பெரியார் இயக்கமும் மாமுனிவர் கருத்தும்

தெற்கே உதித்த சூரியன் - 19
பெரியார் இயக்கமும் மாமுனிவர் கருத்தும்
Published on

காஞ்சி மாமுனிவர் 1957 ல் சென்னை வந்தபோது வருகிற பாதையில் இருந்த பெரிய சுவர்களில் திராவிடர் கழகம் கிளப்பிய எதிர்ப்பு முழக்கங்கள் பெரிய கருப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. என்ன அது ?

'பல்லக்கின் உள்ளே பிராமணர் குரு
பல்லக்கை தூக்குவதோ தமிழன் '

- இந்த கருத்தில் சங்கராச்சாரியர் பல்லக்கில் பவனி வருவதை எதிர்த்து எழுதப்பட்டிருந்தன.

காஞ்சி மாமுனிவர் கண்களில் இது பட்டிருக்கலாம்.

சிவிகையில் - பல்லக்கில் - பவனி வருவதை இதற்குப்பின் அவர் தவிர்த்து விட்டார். சைக்கிள் ரிக் ஷா ஒன்றை பக்தர் தள்ளிக்கொண்டுவருவார். அதை பிடித்தவாறு மகாபெரியவர் நடந்து வருவார்.

பல்லக்கில் மகாபெரியவர் வருவது என்பது தினமும் நடப்பது இல்லை. பெரும்பாலும் நடந்தே சென்றார். பக்தர்கள் வற்புறுத்தினால் , சற்று தூரம் பல்லக்கில் ஏறுவார்.

அவருக்கு உடல் எடை ஏது ? பஞ்சு போல இருப்பார் ! ஒரு முறை மகாபெரியவரை ஏற்றிக்கொண்டு பல்லக்கு சென்று கொண்டிருந்தது. ஓரிடத்தில் பல்லக்கை இறக்கிய போது , உள்ளே மகாபெரியவரைக் காணோம் . தேடிக் கொண்டே வந்த வழி வந்தால் , ஒரு பாலத்தில் அமர்ந்திருந்தார் . பல்லக்கில் இருந்து அவர் கீழே விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை ! ஆக அவர் உடல் எடை எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம் ! இருப்பினும் மாற்றார் கருத்துக்கு மதிப்பு தந்தார்.

அதே போல தி.கழகத்தினர் இன்னொரு போராட்டத்தை அந்த கால கட்டத்தில் நடந்தினர் . சைவ ஓட்டல்களுக்கு அந்த காலத்தில் - 'பிராமணாள் ஓட்டல் ' என்று போர்ட் எழுதப்பட்டிருக்கும்.

பெரியார் ஈ.வே.ரா இதை எதிர்த்தார். ' சைவ ஓட்டல் ' என்று போட வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். பெரும்பாலான சென்னை ஓட்டல்கள் மாற்றிக்கொண்டன.

திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு ஓட்டல் முதலாளி அதை மாற்ற மறுத்தார். அவர் ஒரு பிராமணர். தைரியமாக மோதக்கூடியவராக இருந்தார்.

பெரியார் ஈ.வெ.ரா. கொண்ட கருத்துக்காக தானே களத்தில் இறங்கிப் போராடும் குணம் படைத்தவர். திருவல்லிக்கேணி ஓட்டலின் முன்பு தினமும் மாலையில் சீசர் என்ற தன்னுடைய அல்சேஷன் நாயுடன் மறியல் செய்தார் பெரியார்.

நாள் கணக்கில் இந்த மறியல் போராட்டம் நடந்தது. தி.க. தொண்டர்களுக்கும் ஓட்டல் முதலாளியின் ஊழியர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தது.

அந்த சமயத்தில் காஞ்சி மாமுனிவர் சென்னையில் அடி எடுத்து வைத்திருந்தார். அந்த ஓட்டல் முதலாளியை அழைத்து , ' சைவ ஓட்டல் என்று மாற்றுமாறும் - பிராமணாள் வார்த்தையை நீக்குமாறும் ' கூறினார். முதலாளி பணிந்தார்.

பெரியார் ஈ.வே.ரா வின் அந்த கருத்தில் காஞ்சி முனிவருக்கு உடன்பாடு இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. பிராமணர்களின் இன்றைய பல வழி முறைகளை காஞ்சி முனிவர் ஏற்கவில்லை.

தி.மு.க ஆட்சியின் போது - காஞ்சி முனிவரை தரிசிக்க வரும் சில பிராமண அதிகாரிகள் , அவரை சந்திக்க காரிலிருந்து இறங்கியவுடன் அவரசரமாக அவசரமாக சட்டை , பேண்டை கழற்றி , மேல் துண்டும் வேட்டியும் அணிவார்கள். மார்பில் பூணூல் இருக்காது . மடத்தில் சுவாமிகளை தரிசிக்க வரும் பிராமணர்களிடம் ' கொஞ்சம் பூணூலை கழற்றித்தரமுடியுமா ?' என்று கேட்டு , பெற்று அணிவார்கள் !

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிராமண அதிகாரிகள் சிலர் பயத்தின் காரணமாக பூணூல் கழற்றி விட்டார்கள் ! பெரியவர் இம்மாதிரி செயல்களை கண்டு மனம் வருந்திய செய்திகள் உண்டு.

மகாபெரியவர் சாதி மதங்களையும் , நாட்டு எல்லைகளையும் கடந்து இமயம் போல எழும்பி ஒளி வீசினார். கடவுளை மறுத்து பேசியவர்களும் - அவரிடம் பக்தி கொண்டிருந்தனர்.

மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் தங்கியிருந்த போது , ஒரு நாள் பிற்பகல் சுவாமிகள் திடீர் என்று வெளியே புறப்பட்டுச் சென்றார். ஆவலுடன் பின் தொடர்ந்தவர்களில் ஒருவனாக அடியேனும் !



குறுக்கு சந்துகளில் எல்லாம் சென்றார் , ஒரு சாமானியனின் குடிசை வீட்டு வாசலில் வந்து நின்றார்.

வீட்டில் இருப்பவர்கள் ஓடி வந்தார்கள். 'பாட்டி எப்படி இருக்கிறார்' என்று விசாரித்தார் மகா பெரியார்.

கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த பாட்டியை , அப்படியே வெளியே தூக்கி வந்தனர். பெரியவர் பாட்டியை பார்த்தவாறு நின்றார். ' டாக்டர் என்ன சொல்கிறார் ' என்று கேட்டார்.

பாட்டிக்கு சுய நினைவு இல்லை. தினமும் சுவாமிகளை தரிசிக்க வந்து சொம்பில் பால் வைப்பார் . ஒருவாரமாக வரவில்லை . சுவாமிகள் பாட்டியை தேடி வந்தார்.

'ராம நாமத்தை ' பாட்டியின் காதில் கூறுமாறு கூறி புறப்பட்டார். சுவாமிகளின் கருணை அந்த சாமானிய குடும்பத்தை கண் கலங்க செய்தது.

ஒரு முறை காஞ்சிபுரத்தில் குடிசைப்பகுதியில் வசித்த ஒரு பெரியவரை யானை மீது அமரச் செய்து மடத்துக்கு வரவழைத்தார். விஷேச மரியாதைகள் செய்து திருப்பி அனுப்பினார். யார் அந்த ஏழைப்பெரியவர் ? மடத்தில் எல்லோரும் திகைத்தனர்..

மகாபெரியவர் சிறு வயதில் சந்நியாசம் பெற்ற சமயத்தில் , மாட்டுவண்டியில் வர நேர்ந்தது அல்லவா? அந்த மாட்டு வண்டியை ஓட்டியவர் தான் அந்த பெரியவர். பல ஆண்டுகள் கழித்து அடையாளம் தெரிந்து மரியாதை செய்தார் மகா பெரியவர் !

தெரியுமா?

ஜி.யு. போப் பற்றி அனைவரும் அறிவர்.திருவாசகம் என்றால் அவருக்கு உயிர்.திருவாசகத்தில் ஒரு பாடலுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார் ஒருவர்.பதில் கடிதம் வந்த போது பிரித்துப் பார்த்தார்.வெறும் வெள்ளைத்தாள்.மறுபடியும் விளக்கம் கேட்டு கடிதம் எழுத , ஜி. யூ போப் பிடம் இருந்து வெள்ளைத்தாளே வந்தது.நேரில் போய் 'இது என்ன வெள்ளைத்தாளா பதில்' என்று கேட்டார்.

" நீங்கள் கேட்ட பாடலுக்கு விளக்கம் எழுத முயற்சித்தேன்.என் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.பதில் எழுத வைத்திருந்த காகிதத்திலும் கண்ணீர் துளிகள் விழுந்தன.அதுவே பதில்" என்றார் ஜி.யூ போப்.

(இன்னும் வரும்)

டிசம்பர்   20 , 2007

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com