியாராக இருக்கிறார் ! )

அதே போல , ஒரு பெரிய அதிகாரி . தன் மனைவிக்கு அம்மன் அருள் கிட்டிவிட்டதாக பரமாச்சாரியாரிடம் கூறி , மனைவியை அறிமுகப்படுத்தினார். அவர் மீது அம்மன் வந்து , அருள்வாக்கு கூற ஆரம்பித்துவிடுகிறார். எல்லாம் பலிக்கிறது என்றார் .

பரமாச்சாரியர் பிரசாதம் கொடுத்து " நல்ல சைக்யாட் ரிஸ்டிடம் காட்டு . பிறகு ரொம்ப முற்றிப்போய்விடும் " என்று அனுப்பி விட்டார்!

பரமாச்சாரியர் அதிசயங்கள் நிகழ்த்தவில்லை. ஆனால் அவரிடம் பிரார்த்தனை செய்து கொண்ட பக்தர்களுக்கு , வேண்டியது நிறைவேறியது. சங்கடம் ஏற்படும் போது , தாங்கமுடியாத சோதனை வரும் போது , ஏழுமலையான் படத்தின் முன்பு நம்பிக்கையோடு பிராத்தனை செய்து கொள்கிறோம். அது நிறைவேறுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியை தொழுது " என்னை கைவிடாத தெய்வமே " என்று மலையேறி காணிக்கை செலுத்துகிறோம். வேங்கடாசலபதி - கடவுள் ' அவர் துணை நிற்பார்' என்று நமக்கு உள்ளம் சொல்கிறது.

பரமாச்சாரியாரிடம் அப்படித்தான் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். துன்பம் கணத்தில் விலகியது . அது சித்து வேலை என்று யாரும்
நினைக்கவில்லை. அதை எல்லாம் தாண்டிய - இறை அருள் பொங்கிய நிலையில் பரமாச்சாரியார் !

எத்தனையோ ஏழை குடும்பத்தினர் தங்கள் மகளுக்கு திருமணம் இன்னமும் நடக்கவில்லை என்று அவர் எதிரே கலங்கி அழுவார்கள். அடுத்த சந்திப்பில் - ஸ்ரீ மடத்திலேயே எதேச்சையாக ஒரு மாப்பிள்ளை கிடைத்து , அங்கே திருமணம் நிச்சயமாகிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

திருமணம் நடக்கவில்லை என்று வருந்திவருவோரை , ஏழுமலையானுக்கு கல்யாண உற்சவம் நடத்துமாறு கூறுவார். திருவானைக்கா சென்று அகிலாண்டேசுவரியின் காதுகளில் ஜொலிக்கும் தாடங்கத்தை தரிசிக்குமாறு கூறுவார். காஞ்சி காமாட்சியை வணங்கி , ஐந்து முறை பிரதட்சணம் வந்து , ஐந்து முறை நமஸ்காரம் செய்து , ஐந்து வகையான பழங்களை வைத்து அர்ச்சனை செய்யுமாறும் கூறுவார். அவ்வாறு செய்த அத்தனை பெண்மணிகளுக்கும் திருமணம் நடந்தது.

சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ' ஷன்மதமாநாடு ' நடந்தது. மடாதிபதிகளும் - ம.பொ.சி. போன்ற மதத்தில் பற்று கொண்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். கடைசி நாளன்று சில தீர்மானங்கள் நிறைவேறின.அதில் முக்கியமானது - விநாயகசதுர்த்தி - கிருஷ்ண ஜெயந்தி போன்ற இந்துமதவிழாக்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பியது.



இந்த மாநாட்டில் கடைசி நாளன்று பரமாச்சாரியார் வருவதாக சொல்லப்பட்டது. வரவில்லை. ஆனால் அவரது உரை 'டேப்' செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. எடுத்த எடுப்பில் " இந்த மாநாட்டில் சிலர் பேசி இருப்பார்கள். தீர்மானமும் நிறைவேறியிருக்கும் . விநாயக சதுர்த்தி போன்ற விஷேசங்களுக்கு அரசு ' லீவு ' தரவேண்டும் என்பதாக ! என்னை கேட்டால் ' வேண்டாம்' என்பேன். கிறுஸ்துமஸ¤க்கு விடுமுறை தந்தால் - ரம்ஜானுக்கு விடுமுறை தந்தால் என்ன நடக்கிறது ? கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனையில் கலந்து கொள்கிறார்கள் . முஸ்லீம்கள் மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்கிறார்கள் ......

விநாயக சதுர்த்தி போன்ற நம் விஷேசங்களுக்கு 'லீவு' கொடுத்தால் என்ன செய்கிறோம் ? எந்த சினிமாவுக்கு போகலாம் , சுற்றுலா போகலாமா என்று திட்டம் போடுகிறோம் . யாரும் கோவிலுக்கு போவதில்லை" - இப்படி கடுமையாக பேச ஆரம்பித்தார்.

இப்படி அவர் மனம் திறந்து பேசிய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.

மடத்திற்கு நெருக்கமாக பிராமணர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் குறைகளை அவர் பொறுத்துக் கொண்டதில்லை . பெரியவர் பேசுகிறார்:

"சாஸ்திரங்கள் பிராமணனுக்கு பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் நடந்து , வேத சப்தத்தாலும் வேள்விகளாலும் லோக ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற வரையில் - இவனிடம் எல்லோரும் அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இவனையே உதாரணமாக வழிகாட்டியாக - முன்மாதிரியாக வைத்துக் கொண்டார்கள்.

இப்போது இவன் வழிமாறி , கிராமத்தை விட்டு பட்டணத்துக்குவந்து ஏதோ நாகரீகத்தில் உயர்ந்துவிட்டது போல 'தாட் பூட்' என்று பண்ணியதை மற்றவர்கள் பார்த்தார்கள். இதுவரை நல்லதெற்கெல்லாம் இவனை முன் உதாரணமாக வைத்துக் கொண்டிருந்தவர்கள் , ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்றினார்கள்.

பிரமாணன் இன்னொன்றையும் செய்தான். முற்போக்கானவன் போல பேசுவது , அதே நேரத்தில் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல் தான் உசத்தி என்று பெருமை கொண்டாடினான். முன்பும் தான் மற்றவர்களோடு ஒட்டிப் பழகவில்லை . அதற்கு நியாயம் இருந்தது.



பிராமணனின் தேகம் இந்திரிய சுகத்துக்காக ஏற்படவில்லை என்று இருந்தது. லோக நன்மைக்கு - வேதத்தை காப்பதற்கு என்ன நியமங்களை பின்பற்றவேண்டும் . அதில் அதிகப்படியான போகிய வஸ்துகள் சேர்க்கக்கூடாது என்பதே அடிப்படை தர்மம் "

பெரியவர் கடுமையாக இப்படி இடித்துரைத்த நேரங்கள் உண்டு. அதோடு அவரிடம் யாராவது ஜம்பமாக பொய்சொன்னால் - சில நிமிடங்களில் அவர் சாயம் வெளுத்து விடும் .

தெரியுமா?

தமிழ்த் தெய்வமே முருகன்.சந்தேகமே வேண்டாம்!

அவனுக்கு ஆறு முகங்கள்.தமிழிலும் வல்லினம் ஆறு.மெல்லினம் ஆறு.இடையினம் ஆறு.

பன்னிரண்டு தோள்களை உடையவன் அவன்.தமிழிலும் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு.
முருகனுக்கு கண்கள் பதினெட்டு.மெய் எழுத்துக்கள் பதினெட்டு.

ஃ தமிழ் ஆய்த எழுத்து போல தோற்றம் தரும் முருகனது வேலாயுதம்!
இச்சை, கிரியை, ஞானம் என்கிற மூன்று தன்மைகளைக் குறிப்பது போல வேலாயுதம்.


(அடுத்தவாரம் முற்றுபெறுகிறது.)

டிசம்பர்   27 , 2007

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com