தங்க மனசுக்காரன்

நெஞ்சம் மறப்பதில்லை -18
தங்க மனசுக்காரன்
Published on

விபரம் தெரிந்த நாள் முதல் கடவுள் மீது நான் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணனை கொடுக்காமல் போயிட்டியே ...என்பது தான் அது. வீட்டின் மூத்த பெண்ணாக பிறந்த வருத்தம்,மனதில் எப்போதுமிருக்கிறது. அடுத்த ஜென்மத்திலாவது,எனக்கு ஒரு அண்ணனைக் கொடு என்பதே, எப்போதும் என் பிரதான பிரார்த்தனை.வெயிலுக்கு எடுத்து வைத்த குடை, திடீரென பெய்யும் மழைக்கும் பயன்படுவதைப் போல,எந்த வேண்டுதலுக்காக கோவிலுக்குப் போனாலும் ,எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது ஒரு அண்ணனைக் கொடு என்ற வேண்டுதலையும் சேர்த்தே சமர்ப்பிக்கிறேன்..


உண்மையில் அண்ணன்களால் ஆனது என் உலகம். ஒவ்வொரு கால கட்டத்திலும், எத்தனையோ அண்ணன்கள் ஆதூரமாய் இருந்திருக்கிறார்கள். வயதில் மூத்தவர்களை, மரியாதை நிமித்தம் அண்ணா என்று அழைப்பது போக, எனக்கு மிக பிடித்தவர்களை எப்போதும் அண்ணா என்றே அழைப்பது வழக்கம்.சமீப காலமாக, " ஏன் எல்லோரையும் அண்ணா ன்னு கூப்பிடுறீங்க? தோழர் ன்னு கூப்பிட்டு பழகுங்க "என்ற அறிவுரைகளை கேட்க நேரிடுகிறது .அது ஏனோ....அவ்வளவு சீக்கிரம் ஒருவரை தோழர் என அழைக்க, இன்னும் பழகவில்லை நான்.

மறக்க முடியாத அண்ணன்களில், நா.முத்துக்குமார் அண்ணன் தான் முதன்மையானவர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த போது, அரும்பு இதழ் நடத்திய மாநில  அளவிலான கவிதைப் போட்டிக்கு நடுவராக இருந்த நா.முத்துக்குமார் அண்ணன், என் கவிதையை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தார். ஆனால் பரிசளிப்பு விழாவிற்கு அவர் வரவில்லை . அடுத்த நாள் அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கி அவருக்கு போன் செய்தேன். அவர் ஹலோ என்றதும், "அண்ணா வணக்கம்.என் பேர் சுமதி.அரும்பு கவிதைப் போட்டியில் என் கவிதைக்கு தான் நீங்க பரிசு கொடுத்தீங்க" என்றதும்  "ஓ...நீங்கள் தானா அது?" என்றவர், என் படிப்பு, பெற்றோர்,  உடன் பிறந்தோர்,புத்தக வாசிப்பு குறித்து விசாரித்தார். "ஒரு கம்போசிங் ல இருந்ததால ,பரிசளிப்பு விழாவிற்கு வர முடியல" என்றவரிடம் , "அடுத்த வாரம், தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் பரிசு வாங்க சென்னை வருகிறேன் " என்றதும் "முடிந்தால் சந்திக்கலாம்" என்றார். அதேபோல் தன் நண்பரோடு , தலைமை செயலகம் வந்தவரிடம், கவிதை என்ற பெயரில் நான் கிறுக்கியவற்றைக் கொடுத்தேன் .பொறுமையாக படித்துப் பார்த்தவர், "நல்லாயிருக்கு "என்றதோடு நிறுத்தியிருக்கலாம். "உன் வயசுல நான் கூட இப்படியெல்லாம் எழுதுனதில்ல , தெரியுமா ?" என்றார். அதை உண்மை என நம்பியதால்,இன்று எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டு, அந்திமழையில் தொடர் எழுதும் அளவுக்கு அதிகப் பிரசங்கி ஆகியிருக்கிறேன். பின், தி.நகர் புக் லேண்ட்ஸ் க்கு அழைத்துக்கொண்டு போய், கல்யாண்ஜி , கலாப்ரியா , மனுஷ்ய புத்திரன் , குட்டி ரேவதி, ஞானக்கூத்தன் உள்ளிட்ட பலரை புத்தக வடிவில் அறிமுகப்படுத்தினார். அவரோடு வந்த நபர், "பாஸ்,எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு எவ்வளவோ பேர் போன் பண்றாங்க ...யாரையும் நீங்க சந்திச்சதில்லை....இவங்க கிட்ட மட்டும்,பார்த்ததோடு இவ்வளவு புக்ஸ் வேற வாங்கி தர்றீங்களே....எனக்கே ஆச்சர்யமாயிருக்கு "என்றார்.அதற்கு நா.முத்துக்குமார் அண்ணன்,"உண்மை தான்.இது வரைக்கும் எனக்கு போன் பண்ணின எல்லோருமே, சார் போட்டு தான் பேசுவாங்க.ஆனா...நான் போன் எடுத்ததும் ,அண்ணா ன்னு ஆரம்பிச்சது ,இவங்க தான்.எனக்கு தங்கச்சி இல்ல.அண்ணா ன்ற வார்த்தையில் ,ரொம்ப அந்யோன்யம் இருந்தது..."என சிரித்தார்.அண்ணன்களுக்காக ஏங்கும் தங்கைகள் போல, தங்கையோடு பிறக்கவில்லையே என வருந்துகிற அண்ணன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். அதிமுக வின் தலைவர் பதவியை ,அண்ணாவிற்கு என விட்டு வைத்ததைப் போல,என் மூத்த அண்ணனுக்கான இடம் இயக்குனர் சசிகுமாருக்கானது.சமீபத்தில்,அவருடைய அம்மா இறந்த போது,நான் பொதிகை நிகழ்ச்சி ஒன்றிற்காக, சென்னையில் இருந்தேன்."தைரியமாக இருங்கள் அண்ணா...நான் திருச்சிக்குப் போய் பென்னியை அழைத்துக்கொண்டு , ஊருக்கு வந்து விடுகிறேன் "என குறுஞ்செய்தி அனுப்பினேன்.நீ வர வேணாம் என பதில் அனுப்பினார்.இதென்ன....இப்படி சொல்கிறார் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே,"பென்னி கூட முதல் முறை வீட்டுக்கு வரும்போது ,நல்லதுக்கு வா....இப்ப வர வேணாம் "என குறுஞ்செய்தி அனுப்பினார்.மிகுந்த துக்கத்திலும் ,அவர் அனுப்பிய அந்த குறுஞ்செய்தியின் ஈரம் எந்த கோடைக்கும் ,உலராது .....


இந்த கட்டுரையின் தலைப்பிற்கு சொந்தக்காரர் பார்த்திபன் அண்ணன்.என் தோழி கல்பனாவின் அண்ணன்.அப்படி ஒரு தங்க மனசுக்காரன்.அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தார்கள் .தினமும் கல்பனாவின் பையையும்  பார்த்திபன் அண்ணனே சுமந்து கொண்டு போவார் .அண்ணன்கள் எல்லோருமே,தங்கைகளின் சுமையை சுமப்பதில் ஆனந்தம் அடைபவர்கள் தானே..." நீ பெரிய மகாராணி...உன் பையை அண்ணன்கிட்ட கொடுக்குற" என்றால் ",இன்னும் நாலு பை இருந்தாலும் ,அண்ணன் சந்தோஷமா சுமக்கும் ...அண்ணனுக்கு அப்படி ஒரு தங்கமான மனசு" என சிரிப்பாள்.


வீட்டு வேலைகள் செய்வதில்லை என,கல்பனாவின் அம்மா,அவளை அடிக்கும் போதொல்லாம் ,"பாப்பாவை விடும்மா"என்று ,குறுக்கே பாய்த்து ,அந்த அடியை தன் மீது வாங்கிக் கொண்டு,அன்னை தெரசாவாய் அவதாரம் எடுப்பார் .கடவுள் அண்ணனுக்கு ரொம்ப தங்கமான மனசை கொடுத்திருக்கார்டி என்பாள் பெருமையாக.


ஒருமுறை காலாண்டு தேர்வு விடுமுறைக்காக,கல்பனாவும் அவளின் பெற்றோரும் ஊருக்குப் போயிருந்தனர்.பார்த்தி அண்ணன்,பத்தாம் வகுப்பு என்பதால் ,ஊருக்குப் போகவில்லை .ஐந்து குடித்தனங்கள் இருந்த அந்த ஸ்டோரில், எல்லோருமே பார்த்தி அண்ணனுக்கு உணவு கொடுத்து ,பார்த்துக் கொண்டார்கள்.அப்போது ,என் அம்மா ,அச்சு முறுக்கு சுட்டு,சில முறுக்குகளை,அண்ணனுக்கு கொடுத்தார் .ஒரு வாரம் கழித்து ,கல்பனா ஊரிலிருந்து வந்ததும்,பத்திரமாக வைத்திருந்த அச்சு முறுக்குகளை கொடுத்தார் பார்த்தி அண்ணன்.இப்போதெல்லாம் பீட்ஸா ,பர்கரிலிருந்து ,வடை,பஜ்ஜி ,சமோசா வரை கடைகளில் எளிதாக கிடைக்கிறது .அப்போதெல்லாம் தின்பண்டம் என்றால் வீட்டில் செய்வது தான்.கடைகளில் வாங்கி சாப்பிடுவது என்பது,நடத்துனரின் எச்சில் படாத பயணச் சீட்டைப் போல, மிக அரிதான விசயம் .அதனால் தான், தனக்கு கொடுக்கப்பட்ட முறுக்கு களை,ஒரு வாரம் பத்திரமாக வைத்திருந்து கொடுத்திருக்கிறார் பார்த்தி அண்ணா. "இதை போய் பத்திரமா வச்சிருந்தியாக்கும்.....கல்பனாவுக்கு வேணும்னா, வேற சுட்டுக் கொடுத்துட்டுப் போறோம்"என எல்லோரும் அவரை கேலி செய்து, சிரித்தார்கள். "என்னை விட்டுட்டு ஒரு முறுக்கு சாப்பிட கூட அண்ணனுக்கு மனசு வரல பார்த்தியா?அப்படி ஒரு தங்கமான மனசு அவனுக்கு" என்று கல்பனா சொன்ன போது,எனக்குப் பொறாமையாக இருந்தது.அடுத்த ஜென்மத்துல,இதே மாதிரி ,ஒரு தங்க மனசுக்காரனை அண்ணனா கொடு ...என வழக்கம் போல் கடவுளிடம் சண்டை போட்டேன்.

கல்பனா திருமணம் ஆகி கணவன் வீட்டிற்கு சென்ற அன்று,அவளது அறையில் அமர்ந்து,அண்ணன் வெகுநேரம் அழுததாக,அவரின் அம்மா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.


பார்த்தி அண்ணனுக்கும் திருமணம் ஆனது.மீனாட்சி சமேத சொக்கநாதராக வாழ்வார்கள் என நினைத்த எங்களுக்கு ஏமாற்றம் தான்.அந்த அண்ணி, கல்பனாவின் மீது,மிகுந்த காழ்ப்புணர்வோடு இருந்தார் .அவருக்கு குழந்தை இல்லாததும் அதற்கு காரணமாக இருக்கலாம் .ஒரு கட்டத்தில் "உன் தங்கச்சியா ?நானா ன்னு முடிவு பண்ணிக்க" என்று தன் அம்மா வீட்டிற்குப் போய் விட்டார்.இனி தங்கையிடம் பேசவே மாட்டேன் என சமாதானம் செய்து,தன் மனைவியை அழைத்து வந்த பார்த்தி அண்ணன்,கல்பனாவை பார்க்காமல் ,பேசாமல் ரொம்பவே தவித்துப் போனார்.தனக்கு தானே பேசிக் கொள்வது,திடீர் ,திடீரென அழுவது என்றிருந்த பார்த்தி அண்ணன் ஒருநாள்,மனம் வெறுத்து வீட்டைவிட்டு போய் விட்டார்.


என்ன ஆனார் என தெரியவில்லை .மதுரையில் பார்த்தோம் என யாராவது சொன்னால்,உடனே அவரின் பெற்றோர் மதுரைக்கு ஓடுவார்கள் .கோயமுத்தூரில் உங்க பையன் மாதிரியே ஒருத்தரை பார்த்தோம் என்று யாராவது சொன்னால்,உடனே கோவைக்கு ஓடுவார்கள் .ஆண்டுகள் பல கழிந்த நிலையில் ,இன்னுமா உயிரோட இருக்கப் போறான் ?திவசம் பண்ணிடுங்க....என உறவினர்கள் சொல்ல ஆரம்பித்தனர்."உயிரோட இருந்தா,எப்படி தெவசம் பண்றது....செத்திருந்தா தெவசம் பண்ணாம இருக்குறது நல்லதில்லையே...இருக்கானா ...செத்தானா ன்னு கூட தெரியலயே...."என்று அவரின் அம்மா, நெஞ்சிலடித்துக் கொண்டு அழுதார்.

இன்னும் இரண்டு வருடங்கள் போன நிலையில், என் வீட்டிற்கு வந்த கல்பனாவிற்கு காபியும் ,முறுக்கும் கொண்டு வந்து கொடுத்தார் என் அம்மா."இப்பல்லாம் நான் முறுக்கே சாப்பிடுறதில்ல"என சுவரை வெறித்தவளிடம்,அண்ணனை பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுச்சா....என்றேன் .இல்லை என்பதாய் தலையாட்டியவள், சட்டென என் மடியில் படுத்துக் கொண்டு,"கடவுள் தெரியாத் தனமா அண்ணனுக்கு தங்கமான மனசை கொடுத்துட்டாண்டி....கல் மனசையோ ,இரும்பு மனசையோ....கொடுத்திருந்தா,எல்லாத்தையும் தாங்கிக் கிட்டு, நம்ம கூடவே இருந்திருப்பான் ...கடவுளே....ஏன்டா என் அண்ணனுக்கு தங்கமான மனசைக் கொடுத்த....." என கதறினாள் .மலைகளற்ற திருச்சியில்  அந்த கதறல்  இன்றும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.


 இப்போதும் .....அடுத்த ஜென்மத்தில், எனக்கு ஒரு அண்ணன் வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன்....ஆனால்,தங்க மனசுக்காரனாக அல்ல.....

(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )  

logo
Andhimazhai
www.andhimazhai.com