தேச சுதந்திரம் - மகாத்மா மறைவு

தெற்கே உதித்த சூரியன் - 15
தேச சுதந்திரம் - மகாத்மா மறைவு
Published on

சுவாமிகள் தேசம் சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 ம் தேதி சமயத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் வசந்த கிருஷ்ணபுரம் என்ற சிறிய கிராமத்தில் தங்கி இருந்ததாகத் தெரிகிறது.

தேசம் சுதந்திரம் அடைந்தது கண்டு சுவாமிகள் உள்ளம் மகிழ்ந்தார். நமது நாட்டுக்கொடியில் ' தர்ம சக்கரம் ' இடம் பெற்றது கண்டு சுவாமிகள் அகமகிழ்ந்தார் எனலாம் . சுதந்திர அறிக்கையாக அவர் தந்ததின் சாரம் இது தான்:

"பாரதம் சுதந்திரம் பெறும் இந்நேரத்தில் ஒரே மனதுடன் இறைவனை துதிப்போம் . பெற்ற சுதந்திரம் பாதுகாக்கவும் எல்லா ஜீவன்களும் ஆனந்த வாழ்வு பெறவும் இதுவே உதவும்.

நமது நாட்டு கொடியில் தர்ம ஸ்வருபீயான இறைவனது சக்கரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு அசோக சக்கரவர்த்தியால் வகுக்கப்பட்ட நீதிகளோடு அந்த சக்கரம் நம்மை சம்பந்தப்படுத்துகிறது. பகவத் கீதையில் கண்ணன் கூறியவற்றை அந்த தர்மச்சக்கரம் நினைப்பூட்டுகிறது. இப்பேர்பட்ட உயரிய சிந்தனையுடன் உதயமாகும் சுதந்திரம், கடவுள் அருளோடு அரிய பயன்களை தரட்டும். வெகுகாலமாக சுதந்திரதிற்காக நாடு பாடுபட்டிருக்கிறது. ஒப்பற்ற தியாகத்தில் கிடைத்திருக்கிறது சுதந்திரம் . சமூக சச்சரவுகள் ஏதுமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தது போல , நாமும் சுதந்திரம் பெறவேண்டும். நமது மனம் நமக்கு வசமாக வேண்டும்.

தினமும் சிறிது நேரமாவது மனதை சாந்தப்படுத்தி , இறைவனை தியானிக்க வேண்டும். பிற மாதரை தாயாக மதிப்போம் . பிற உயிரை நம் உயிர் போல மதிப்போம் . உண்மையே பேசுவோம்"

சுவாமிகளுக்கு நாடு சுதந்திரம் அடைந்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு ஆண்டுக்குள் காந்தியடிகள் மரணம் அடைந்ததும் , அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் சுவாமிகளை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.

காந்திஜி ஒரு மகத்தான - மனித குலத்தை வாழ்விக்க வந்த மகான் . அவரது மறைவு நாட்டுக்கு பெரும் நஷ்டம் என்று சுவாமிகள் அறிக்கை வெளியிட்டார். "பாலக்காட்டில் மகாத்மாவை சந்தித்த நினைவுகளைக் கூறி , ராம நாம மகிமையில் மகாத்மாவுக்கு இணையில்லா பக்தி இருந்ததையும் " சுவாமிகள் எடுத்துக்காட்டினார்.

" மகாத்மாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் " என்று சுவாமிகள் குறிப்பிட்டிருந்தார்.



சுவாமிகள் அதற்கு பின்பும் பாரத நாட்டின் பல பகுதிகளுக்கு யாத்திரையை தொடர்ந்து கொண்டிருந்தார். சுவாமிகள் போகாத பகுதி இல்லை . அவர் கால்படாத மண்ணும் இல்லை என்பதே உண்மை.

அவ்வப்போது சுவாமிகள் பக்தியைப் பெருக்க , இந்து மதம் , தர்மம் ஆகியவற்றின் பெருமையை நிலை நாட்ட , மக்களிடையே புது உற்சாகம் ஏற்பட பெரிய அளவில் மகாநாடுகள் நடத்தினார்.

"மதத்தினால் சண்டை உண்டாகும் என்று சொல்வது தவறு " மதம் சச்சரவுகளை உண்டு பண்ணாது. மதத்தின் அடிப்படை இல்லாவிட்டால் அரசியல் பொருளாதார சச்சரவுகள் அதிகரித்து ஆபத்தை விளைவிக்கும் " என்று ஒரு மாநாட்டில் சுவாமிகள் பேசினார்.

போகும் இடம் எல்லாம் ஆலயங்களுக்கு திருப்பணி நடத்த ஏற்பாடு செய்தார் . மக்கள் எளிமையுடன் வாழ பல்வேறு புத்திமதிகளை வழங்கிவந்தார்.

சுவாமிகளுக்கு 'காபி' குடிப்பதும் அதற்காக பணம் செலவழிப்பதும் சற்றும் பிடிக்காது. காபிக்கு பதிலாக அரிசி நொய் , கோதுமை நொய் இவற்றால் தயாரான மோர்க்கஞ்சியை குடிக்க வற்புறுத்திவந்தார்.

சினிமாவுக்கு பெண்கள் போவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

உடைகள் - குறிப்பாக புடவைகள் ஆடம்பரமின்றி இருக்க வேண்டும் . திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் . வரதட்சணை பெறக்கூடாது. இவை அவரது கட்டளை.

திருமணத்துக்கு வரதட்சணை பெறுவோர் , அழைப்பிதழில் 'காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் ' என்று போட்டுக் கொள்ள தடைவிதித்தார்.

காஞ்சி மாமுனிவரை தரிசிக்க வரும் போது பண்டைகாலத்தில் ரிஷிகளின் பர்ணசாலைக்கு சென்று , ஒரு தவயோகியை தரிசிக்கும் எண்ணமே மக்களுக்கு ஏற்படும். ஸ்ரீமடத்துக்குள் நுழைந்தால் , அவர் எவ்விடத்தில் அமர்ந்திருப்பார் என்கிற சஸ்பென்ஸ் தோன்றும். ஏதோ ஒரு மூலையில் கிணற்றடியில் , மரத்தடியில் , குளக்கரையில் திடீர் தரிசனம் தருவார். கடவுள் நம் எதிரே திடீர் என்று தோன்றுவது போல ! உடலில் நமக்கு பரவசம் ஏற்படும்.

மெலிந்த தேகம் . ஆனால் தங்க நிறமாக ஜொலிக்கும். சிவந்த நிற கைகள் ஆசி வழங்கும் போது உணர்ச்சிவயப்படுவோம். நடந்து நடந்து பாரத தேசத்தை உய்வித்த அந்த மகானின் கால்கள் , 'பற்றுக பற்று அற்றான் பற்றினை ' என்பது போல , திடகாத்திரமாக தாமரை திருவடியாக காட்சிதரும். முகப்பொலிவோ நிலவைப்போன்று கருணை பொழியும் . நிலவில் கறைகள் தெரியும் ! சுவாமிகள் முகத்தில் புன்னகை ரேகைகளே ஜொலிக்கும் . பெரும் தாடி இருந்ததால் , சுவாமிகள் ஒரு கையால் அதை வருடியவாறு இருப்பதைக் காண கண் கோடி வேண்டும்!

அவர் துளசி மாலையோ , ரோஜா மாலையோ , எலுமிச்சை மாலையோ அணிந்திருந்தால் தெய்வத் திருமேனிக்கு அழகு செய்யப்பட்டது போலவே - நடமாடும் தெய்வத்தைப் பார்ப்பது போலவே இருக்கும்.

ஆச்சாரிய சுவாமிகள் வருடத்தில் சில மாதங்கள் மவுன விரதம் கடைபிடிப்பது உண்டு. அப்போது , மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியவற்றை , தம் கைகளால் தரையில் எழுதிக் காட்டுவார். சில சமயம் அதனால் விரல் புண்ணாகிவிடும் !

' காஷ்ட மவுனம்' என்று இருப்பது உண்டு . அப்போது எதையும் சுவாமிகள் பார்க்கக்கூட மாட்டார் !

இப்படி காஷ்ட மவுனத்தில் சுவாமிகள் இருக்கும் போது , அவரை தரிசித்தால் - பலருக்கு மன அமைதி ஏற்பட்டிருக்கிறது.

தெரியுமா?

வீடு பேறு

நம் வாழ்க்கையை கூறுவது வீடு.முதலில் இருப்பது 'படி'.நாம் படிக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது.
அடுத்தது 'நடை' - படித்தவாறு நடக்க வேண்டும்.
அடுத்து 'கூடம்' - கூடி வாழ வேண்டும்.
முற்றம் - வாழ்வின் எண்ணம் முற்றுப் பெற்றால் மகிழ்ச்சி.

இதுவே 'வீடு' பேறு!

(இன்னும் வரும்)

நவம்பர்   22 , 2007

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com