தினமும் வாட்டும் பசி என்கிற நோய்க்கு , உணவை மருந்தாக சாப்பிடு. வாய்க்கு ருசியாக இருக்கவேண்டும் என்று தேடவேண்டாம் . இறைவன் அருளால் தானமாகக்கிடைப்பதைக்
கொண்டு திருப்தி அடையவேண்டும்.
- ஆதி சங்கரரின் உபதேசங்களில் ஒன்று இது
அப்படித்தான் வாழ்ந்தார் காஞ்சி பரமாச்சாரியார். நவராத்திரி சமயத்தில் ஒருமுறை காஞ்சிக்கு செல்ல நேர்ந்தது. காஞ்சி ஸ்ரீமடத்தில் எட்டு மணி நேரத்துக்கு மேலாக பூஜை நடக்கும் என்று சொன்னார்கள். நவராத்திரியில் சேர்ந்தார் போல ஒன்பது நாட்களும் முழு நாளும் உபவாசம் இருந்து சுவாமிகள் பூஜைகளைச் செய்கிறார் என்று கூறினார்கள்.
சுவாமிகள் பல ஆண்டுகளாகவே உப்பு , புளி , மிளகாய் இவற்றை ஒதுக்கிய உணவை , ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்திருக்கிறார். பிறகு இதுவும் நின்றது . காய்ச்சாத பால் அருந்திவந்தார். பிறகு வில்வ இலை , வேப்பங்கொழுந்தை சாப்பிட்டார்.
இவ்வாறு உணவை ஒதுக்கியது உடல் நிலையை பின்னர் பாதிக்கச்செய்தது. சுவாமிகள் கவலைப்படவில்லை என்கிறார்கள் . பக்தர்கள் வற்புறுத்த மூன்று கைப்பிடியளவு உணவு உண்டுவந்தார். கடைசியில் அதையும் கைவிட்டார். நெற்பொறியை சிறிதளவு உண்பது வழக்கமாயிற்று.
இது தவிர குறிப்பிட்ட நேரத்தில் ஆகாரம் சாப்பிடவேண்டும் என்கிற நியதி துறவிகளுக்கு உண்டு. பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பது நீடித்து , அந்த நேரம் கடந்து விட்டால் , சுவாமிகள் உணவு உட்கொள்ள மாட்டார் ! இப்படியும் உபவாசம் !
இருப்பினும் மன உறுதியால் சுவாமிகள் கம்பீரமாகவே காட்சி தந்தார்.
சுவாமிகளுக்கு கண்களில் பிரச்னை எற்பட்ட போது , சங்கரநேத்ராலயா டாக்டர் பத்ரிநாத்
சிகிச்சை அளித்தார்.
பயபக்தியோடு , கண் அறுவை சிகிச்சை செய்தார் டாக்டர் பத்ரிநாத்.
அறுவை சிகிச்சை நடந்த மறுநாள் சூரிய கிரகணம் வந்துவிட்டது. சுவாமிகள் கிரகண காலத்தில் பலமுறை குளிக்க வேண்டும்.
இதை கேள்விப்பட்ட டாக்டர் பத்ரிநாத் ஓடோடி வந்தார். சுவாமிகளை பார்த்து பதட்டத்தோடு
நின்றார். சுவாமிகள் அவரைப் பார்த்து புன்முறுவல் செய்தவாறு " நான் இன்று பத்து முறைக்கு மேல் குளிப்பேன் என்று கேள்விப்பட்டாயா ? அப்படி குளித்தால் ஆபரேஷன் செய்தது வீணாகிவிடுமோ என்று கவலைப்படுகிறாயா ? பயப்படாதே ! நான் மந்திரஸ்னானமே செய்து கொள்கிறேன் ! பத்ரிநாத் ஆபரேஷன் செய்தார் , சுவாமிகளுக்கு கண் போய்விட்டது என்று உனக்கு வீண் அபவாதம் வர நான் ஒரு போதும் உடன்பட மாட்டேன் " என்றார்.
டாக்டர் பத்ரி அயர்ந்துவிட்டார் ! சுவாமிகள் கருணை என்பது இதுதான் !
சுவாமிகளை தரிசிக்க ஆயிரக்கணக்கான பேர் வந்தபடி இருந்தார்கள். ஆனால் தரிசிப்பவர்களை ஒரு முறை பார்த்தால் பிறகு மறக்க மாட்டார். பல ஆண்டுகள் கழித்து வந்தாலும் , முன்பு சந்தித்த போது தம்மிடம் கூறிய வருத்தங்கள் தீர்ந்துவிட்டனவா என்று விசாரிப்பார். சுவாமிகளின் ஞாபகசக்தி கண்டு வியக்காதவர் யாரும் இல்லை. அறிஞர்களையே அது வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
பாரத தேசம் போர்க்களங்களை சந்திக்க நேர்ந்த போது , சுவாமிகளின் ஆசி நமது ராணுவ வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது.
1962 ல் சீனா எதிர்பாராமல் நம் மீது போர் தொடுத்தது. ரேடியோ வழியாக சுவாமிகளின் ஆசி ஒலிபரப்பப்பட்டது. சுவாமிகள் கீதை மொழிகளை எடுத்துக் கூறினார்.
"இதயத்தில் கடவுள் பக்தியும் , கையில் எதிரிகளை கிழித்தெறியும் படியான வில்லும் இருந்து , நம் நாடு எப்போதும் வெற்றி பெற்று , செல்வம் நீதிவழிகள் கிடைத்து நம் நாடு செழிக்கும் " என்று சுவாமிகள் கணீர் என்று வாழ்த்தினார்.
1965 ல் பாகிஸ்தான் சண்டையில் ' அனுமான் சாலீசா ' என்கிற ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தை அச்சடித்து அவற்றை ராணுவ தளபதிக்கு அனுப்பி வீரர்களுக்கு தருமாறு செய்தார். அதோடு போரில் வெற்றி அளிக்கும் வேள்விகளை நாடெங்கும் நடத்தச் சொனார்.
பங்களா தேசம் தொடர்பான யுத்தத்தின் போதும் சுவாமிகள் ஆசி வழங்கினார்.
1965 ல் பாகிஸ்தான் போர் சமயத்தில் அரிசிப்பஞ்சமும் , ரேஷன் கெடுபிடியும் ஏற்பட்டது. ரேஷன் கடைகள் முன்பு நீண்ட கியூவரிசை. ஒருவாரத்துக்கு இவ்வளவுதான் என்று ' அரிசி ' , வாராவாரம் தரப்பட்டது. கோதுமை தமிழகத்தில் பிரவேசித்தது.
இந்நிலையில் ஆச்சாரிய சுவாமிகள் பரம ஏழைகளின் நலனுக்காக 'பிடி அரிசி ' திட்டம் அறிவித்தார்.
ஒவ்வொரு வீட்டில் இருப்பவரும் ஒரு பானையில் தினமும் பிடி அரிசி போடவேண்டும் . ஒரு பைசா தினமும் இத்திட்டத்துக்கு எடுத்துவைக்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இளைஞர் குழு அமைத்து , வீடு வீடாக அரிசி சேகரிக்கப்படும்.
அந்தப்பகுதியில் உள்ள கோயில்களில் , இந்த அரிசியைக் கொண்டு தினமும் மாலையில் புளி சாதம் , தயிர் சாதம் ,எள் சாதம் போன்ற உணவை தயாரித்து இறைவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும் . பிறகு பரம ஏழைகளுக்கு 10 காசுக்கு ' பட்டை சாதம் ' வழங்கவேண்டும். பட்டை சாதம் என்பது நிறையவே இருந்தது.
பக்தி சிரத்தையுடன் பல ஊர்களில் பல ஆண்டுகள் பிடி அரிசித் திட்டதை பக்தர்கள் செய்து வந்தார்கள். பரம ஏழைகளின் வயிறு இரவில் நிரம்பியதை கண்கூட பார்த்திருக்கிறேன். பிடி அரிசி திட்டத்தில் ஒரு தொண்டனாக இருந்ததை மறக்கமுடியாது.
தெரியுமா?
நம் உணவும் உணர்த்தும் உண்மை உண்டு.
முதலில் குழம்பு - அதில் 'தான்' அதாவது காய்கள் இருக்கும். 'தான்' இருப்பதால் குழம்ப வேண்டியதே!
பிறகு 'ரசம்' - 'தான்' அகன்ற தெளிவானது.
கடைசியாக 'மோர்' - வெண்மை நிறத்தில் அமைதியானது.
'தான்' அகன்ற பின் , தெளிவு ஏற்பட்டு இறைவனை அடையலாம்!
(இன்னும் வரும்)
டிசம்பர் 06 , 2007