தரிசனம் - பால்பிரண்டன் முதல் இந்திராகாந்தி - எம்.ஜி.ஆர் வரை !

தெற்கே உதித்த சூரியன் - 16
தரிசனம் - பால்பிரண்டன் முதல் இந்திராகாந்தி - எம்.ஜி.ஆர் வரை !
Published on

காஞ்சி மாமுனிவரை தரிசிக்க உலகின் பல பாகங்களில் இருந்து அறிஞர் பெருமக்கள் வந்து கொண்டே இருந்தார்கள் . கிரீஸ் நாட்டு ராணியிலிருந்து புத்தமதத்துறவிகள் வரை ! ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்த பல அயல் நாட்டினர் மாமுனிவரை தரிசிக்க வந்து , பிறகு காஞ்சிபுரத்திலேயே பல நாட்கள் தங்கிவிடுவது உண்டு .

பால்பிரண்டன் என்கிற வெள்ளைக்காரருக்கு , ஆன்மீக உணர்வு ஏற்பட்டு நமது நாட்டை நாடி ஓடி வந்தார் . இந்தியாவில் உள்ள யோகி ஒருவருக்கு சீடராகி , ஞானம் பெற விரும்பினார். SEARCH IN SECRET INDIA என்கிற அவரது புத்தகத்தில் , தன் அனுபவங்களை பால்பிரண்டன் எழுதி இருக்கிறார்.

சென்னை பிரபல எழுத்தாளராக இருந்த கே.எஸ். வெங்கட ரமணியை அவர் பார்த்து , அவர் வழியாக காஞ்சி மாமுனிவரை பால்பிரண்டன் சந்தித்தார்.

பால்பிரண்டன் சுவாமிகளிடம் பலவிதமான கேள்விகளை எழுப்பினார். அவநம்பிக்கையுடன் அவர் கேட்ட கேள்விகளுக்கு சுவாமிகளின் பதில்கள் நம்பிக்கையும் நிம்மதியும் தரக்கூடியதாக இருந்தது.

" உலகில் நடக்கும் கொடுமைகளை கவனிக்கும் போது கடவுள் மக்களைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறதே " என்று பால்பிரண்டன் கேட்டிருக்கிறார்.

" அப்படி இல்லை . கடவுள் மனித உருவத்திலேயே வந்து ஓர் குறிப்பிட்ட சமயத்தில்
சிக்கல்களைத் தீர்ப்பார். வல்லரசுகளுக்கு இடையே சச்சரவுகளும் , அதனால் அதர்மமும் அதிகமாகும் போது , ஏழை மக்களின் துன்பங்கள் அதிகமாகும்போது , அப்போது தான் ஒரு
மாறுதலுக்கான சந்தர்ப்பம் ஏற்படும் . தெய்வசக்தி மிக்க மனிதன் அப்போது தோன்றி , காப்பாற்றுவான் . ஒவ்வொரு நாட்டிலும் இப்படி ஒரு மாமனிதன் தோன்றுவான் . "

- இது சுவாமிகளின் பதில் . 'உண்மையான குரு'வை தனக்குக் காட்டுமாறு வேண்டினார் பால்பிரண்டன்.



" ஒருவர் இருக்கிறார். அவர் இந்த நாட்டின் தென் பாகத்தில் அடர்ந்த காட்டில் மவுனத்தை கடைபிடித்து வாழ்கிறார். யாரும் எளிதில் காணமுடியாது. இன்னொருவர் - மகரிஷி . அவர் திருவண்ணாமலையில் வசிக்கிறார் " என்று கூறினார் சுவாமிகள் .

ரமண மகரிஷியைத்தான் சுவாமிகள் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

பால்பிரண்டன் சந்திப்பு செங்கல்பட்டில் நடந்தது. சுவாமிகளைப் பிரிய மனமின்றி அங்கேயே அன்று முழுவதும் சுற்றிவந்தார் அந்த வெள்ளைக்காரர்.

பிறகு சென்னை திரும்பி தான் தங்கி இருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். அன்று இரவு அவர் தூங்கிய உடன் ஒரு காட்சி கண்டார் ! இதை அவரே எழுதி இருக்கிறார்:

நேரம் பின்னிரவு மூன்று மணி . அறையில் ஒரு ஒளி தோன்றியது. பால்பிரண்டன் எழுந்து உட்கார்ந்தார். அந்த ஒளியில் ஆச்சாரிய சுவாமிகளின் உருவம் வெளிப்பட்டது.காவி உடையுடன் , கருணை பொலிவுடன் சுவாமிகள் தென்பட்டார். பால்பிரண்டன் கண்களை மூடிய போதும் , சுவாமிகள் உருவம் தெரிந்தது. புன்முறுவலுடன் சுவாமிகள் " பணிவுடன் இரு . நீ வேண்டுவதை அடைவாய் " என்று கூறினார்.

பால்பிரண்டன் இக்காட்சியால் பரபரப்பு அடைந்தார் . ஆச்சாரிய சுவாமிகள் கடவுளின் அவதாரமே என்று அவர் நம்பினார்.

பால்பிரண்டன் பின்னர் ரமணரை சந்தித்து அவரது சீடரானார்.

***************************************************

இப்படி பலருக்கு 'ஆத்ம தரிசனம்' தந்திருக்கிறார் சுவாமிகள்.

பாரத தேசத்தின் மீது பெரும் பக்தி கொண்டவர் இந்திராகாந்தி. நேருஜியின் காலடியில் அரசியலைக் கற்றவர். நாடு முன்னேற வேண்டும் என்பதில் நேருஜியைப் போலவே அவசரப்பட்டார் இந்திரா காந்தி. எமர்ஜென்சி கொண்டு வந்தார். நாடு ஏற்கவில்லை. அதன்பின் ஏற்பட்ட தேர்தல் தோல்வி எதிர்ப்புகளைக்கண்டு அஞ்சாமல் பணியை தொடர்ந்தார். தோல்வி ஏற்பட்ட காலகட்டத்தில் காஞ்சிபுரத்துக்கு வந்து சுவாமிகளை சந்தித்தார் இந்திராகாந்தி.



தனிமையில் - கிணற்றடியோரத்தில் சுவாமிகள் அமர்ந்திருக்க - நடந்த சந்திப்பு.

இந்திரா உணர்ச்சிவயப்பட்டு பேசினார். பிரார்த்தனை செய்து கொண்டார். சுவாமிகள் மவுனமாக இருந்தார். ' காங்கிரஸ் கட்சி அழிந்துவிடக்கூடாது. தேச ஒற்றுமைக்கு அக் கட்சி முக்கியம் ' என்று இந்திரா பிரார்த்தனையின் போது சொன்னதாக பிறகு நிருபர்களிடம் சொல்லப்பட்டது.

சுவாமிகள் 'கை' தூக்கி ஆசி வழங்கினார். இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக ' கை '
சின்னம் தேர்ந்தெடுக்க இந்த தரிசனம் காரணம் என்று கூறப்படுகிறது.

***************************************************

தமிழகத்தின் முதல்வராக செல்வாக்குடன் ஒளிவீசிய எம்.ஜி.யாரும் சுவாமிகளை அவ்வப்போது சந்திப்பது உண்டு. ' அதற்கு விளம்பரம் கூடாது ....சுவாமிகளை நம்மைப் போன்ற பதவியில் இருப்பவர்கள் சந்திக்கும்போது பணிவு மிகுதியாக இருக்க வேண்டும் ' என்று எம்.ஜி.ஆர் அந்த சந்திப்பு ஏற்பாடு செய்த பத்திரிக்கை ஆசிரியரிடம் கூறி இருக்கிறார்.

அந்த சந்திப்பால் எம்.ஜி.ஆர் உற்சாகம் அடைந்தார் என்று கூறப்படுவது உண்டு .



இந்த மாதிரி சந்திப்பு ஒன்றில் தான் எம்.ஜி.ஆரிடம் சுவாமிகள் , " சென்னையில் காலம் தவறாமல் மழை பெய்வதற்கு நிறைய மரங்கள் நடவேண்டும் " என்று கூற எம்.ஜி.ஆர் அதை செயல்படுத்தினார்.

அதுமட்டுமல்ல . ரேஷன் கடைகளில் ஏழை மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்காமல் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் , எதையும் வாங்குமாறு செய்யுமாறு சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ரேஷன் கடைகள் அவ்வாறே செயல்பட உறுதியோடு வழி செய்தார்.மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடத்துமாறும் சுவாமிகள் கூற அவ்வாறே நடத்தினார்.

காமராஜர் உடல் நலம் குன்றிய செய்தியை அவரது ஆதரவாளர்கள் சுவாமிகளிடம் கூறிய போது , மிருத்யூஞ்ச ஹோமம் செய்யுமாறு சுவாமிகள் கூறினார். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஹோமம் செய்யப்பட்டது.

இப்படி இந்திய அரசியல் தலைவர்கள் மகா பெரியவரை சந்திக்கத் தவறியது இல்லை. இந்து மதம் சம்பந்தமான சட்டங்கள் இயற்றும் போது , சுவாமிகள் ஆலோசனை கேட்டறியப்படுவது அவசியமாகவே கருதப்பட்டது.



தெரியுமா?

வேதம் சத்தியத்தையே கூறும் என்பதை எடுத்துச் சொல்வார் பேரறிஞர் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்.
சயன யக்ஞம் என்று ஒரு வேள்வி.அதற்கு சந்திர மண்டலத்திலிருந்து மண் எடுத்து வந்து , பூமி மண்ணுடன் பிசைந்து வேள்விக் குண்டம் தயாரிக்க வேண்டும்.

'சந்திரமஸி கிருஷ்ணம் என்கிறது வேதம்.சந்திர மண்டலத்து மண் கறுப்பாக இருக்கும் என்று அர்த்தம்.

' கல்கத்தா பிர்லா பிளானடோரியத்துக்கு சென்ற போது , சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை காட்சிக்கு வைத்திருந்தார்கள். கறுப்பாக இருந்தது' என்கிறார் முக்கூரார்.

(இன்னும் வரும்)

நவம்பர்   29 , 2007

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com